கம்பனைப் புதிதாகக் கற்க ஆர்வமுள்ள தீவிர இலக்கிய வாசகர்கள், இளம் படைப்பாளிகள், தன் எழுத்துக்களுடன் ஏற்கெனவே உறவுடையவர்கள் என்று தன் இலக்காக யாரை இந்நூலுக்கு நிர்ணயித்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டு கம்பனின் எடுக்க எடுக்கக் குறையாத சொல் அம்பறாத் தூணியில் இருந்து ஒவ்வொரு சொல்லாக எடுத்து களமாடுகிறார் நாஞ்சில் நாடன். தான் கம்பனின் அடிப்பொடியாக உருவானது எப்படி என்பதையும் திரு.ரா.பத்மநாபன் அவர்களிடம் மும்பையில் கம்பனைக் கற்றதையும் முதல் அத்தியாயத்தில் விளக்கிவிடுகிறார். தமிழின் மிகப்பெரிய காப்பியமான கம்பராமாயணத்தில் உள்ள பாடல்கள் எண்ணிக்கை 10,368. திரும்பத் திரும்பப் பயன்படுத்திய சொற்களைக் கழித்துப் பார்த்தால் கம்பன் மொத்தம் ஒன்றரை லட்சம் சொற்களைப் பயன்படுத்தியிருக்கக் கூடும். சென்னைப் பல்கலைக் கழக லெக்சிகன்(1927) பட்டியலிட்ட தமிழ்ச் சொற்கள் 1,24,000. எனில் கம்பன் லெக்சிகனுக்குள் அடங்கி ஆடுகிறானா? ஏக வெளியில் தாண்டவம் புரிகிறானா? என்று வியந்து கேட்கிறார் நாஞ்சிலார்.
இன்று உறக்கம் என்பதற்கு தூக்கம் என்று பொருள்கொள்கிறோம். ஆனால் கம்பனில் உறக்கம் மட்டுமே. தூக்கம் இல்லை. எங்கெல்லாம் கம்பன் உறக்கம் என்கிற சொற்களைப் பயன்படுத்துகிறார் என்று தேடித் தொகுக்கும் நூலாசிரியர், கூடவே திருக்குறள், மற்றும் சங்க நூல்களிலும் உறக்கம் என்ற சொல் எப்படிப் பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதையும் ஆராய்கிறார். தூக்கம் என்றால் தொங்குதல் அல்லது கால நீட்டித்தல் என்றுதான் பொருள். ஆனால் இன்று வழக்கில் உறக்கம் என்பதற்குப் பதிலாக தூக்கம் என்று பயன்படுத்துகிறோம். ஆனால் மலையாளத்தில் பழந்தமிழ்ச் சொல்லான உறக்கம் இன்றும் பயன்பாட்டில் உள்ளது என்கிறார். இன்று ‘மஷ்ரூம்’ என்று புழக்கத்தில் இருக்கும் காளான், பழந்தமிழில் புறநானூற்றில், கம்பனிடத்தில் ஆம்பி என்ற பெயரில் புழங்குகிறது. இப்படி சொல் மேல் சொல்லை கம்பனில் தேடி சங்க இலக்கியத்தில் அதற்குத் துணை தேடி மிக சுவாரசியமாக ஓர் நூலைப் படைத்துள்ளார் நாஞ்சில்நாடன். தமிழ்ச் சுவை பருகப் பருகத் தீராது.
கம்பனின் அம்பறாத் தூணி,
நாஞ்சில் நாடன், உமா பதிப்பகம், 171,(புதிய எண் 18), பவளக்காரத் தெரு, மண்ணடி, சென்னை-600001 பேச: 25215363; விலை: ரூ130
முன்பெல்லாம் பள்ளிக் கூடங்களில் குழந்தைகளுக்கு எப்படி வாழவேண்டும் என்று கற்றுக் கொண்டிருந்தார்கள். அறவியல் போதித்தார்கள். இப்போது அதுவெல்லாம் கிடையாது. எதற்காக ஒழுக்கமாக இருக்கவேண்டும்? அது பைத்தியக்காரத் தனம், முட்டாள்தனம், ஒழுக்கமாவது மண்ணாங்கட்டியாவது, காசு இருந்தால் போதும் என்கிறார்கள். அப்படிப்பட்ட தன்மையை நகரங்களில் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அத்தகைய வாழ்க்கை முறை கிராமங்களில் நிராகரிக்கப் படவேண்டும்” பளீரென்று பேசுகிறார் எஸ்.என்.நாகராசன்.இவரது நீண்ட பேட்டி கயல்கவின் பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது. இதில் தன் சிந்தனைக் கருவூலத்திலிருந்து சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் கீழை மார்க்சியம் என்ற சிந்தனையை முன்வைத்தவரான எஸ்.என்.நாகராசன். எண்பத்தி ஐந்து வயதைத் தாண்டிய தமிழின் தன் காலத்தைத் தாண்டி சிந்தித்தவரான இவர் தன் காலத்து கம்யூனிச வரலாற்றை கூர்மையான நோக்குடன் பல இடங்களில் விமர்சிக்கிறார். ‘இவர்கள் யாரும் கம்யூனிஸ்டுகள் அல்லர். இங்கே தலைவர்களாக இருப்பவர்கள் யாரும் கம்யூனிஸ்டுகள் அல்லர். இப்போது சொல்கிறேன்; மகான்கள்கூட கம்யூனிஸ்டுகள்தான். புத்தர், ஏசு, நபி நாயகம், நாயன்மார்கள், ஆழ்வார்கள் அனைவரும் கம்யூனிஸ்டுகளே. அவர்கள் தங்களுக்காக வாழாமல் பிறருக்காக வாழ்ந்தவர்கள்” என பக்கத்துக்குப் பக்கம் ஜுவாலை தெறிக்கும் செறிவான பேட்டி இது. எஸ்.என். நாகராசன் போன்ற சுயம்புவான சிந்தனை உடைய ஆளுமையைப் புரிந்துகொள்ள இது உதவும்.
ஆயுதப் போராட்டத்தால் இனி உலகைக் காப்பாற்ற முடியாது: எஸ்.என்.நாகராசன், வெளியீடு: கயல்கவின் பதிப்பகம், 16/25, 2-வது கடல்போக்குச்சாலை, வால்மீகி நகர், திருவான்மியூர், சென்னை 41. பேச: 99445 83282 விலை: ரூ 60