ஈழத்தில் 2009-ல் நடந்த பேரழிவுக்குப் பின்னால் ஓராண்டு கழித்து தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு பிரபல ஆளுமைகளின் நீண்ட நேர்காணல்களை பத்திரிகையாளர் ஏகலைவன் ஓர் ஊடகத்தில் காணொளிக் காட்சிகளாக வெளியிட்டிருந்தார். வெளியானபோது உலகத்தமிழர்களால் உற்றுக்கவனிக்கப்பட்ட அந்த நேர்காணல்கள் இப்போது எழுத்துவடிவில் அவரால் தொகுக்கப்பட்டு வெளியாகி உள்ளன. திருச்சி வேலுசாமி முதல் கவிஞர் காசி ஆனந்தன் வரை இருபது தமிழக தலைவர்கள் செயற்பாட்டாளர்களின் பேட்டிகள் இதில் இடம்பெற்றுள்ளன. இவர்கள் அனைவரும் இன்றும் ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாட்டில் நிற்பவர்கள். ஒவ்வொருவரும் ஈழப்பிரச்னையை தங்கள் நிலைப்பாட்டில் நின்று வாதிடுகிறார்கள். யார் குற்றம் செய்தது? யார் துரோகி ? இறுதிக்கட்டத்தில் என்ன நடந்தது? போன்ற விசயங்களை ஒவ்வொருவரும் சொல்கிறார்கள். சுப.வீரபாண்டியனின் நேர்காணல் குறிப்பிடவேண்டிய ஒன்று. அப்போதைய முதல்வர் கருணாநிதியைக் குற்றம் சாட்டும் கேள்விகளை பேட்டியாளர் கேட்க, சுப.வீ. சளைக்காமல் தன் கருணாநிதி ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து பதில் சொல்கிறார். மற்றபடி பெரும்பாலான நேர்காணல்களில் அன்றைய ஆளுங்கட்சியின் மீது குற்றம் சாட்டப்படுகிறது. கடைசி நேரங்களில் நிகழ்ந்த விஷயங்கள், புவிசார் அரசியல் விஷயங்கள் விவாதிக்கப்படுகின்றன. உலகநாடுகளின் போராட்ட அரசியல்கள் ஒப்பீடு செய்யப்படுகின்றன. கடும் உழைப்பைச் செலுத்தி இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இன்றும் உயிரோட்டத்துடன் உள்ள ஆவணமாக இந்த நூல் வெளியாகி உள்ளது.
முள்ளிவாய்க்கால் முடிவல்ல இனி என்ன செய்யலாம்?
தொகுப்பாசிரியர் பா.ஏகலைவன்
வெளியீடு: யாழ் பதிப்பகம் 10/61, 7-வது தெரு, கம்பர் நகர்,
சென்னை-89 பேச: 8939899113 விலை ரூ 500
நம்முடைய கிராமங்களின் கதைகளை நகர மயமாக்கலின் பாதிப்புகளை, பெண்களின் மனங்களை நம்முடைய வார்த்தைகளிலேயே நமக்கு திருப்பி சொல்கிறார் இமையம். ஆனால் புதிதாக கேட்பது போல மனதை தைக்கின்றன ஒவ்வொரு கதையும். இமையத்தின் சமீபத்திய சிறுகதைத் தொகுப்பான நறுமணம் அற்புதமான சிறுகதைகள் நிரம்பியது. பெண்களுக்கான இட ஒதுக்கீடு கிடைத்துவிட்டால் பெண் விடுதலை
சாத்தியமாகிவிடும் என்று நம்புபவர்கள் முன்பாக ‘ வீடும் கதவும்’ என்ற கதையின் வழி எள்ளி நகையாடுகிறார் இமையம். படிப்போ, நகர அனுபவமோ இதில் எந்த விதத்திலும் வேறுபாட்டை உருவாக்குவதில்லை என்பதை உரையாடலின் மொழி வழியாகவே அழகாக சொல்லிச் செல்கிறார். சரி, தவறு என்று தீர்ப்பளிக்காமல், இப்படித்தான் இருக்கிறது நம்முடைய வாழ்க்கை என்று நம்மை உணரச் செய்வதாகவே இருக்கிறது அனைத்து கதைகளும். ‘துபாய்காரன் பொண்டாட்டி’ உளவியல் படிப்பவர்களுக்கான பாடமாக வைக்க வேண்டிய கதை. தன்னைத்தானே வதைத்துக் கொள்ளும், சுய கழிவிரக்கம் கொண்ட பெண்ணின் மனதை இவ்வளவு ஆழமாக வெளிப்படுத்த இமையம் போன்று வெகு சில படைப்பாளிகளே இருக்கிறார்கள்.
நறுமணம், இமையம் வெளியீடு: க்ரியா பதிப்பகம், புது எண்:2, பழைய எண்: 25, 17வது கிழக்குத் தெரு, காமராஜர் நகர், திருவான்மியூர், சென்னை -41 பேச: 7299905950 விலை: ரூ 195
பார்த்தீனியம் என்றால் என்ன? தமிழ்நதியின் பார்த்தீனியம் நாவலைப் புரட்டிக்கொண்டிருந்த நண்பர் கேட்டார். நாவலைப் படித்துப்பாருங்கள் புரிந்துவிடும் என்றேன். இரண்டு நாட்கள் படித்துக்கொண்டிருந்தவர் ஒரு யுரேகா கணத்தில் என்னை அழைத்து, “பார்த்தீனியம் என்றால் என்னவென்று போட்டிருக்கிறார்கள். அது ஒரு களைச்செடி. இந்தியாவில் எங்கும் பிரபலமாகக் காணப்படுவது. இலங்கையில் இல்லாமல் இருந்தது. இந்திய அமைதிப்படை அங்கே போனபிறகு பார்த்தீனியமும் முளைக்க ஆரம்பித்துவிட்டது. இவர்கள் கொண்டுசென்ற ஆடுகளின் கழிவில் இருந்து அது அங்கே முளைவிட்டிருக்கவேண்டும் என்று வருகிறது” என்றார். கூடவே “பார்த்தீனியம் போன்றதுதான் இந்திய அமைதிப்படையும் என்று அதில் ஒரு பாத்திரம் சொல்கிறது” என்றார் வருத்தத்துடன். அவருடைய வருத்தத்தைப் புரிந்துகொண்டேன். இந்தியா இலங்கையில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் இன்னொரு புறத்தை பொட்டில் அடித்ததுபோல் புரியவைக்கும் விதத்தில் நாவலின் பெரும்பகுதி எழுதப்பட்டிருக்கிறது.
பாவற்குளம் என்ற ஊரில் இருந்து 1983-க்குப் பிறகு புலிகள் இயக்கத்தில் சேரவருகிற சில இளைஞர்களின் கதையாக ஆரம்பிக்கும் இந்நாவல், அவர்களில் பரணி என்று இயக்கப்பெயர் கொள்ளும் இளைஞனின் காதல், அவனது கொந்தளிப்புகள், சாகசங்கள், இந்திய அமைதிப்படை வெளியேறும் காலத்தில் அவன் இயக்கத்திலிருந்து வெளியேறுவது வரைக்குமான சுமார் எட்டு ஆண்டுகால ஈழ வரலாற்றைப்பேசுகிறது.
எழுத்தாளர் பெண் என்பதால் பல விஷயங்களில் ஓர் ஆண் பதிவு செய்யமுடியாத விஷயங்களைப் பதிவு செய்யமுடிகிறது என்பது இந்த நாவலில் மிக முக்கிய அம்சம். குறிப்பாக பரணியின் காதலியாக அலைக்கழிக்கப்படும் வானதியின் மனக்கொந்தளிப்பை எந்த ஆணாலும் எழுதியிருக்க முடியாது. தேய்வழக்குகளைப் பயன்படுத்தாமல் புதிய சொல்லாடல்களைப் பயன்படுத்தி சற்று அசந்தாலும் ‘பைங்கிளிக் கதைகளில்’ ஒன்றாகிவிடக்கூடிய அபாயம் உள்ள அவர்களின் காதலை அழகாகப் பதிவு செய்திருக்கிறார். பரணியைக் காண்பதற்காக பேருந்துகளில் ஏறிஏறி வன்னிக்கு யாழிலிருந்து வானதி செல்வதெல்லாம் காதல் பித்துற்ற மனதில் செயல்படும் விசைகளின் தூண்டுதல்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
அருமைநாயகம் என்கிற பாத்திரம் சாதாரணமாக அறிமுகமாகி இந்திய அமைதிப்படைக்கு பெரும் ஆதரவாகப் பேசிக் கொண்டிருப்பார். கடைசியில் சஞ்சீவி என்ற இளைஞனை இந்தியன் ஆமி பிடித்துச் செல்ல, அவனைத் தேடி யாழ்ப்பாணம் போய், நடுத்தெருவில் ஆமியிடம் அடிவாங்கி, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓட்டம் பிடிப்பார். வழியில் சிலருக்கு சாப்பாடு வாங்கிக்கொடுப்பார். அவர்களுடன் சேர்ந்து தப்பித்து வருகையில் கடலில் விழுகிறவரை, அவர்கள் காப்பாற்றிக் கரை சேர்ப்பார்கள். அவரது மனைவி வீட்டில் பரிதவிப்பார். சில நாட்கள் கழித்து புதிய நண்பர்களுடன் பென்னாம் பெரிய சூரை மீனுடன் வீட்டில் தோன்றுவார். பார்த்தீனியத்தில் வருகிற பாத்திரப்படைப்புகளில் அற்புதமான வார்ப்பு இந்த அருமைநாயகம்.
நாவல் முழுக்க சாதாரண மனிதர்களின் பார்வையில் ஈழத்தில் நடக்கும் போருக்கான எதிர்வினைவுகள் பதிவாகின்றன. உண்மையான மனிதர்கள், போராளிகள், அதிகாரிகள் வந்துபோகின்றார்கள். இந்நாவல் நடக்கும் காலகட்டம் ஈழத்தில் சகோதர யுத்தம் நிகழ்ந்த கட்டம். துரோகிகள் என்று விடுதலைப்போராளிகள் ஒருவரை ஒருவர் கொன்றொழித்த காலம். இந்த விஷயங்களை சாதாரண ஈழப்பொதுமக்களின் பார்வையிலிருந்து எதிர்ப்பு ஆதரவு என இருவேறு கருத்துகளையும் பதிவு செய்துகொண்டே போகிறார். சம்பவங்களுக்கு இடையில் உள்ளீடாக வரும் விஷயங்களுக்காகவும் அந்த காலகட்டம் பற்றி சரியாகப் புரிந்துகொள்வதற்காகவும் இந்நாவலை வாசிக்கலாம். தமிழ்நதியின் மிக இலகுவான மொழிநடைக்காகவும்.
2009-ல் நடந்த ஊழிக்குப் பின்னால் எழுதப்பட்டிருக்கும் இந்நாவல் அதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சம்பவங்களைப் பற்றிப் பேசுகிறது. பரணியும் வானதியும் இந்த ஊழியைத் தாக்குப்பிடித்து உயிரோடு இருந்திருக்க முடியுமா? தமிழ்நதியைத்தான் கேட்கவேண்டும்.
பார்த்தீனியம், தமிழ்நதி, வெளியீடு: நற்றிணை பதிப்பகம், 6/84, மல்லன் பொன்னப்பன் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை- 5 பேச: 909529122 விலை: ரூ 490