அசுரன் சொல்லும் அரசியல்

அசுரன் சொல்லும் அரசியல்
Published on

கேரளாவைச் சேர்ந்த ஆனந்த் நீலகண்டன் ஆங்கிலத்தில் எழுதிய அண்தணூச் Asura the tale of the vanquished என்கிற நாவல், தமிழில் அசுரன் வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம் என்ற பெயரில் மொழிபெயர்ப்பு நூலாக வெளியாகி உள்ளது. எடுத்த எடுப்பிலேயே நமக்கு உற்சாகம் அளிப்பது இதன் மொழிபெயர்ப்பு நடை. மிகவேகமாகப் படித்துச் சென்றுவிடும் அளவுக்கு வழுக்கிச் செல்லும் கதை. நமக்குத் தெரிந்த ஒவ்வொரு ராமாயணச் சம்பவமும் இந்நாவலில் வேறொரு கோணத்தில் சொல்லப் படுகிறது. அறிவுக்கு மீறிய எந்த அதிமானுடச் சம்பவமும் அறவே இதில் இல்லை. இது அசுரர்களின் அரசன் ராவணனின் கதை. அவன் வாய்மொழியாகவும் பத்ரன் எனப்படும் குடிமகனின் வழியாகவும் விரிகிறது. புராணக் காப்பியங்களில் இருக்கும் தெய்வத்தன்மையை நீக்கிவிட்டு ராமனும் ராவணனும் மனிதர்களாக உலாவருகிறார்கள். இலங்கையை தன் மாற்றாந்தாய் மகன் குபேரனிடமிருந்து கைப்பற்றுவதற்கு முன் ராவணன் மிகச் சாதாரண மனிதனாக இருக்கிறான். இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு வந்து பிராமண விஷ்ணுவால் விரட்டப்பட்ட மகாபலியை சந்தித்து அவரிடமிருக்கும் வீரர்களுடன் இலங்கைக்குப் போய் குபேரனிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றுகிறான். கடற்பிராந்தியத்தில் வரும் கொள்ளைக்காரத் தலைவனாக வருணன். வடக்கே இருக்கும் அரசுகளை ஆள்பவர்களாக தேவர்கள். அவர்களால் விரட்டப்பட்டு தெற்கே வசிக்கும் மனிதர்களாக அசுரர்கள்.

இடையில் குரங்கு மனித தோற்றத்துடன் வாலி, சுக்ரீவன், அனுமான், அங்கதன். சீதை ராவணனின் மகள் என்கிறது இந்நாவல். இறுதியில் படைகளுடன் சென்று விபீஷணன் ராமனுடன் சேர்ந்து கொள்ள, போரில் ராவணன் கொல்லப்படுகிறான். தன் மனைவி சீதையை நெருப்பில் இறங்கி கற்பை நிரூபிக்கச் சொல்லுமாறு பிராமண பண்டிதர்கள் கூறுகையில் அதை மறுக்கமுடியாமல் நிராதரவாய் ராமன் நிற்கிற காட்சியும் பத்ரனின் கூற்றாக வருகிறது. பல இடங்களில் இந்நாவல் மக்கள் மீது ஆட்சியாளர்கள் செலுத்தும் அதிகாரத்தையும் கருப்பு நிறத்தில் இருந்த அசுர மக்களை சாதிய கட்டுப்பாடுகளைத் திணித்து ஒடுக்குவதையும் பேசுகிறது. 2012 -ல் ஆங்கிலத்தில் வெளியான இந்நாவல், வாசிப்பவர்களுக்கு அமிஷ் திரிபாதியின் the immortals of Meluha வை நினைவூட்டும். ஆனால் அதிலிருந்து இது வேறுபடுவது ராவணனும் பத்ரனும் பேசும் அரசியலில்தான். வரலாற்றில் எந்த சம்பவமும் அழிந்துபோய்விடுவதில்லை. எங்கோ வெவ்வேறு வடிவங்களில் காலந்தோறும் முளைத்துக் கொண்டே இருக்கிறது. சில உண்மைக்கு நெருக்கமாக; சில உண்மைக்குத் தூரத்தில்.

அசுரன், வீழ்த்தப் பட்டவர்களின் வீரகாவியம்- ஆனந்த் நீலகண்டன், தமிழில்: நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், 42, மால்வியா நகர், போபால்& 462003. விலை: ரூ 395/

வாழ்வின் குறிப்புகள்

தமிழில் வெகுமக்கள் இசைமீதான விமர்சனத்தை மிகச் சிறப்பாக எழுதக் கூடியவரான ஷாஜியின் புதிய கட்டுரைத் தொகுப்பு நூல் இசை திரை வாழ்க்கை. இதில் இசை மட்டுமல்ல. அற்புதமான பல ஆளுமைகளின் வாழ்வையும் தன் தேர்ந்த கவித்துவமிக்க உரைநடை மூலம் பதிவு செய்திருக்கிறார். முதல்கட்டுரையான மைக்கேல் ஜாக்சனை எடுத்துக்கொள்ளுங்கள். அக்கட்டுரை மேற்கத்திய இசை தெரியாத ஒரு சாமானியனுக்கும் ஜாக்சனின் மேதைமையை அறிமுகப்படுத்தி அவருடன் நெருக்கமாக்குகிறது. ராஜேஷ் கன்னா, ஸ்டீவ் ஜாப்ஸ், டாக்டர் தம்பையா, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், வர்கீஸ் குரியன், கிருஷ்ணா டாவின்சி போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் பற்றி அவர் எழுதி இருக்கிறார். 

இசையைப் பற்றி ஷாஜி எழுதுகையில் பல கதவுகள் திறக்கின்றன. இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் ஆகிய இருவரையும் பற்றி அவர் எழுதி உள்ள கட்டுரைகள் மிக முக்கியமானவை. குறிப்பாக இளையராஜா பற்றிய கட்டுரையில்,“வரலாறு எப்போதும் நம் கண்ணெதிரேதான் நிகழ்கிறது. ஆனால் அது காலத்தில் பின்னகர்ந்து பழையதாக ஆனபின்னரே நம்மால் அதைக் காணமுடிகிறது. இளையராஜா நம்கண்முன் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு வரலாறு” என்கிறார். பல்வேறு செய்திகளை உணர்த்தும் வரிகள்.

இந்த நூலின் இறுதிக்கட்டுரையாக இடம்பெற்றிருக்கும் மெஹ்தி ஹசன் பற்றிய அஞ்சலிக் குறிப்புகளைப் படிக்கும்போது வாழ்நாளில் ஒரு கசல் பாடலைக் கூடக் கேட்டிராதவராக நீங்கள் இருக்கலாம். ஆனால் இறந்துபோன ஹசனுக்காக உங்கள் கண்கள் குளமாவதை நீங்கள் உணர முடியும். உணர்வுகளை மொழியின்மூலம் அப்படியே வாசகனுக்கு மடைமாற்றிவிடும்  அழகான எழுத்து ஷாஜியினுடையது. அவர் அதிகம் எழுதுவதும் இல்லை. பெரும்பாலும் தன்னைப் பாதிக்கும் நிகழ்வுகளின்போதே அவர் எழுதியிருக்கிறார். அதனால் பல கட்டுரைகள் தவிர்க்க இயலாமல் அஞ்சலிக் கட்டுரைகளாக அமைந்துள்ளன.

திரை இசை வாழ்க்கை, ஷாஜி, உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராம புரம், சென்னை-18. பேச: 044-24993448

கல் சொல்லும் கதை

புகாரில் இருந்து கண்ணகி கோவலனுடன் கிளம்பிச்சென்று மதுரையை எரித்து பின்னர் தன்னந்தனியே காடேகி மலை உச்சிக்குச் சென்றுபத்தினித் தெய்வமான கதை சிலப்பதிகாரம். கண்ணகி மண்மகள் பாராத தன் வண்ணச்சீரடிகளுடன் புகாரில் இருந்து நடந்து சென்ற வழியே பயணிக்கும் இந்நாவல் தன் பயணத்தின் வழியாக சிலப்பதிகாரம் தொடர்பான பல கேள்விகளுக்கு சமகாலப் பார்வைகள் வழியாக விடை காண முயல்கிறது. ஆனால் அத்துடன் நின்றுவிடாமல் காங்கேயம் பகுதியில் கிடைப்பதாகச் சொல்லப்படும் மாணிக்கம் போன்ற அபூர்வ கற்களைச் சுற்றி இயங்கும் மனிதர்கள் பற்றிய அபூர்வ உலகைத் திறந்துவிடுகிறது.

அதற்குத் தேவையான இணைப்பாக கண்ணகியின் காற்சிலம்பில் இருந்த மாணிக்கக் கற்கள் காங்கேயத்தில் கண்டெடுக்கப் பட்டு பட்டைதீட்டப்பட்டவை என்ற கருத்தைப் பயன்படுத்திக் கொள்கிறது. வெறும் தமிழிலக்கியம் சார்ந்த நாவலாக மட்டுமின்றி சமகால பன்னாட்டு நிறுவனங்களின் செயல்பாடுகள், குறுங்குழுக்களாகச் செயல்படும் புரட்சிகர இயக்கங்களின் நடைமுறைகள், என்று பெரும் வலைப்பின்னலை நாவலாசிரியர் வழக்கறிஞர் இரா.முருகவேள் மிக எளிமையாக அவிழ்க்க முயன்றிருக்கிறார். திராவிட இயக்கங்கள் சிலப்பதிகாரத்தை உயர்த்தி தமிழ் அடையாளமாகப் பிடித்தது ஏன் என்ற கேள்விக்கும் மிளிர்கல் விடை தருகிறது.

வணிக குலத்தில் புகாரில் பிறந்த கண்ணகியை சேரநாட்டைச் சேர்ந்த செங்குட்டுவன் கொண்டாடுவது ஏன்? கொங்கர்ச் செல்வி என்று அவளை சாலினி என்ற பெண் சாமியாடுகையில் சுட்டுவது ஏன்? கோவலன் என்ற பெயரில் வழங்கப்படும் கொங்குநாட்டு பழங்குடிகளுக்கும் சிலம்புக்கும் என்ன தொடர்பு? என்று பலகேள்விகள். பூம்புகாரில் தொடங்கும் பயணத்தின் போது சமகாலத்தில் இருக்கும் கட்டடங்களுடன் சிலப்பதிகாரத்தில் வரும் இடங்களுடன் இணைத்துப்பார்த்து தேடிக்கொண்டே செல்கிறது முல்லை என்ற பெண்ணின் ஆவணப்படக் குழு. இந்த பயணம் கேரளத்தின் கொடுங்கலூரில் போய் முடிகிறது. ஆனால் முடிவல்ல. பெரும் பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் சுரண்டலுக்கு எதிராக இந்தப்பயணத்தையும் ஆவணப்படத்தையும் பயன்படுத்த வேண்டிய புரிதலுடன் முல்லை தன் பயணத்தைத் தொடங்குகிறாள்.

பூம்புகாரில் அவள் சந்திக்கும் மீனவர்கள் கண்ணகி பாண்டியனின் மகள் என்கிறார்கள். மலைமீது முதுவர்கள் கண்ணகி மதுரை மீனாட்சி என்கிறார்கள். சேரநாடுதான் கண்ணகியைக் கொண்டாடுகிறது. இவற்றுக்கு இடையே கண்ணகி பற்றிய தொன்மத்தின் உண்மை இருக்கக் கூடும்.

சிலப்பதிகார கால தமிழகம் தொடங்கி இன்றைய தமிழகம் வரையிலான காலப் பயணத்தை கொங்குநாட்டின் கண்கொண்டு நோக்கும் நூலாக இந்நாவல் அமைந்துவிட்டிருக்கிறது.

மிளிர்கல், பொன்னுலகம் பதிப்பகம், 4/413, பாரதிநகர், 3-வது வீதி, பிச்சம்பாளையம் (அஞ்சல்), திருப்பூர் - 641603

பேச: 9486641586. விலை: ரூ 200

logo
Andhimazhai
www.andhimazhai.com