அழகிய தமிழில் அறிவியல்

அழகிய தமிழில் அறிவியல்
Published on

அறிவியல் துறை ஞானமுடையவர் அழகாகத் தமிழில் எழுதத்தெரிந்தவராகவும் இருந்துவிட்டால் அதைவிட பெரியவிஷயம் வேறெதுவும் இல்லை. என்.ராமதுரை அப்படிப்பட்டவர். இரு தொகுதிகளாக வெளிவந்திருக்கும் இந்நூலில் அறிவியல் சார்ந்த அடிப்படை விஷயங்களை, அதிசயமான கருத்துக்களைத் தெள்ளத்தெளிவாக சுவாரசியமாக கொடுத்துள்ளார். பள்ளி மாணவர்களுக்கும் பெரியவர்களுக்கும் ஒருங்கே தகவல்களை அள்ளித்தருகிறது இந்த நூல்.

உலோகங்களில் இரும்பை விட உறுதியானது குரோமியம் என்கிற தகவல் கொண்ட கட்டுரையை காலியம் என்கிற உலோகம் உள்ளங்கையில் உருகக்கூடியது என்று ஆரம்பிக்கிறார். டங்க்ஸ்டன் எளிதில் உருகவே உருகாது என்கிறார். குரோமியப் பூச்சில் வந்து முடிக்கிறார். எந்த தகவலாக இருந்தாலும் அதை அனைத்து கோணத்தில் அணுகி சுவாரசியமாகச் சொல்கிறார். அதனாலேயே இப்புத்தகம் மிக முக்கியமானது. பள்ளி ஆசிரியர்களுக்கும் கூட பாடப்புத்தகம் தாண்டி கூடுதல் விவரங்களை எளிமையாக இந்நூல் சொல்கிறது. போர்ப்படையில் இருக்கும் டால்பின்கள், இன்சாட் செயற்கைக்கோள் எப்படிச் சுற்றுகிறது?, வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு, அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது என்பது எந்த நட்சத்திரத்தை? குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் எப்படி உருவாகிறது? எனப் பல தகவல்களுக்கான நூல்கள் இவை.

அறிவியல் எது? ஏன்? எப்படி? அடிப்படை முதல் அதிசயங்கள் வரை 1, 2 . என் ராமதுரை வெளியீடு: கிழக்குப் பதிப்பகம், 177/103, முதல் தளம், அம்பாள் கட்டடம், லாயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14 பேச: 044- 42009603. விலை.ரூ – 225

ஒளியை சமைப்பவர்கள்

உலகின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்கள் தாங்கள் பணிபுரிந்த திரைப்படங்களுக்கு ஒளியமைப்பு செய்தபோது நிகழ்ந்த அனுபவங்களை நேர்காணல்களாக ஒரே நூலில் படிப்பது என்பது திரைப்படத்தை நேசிப்பவர்களுக்கு நெருக்கமானதாகவே இருக்கும். அப்படியொரு நெருக்கமான அனுபவத்தைத் தருகிறது ஒளிவித்தகர்கள் என்கிற இந்த நூல். ஜாஸ் (டீச்தீண்) படத்துக்கு ஒளிப்பதிவு செய்த பில் பட்லர், சுறா தாக்கும் ஒரு காட்சியில் காமிரா தண்ணீரில் மூழ்கிவிட்ட அனுபவத்தையும் ஆனால் அந்தக் காட்சி நன்றாக பதிவானதையும் அதை மீட்ட சம்பவத்தையும் சொல்கிறார். உப்புத்தண்ணீரில் நனையும் காமிராவை மீட்பதன் சிரமத்தை அந்தத் துறையில் இருப்பவர்கள் புரிந்துகொள்ள முடியும்.  இந்த நேர்காணலில் ஓரிடத்தில் அவரது குழந்தை ஒரு கோக் பாட்டிலில் இருந்து சிதறிய ஒளியை ரசித்ததையும் தன் சுயகவுரவத்தால் அந்த ஒளி அழகை தான் பார்க்கத் தவறியதையும் குறிப்பிடுகிறார்.  ஒரு குழந்தையின்  கண்ணோட்டத்தில் இருந்து ஒளிப்பதிவாளர் பார்க்கவேண்டும் என்கிறார் அவர். ஹாலிவுட் மற்றும் பல உலகப்பட இயக்குநர்களுடன் பணியாற்றிய எட்டு ஒளிப்பதிவாளர்களின் நேர்காணல்கள் இந்த நூலில் உள்ளன.  சிறப்பான மொழிபெயர்ப்பு. முடிந்த அளவுக்கு கலைச்சொற்களைப் பயன்படுத்தியிருக்கும் மொழிபெயர்ப்பாளர், வாசிப்பவர்களுக்குப் புரியவேண்டும் என்பதில் கவனம் செலுத்தியிருப்பது புலனாகிறது.

ஒளிவித்தகர்கள் தமிழில்: ஜா.தீபா, வெளியீடு: டிஸ்கவரி புக்பேலஸ், கேகே நகர் மேற்கு, சென்னை 78. பேச: 044-65157525. விலை: ரூ - 150

சூரியனின் கதை

திராவிடக் கட்சிகளின் ஆட்சியின் 50 ஆண்டுகள், சட்டமன்றத்தில் கலைஞரின் 60 ஆண்டுகள், திராவிட இயக்கத்தின் 100 ஆண்டுகள் -ஆகிய நிகழ்வுகளால் 2017 ஆம் ஆண்டு என்பது முக்கியமான ஒன்று. இந்த வரலாற்றுபூர்வமான ஆண்டு அரசியல் சிக்கல்களை எதிர்கொண்டிருக்கிறது. இந்த திராவிட வரலாற்றில் முக்கியமான தலைவர்களில் ஒருவரான கலைஞர் மு.கருணாநிதி தள்ளாமையால் ஒய்வு பெற்றிருக்கிறார். தி இந்து குழுமம் வெளியிட்டிருக்கும் தெற்கிலிருந்து ஒரு சூரியன்  என்கிற இந்த நூல் வெளியிடப்படுவதற்கு முன்பாகவே அட்டையில் கருணாநிதியின் படம் பெரிதாக இடம் பெற்றிருப்பதால் கவனத்தை ஈர்த்துவிட்டது. திராவிட இயக்கம் குறித்த பெருமைகளைச் சொல்லும் பல்வேறு அறிஞர்களின் கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. தெற்கிலிருந்து ஒரு சூரியன் என்கிற சமஸின் கட்டுரை திராவிட இயக்கத்தைக் கருணாநிதியின் செயல்பாடுகள் வழியாகப் புரிந்துகொள்ளும் முயற்சி. ஒட்டு மொத்த நூலுமே அப்படித்தான் அமைந்திருக்கிறது. இந்த பிறவி தலைவருக்கானது என்கிற அவரது உதவியாளர் சண்முகநாதனின் நேர்காணல் மிகவும் புதியது.

மு.க. ஸ்டாலினின் நேர்காணலும் கனிமொழியின் கட்டுரையும் கலைஞரைப் பற்றி நெருக்கமான சித்திரத்தை அளிக்கின்றன. எழுத்தாளர் இமையம் எழுதியிருக்கும் கட்சிக்காரன் என்ற கட்டுரை திராவிடப் பேரியக்கத்தின் உண்மையான தொண்டர்களை விளக்குகிறது. நூல் முழுக்க திராவிட இயக்கத்தின் கொள்கைகள்,  சாதனைகள் குறித்த முக்கியமான ஆளுமைகளில் நேர்காணல்கள் கட்டுரைகள் நிரம்பியிருக்கின்றன. எல்லா கோணத்திலிருந்தும் திராவிட இயக்கத்தை அணுக  முயற்சித்திருக்கிறார்கள் என்றே  சொல்லவேண்டும். திராவிட இயக்கத்தின் சாதனைகள் குறித்த முக்கியமான தரவுகள் அடங்கிய நூல்.

தெற்கிலிருந்து ஒரு சூரியன் - திராவிட நூற்றாண்டில் ஒரு பயணம்!

வெளியீடு: தமிழ் திசை, கே எஸ் எல் மீடியா, கஸ்தூரி கட்டடம், எண் 859 - 860, அண்ணா சாலை, சென்னை -2 விலை ரூ - 200

விரிவடையும் எல்லைகள்

‘ஆண் பிரதியும் பெண் பிரதியும்’ கவிஞர் சமயவேலின் முதல் கட்டுரைத் தொகுப்பு. அதிகமும் கவிதை, சிறுகதை, நாவல் என படைப்பிலக்கியம் பற்றிய 26 விமர்சனக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூல் இது. கூடுதலாய் இரண்டு அஞ்சலிக் கட்டுரைகளும் உண்டு.  வாசிப்பும், தொடர்ந்த வாசிப்பு தரும் ருசியும் விமர்சனக் கட்டுரைகளாக நூலெங்கும் விரவிக்கிடக்கின்றன. இந்தத் தொகுப்பை புதிதாக வாசிக்கும் ஒருவன் இதில் கூறப்பட்டுள்ள படைப்புகளைப் பற்றிய அசலான சித்திரத்தை முற்றிலும் ஒரு புதியதொரு  கோணத்தில் அறியமுடியும் என்பது இந்தத் தொகுப்பின் சிறப்பு. விக்கிரமாதித்யன், சி.மோகன், பெருந்தேவி, லீனா மணிமேகலை, வெய்யில், அய்யப்ப மாதவன், சாகிப்ரான், அ.ரோஸ்லின் என நவீன கவிஞர்களின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகள் உள்ளன. சமகால மற்றும் தனக்கு அடுத்து எழுத வந்த கவிஞர்களையும் அவர்தம் படைப்புகளையும் கவனத்துடனும், அக்கறையுடனும், படைப்புக் கூர்மையுடனும் அணுகும் விமர்சனப் பார்வை கவிஞர் சமயவேலுடையது. இன்னொரு பகுதியான நாவல் மற்றும் சிறுகதைகள் குறித்த கட்டுரைகளில் ந.முத்துசாமியின் மேற்கத்திக் கொம்பு மாடுகள் மற்றும் கொரிய நாவலான ‘தி வெஜிடேரியன்’ பற்றிய கட்டுரைகள் இரண்டும் முக்கியமானதெனச் சொல்லலாம்.  படைப்பிலக்கியம் குறித்த வாசிப்பின் எல்லைகளை விரிவாக்கிக்கொள்ள உதவும் கட்டுரை நூல். 

ஆண் பிரதியும் பெண் பிரதியும் - சமயவேல்,

வெளியீடு: மணல்வீடு இலக்கிய வட்டம், ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல், மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம் – 636 453. தொலைபேசி: 98946 05371. விலை - 150

logo
Andhimazhai
www.andhimazhai.com