தமிழ் இலக்கிய உலகில் பெரும் சாதனைகள் நிகழ்த்திய முதுபெரும் எழுத்தாளர் நீல பத்மநாபன் எழுதிய 168 சிறுகதைகளில் இருந்து பதினைந்தை மட்டும் தேர்வுசெய்து ஒரு தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்கள். ‘மேலும்‘ சிவசு இந்த தொகுப்புக்கான கதைகளைத் தேர்வு செய்ததுடன் விரிவானதொரு முன்னுரையையும் எழுதி இருக்கிறார். எளிமையான சொற்றொடர்கள் மூலம் ஊர்ந்து செல்லும் கதைகள் இவை. 1965-இல் வெளியான ‘விட்டுக்கொடுத்தவன்' சிறுகதையில் ஆரம்பிக்கிறது இத்தொகுப்பு. இந்த கதையில் குழந்தையை மருத்துவமனைக்குக் கூட்டிச்செல்ல பணம் தேடி கணவனே தரகராக இருக்க உடலை விற்கிறாள் ஒருத்தி. கடைசிவரை தரகனாக இருப்பவன் கணவன் தானென்று சொல்லிவிடாத பதிவிரதை. அடுத்த கதை தண்டனை. ரயிலில் குழந்தையுடன் பார்த்த பெண்ணை ஓட்டலுக்கு அழைத்துச் சென்று, காலையில் பார்த்தால் தண்டனையாக குழந்தை மட்டும் இருக்க, அவள் எங்கோ சென்றுவிடுகிறாள். இன்று கிளாசிக் வரிசையில் இடம்பெற்றிருக்கும் இக்கதைகள் நல்ல வாசிப்பனுபவம் அளிக்கின்றன.
நீல பத்மநாபனின் தேர்ந்தெடுத்த 15 கதைகள், வெளியீடு: வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17 தொடர்புக்கு: 044-24342810 விலை ரூ. 200.
பாரதி சிறுகதைகள்
பாரதியின் சிறுகதைகளைத் தொகுத்து நூலாகக்கொண்டு வந்துள்ளார் பேராசிரியர் ராஜ முத்திருளாண்டி. 1905-1920 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் எழுதப்பட்ட பதினொரு சிறுகதைகள் இவை. தன் முதல் சிறுகதையை ஷெல்லிதாஸ் என்ற பெயரில் எழுதியிருக்கிறார் பாரதி. தமிழின் முதல்
சிறுகதையாக குளத்தங்கரை அரசமரம் (1915) என்ற வவேசு ஐயரின் கதை கூறப்படுவதை மறுக்கும் நூலாசிரியர், பாரதியே முதல் சிறுகதை எழுதியவர் என முன்வைக்கிறார். இந்த பதினொரு சிறுகதைகளுக்கும் அழகான முன்னுரை விமர்சனங்களையும் எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது. தத்துவமும் விடுதலை உணர்வுகளையும் பேசும் இக்கதைகளில் கம்பீரமானதொரு மொழியழகைக் காணலாம். தன் முதல் சிறுகதையிலேயே முகமதிய இளைஞனுக்கும் ரஜபுத்திரப் பெண்ணுக்குமான காதலைப் பேசுகிறார் பாரதியார். அதுவும் இறந்த கணவனுடன் சேர்த்து மனைவியை எரிக்கும் பழக்கத்தையும் கண்டிக்கிறார். இத்தொகுப்பாசிரியர் எழுதியிருக்கும் முன்னுரையும் கவனிக்கத் தக்கது.
பாட்டிடையிட்ட பாரதியார் சிறுகதைகள், இராஜ முத்திருளாண்டி, மு.பூ.இராஜகோபால் பிள்ளை- கதிராயி அம்மாள் நினைவு அறக்கட்டளை, 1,2, வெள்ளாளர் தெரு, பழையூர், திருப்பூவனம்-630311, சிவகங்கை மாவட்டம் விலை:ரூ250. தொடர்புக்கு: 6382910547
இரங்கல் உரைகள்
குடியரசு, திராவிடன், விடுதலை போன்ற இதழ்களில் தந்தை பெரியார் எழுதிய முக்கியமான இரங்கல் குறிப்புகளைத்தொகுத்து வெளியாகி இருக்கும் சிறு நூல் இது. தன் கொள்கைக்கு எதிராக இருந்தவர்களுக்கும் சரி; ஆதரவாக இருந்தவர்களுக்கும் சரி, தன் பார்வையை என்றும் விட்டுக்கொடுக்காமல் பெரியார் எழுதி இருக்கும் இந்த இரங்கல் உரைகள் அவரது அணுகுமுறைக்கு சிறந்த சான்றாக இருக்கின்றன. தம் துணைவியார் நாகம்மை அவர்கள் இறந்தபோது பெரியார் எழுதி வெளியிட்ட இரங்கல் உரை மிகப்
பிரசித்தி பெற்றது. இது மனதை உருக்கும் என்றால் தன் தாயார் சின்னத்தாயம்மாளுக்கு எழுதி இருக்கும் இரங்கலுரையோ வேறு ரகம். பெற்ற தாய்க்கு யாரும் இவர் போல இரங்கல் எழுத மாட்டார்கள். மகிழ்ச்சி, மகிழ்ச்சி பூரண மகிழ்ச்சி என்றுதான் அது முடிகிறது. ஆனால் மனைவி இறப்புக்கும் தாய் இறப்புக்கும் கலங்காத பெரியாரின் கண்கள், ஒருவரின் மரணத்துக்கு ஆறாகக் கண்ணீர் வடிக்கின்றன. அது ஏடி பன்னீர்செல்வத்தின் திடீர் மரணத்துக்கான இரங்கல். இனி என் செய்வது? எனக் கேட்டுத் திகைக்கிற பெரியாரை அதில் காணமுடியும். அண்ணா இறந்தபோது எழுதும் உரையில் அவரது பெருந்தன்மை மிளிர்கிறது: ‘திமுக வெற்றிபெறும் வரை அக்கழகத்துக்கு நான் பெரும் எதிரியாக இருந்தவன். தேர்தலுக்குப் பின் அண்ணா என் எதிர்ப்பை மறந்து, அடியோடு மறந்து, மிக்கப் பெருந்தன்மையோடு நட்பு கொள்ள ஆசைப்பட்டு, என்னை அவர் பிரிவதற்கு முன்பு இருந்த நண்பராகவே மரியாதையுடன் நடத்தினார். அதன் பயனாக எனக்கு மக்களிடம் அதிக மதிப்பு ஏற்பட்டதுடன் என் அந்தஸ்தும் அதிகமாயிற்று என்றுகூட சொல்லலாம்.‘ பகத்சிங், ராஜாஜி, காந்தி, ஜின்னா என பலருக்கு எழுதப்பட்ட இரங்கல் உரைகளை இதில் படிக்கலாம்.
எல்லாம் நன்மைக்கே, தந்தை பெரியார் எழுதிய இரங்கல் உரைகள், தொகுப்பு: சு.ஒளிச்செங்கோ வெளியீடு: தமிழ்வெளி, 1, பாரதிதாசன் சாலை, ஸ்ரீனிவாசா நகர், மலையம்பாக்கம், சென்னை &600122. தொடர்புக்கு: 9094005600. விலை ரூ.120
தாய் அன்பு
அம்மா அன்று கவிதைகளை நீதான் எனக்கு அறிமுகப்படுத்தினாய், அதனால்தான் இன்று கவிதைகளால் நான் உன்னை அறிமுகப்படுத்துகிறேன்& என்று தொடங்கி தாயைப்பற்றிய கவிதைகளை நூலாக்கி இருக்கிறார் கவிஞர் நெல்லை ஜெயந்தா.
அம்மா!
உன்னைப்
பார்த்தபின்புதான்
நம்பிக்கை வந்தது
உருவ வழிபாட்டில்!
என்பதுபோன்ற தாயன்பைக் குவிக்கும் கவிதைகள் இந்நூலில் நிரம்பி இருக்கின்றன.
பாரதியார், கலைஞர் கருணாநிதி ஆகியோரில் தொடங்கி கவிஞர் அறிவுமதி வரை தம் தாய்களைப் பற்றி எழுதிய கவிதைகளையும் அவர்களின் தாய்களின் புகைப்படத்துடன் வெளியிட்டிருப்பது மிகுந்த சிறப்பைச் சேர்க்கிறது. எளிதில் கிடைக்காது/ மற்றவர்களிடம் நல்ல பெயர்/ அம்மாவிடம் கெட்ட பெயர் என்று ஒரு கவிதையில் சொல்லும் கவிஞருக்கு இந்த கவிதை நூல் எல்லோரிடமும் நல்ல பெயரை வாங்கித் தரும்.
தொட்டிலோசை, நெல்லை ஜெயந்தா, வாலி பதிப்பகம், தாமிரபரணி, எம்8, அழகாபுரி நகர், ராமாபுரம், சென்னை-89 தொடர்புக்கு: 9940508595, விலை ரூ: 150
பத்தொன்பது மாதங்கள்
மொரோக்காவில் பிறந்த எழுத்தாளரான ஜெலூன் பிரெஞ்சு மொழியில் எழுதி 2018-இல் வெளியான நாவல் தண்டனை. தன் இளமைக்காலத்தில் கல்லூரிப் படிப்பின்போது சர்வாதிகாரத்தை எதிர்த்த ஒரு மாணவர் கூட்டத்தில் கலந்துகொண்டார். இதற்காக அந்நாட்டு ராணுவத்தால் பயிற்சிக் கூடம் என்ற பெயரில் ஒரு சிறைக்கூடத்துக்கு அனுப்பப்படுகிறார். பத்தொன்பது ஆண்டுகள் அங்கே கழித்த தன் அனுபவங்கள்தான் தன்னை ஓர் இலக்கியவாதியாக புடம் போட்டன என்பது இவரது கருத்து. அந்த பயிற்சியில் தன்னை ஒப்புக்கொடுப்பதற்காக இவர் போவதில் இருந்து தொடங்குகிறது இந்நாவல். உள்ளே நுழைந்தவுடன் முதுகில் மிதித்து, இருண்ட அறையில் அடைத்து கொடுமைப்படுத்தி, முடியை மழித்து,இவரை சீர்திருத்தம் செய்கிறார்கள். அந்த சிறை
வாசத்தையும், அங்கு எடுத்த ராணுவப் பயிற்சிகளையும் நாவல் வடிவில் பதிவு செய்துள்ளார். கடைசியில் இவரைக் கொடுமைப்படுத்தும் ராணுவ அதிகாரிகள் மொரோக்கோ மன்னருக்கு எதிராக புரட்சி செய்து பிடிபட்டு மாண்டுபோகிறார்கள். வலிமையான சம்பவங்கள் நிறைந்த நாவல் இது.
தண்டனை, தஹர் பென் ஜெலூன், பிரெஞ்சிலிருந்து தமிழில்: சு.ஆ. வெங்கட சுப்புராய நாயக்கர், வெளியீடு: தடாகம், 112, முதல் தளம், திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை-41 தொடர்புக்கு: 9840070870, விலை: ரூ 200
மே, 2022