காதலின் கவிஞன்

காதலின் கவிஞன்
Published on

ஜலால் அல்-தீன் முஹம்மது ரூமி. மாபெரும் சூஃபி கவிஞர், இஸ்லாமிய அறிஞர். ஏறக்குறைய எட்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கவிஞன். ஆனால் இன்று நாடு, மதம், மொழி, இனம் என எல்லாவற்றையும் கடந்து உலகெங்கும் கொண்டாடப்படும் கவிஞராக இருக்கிறார் என்றால் அவரது கவிதைகளில் ஏதோ பெரும் வசியம் இருக்க வேண்டும். 1207ஆம் ஆண்டு, இன்றைய தஜிக்கிஸ்தானில் இருக்கும் வக்ஷ் என்ற சிறு கிராமத்தில் பிறந்து பல ஆயிரம் மைல்கள் நடந்து உஸ்பெக்கிஸ்தான், ஈரான், சிரியா என பல நாடுகளில் அலைந்து திரிந்து இறுதியில் தனது கடைசி ஐம்பது ஆண்டுகளை துருக்கியில் கழித்தவர். மிகவும் புதிரானவராகக் கருதப்படும் ரூமியைப் போல் காதலைக் கொண்டாடிய கவிஞர்கள் அபூர்வத்திலும் அபூர்வம். உதாரணத்திற்கு சில:

“காதலர்கள்

இறுதியில் எங்கேனும்

சந்தித்துக்கொள்வதில்லை.

அவர்கள் ஒருவருக்குள் மற்றவராக

இருந்து வருகிறார்கள்

காலங்காலமாக.”

“நீயொரு

உண்மையான மனிதனெனில்

எல்லாவற்றையும் பணயம் வை

காதலுக்காக.”

“காதல் ஒன்றே நிஜம்

கவிதை அதற்கு கட்டியம்.”

ரூமியின் கவிதைகளுக்கேற்ப புத்தகமும் அழகிய கலைப்படைப்பாக மலர்ந்திருக்கிறது. “தாகங்கொண்ட மீனொன்று” என்ற கவித்துவமான தலைப்பில் வெளியாகியிருக்கும் இந்தக் கவிதைத் தொகுப்பை மொழியாக்கம் செய்ய சத்தியமூர்த்தி பல ஆண்டுகள் எடுத்துக்கொண்டிருக்க வேண்டும். ரூமியின் கவிதைகளில் உணர்வுபூர்வமாக மூழ்கித்திளைத்து, அவற்றை பல்லாயிரம் முறை அசை போட்டிருந்தால் மட்டுமே இத்தகைய மொழிபெயர்ப்பு சாத்தியம்.

காதலின் மீதும் கவிதையின் மீதும் தாகங் கொண்ட ஆன்மாவை ஒரு போதும் தணிக்க முடியாது என்பதைச்

சொல்லும் கவிதை இது:

“தாகங்கொண்ட மீனொன்று

என்னுள் இருக்கிறது.

ஒருபோதும் கூடவில்லை அதற்கு

முழுத்தாகமும் தணிக்க.”

தாகங்கொண்ட மீனொன்று, மொழிபெயர்ப்பு சத்தியமூர்த்தி, வெளியீடு: லாஸ்ட் ரிசார்ட், விநியோகம்: காலச்சுவடு, 669, கேபி சாலை, நாகர்கோவில் -629001. பேச:0465-2278525

-க.திருநாவுக்கரசு

நூல் குறித்த நூல்

திருப்பூரில் வாழும் எழுத்தாளரான சுப்ரபாரதிமணியன் தன் ஊரின் பிரதானத் தொழிலான நெசவுத் தொழிலைத் தன் எழுத்தில் வடித் ததன் தொகுப்பு இது. நெசவு பற்றி எழுதிய கட்டுரைகள், சிறுகதைகள், நாவலின் சில பகுதிகள், நாவல் பற்றிய விமர்சனங்கள் இந்த சிறுநூலில் இடம் பெற்றுள்ளன. என்னதான் நெசவாளன் கலை நயத்துடன் பணிபுரிந்தாலும் அந்தச் சேலையை விற்கும் கடையின் பெயர்தான் இருக்கும் நெசவாளனின் பெயர் இருக்காது என்று வருத்தப்படுகிறார். நெசவாளர்கள் சாதிய ரீதியாக எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகள், அவர்களின் அரசியல் சார்பு, நம்பிக்கைகள்,  வறுமை என எல்லாவற்றையும்  பேசுகின்றன           சிறுகதைகள். வாசிப்பவர்களை நெசவாளர்களின் அசலான உலகுக்குள் கைப்பிடித்து இட்டுச்செல்லும் நூல் இது!

நெசவு, சுப்ரபாரதிமணியன், சிற்பி பப்ளிகேஷன்ஸ், 8/3448, அண்ணா நகர், பூலவப்பட்டி, திருப்பூர் 641602 பேச:98658 04224 விலை: ரூ.100

சுவையான பதிவுகள்

இணையதளத்தின் வீச்சைப் பயன்படுத்திக்கொண்டு உருப்படியாக கருத்துகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறவர்கள் மிகவும் சிலரே. அதில் பேராசிரியர் மு.நாகநாதனும் ஒருவர். அவ்வப்போது ஏற்படும் அரசியல், பண்பாட்டு நிகழ்வுகளையொட்டிய தன் கருத்துகளை முகநூலில் எழுதிவருகிறார்.  தான் சார்ந்திருக்கும் திராவிட, பொருளாதார, சமூகநீதிக் கொள்கைகளின் அடிப்படையில் வரலாற்று உணர்வுடன் இந்தக் குறிப்புகளை அவர் எழுதி உள்ளார். அறிஞர் அண்ணா முதல்வராகி, முதல்முறை புதுடெல்லிக்குச் செல்கிறார். காலை 7மணி பிரதமர் இந்திரா காந்தியின் உதவியாளர் தொலைபேசியில் அழைக்கிறார். அண்ணா பேசவில்லை. அடுத்து தனிச்செயலர் அழைக்கிறார். அண்ணா, குளிக்கச் செல்வதாகக் கூறச்சொல்கிறார். நேரடியாக பிரதமர் இந்திரா காந்தியே அழைத்தபோது போனில் பேசுகிறார். அவர் அழைப்பின்பேரில் காலை உணவுக்கு அவர் இல்லம் செல்கிறார்- இந்தச் சம்பவம் போல பல சுவையான பதிவுகளும் உள்ளன.

பதிவுகள், பேராசிரியர் மு.நாகநாதன்,

கதிரொளி பதிப்பகம், எண் 14, சிவசங்கரன் மாடிக்குடியிருப்பு, சிவசங்கரன் சாலை, தேனாம்பேட்டை, சென்னை 86, பேச: 044- 24321067, விலை: ரூ.100.

முக்கியத் தீர்ப்புகள்

நீதிமன்றங்களில் தமிழே பயன்பாட்டு மொழியாகவேண்டும் என்ற கோரிக்கையும் அதற்கான போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நாட்டின் உயர்ந்த நீதிமன்றங்களில் வெளியாகும் தீர்ப்புகள் ஆங்கிலத்திலேயே உள்ளன. மூத்த அரசியல் தலைவரான பழ.நெடுமாறன், நீதிமன்றங்களில் போராடிப் பெற்ற ஜனநாயக உரிமைகள் தொடர்பான முக்கிய தீர்ப்புகளும் இதில் அடங்கும். இவற்றை தமிழில் மொழிபெயர்த்து நூலாக வெளியிட்டிருக்கிறார்கள். இந்தவழக்குகள் பலவற்றில் வாதிட்டு இந்த தீர்ப்புகளைப் பெற்றுத்தந்திருப்பவர் பின்னாளில் நீதிபதி ஆக பதவி வகித்த சந்துரு. அவர் மூத்த வழக்கறிஞராக இருந்தபோது இந்த வழக்குகளில் வாதாடி இருக்கிறார். அவருக்குத்தான் இந்நூல் படைக்கப்பட்டுள்ளது. பேச்சுரிமை, கருத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை ஆகியவற்றை நிலை நாட்டிய தீர்ப்புகள் இவை.  மனித உரிமை ஆர்வலர்கள்,மக்கள் பிரச்னைகளுக்காகப் போராடுகிறவர்களுக்கு இந்தநூல் கைவிளக்காக இருக்கக்கூடும். தமித்தலட்சுமி தீனதயாளன் சிறப்பாக இந்தத் தீர்ப்புகளை தமிழில் தந்துள்ளார்.

உரிமைகளை நிலை நிறுத்திய உன்னதத் தீர்ப்புகள், தமிழ்க்குலம் பதிப்பாலயம், 119/ஏ, டிப்போலைன், சி.பல்லாவரம், சென்னை-43, பேச: 044-22640451 விலை: ரூ 200

எழுத்துச் சுவடுகள்

எழுத்தாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் கருணாநிதி பற்றி எழுதி இருக்கும் கட்டுரைகளின் தொகுப்பு இது. சட்டமன்றத்தில் ரவிக்குமார் பேசிய உரைகள் அவற்றுக்கு அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி ஆற்றிய எதிர்வினைகள், அவரது கோரிக்கைகளைப் பரிசீலித்த விதம் ஆகியவற்றை இந்நூலில்  குறிப்பிட்டிருக்கிறார் ரவிக்குமார். புதிரை வண்ணான் வாரியம் அமைத்தது, ஈழ அகதிகளுக்காக வசதிகளை மேம்படுத்தியது, கலைஞர் வீடு வழங்கும் திட்டம், மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றின் பின்னால் ரவிக்குமாரின் அழுத்தமான பங்களிப்பு இருந்தது என்பதை இந்நூலுக்கு முன்னுரை வழங்கியிருக்கும் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதிப்படுத்துகிறார். சமச்சீர்க் கல்வி, பள்ளிக் கல்வித்துறை மாறுதல்கள், செம்மொழி மாநாடு குறித்து அவர் எழுதியிருக்கும் கட்டுரைகள் கடந்த திமுக ஆட்சி பற்றிய வரலாற்றுப்பதிவுகள். திமுக உறுப்பினர்கள் கூட இவ்வளவு ஆர்வமாக இந்த விஷயங்கள் பற்றி எழுதியிருக்கவில்லை. ஒரு எழுத்தாளர் சட்டமன்றத்தில் உறுப்பினராகத் தேர்வானால் அவரால் என்ன செய்யமுடியும் என்பதற்கு ஆதாரமாக இந்தப் பதிவுகள் விளங்குகின்றன. காலத்தைத் தோற்கடித்த கலைஞர் என்ற பெயரில் உடல் நலம் குன்றியிருக்கும் கருணாநிதியை திருமாவளவனுடன் சென்று பார்த்துவிட்டு, எழுதியிருக்கும் கட்டுரை உருக்கமானது. ஒரு காலத்தில் கருணாநிதியை மிகக்கடுமையாக எதிர்த்தவரான ரவிக்குமார் இன்று கருணாநிதியை நேசிப்பவராக மாறியிருப்பது சுவாரசியம். அதை இதே நூலின் முகப்பில் இடம்பெற்றுள்ள கருணாநிதியின் வார்த்தைகளில் சொல்வதானால்: ‘தீவிரமாக எதிர்த்தால்தான் பிறகு தீவிரமாக ஆதரிப்பார்களென்று எனக்கு நன்றாகத் தெரியும்’.

கலைஞர் சமரசமில்லா சமத்துவப் போராளி- ரவிக்குமார்,

 கிழக்கு பதிப்பகம், 177/103, முதல் தளம், அம்பாள் கட்டடம்,

லாயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14 பேச:044-4200-9603 விலை ரூ.140                        

logo
Andhimazhai
www.andhimazhai.com