துரோகத்தின் மொழி

துரோகத்தின் மொழி
Published on

அன்றாடம் செய்ய வேண்டிய செயல்கள் நிறைய இருக்கும்போது, வழியில் குறுக்கிடும் நம்பிக்கைத் துரோகத்தினை எப்படி எதிர்கொள்வது என்பது முக்கியமான கேள்வி. கல்லூரிக் கல்வியில் தேர்ச்சி பெற்று, உற்சாகத்துடன் பணியில் சேர முயலுகின்ற இளைஞர்களின் ஆர்வத்தினை முடக்கிப் போடுவதற்காக, வழி முழுக்க நாகங்கள் காத்துக் கிடக்கின்றன. ஒருவரின் முன்னேற்றத்தினைத் தடுத்திட எல்லா அலுவலகங்களிலும் நடைபெறுகின்ற அரசியல், துரோகத்தினால் மனமொடிந்து விடுவது சரிதானா? புதிய சூழலில் நெருங்கிப் பழகியவர் செய்யும் துரோகம் காரணமாக மனதில் கசப்பு பொங்கிடும்போது, என்ன செய்ய வேண்டும் என வெ.இறையன்பு விவரித்துள்ள தகவல்கள், துரோகச் சுவடுகள் நூலில் பதிவாகியுள்ளன. அவை துரோகம் குறித்த புதிய பேச்சுகளை உருவாக்குகின்றன.

எவ்வளவு கவனமாக இருந்தாலும் நாம் துரோகிகளின் முன்பு நிராயுதபாணியாகி விடுகிறோம் எனச் சொல்கிறார் இறையன்பு. விசுவாசிகள் குறிஞ்சியைப் போலவும், துரோகிகள் நெருஞ்சியைப் போலவும் இருக்கிறார்கள் என்ற வருணனை சுவாரசியமானது.

துரோகம் காரணமாகத் துவண்டு விழ வேண்டியது இல்லை. துரோகச் செயல்கள் குறித்து எச்சரிக்கையாக இருப்பதுதான், ஒருவரின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். சமூக வாழ்க்கையில் துரோகம் என்பது தவிர்க்க இயலாததது என்ற புரிதல் அவசியம். இதை எதிர்கொள்ளும் மனத்துணிவு வேண்டும். துவண்டுவிடக் கூடாது என்ற நோக்கத்துடன் இறையன்புவினால் எழுதப்பட்டுள்ள இந்நூலானது,  புதிய பாடங்களைக் கற்றுத் தருகிறது. வாசிப்பின்மூலம் தன்னம்பிக்கையை அளிக்கிறது. 

துரோகச் சுவடுகள்(கட்டுரை), வெ.இறையன்பு,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. பக்கம்: 96; விலை: ரூ. 80/-. பேச: 044-26359906

-ந.முருகேசபாண்டியன்

நிஜ மனிதர்கள்

எளிமையான கிராமத்துக் கதை. தென் தமிழக கிராமம் ஒன்றின் மண்வாசனையை அவ்வூரில் இருந்து கல்லூரி சென்று படிக்கும் ஓர் இளைஞனின் பார்வையில் நேர்க்கோட்டில் பதிவு செய்திருக்கிறார் நாவல் ஆசிரியர் ஏக்நாத். முப்பிடாதி என்ற அந்த இளைஞனின் மன உணர்வுகள், அவனுடைய கோபம், தாபம், காமம், நட்பு என்று ஒரு முழுமையான கதையாக இது இருக்கிறது. ஊரில் மந்திரமூர்த்தி என்ற காவல்தெய்வத்துக்குக் கொடை கொடுக்கும் நிகழ்வும் அதன் பின்னணியில் விரியும் சம்பவங்களுமாக இந்நாவல் எழுதப்பட்டிருக்கிறது. ரத்தமும் சதையுமான கிராமத்து மனிதர்களின் வட்டார பேச்சு வழக்குகளும் பழக்கங்களும் பதிவாகி உள்ளன.

ஆங்காரம், ஏக்நாத், டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே.நகர் மேற்கு, சென்னை 78 விலை: ரூ.220/-. பேச: 044-65157525

புதிய உலகம்

ஐந்து முதலைகளின் கதை என்னும் இந்த நாவல் சமகால அரசியல் வரலாற்றுப் பின்னணியில் தெற்காசிய நாடான கிழக்கு தைமூரில் தொழில் தொடங்கச் செல்லும் ஒரு தில்லாலங்கடி நாயகனின் அனுபவங்களைச் சொல்கிறது. கதைக்குள் கதைகளாக கிசுகிசுக்களாக, தகவல்களாக கதை விரிந்துகொண்டே செல்கிறது. சீனர்கள், சிங்கப்பூர்,மலேயா தமிழர்கள், தாய்லாந்துக்காரர்கள், தைமூர் பெண்கள் என புதிய புதிய பாத்திரங்களை படைத்திருக்கிறார் சரவணன் சந்திரன். புதிய தொழில் தொடங்குவது என்கிற சவாலான பின்னணியைக் கொண்டு சுவாரசியமான உலகை உருவாக்கி உள்ளார் நூலாசிரியர்.

ஐந்து முதலைகளின் கதை, சரவணன் சந்திரன்,

உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்ரமணியம் தெரு,  அபிராமபுரம், சென்னை-18

விலை: ரூ. 150/-. பேச: 044-24993448

logo
Andhimazhai
www.andhimazhai.com