இனியதொரு நறுமணம்

இனியதொரு நறுமணம்
Published on

இறகுப் பந்தை இருவர் விளையாடும்போது பார்ப்பவருக்கு என்ன தோன்றும்? கவிஞர் இசையாக இருந்தால் இறகுப் பந்தை இருவர் மாறி மாறிக்கொஞ்சுவதாகவும் அந்த இருவர் இரு யுவதிகளாகவும் தோன்றும். தொடர்ந்து, கொஞ்சப்படும் அந்த இறகுப் பந்தாக தானே மாறிவிட்டால் எனவும் தோன்றலாம்.

என்னய்யா பைத்தியக்காரத்தனம்? பேட்மிண்டன் பேட்டால் ஒரு விளாசு விளாசினால் என்னாவது என்று தோன்றினால் நீங்கள் கவிஞர் இல்லை! நிச்சயமாக இசை இல்லை!

உடைந்து எழும் நறுமணம் என்ற தலைப்பிலான கவிதையை வாசித்து முடித்தவுடன் தோன்றுகிறது ஒரு புன்னகை. அது ஒவ்வொரு கவிதைக்கும் தொற்றிக்கொண்டு ஒவ்வொரு வண்ணங்களில் ஒளிவீசிக்கொண்டிருக்கிறது.

நான் ஒரு பாஸ்வேர்டு, புதிது போன்ற இரு கவிதைகளும் நம் அன்றாடங்களைப் பார்த்து படுகேவலமாக சிரிக்கின்றன. இந்த கவிதைகள் மட்டுமல்ல இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கவிதைகள் அப்படித்தான். வெந்துயர் முறுவல் என்கிற இத்தொகுப்பில் இருக்கும் கடைசிப்பகுதியில் காதல்கவிதைகள் இருக்கின்றன. அவை தரும் உணர்வுகள் காதலித்தால் கூட கிடைக்குமா என்பதே சந்தேகம்.

உடைந்து எழும் நறுமணம், இசை, காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. சாலை, நகர்கோயில் 629001 விலை ரூ 175

யானைகளின் நடுவே

தமிழகத்திலேயே அதிகமாக காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதும் மனித மிருக மோதல் நடப்பதும் கோவை மாவட்டத்தில்தான். இங்கு யானைகளின் வழித்தடப் பாதைகள் மறிக்கப்பட்டிருப்பதையும் யானைகள் மின்வேலிகளில் அடிபட்டு சாவதையும் தொடர்ந்து ஆவணப்படுத்தி வருகிற பத்திரிகையாளர் கா.சு.வேலாயுதன் யானைகளின் வருகை என்ற பெயரில் நூலாக வெளியிட்டுள்ளார்.  இதன் இரண்டாம்பாகம் சமீபத்தில் வெளியாகி உள்ளது. தின இதழ் ஒன்றின் இணையதளத்தில் வெளியான கட்டுரைத் தொடரின் ஒருபகுதி இது. கோவையின் சுற்றுவட்டாரத்தில் உள்ள வனப்பகுதியில் உள்ள மனிதர்களைச் சந்தித்து யானைகள் தொடர்பான அவர்களின் அனுபவங்களை சேகரித்தும் கடந்த பல ஆண்டுகளில் இங்கு நடந்திருக்கும் யானை-,மனித மோதல்கள் பற்றிய சம்பவங்களைத் தொகுத்து விவரித்தும் ஆவணமாக்கி உள்ளார் கா.சு.வேலாயுதன்.  இத்துடன் யானைகளின் பழக்க வழக்கங்கள், அவை ஏன் ஊருக்குள் வருகின்றன என்பனவற்றையும் அவற்றுக்குப் பின் இருக்கும் நியாயத்தையும் யானைகளின்பக்கம் வாதாடும் வழக்குரைஞராக எடுத்துரைத்துக் கொண்டே செல்கிறார். நூலை வாசிக்கும்போது யானை என்கிற பேருயிரின் மீது இனம்புரியாத பாசம் உருவாவதே இதன் சிறப்பு.

யானைகளின் வருகை பாகம் 2, கா. சு. வேலாயுதன், கதைவட்டம், தமிழ் இல்லம், 105- ப்ரெஸ் என்க்ளேவ், கோவைபுதூர், கோயம்புத்தூர்- 641042 பேச: 9994498033 விலை ரூ220

சங்கப் பலகையின் சிற்ப வடிவம்!

தமிழகத்தின் பழங்கோவில்கள், கல்வெட்டுகள், இலக்கியத்தில் புழங்கும் சொற்கள் ஆகியவற்றுக்கு இடையே உள்ள ஆழமான தொடர்புகளை பல்வேறு கட்டுரைகளின் கீழ் இந்நூலில் அளித்துள்ளார் கல்வெட்டு அறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியன்.  தமிழ் இலக்கியங்கள் அரங்கேறும் சங்கப்பலகைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். இந்த சங்கப்பலகை சிற்பவடிவில் தாராசுரம் கோவிலில் படைக்கப்பட்டுள்ளதை விவரிக்கிறார் நூலாசிரியர். ‘கபிலர் பரணர் நக்கீரர் முதற் நாற்பதொன்பது பல்புலவோர்‘ சங்கப்பலகையில் வீற்றிருப்பர் என நம்பியாண்டார் நம்பி குறிப்பிடும் காட்சி அது. நான்கு கால்களுடன் கூடிய மேடையாக அது உள்ளது. சுற்றிலும் புலவர்கள்! மதுரை சங்கத்தில் விளங்கிய சங்கப்பலகை இதுதான் என்பது இரண்டாம் இராசராசன் கட்டிய இக்கோவிலில் விளங்குகிறது என்பது எவ்வளவு இனிமையான செய்தி!  சங்கப்பலகையைப் படைத்த சிற்பிக்குத்தான் எத்தனை திறன்?

தமிழக மரபுச்சுவடுகள், குடவாயில் பாலசுப்ரமணியன், வெளியீடு: அன்னம், எண்.1, நிர்மலா நகர், தஞ்சாவூர்-613007 அலைபேசி: 7598306030 விலை ரூ 300

மனிதனை நம்பலாம்

பொதுவாகவே நம்பிக்கையை விதைக்கும் நூல்கள் குறைவாகவே இருக்கும் நிலையில் முக்கியமான நூலாக வந்திருக்கிறது ‘மனிதகுலம் ஒரு நம்பிக்கையூட்டும் வரலாறு.' ஒரு நெருக்கடி ஏற்படும் போது மனிதன் நாகரீக ஏணியில் பல படிகள் கீழிறங்கி விடுகிறான்' என்ற ‘ கும்பல் உளவியல்' உண்மையல்ல; ‘அடிப்படையில் பெரும்பாலான மக்கள் பண்பார்ந்தவர்கள் தான்' என்ற எதார்த்தத்தைப் பல நிகழ்வுகள் மற்றும் வரலாறு வாயிலாக விளக்குகிறது இந்நூல்.

11/9/2001 அன்று நடந்த நியூயார்க் இரட்டைக் கோபுரத் தாக்குதலின் போது ஆயிரக்கணக்கான மக்கள் படிக்கட்டுகளில் அமைதியாக இறங்கிச் சென்றனர். ஆனால் பொது எண்ணத்தில், தப்பிப் பிழைக்க ஒவ்வொருவரும் அடுத்தவர்களை முந்தியும் மிதித்தும் ஓடிச் சென்றனர் என்ற நினைப்பு உள்ளது. இது தவறான எண்ணம் என்பதை விளக்குகிறார்.

  ஒரு சக மனிதனைக் கொல்வதற்கு ஒரு தனிநபரிடம் இயல்பாகவே எதிர்ப்புணர்வு உறைந்துள்ளது என்ற உண்மை போரில் கூட வெளிப்பட்டதை ஆதாரபூர்வமாக விளக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜப்பான் வீரர்களிடையே ' மாக்கின் போர்' நடை பெற்ற போது ஜப்பானிய வீரர்களால் தங்கள் உயிருக்கு ஆபத்திருந்த நேரத்திலும் அவர்களைச் சுடுவதற்கு வாய்ப்பிருந்தும் அமெரிக்க வீரர்களில் பெரும்பாலோர் சுடாமல் விட்ட உண்மையை அவர்களுடனிருந்த மார்ஷல் என்ற அமெரிக்க கர்னல் வெளிக்கொணர்ந்ததை விவரிக்கிறது.

  நாகரீகத்தின் சாபக்கேடு, ஈஸ்டர் தீவின் மர்மம், ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் பாதாள அறையில்,பச்சாதாபம் எப்படிக் கண்களை மறைக்கிறது, அதிகாரம் எப்படி ஒருவரை எப்படிச் சீரழிக்கிறது, அறிவொளி யுகம் எங்கே சறுக்கியது, ஜனநாயகத்தின் உண்மையான தோற்றம், மறு கன்னம், தீவிரவாதிகளுடன் தேநீர் அருந்துதல், வெறுப்பு, அநீதி மற்றும் பாரபட்சத்திற்கான சிறந்த தீர்வு, படை வீரர்கள் பதுங்குக் குழிகளிலிருந்து வெளியே வந்தபோது போன்ற தலைப்புகளின் கீழ் இடம்பெற்றிருக்கும்  கட்டுரைகள் வாயிலாக நம் நினைப்புகளுக்கு மாற்றாக எதார்த்த நிலை உள்ளது என்பதை எடுத்துரைக்கிறது இந்த நூல்.

  மனித இயல்பு குறித்த நம்முடைய  கண்ணோட்டத்தை நாம் மாற்றியமைத்தால் நமக்காக காத்திருக்கின்ற ஒரு புதிய உலகத்தை திரைவிலக்கிக் காட்ட இந்நூலில் முயற்சித்துள்ளதாக நூலாசிரியர் கூறுகிறார்.

 ‘ஒவ்வொருவரும் புத்தரே! அதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்' என்ற ஞானிகளின் கூற்றைப் புரிய வைக்கும் நூலாக நான் இதைப் பார்க்கிறேன். ருட்கர் பிரெக்மன் டச்சு மொழியில் எழுதிய இந்நூலின் ஆங்கில மொழியாக்கத்தை தமிழில் நாகலட்சுமி சண்முகம் மிகவும் சிறப்பாகக்  கொணர்ந்துள்ளார்.

மனிதகுலம்- நம்பிக்கையூட்டும் ஒரு வரலாறு, ருட்கர் ப்ரெக்மன், தமிழில் நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷர்ஸ், போபால்-462003,  விலை 599

-                                                -மு.செந்தமிழ்செல்வன்

சுளீர் கவிதைகள்

அச்சமின்றி நுழையக்கூடிய அரசு அலுவலகம் எதுவாக இருக்கமுடியும்? அஞ்சலகம் என்று பதில் சொல்வதிலிருந்து காப்பியில் ஈ விழுந்தால் மாற்றித் தரப்பணிப்பவர்கள் சாராயத்தில் பூச்சி விழுந்தால் எடுத்துபோட்டு குடிக்கும் சமூக நீதி என சாட்டை நீட்டுவது வரை நாஞ்சில்நாடன் கவிதையை ஒரு வலிய ஆயுதமாகப் பயன்படுத்துகிறார். அச்சமேன் மானுடவா என்ற அவரது கவிதைகளின் சிறிய தொகுப்பு ஒன்றை சிறுவாணி வாசகர் மையம் வெளியிட்டுள்ளது. எல்லா கவிதைகளும் அன்றாட நிலை குறித்து ஆழ்ந்த கவலையும் சமரசங்கள் இன்றி பார்க்கும் தன்மையும் கொண்டுள்ளன. குறளென்போம் சிலம்பென்போம் கம்பன் என்போம்/தமிழ்த்தொடை கறிவறுத்து சீயர்ஸ் என்போம்! என்ற வரிகளைப் படிக்கையில் சுளீர் என்கிறது. கொள்ளையர் தேசம்/ கூட்டுக்களவாணி நாடு/ நீயும் நானும்/ மண்ணுள்ளிப்பாம்புகள்

நாஞ்சில்நாடனின் சாட்டை யாரையும் விடுவதில்லை.

அச்சமேன் மானுடவா? நாஞ்சில்நாடன், சிறுவாணி வாசகர் மையம், பவித்ரா பதிப்பகம், 24-5, சின்னம்மாள் வீதி, கேகே புதூர் அஞ்சல், கோவை-38 பேச: 9940985920 விலை ரூ 60

மார்ச், 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com