தொடர்ந்து அயோத்திதாசரைப் பற்றி பேசியும் எழுதியும் வருபவரான பேராசிரியர் டி.தருமராஜ் எழுதி 2019-இல் வெளியான நூல் ‘அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை.' அயோத்திதாசரை அவருக்குப் பின்வந்த திராவிட, இடதுசாரி இயக்கங்கள் அங்கீகரித்துப் பேசவில்லை என்பது பொதுவாக வைக்கப்படும் விமர்சனமாகும். இந்நிலையில் டி.தருமராஜின் நூலை முன்வைத்து 2020-இல் நடத்தப்பட்ட கருத்தரங்கில் பலர் உரைகள் நிகழ்த்தினர். இந்த உரைகளை ஆவணப்படுத்தியே டி.தருமராஜின் அயோத்திதாசரிசம் என்ற இந்நூல் உருவாகி இருக்கிறது. ஜெயமோகன், ஸ்டாலின் ராஜாங்கம், சமஸ், பிரேம், ஏர் மகாராசன், சரவண கார்த்திகேயன், சுரேஷ் பிரதீப் உள்ளிட்ட பலர் நிகழ்த்திய கருத்துரைகளின் தொகுப்பே இந்நூல். அயோத்திதாசரின் சிந்தனைகளை பல்வேறு கோணங்களில் அணுகுவதுடன் அவர் ஏன் ஒரு பேசுபொருளாக முன்னெடுக்கப்படவில்லை என்பதையும் இந்நூலில் உள்ள கட்டுரைகள் ஆராய்கின்றன. தமிழகத்தின் பல்வேறு அரசியல் சமூக சிந்தனைப்போக்குகளையும் அயோத்திதாச பண்டிதருடன் ஒப்பிட்டுப்பேசி ஒரு புரிதலை உருவாக்க முயலுகிறது இந்நூல்.
டி.தருமராஜின் அயோத்திதாசரியம், தொகுப்பாசிரியர் பா.ச.அரிபாபு, வெளியீடு: கிழக்கு பதிப்பகம், 177/103, முதல் தளம், அம்பாள் கட்டடம், லாய்ட்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை -600114. பேச: 044-42009603, விலை ரூ 450
புனைவின் நிழலில்
விமர்சகர்கள் நாவலின் நிழலைக் கூட மேற்கோள் காட்டிவிட முடியாத அளவுக்கு முன்னெச்சரிக்கையுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்று அறைகூவல் விடுகிறது நாவலின் பின்னட்டைக் குறிப்பு. இதைப் பார்த்து பயந்துவிடத் தேவையில்லை. எளிமையாகச் சொல்லப்போனால் ‘ வித்தியாசமான பேய்க்கதை என இந்நாவலைச் சொல்லி விடலாம். இந்த கதையினூடாக நவீன வாழ்க்கையின் கூறுகளை சொல்லிப் பார்த்திருக்கிறார் எழுத்தாளர். புனைவுக்கும் எதார்த்தத்துக்கும் இடையிலான ஊசலாட்டமாக கதை நகர்ந்து செல்கிறது. வாழ்க்கை முடிந்த நிலையிலும் உலகின் மீதான, உறவுகளின் மீதான அன்பும் இன்னும் மிச்சமிருக்கும். அது எங்கே போய்விடக்கூடும்? இந்நாவலைப் போல அது வெளிப்படுமா எனப் புரியவில்லை. பயோடிக்மேன். பயோடிக்வுமன் என்று எழுதுவதற்குச் சிரமமான வெளியை நாவலுக்கு எடுத்துக் கொண்டிருந்தாலும் கவனமாகக் கையாண்டுள்ளார் நாவலாசிரியர் பாலஜோதி. ‘தமிழ்நாட்டுலதான்யா தமிழனோட ஆதியையும் அந்தத்தையும் தோண்டிப்பார்க்க அவ்வளவு அரசியல் எதிர்ப்பு,' என ஆங்காங்கே அரசியல் இழையோடவும் செய்கிறது. அறிவியல், அறவுணர்ச்சி, தொல்லியல், காதல் என பல்வேறு கோணங்களில் பட்டைதீட்டப்பட்டு ஒளிரும் கல்போல் இருக்கிறது இந்நாவல்.
சுழியம், பாலஜோதி ராமசந்திரன்,வெளியீடு: எழுத்து பிரசுரம், எண் 55(7), ஆர் பிளாக், 6வது அவென்யூ, அண்ணா நகர், சென்னை -40. பேச: 8925061999 விலை ரூ.250
ஆழ்கடல் தாண்டி
உலக சமூகங்களில் கப்பல்கட்டும் கலையில் சிறந்துவிளங்கி உலகெங்கும் வணிகம் செய்துவிளங்கியதில் தலையாய சமூகம் தமிழ்ச்சமூகம் என்பதில் ஐயமிருக்காது. ஆனால் அப்படி கப்பல் கட்டும் கலையில் தேர்ந்த இச்சமூகத்தில் அக்கலை பற்றிய நூல் ஏதும் உள்ளதா என்ற ஆய்வில் தொடங்குகிறது இந்த நூல். இலக்கியங்களில் கூறப்படும் மரக்கலங்களின் வகைகள், வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புகள் ஆகியவற்றில் விரிவாகப் பயணம் செய்து பல்வேறு செய்திகளைக் குவித்து வைத்திருக்கிறார் நூலாசிரியர். நாவாய், வள்ளம், கல்லாத்-தோணி, வங்கம், பசரா, பிளாவு, கிராப் போர்க்கப்பல் என ஓவிய வடிவங்களாகவும் கப்பல்களைக் காண்பித்துள்ளார். பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட வங்கம் என்ற கப்பல், மணிபல்லவம்
சென்று அங்கிருந்து சாவகம்போனதாக மணிமேகலை சொல்வதையும் சுட்டிக்காட்டுகிறது. 1960களில் சிங்கப்பூர் தமிழ்முரசில் தொடராக வெளியாகி பின்னர் நூல் வடிவம் பெற்றது இந்நூலாகும். இது நூலாசிரி-யரின் குடும்பத்தாரால் மறுபதிப்பு கண்டுள்ளது. தமிழரின் கடலோடும் திறனை ஆய்வு செய்யும் நூல்.
நம் நாட்டுக் கப்பற்கலை, நுண்கலைச் செல்வர் சாத்தான்குளம் அ.இராகவன், வெளியீடு:
அபிசான் பதிப்பகம், வளசரவாக்கம், சென்னை&600087. விலை, ரூ 360; பேச: 9500045604
அரசியல்பாதையின் ஆரம்ப சுவடுகள்
தன் சிறுவயது முதல் அவசரநிலை காலகட்டத்தில் மிசா சட்டத்தில் சிறைக்குச் செல்வதுவரையிலான காலகட்டத்தை நூலாக எழுதி இருக்கிறார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின். இருபத்து மூன்று வயது வரைக்கும் சாதாரணமாக ஒருவர் வாழ்க்கையில் என்ன நடந்திருக்கமுடியும்? பள்ளிப்படிப்பு கல்லூரிப்படிப்பு இவ்வளவுதான். ஆனால் திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர், முதல்வர், புகழ்பெற்ற திரைப்பட வசன கர்த்தா, எழுத்தாளர் ஆகிய கீர்த்திகளைப் பெற்ற தந்தையின் நிழலில் வளர்ந்தவரின் வாழ்க்கையில் சொல்வதற்கு நிறைய இருக்கும்தானே?
இருக்கிறது. இது மு.க.ஸ்டாலின் என்ற இளைஞரின் வாழ்க்கை மட்டுமல்ல. திராவிட இயக்கத்தின் முக்கியமான காலகட்டத்தின் பதிவும்கூட. பெரும்பாலான அரசியல் தலைவர்களின் சுயசரிதைகள் வெறும் சுயசரிதைகள் மட்டுமல்ல. அவர்கள் சார்ந்த இயக்கத்தின் வரலாற்றுப் பதிவுகள். இதையும் அப்படி எடுத்துக்கொண்டு வாசிக்கலாம்.
மு.க.ஸ்டாலின் அரசியலுக்கு வராமல் போயிருந்தால்? இந்த கேள்விக்கு அவர் ‘இல்லை, நான் அரசியலில் தான் இருந்திருப்பேன்!‘ என்று சொல்கிறார். இந்தநூல் முழுக்க தந்தையுடன் இருந்து அவரைப் பார்த்து, அவர் பேச்சைக் கேட்டு தன்னையும் அரசியல் இயக்கத்தில் ஆர்வத்துடன் ஈடுபடுத்திக்கொண்ட ஒரு இளைஞனின் பதிவுகள்தான் நிரம்பிக் கிடக்கின்றன. திமுக
சார்பாக நடத்தப்பட்ட நாடகங்களில் நடித்துத்தான் ஸ்டாலின் அரசியலுக்குள் நுழைகிறார். கோபாலபுரம் பகுதி கிளை நிர்வாகியாக ஆரம்பித்துத்தான் கட்சியில் வளர்ச்சிபெறுகிறார். பகுதிப் பிரதிநிதி, மாவட்டப்பிரதிநிதி, பொதுக்குழு உறுப்பினர் என்று தான் இவரது வளர்ச்சி.
‘தலைவரின் மகன் என்பதால் என்பதால் சலுகை பெற்றிருப்பேன் என்றுதான் பலரும் நினைப்பார்கள். தலைவர் மகன் என்பதால் தடங்கல்தான் அதிகமாகப் பெற்றேன்' என்று ஓரிடத்தில் சொல்கிறார். அரசியலைக் கூர்ந்து நோக்குபவர்களுக்கு இந்த வரிகளுக்கு அப்பால் இருப்பவற்றைப் புரிந்துகொள்ள முடியும்.
ஸ்டாலின் என்ற பெயரே இன்று பலருக்கு சிம்ம சொப்பனம். ஆனால் சிறுவயதில் இந்த பெயரே அவருக்கு ஒரு பள்ளியில்சேர முடியமால் செய்திருக்கிறது. பெயரை மாற்றுமாறு பள்ளியில் சொல்ல, ‘பள்ளியை வேண்டுமானால் மாற்றுவேன். பெயரை மாற்றமாட்டேன்!‘ என தந்தை சீறுவதைப் பார்த்து வளர்ந்தவர்.
அதுவும் எப்பேர்ப்பட்ட தந்தை? வீட்டுவாசலில் திருமணப்பந்தல் போடப்பட்டு இருக்கிறது. மணமகள் தயாளு அம்மாள் காத்திருக்கிறார். மணமகனோ வாசலில் சென்ற இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தில் தலைவராக நடந்து சென்றுவிட்டார். அதை முடித்துவிட்டு தன் திருமணத்துக்கு வருகிறார். ‘தனது திருமணத்துக்கு தானே தலைமை வகித்தார் தலைவர்'- இப்படித்தான் ஸ்டாலின் தன் தந்தையைப் பற்றிச் சொல்கிறார்.
நூல் முழுக்க இப்படி சில நுட்பமான பார்வைகள். பெரியார், அண்ணா, எம்ஜிஆர், நாவலர், பேராசிரியர் ஆகியோர் பற்றி அப்போதைய இளைஞரின் பார்வையில் கூர்மையான அனுபவ வரிகள் எல்லாம் காணக்கிடைக்கின்றன. அகில இந்திய அரசியல் மாநாடு போல் நடந்த தன் திருமணம், 1976-இல் கோவை மாநில மாநாட்டுக்குப் பின் கலைக்கப்பட்ட திமுக ஆட்சி என நூலின் இறுதிக்கட்டம் விறுவிறுப்பாக இருக்கிறது. திருமணம் ஆகி ஆறேழு மாதத்தில் மிசாவில் சிறைக்கு காவலர்கள் அழைத்துச் செல்கிறார்கள். தந்தையே காவலர்களை அழைத்து மகனை ஒப்படைக்கிறார். ‘பொதுவாழ்க்கைக்கு வந்தால் எல்லாவித தியாகத்துக்கும் தயாராகத் தான் இருக்கவேண்டும்!' தந்தை சொல்லி அனுப்புகிறார். என்றென்றைக்கும் பொதுவாழ்வில் நுழைகிறவர்கள் முதலில் படிக்கவேண்டிய பாலபாடம் இந்த வரி.
சிறைக்குள் நடந்ததை நாடறியும். இந்நூலின் அடுத்த பாகத்தில் இதை ஸ்டாலினே எழுத நாம் வாசிக் கலாம்! தந்தைக்கு நெஞ்சுக்கு நீதி; தனயனுக்கு உங்களில் ஒருவன்!
உங்களில் ஒருவன், தன் வரலாறு பாகம் -1, மு.க.ஸ்டாலின்
வெளியீடு: பூம்புகார் பதிப்பகம், 127 (ப.எண்.63), பிரகாசம் சாலை (பிராட்வே) சென்னை - 600108, தொலைபேசி: 044 - 25267543 விலை: ரூ:500