இன்றைய வாழ்க்கை என்பது ஏதோ ஒரு வேலை என்பதாக மாறிவிட்டது. ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி ஆயிரக்கணக்கான அடித் தட்டுக் குடும்பங்களை மேல் தட்டுக்கு உயர்த்தி இருக்கிறது. ஆனாலும் முதலாளித்துவ பொருளாதாரத்தின் இன்னொரு பக்கம் இருட்டானது. அதன் விளைவாக உருவானதே அமெரிக்காவில் சில ஆண்டுகளுக்கு முன்பு உருவான பொருளாதார மந்த நிலை. அப்போது வேலை இழந்தவர்கள் ஏராளம். இந்தியாவிலும் அந்த நிலை எதிரொலித்தது. பன்னாட்டு நிறுவனங்கள் ஒரே நாளில் பலரை வேலையை விட்டு அனுப்பின. பலர் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனர். கார்ப்பரேட் நிறுவனங்களின் சிறிய கண்ணாடிக் கூடுகளுக்குள் அழகிய கிளிகளாக வளர்க்கப்பட்ட மூன்று பேரின் கதையை இடைவேளை என்ற நாவலில் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார் ஆர்.வெங்கடேஷ். ஆர்த்தி, ரஞ்சன், கல்யாண் ஆகிய பாத்திரங்கள் உலகப் பொருளாதார நெருக்கடியால் வேலையிழக்கும் தருணத்தில் தொடங்கும் இந்நாவல் ஒரு தற்கொலையுடன் முடிவடைகிறது. கல்யாணின் குடும்பம் அவர் வேலையிழந்ததும் அவர் மீது செலுத்தும் அலட்சியமான அழுத்தம் இன்று பல குடும்பங்களுக்கும் பொருந்தும். ஐடி நிறுவன வேலைகளால் குடும்பங்கள் உயர்நிலைக்கு வந்தாலும் வேலைக்குப் போகின்றவனின் சிரமங்களைப் புரிந்துகொள்ளாமல் அவனது பணத்தை மட்டுமே குறியாகக் கருதும் பேராசை அல்லது நடுத்தர வர்க்க மனோநிலையை இந்நாவல் பிரதிபலிக்கிறது. பெருநிறுவனங்களின் சலுகைகளை அனுபவித்து, அது திடீரென்று இல்லாமல் போகிறபோது அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், இன்னொரு வேலையைத் தேட அவர்களின் அலைச்சல்கள், அதில் எதிர்கொள்ளும் கசப்பான அனுபவங்கள் என்று இந்நாவல் ஒரு சமகாலக் கண்ணாடி. கையில் எடுத்தவுடன் விறுவிறுவென்று வாசிக்கச் செய்துவிடும் எளிமையான மொழி நடை. நவீன வாழ்க்கையின் நரித்தனங்கள், பணத்தை மட்டுமே நம்பும் மனிதர்கள் என்று வாசிக்க வாசிக்க நகர்ப்புர வாழ்வின் மீது கசப்புள்ளவர்களுக்கு பீதியை ஏற்படுத்துகிறது. மிகவும் அவசியமான கசப்பு மருந்து இந்த பீதி.
இடைவேளை (நாவல்), ஆர்.வெங்கடேஷ், வெளியீடு: நேசமுடன், விற்பனை: வேத பிரகாசனம், 142, முதல் மாடி, கிரீன்வேஸ் சாலை, ராஜா அண்ணாமலை புரம், சென்னை-28. பேச: 24641600. விலை ரூ 100
கிராமத்து நிலப்பரப்பு
தென்னார்க்காடு மாவட்ட கிராமங்களின் ஞாபகச் சுவடுகளை ஏக்கத்துடன் நினைவுகூரும் கவிதைகளைத் தாங்கி வந்திருக்கிறது கி.தனவே இ.ஆ.ப. எழுதியிருக்கும் செம்புலச் சுவடுகள் கவிதைத் தொகுப்பு. நவீன கால நகர்ப்புற வாழ்க்கையில் தான் இழந்துவிட்ட கிராமத்து அடையாளங்களை ஒவ்வொரு நாளும் நகருக்குள் வாழப் பணிக்கப்பட்ட கிராமத்துவாசி நினைவு கூர்கின்றான். நினைவில் கிராமம் சுமந்து அலையும் அவனது பெருமூச்சுக்கள் இங்கே கிராமத்து மொழியில் கவிதைகளாக உள்ளன.
ஆயாக்களிடம் விடப்பட்ட
அடுத்த தலைமுறை அறியுமா
அம்மாயிகளின் வாசம்?
என்று தன் அம்மாயியை நினைவுகூரும் கவிதையில் கேட்கும் இவர் தன் ஆசிரியர்களை, பள்ளித் தோழர்களை, நெய்வேலி சுரங்கத்தால் இடம்பெயர்ந்த கிராமத்தை, வீட்டுக்கு முதல் முதலாக வந்த ரேடியோவை, சாமியாட்டத்தை என நினைவு கூர்ந்துகொண்டே போகிறார். ஊருக்குள் வரும் தாசில்தாரின் ஜீப் ஹாரனை அனுமதி வாங்கி அழுத்திப் பார்த்ததை சொல்லும் கவிதை ஒன்றைப்படிக்கையில் இவரது இ.ஆ.ப கனவு எங்கே முளைவிட்டிருக்கும் என்பது சட்டென்று பிடிபடுகிறது. கார்த்திகைத் தீபத்துக்கு பொறிப்பொறியாய் தீ கொட்டும் காத்திப் பொட்டலம் சுற்றுவது பற்றிய நீண்ட கவிதை ஒன்று குறிப்பிடத் தகுந்தது. கிட்டத்தட்ட எல்லா கவிதைகளிலும் சின்னதாய் ஒரு பால்ய சம்பவத்தின் நினைவு ஏக்கத்துடன் உருவெடுக்கும் கவிதைகளாய் இவை அமைந்துள்ளன.
செம்புலச் சுவடுகள் (ஓர் உரைக்கவிதை தொகுப்பு),
கி.தனவேல், இ.ஆ.ப. கௌதம் பதிப்பகம், 2, சத்தியவதி நகர் முதல் தெரு, பாடி, சென்னை 600050. பேச: 9444086888. விலை ரூ50
---
ஏமாற்றத்துக்கு தீர்வு!
செல்போன் சரியில்லை என்று வழக்குத் தொடர்ந்து அம்பானியையே கைது செய்ய உத்தரவு வாங்கியிருக்கிறார் சாமானியர் ஒருவர். பேருந்துப் பயணத்தின் போது 12 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப் பட, பத்தாயிரம் அபராதம் கட்ட வைத்தது நீதிமன்றம். வீட்டுக்கு வாங்கிப் போன டிவி சரியில்லை என்றதும் மன உளைச்சலுடன் டிவி ஷோ ரூமுக்கு நோட்டீஸ் அனுப்பினார் ஒருவர். ஷோ ரூம்காரர்கள் உடனே ஓடிவந்து புதிய டிவியைக் கொடுத்துச் சென்றனர். பொய்யான விளம்பரம் பார்த்து ஒரு பொருளை வாங்கினார் ஒருவர். தான் ஏமாந்ததை அறிந்ததும் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவருக்கு 10,000 ரூபாய் நஷ்ட ஈடு வழங்கப்பட்டது.
இப்படி பல வெற்றிகரமான நுகர்வோர் வழக்குகளைப் பற்றிய விவரங்களைச் சுவாரசியமாகத் தொகுத்துள்ளார் எழுத்தாளர் இவள்பாரதி. புதிய தலைமுறை இதழில் தொடராக வெளியிடப்பட்ட இக்கட்டுரைகள் இக்காலகட்டத்தில் நுகர்வோர் விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதுடன் ஏமாற்றப்படுவோர் சரியான முறையில் வழக்குத் தொடர்ந்தால் அதற்குத் தீர்வும் உண்டு என்பதை உணர்த்துகின்றன. எந்தெந்த குறைபாடுகளுக்கு வழக்குத் தொடரலாம்? எப்படி வழக்குத் தொடர்வது என்பதற்கான ஆலோசனைகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
கன்ஸ்யூமர்கள் கவனிக்கவும், இவள் பாரதி, புதிய தலைமுறை பதிப்பகம்,
25ஏ, என்.பி.இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஈக்காட்டுத் தாங்கல்,
சென்னை-32 பேச: 45969717. விலை ரூ 110
---
நீந்தும் சொற்கள்
பழைய சோறென இருக்கும்
என்வாழ்வுக்கு
இன்னமும் அவள்தான்
நினைவில் ஊறிய
இழப்பின் மாவடு.. இந்த கவிதை உருவாக்கும் மனச்சித்திரங்கள்தான் இக்கவிதையின் வெற்றி.
வெற்றிடத்தை நீலத்தால் நிரப்பும் வானம் என்கிற இந்த கவிதைத்தொகுப்பில் கவிதை களாக முழுமை அடைந்துள்ள, ஒவ்வொருவருக்குமான தனித்தனி அனுபவங்களான கவிதைகள் நிரம்பிக் கிடக்கின்றன. சூர்யாவின் கவிதைகள் மிகவும் அந்தரங்கமான விஷயங்களைப் பேசுகின்றன. அதே சமயம் அவர் பயன்படுத்தும் மாவடு போன்ற எளிய படிமங்கள் அக்கவிதையை சட்டென்று பொதுமைப் படுத்திவிடுகின்றன. வாசிப்பவனும் அவர் எழுப்பும் உணர்வுகளில் சிக்கிக் கொள்கிறான். காதலை, காமத்தை, குழந்தைமையை, சமூகக்கோபத்தை, நட்பை, ஆற்றாமையை, பொறாமையை.. என எல்லாவற்றையும் சொற்களாக்கி நீந்த விடுகிறார் கவிஞர். அவை கவிதைகளாகத் திரண்டு எழுந்து கவிதை வாசகனைத் திணற அடிக்கும் தொகுப்பாக இது உள்ளது.
சத்தியத்தைப் பற்றிய ஒரு ரகசியம், அம்மா, நிழல், இன்ன பிறகொக்குகளின் காலம் உள்ளிட்ட பல கவிதைகள் எழுப்பும் உணர்வலைகள், மனத்தின் தந்திகளில் எழுப்புகின்ற நாதம் அற்புதமானது. இருப்பின் நியாய சாட்சியாய் தன்னை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளும் முயற்சியே தன் கவிதை என்கிறார் சூர்யா. அதை எல்லா கவிதைகளிலும் உணர முடிகிறது.
வெற்றிடத்தை நீலத்தால் நிரப்பும் வானம்- கவிதைகள்,
அமிர்தம் சூர்யா, அன்னை ராஜராஜேஸ்வரி பதிப்பகம், 41, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை-11 பேச:9444640986 விலை ரூ100
நவம்பர், 2013