வாழ்வின் சுவடுகள்

வாழ்வின் சுவடுகள்
Published on

இந்த தொகுப்பில் உள்ள கதைகள் எல்லாம் வாமுகோமுவின்  இன்னொரு பரிமாணத்தைக் காட்டுபவை. அவரது மண்ணை அவரது மக்களை, அவர்களின் வாழ்க்கையை இந்த கதைகள் சொல்கின்றன” என்று இந்த சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் சுகன் சொல்கிறார். இந்த தொகுப்பில் உள்ள கதைகளை வாசிப்பவர்கள் இது உண்மை என்று ஒப்புக்கொள்வார்கள். 2007-ல் முதல் பதிப்பாக வெளிவந்தது பத்தாண்டுகள் கழித்து இரண்டாம் பதிப்பு காண்கிறது. இப்போதைய வாமுகோமு கதைகளில் காணப்படும் சரளமும், எள்ளலும் இந்த தொகுப்பில் கொஞ்சமாக முளைவிட்டிருக்கின்றன. ஆனால் சமூகத்தைக் கவலையுடன் பார்க்கும் பார்வையும் யாரும் சொல்லத் தயங்கும் உண்மைகளை எதைப்பற்றியும் கவலைப்படாமல் சொல்லிப்போகிற துணிச்சலையும் பார்க்கமுடிகிறது. முதல் கதையான ‘அழுவாச்சி வருதுங் சாமி’யிலேயே வாமுகோமுவின் விஸ்வரூபம் தெரிய ஆரம்பித்துவிடுகிறது. ‘திருவிழாவுக்குப் போன மயிலாத்தாள்’ சிறுகதையில் அப்பாவி கிராமத்துப் பெண்ணாகத் தோன்றும் மயிலாத்தாள் கணவனை சோத்துல விசம் வெச்சி கொன்னுப்போடுவேன் என்று மிரட்டும் கடைசி வரிகளில் விஸ்வரூபம் கொள்கிறாள். இன்றைய வாமுகோமுவின் கதைகளில் வரும் பெண்கள் அத்தனைபேருமே ஒரு விதத்தில் இந்த மயிலாத்தாளின் பிரதிகள் என்றே தோன்றுகிறது.

அழுவாச்சி வருதுங் சாமி, வா.மு.கோமு

வெளியீடு: மணல்வீடு, ஏர்வாடி,குட்டப்பட்டி அஞ்சல்,மேட்டூர் வட்டம், சேலம் - 636453 . விலை ரூ 110 பேச: 9894605371

சொற்களின் வெளி

பசிக்கு சாப்பிடமுடிகிற கவிதைகளை உருவாக்குவேன் அதற்காகவே என் வாழ்வை மொழியிடம் தின்னக்கொடுக்கிறேன்  என்கிற கவிஞர் வெய்யில், தாமிரபரணிக்கும் அதில் நிறைந்திருந்த எருமைகளுக்கும் பனைகளுக்கும் சமர்ப்பணம் செய்து எழுதியிருக்கும் கவிதை நூல். வறண்ட ஆற்றைப் பார்த்ததும் தாயின் ஞாபகம் வருகிறது என்று முதல் கவிதையில் தொடங்கும் வெய்யிலின் கவிதைகள் துயரத்துக்கும் உறவுக்கும் இடையிலான இருப்பைப் பாடுபொருளாகக் கொண்டிருக்கின்றன. நான் வளர்க்கும் நாகத்தின் முட்டை, அம்மா மிச்சம் வைத்துப்போன கஞ்சா இலைகள், என் சீட்டுக்கட்டில் எல்லாமே ராணிகள் போன்ற  மினுமினுக்கும் வரிகள் நிரம்பிக்கிடக்கும் இத்தொகுப்பில் மின்மினி விளையாட்டு என்றொரு கவிதை இருக்கிறது. பயத்தில் ஈரமாகிவிட்ட கால்சட்டையுடன் நின்றுகொண்டிருக்கும் அந்த குழந்தையின் பதைபதைப்பை வாசக மனத்துக்கு லாவகமாகக் கடத்தி விடுகிற வெய்யிலின் கைவண்ணம் அபூர்வமானது.

கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் ப்ராய்ட், வெய்யில், வெளியீடு: மணல்வீடு, ஏர்வாடி,குட்டப்பட்டி அஞ்சல், மேட்டூர் வட்டம், சேலம் - 636453 விலை ரூ. 80 பேச: 9894605371

மண்ணின் குரல்

கரிசல் மண்ணின் படைப்பாளிகளில் ஒருவரான வீர. வேலுச்சாமியின் சிறுகதைகள், கவிதை, கடிதங்கள், சிறுவர் கதைகள் ஆகியவற்றைத் தொகுத்து உருவான நூல்.  1970களின் தொடக் கத்தில் இவரது நிறங்கள் என்ற தொகுப்பு வெளிவந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து அவர் சேகரித்த ‘தமிழ்நாட்டு சிறுவர் கதைகள்’  வெளியானது. இவற்றுடன் வேறு சில படைப்புகள் கடிதங்களையும் சேர்த்து இந்த தொகுப்பு உருவாகி உள்ளது. அவரது சிறுகதைகள் எதார்த்த வாழ்விலிருந்து உருவி எடுத்து கோர்த்த அழகான ஆபரணங்கள். பா.செயப்பிரகாசம் குறிப்பிட்டிருப்பதுபோல் ‘மனதைச் சுண்டியிழுக்கும் அளவான உச்சரிப்பு; நம்முடன் நேரடியாகப் பேசும் வாஞ்சனையான உரையாடல்’ கொண்டவை. சிறுவர் கதைகள் பகுதியில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு கதையுமே இன்றைக்கு நாற்பதைக் கடப்பவர்கள் தங்கள் பால்யத்தில் கேட்ட கதைகள் என்பது மிகமுக்கியமானது. குறிப்பாக ‘வால் போயி கத்தி வந்துச்சு’  கதையை இப்போது யாராவது  குழந்தைகளுக்குச் சொல்கிறார்களா? இலக்கிய ஆர்வலர்கள் மட்டுமின்றி எல்லோரும் எளிமையாகப் படிக்கக் கூடிய நூல் இது.

வீர. வேலுச்சாமி படைப்புகள் தொகுப்பு: பா.செயப்பிரகாசம்,

வெளியீடு: பரிசல் புத்தக நிலையம், 41/71 ஏ, ஆர் கே மடம்  சாலை, மயிலாப்பூர், சென்னை -4

பேச: 9382853646 விலை ரூ 250

அதிர்வை ஏற்படுத்தும் கதைகள்

பாப்லோ அறிவுக்குயிலின் தனித்துவமான பார்வையுடன் கூடிய சிறுகதைத் தொகுப்பு இது.  பதினைந்து கதைகள் உள்ளன. “அரியலூர் வட்டாரத்தைச் சுற்றியுள்ள கிராமப்புற ஏழை மக்களின் குறிப்பாக தலித் மக்களின் வாழ்க்கைப்பாடுகளை அவை எதிர்கொண்டு நிற்கும் உலகமயச்சூழலின் நகர்மயச்சிக்கல்களைச் சுற்றியே இந்த கதைகள் உருக்கொள்கின்றன”என்று முன்னுரையில் இந்த கதைகளை அறிமுகம் செய்கிறார் இரா.கந்தசாமி. சாதிய ஒடுக்குமுறைக்கும் அரசு எந்திர ஒடுக்குமுறைக்கும் எதிரான வலுவான குரல்களை பதிவுசெய்திருக்கும் கதைகள் இவை. செருக்க வரவுக்காரனின் சூரி என்ற  தலைப்புக் கதை நெகிழச்செய்கிறது. சங்குப்பூ என்ற கதையில் சாதி வித்தியாசம் பாராமல் உதவி செய்யும் பெண்ணுடன் கலந்து, அந்த பெண்ணைத் தேடிச்செல்லும் தலித் பாத்திரத்தின் மன ஓட்டம் சிறப்பாக பதிவாகிறது. உதிரக்கவுல் சிறுகதையில் சாராயக்கேஸில் கைதாகி காவல் நிலையத்தில் சிதைக்கப்படும் மலரின் கோபம், இந்த உலகின் அத்தனை ஆண்களின் மீதான கோபமும்தான். இந்த தொகுப்பில் இருக்கும் கதைகள் பொதுத்தளத்தில் அதிர்வை ஏற்படுத்த விழைபவை என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னையின் அன்பில்

எழுபதுகளில் எம் ஜி தேவசகாயம் சண்டிகரில் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணிபுரிந்தபோது அன்னை தெரசாவின் சாந்தி-தன் அமைப்பை அங்கே நிறுவ அவருக்கு உதவி செய்தார். சண்டிகர் இந்தியாவில் சிறப்பாக வடிவமைத்து எழுப்பப்பட்ட நகரம். அந்த நகருக்கு ஆன்மாவாக சாந்தி தன் அமைப்பு உருவாயிற்று. இதுதொடர்பான அனுபவங்களை அன்பின் துளி என்ற பெயரில் நூலாக்கி உள்ளார். அந்த கட்டட வேலைகள் நடந்துகொண்டிருந்தபோது தேவசகாயம் ஆட்சியாளர்களால் பல்வேறு காரணங்களுக்காக பழிவாங்கப்படுதலை எதிர்கொண்டார். அந்த விவரங்களைப் பற்றி முன்னுரையில் விவரித்துள்ளார். அது அதிர்ச்சி அடைய வைக்கிறது. தேவசகாயம் இதனால் பணி நிறைவடைவதற்கு 15 ஆண்டுகள் முன்பே ஓய்வு பெற்றுவிட்டதாகக் குறிப்பிடுகிறார். இந்த நூல் அன்னை தெரச புனிதர் பட்டம் பெற்றிருக்கும் தருவாயில் வெளிவந்திருப்பதுடன் தெரசா மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்கவும் முற்படுகிறது என்பதையும் முக்கியமாக குறிப்பிட வேண்டும். தெரசா தேவசகாயத்துக்கு எழுதிய அலுவலக ரீதியான கடிதங்களும் இணைக்கப்பட்டுள்ளன. பெரும் தலைவர் ஜேபியுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புப்பெற்ற தேவசகாயம் அன்னை தெரசாவுடன் பழகும் வாய்ப்பைப் பெற்றதும் பெரும் பேறாகும்.

அன்பின் துளி புனித தெரசா நினைவுக் குறிப்பு

எம் ஜி தேவசகாயம் தமிழில் வி.கிருஷ்ணமூர்த்தி, வெளியீடு: கிழக்கு பதிப்பகம், 177/103,முதல் தளம்,

அம்பாள் கட்டடம், லாயிட்ஸ் சாலை,

ராயப்பேட்டை, சென்னை- 14 விலைரூ 130; 044-42009603

logo
Andhimazhai
www.andhimazhai.com