யதார்த்த கதைகள்

யதார்த்த கதைகள்
Published on

இருபதாம் நூற்றாண்டின் சிறுகதை எழுத்தாளர்-களில் முக்கியமானவராக கருதப்படும் அமெரிக்க எழுத்தாளரான ரேமண்ட் கார்வர் யதார்த்தவாத சிறுகதை மரபை மீட்டவர். அவரது தேர்ந்-தெடுக் கப்பட்ட 12 சிறுகதைகளின் தமிழ் மொழி-பெயர்ப்பே வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு என்ற இச்சிறுகதைத் தொகுப்பு. யதார்த்தவாதம் என்பது இன்னும் வீரியமான  கதை சொல்லல் விதமாகவே உள்ளது என்பதை இக்கதைகளை வாசிக்கையில் உணரமுடிகிறது.

ஒரு சிறிய நல்லகாரியம் என்கிற கதையை இத்தொகுப்பில் உள்ள சிறந்தகதையாக எளிதில் கூறிவிட முடியும். சண்டையிடுவதற்காக ஒருவனிடம் செல்லும் தம்பதியினர் அவனுடன் பேசிப் புரிந்துகொள்ளும் அழகான கதை. அதுபோலவே அடுத்த வீட்டுக்காரர்கள், அவர்கள் யாரும் உன்னுடைய கணவன் இல்லை, பெட்டி-கள் உள்ளிட்ட கதைகளும் மனதைத் தைக்-கின்றன. மொழிபெயர்ப்பு நன்றாக உள்ளது. யதார்த்தவாத  சிறுகதை-களின் முக்கியத்-துவம் பற்றிய தொகுப்பாளர் செங்கதிரின் நீண்ட முன்னுரையும் குறிப்பிடத்தக்கது.

வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு

- ரேமண்ட் கார்வர்

தமிழில் செங்கதிர், எம்.கோபாலகிருஷ்ணன்,  க.மோகனரங்கன், விஜயராகவன் வெளியீடு: காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், 669,

கே.பி. சாலை, நாகர்கோவில் 629001

பேச: 04652-278525 விலை: ரூ 200/

வாழ்வெனும் ஓவியம்

வாயால் சொல்லப்படுகிற வார்த்தைகளின்மூலம்  பலநேரம் நமக்குப் பொய்யே கிட்டுகிறது. ஆனால் கோடுகள் ஒருபோதும் பொய்யே சொல்வதில்லை- என்கிற ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவின் சொற்களுடன் தொடங்குகிறது அகநி பதிப்பகம் வெளியிட்டுள்ள காலத்தின் திரைச்சீலை ட்ராட்ஸ்கி மருது என்கிற நூல். நூலை கவிஞர் வெண்ணிலா தொகுத்துள்ளார். மருதுவின் தாயார் ருக்மணி, மனைவி ரத்தினம், தம்பி போஸ் ஆகியோர் மருதுவைப் பற்றிச் சொல்லும் ஈரம் படர்ந்த நினைவுகளை எழுத் தாக்கி இருக்கிறார். இது மருதுவின் பின்புலம் பற்றிய ஆழமான அறிமுகத்தைத் தருகிறது.

 கலைஞர்கள் மிகவும் மென்மையான இதயம் படைத்தவர்கள். மருதுவும் விதிவிலக்கல்ல. அவர் சின்ன வயதில் வளர்த்த ஜானி என்கிற நாய் பஸ்மோதி அடிபட்டு விழுந்ததற்கு உருகி அழுததில் இருந்து பல ஈரந்தோய்ந்த நினைவுகள் இந்நூலில் பலர் எழுதியிருக்கும் கட்டுரைகளில் வெளிப்பட்டுள்ளன. எஸ்.எஸ்.ராஜேந்திரன், யாமினி கிருஷ்ணமூர்த்தி,எஸ்.வி.ராஜதுரை, சா.கந்தசாமி, காசி ஆனந்தன், பேராசிரியர் மு.நாகநாதன், பா.செயப்பிரகாசம், இயக்குநர் மிஷ்கின், நாஞ்சில்நாடன், கலாப்ரியா, வ.கீதா, வீ.அரசு, வெ.இறையன்பு, இளையபாரதி, தமிழச்சி தங்கபாண்டியன், நாசர், ரா.கண்ணன் உள்ளிட்ட பல ஆளுமைகள் இந்நூலில் மருது பற்றி தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டுள்ளனர். மருதுவின் நீண்ட நேர்காணல் ஒன்றையும் அப்பண்ணசாமி இந்நூலில் ஒழுங்குசெய்துள்ளார். வாசிக்க மட்டுமல்லாமல் காட்சி அனுபவமாகவும் இந்நூல் புகைப்படங்கள், ஓவியங்கள் ஆகியவற்றுடன் வெளியாகி உள்ளது.

காலத்தின் திரைச்சீலை- ட்ராட்ஸ்கி மருது,

தொகுப்பு: அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, எண்:3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி-604 408. பேசி: 9444360421 விலை:ரூ300/

வாழ்வின் கதை

விடிந்தால் திருமணம் செய்துகொள்ளப்போகிற தேவராஜுக்கு இரவில் உறக்கம் வரவில்லை. நாற்பத்தியேழு வயதில் திருமணம் செய்துகொள்கிற அவனுக்கு திருமணத்துக்கு முதல்நாளே வந்துவிடுவதாகச் சொன்ன நண்பர்கள் யாரும் வரவில்லையே என்கிற வருத்தம். காது கேளாமையால் பாதிக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் புறக்கணிப்பின் வலியையே தாங்கி வந்திருக்கும் அவன், தன் வாழ்வை அந்த இரவில் திரும்பிப் பார்க்கிறான். அவன் வாழ்வதாகச் சொல்லப்படும் தென் தமிழகத்தின் நாற்பதாண்டு அரசியல் சமூக நிகழ்வுகளாக இந்த நாவல் விரிந்து செல்கிறது. நாவலைப் படிக்கும் யாரும் தேவராஜுக்காக மனம் நெகிழ்ந்து ஈரக்கண்களைத் துடைத்துக் கொள்ளாமல் இருக்க இயலாது.

அவனை சின்னவயதில் இருந்தே அப்பா புறக்கணிக்கிறார்; அவருக்குப் பயந்து தாயும் அன்பை மறைத்துப் புறக்கணிக்கிறாள். மகன் மீதிருக்கும் அன்பை அவள் வெளிக்காட்டும் தருணங்கள் இந்த நாவலின் அபூர்வமான கணங்களாக தோற்றம் பெறுகின்றன. கனவுகளாக விரியும் இரண்டாவது அத்தியாயம் தரும் வாசிப்பனுவம் தேர்ந்த வாசகர்களுக்கு இன்பம் அளிப்பதாகும். தேவராஜை பள்ளியும், இவ்வுலகும் காயப்படுத்தினாலும் அன்பான மனிதர்கள் அவன் வாழ்க்கையில் குறுக்கிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். வாழ்வின் துயரங்களுக்கு இடையில் அவனுக்கு நம்பிக்கை ஒளி அவர்கள். நண்பன் ராமசுப்பு, சுதர்சனம் சார், அவரது மனைவி, ஜோசப் என்கிற ஊமைப்பையன். தேவராஜுக்கு ஒரு காதலும் உருவாகி அவனது வன்மமான தந்தையால் சிதறடிக்கப்படுகிறது. அதுபோல் அவன் பல இடங்களில் வேலை பார்க்கிறான்.அங்கெல்லாம் சுவாரசியமான ஆண்கள், பெண்கள், அவர்களைப் பற்றிய கதைகள் எதிர்ப்பட்டு இந்த நாவலை வளர்த்தெடுக்கின்றன. இரண்டு ஆச்சிகளைக் கூட்டிக்கொண்டு

காசிக்குப் போய்வரும் வேலை அவன் செய்தவற்றில் ஒன்று. ஒரு சிட்பண்ட்ஸில் வேலைபார்த்து முதலாளியை ஏமாற்றி காசு சேர்த்து பிடிபட்டு அடிவாங்கும் கேவலமும் அவனுக்கு ஏற்படுகிறது. அவனுக்கு ஏற்படும் எல்லா பிரச்னைகளின் போதும் அவன் தன் நண்பன் ராமசுப்புவிடம் போய் நிற்கிறான். இந்த நாவல் ஒரு விதத்தில் ராமசுப்புவின் நட்பைச் சொல்லும் நாவலும்கூட.

தேவராஜ் ஒரு சமயம் காமத்தால் உந்தப்பட்டு ஒரு விலைமாதிடம் சென்று அவள் வயிற்றுத் தழும்பைப் பார்த்து மிரண்டு, பின்னர் அவளுடன் சேர்ந்து பரோட்டா கடையில் சாப்பிடப்போகிறான். இந்த மாதிரி அபூர்வமான எதார்த்த வாழ்வின் சம்பவங்களைக் கோர்க்க எஸ்.ராவால் மட்டுமே முடியும். நாவலை வாசித்து முடிக்கையில் ஒரு வாழ்வை வாசித்த உணர்வு மேலோங்குகிறது.

நிமித்தம்

எஸ்.ராமகிருஷ்ணன்,

உயிர்மை வெளியீடு,

11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம்,

சென்னை-600018

பேச: 044-24993448 விலை: ரூ 375/

வெள்ளை மனசு

பிரதிபலன் பாராமல் பிறர் மீது அக்கறை காட்டும்  நல்ல மனிதர்கள் பற்றிய தொகுப்பு இது. புதிய தலைமுறை இதழில் இந்த  மனிதர்களைப் பற்றி பத்திரிகையாளர் எம்.பி.உதய-சூரியன் எழுதியபோது இவர்-கள் யாரும் தங்கள் புகைப்படங்-களை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாகக் குறிப்பிடுகிறார். ஊருக்கே உதவி செய்யும் ஓடும் பிள்ளை, மந்திரம்மூலம் குணப்படுத்தும் மந்திரி சாமி, பண உதவி செய்யும் சிறுவாடு லட்சுமி போன்ற பல அன்றாட அபூர்வ சாமானியர்களை விறுவிறுப்-பான நடையில் நடமாட விட்டுள்ளார். வாசித்த பின்னும் மனதைவிட்டு அகல மறுக்கும் வெள்ளை இதயங்கள்.

சந்தித்திருக்கிறீர்களா?

- எம்.பி. உதயசூரியன்,

வெளியீடு: புதிய தலைமுறை பதிப்பகம், 25ஏ,

என்.பி. இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஈக்காட்டுத்தாங்கல்,

சென்னை-32

பேசி: 044-45969717 விலை:ரூ90/ 

logo
Andhimazhai
www.andhimazhai.com