இது தி.ஜானகிராமனின் நூற்றாண்டு என்பதால் அவரது இலக்கியம் குறித்து பல்வேறு மட்டங்களில் அலசல்களும் பதிவுகளும் வெளியாகி உள்ளன. இவற்றுள் முக்கியமான ஒன்றாக திஜாவின் மகள் உமாசங்கரி தன் தந்தையின் நினைவுகளைப் பற்றி எழுதி இருக்கும் இந்நூல் வெளிவந்துள்ளது. திஜா மறைவுக்குப் பின்னர் ஓரிரு தலைமுறை தமிழ் வாசகர்கள் வந்துவிட்ட நிலையில் அவரது வாழ்க்கை பற்றிய தகவல்களை ஆதாரபூர்வமாகத் தெரிந்துகொள்ள இந்த நூல் உதவுகிறது. விதவைகளுக்கு மொட்டை போட்டு அமர வைத்ததை எதிர்த்தது, தனக்கு வீட்டுக்கு வந்து பாடு சொல்லித்தந்த பாட்டுவாத்தியார் திடீரென இறந்தபோது பாடுவதையே நிறுத்தியது, இந்திரா காந்திக்கு டெல்லி போக்குவரத்தைப் பற்றி மகளை கடிதம் எழுதவைத்தது என ஏராளமான சின்ன சின்ன தகவல்களையும் திஜா பற்றி இந்நூலில் அறிய முடிகிறது. திஜாவின் சில அரிய புகைப்படங்கள், குடும்பப் படங்களுடன் நல்ல வடிவமைப்புடன் இந்த நூல் அமைந்துள் ளது. அவரது சமகாலத்தில் வாழ்ந்த சுப்புடு, சுந்தரராமசாமி, வெங்கட் சுவாமிநாதன், கோமல் சுவாமிநாதன், இ.பா. உள்ளிட்ட பல முக்கிய எழுத்தாளர்களுடைய அரிய படங்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
மெச்சியுனை, தி.ஜானகிராமனைப் பற்றி அவர் மகள் உமா சங்கரி, வெளியீடு: க்ரியா, புதிய எண் 2, பழைய எண் 25, 17 வது கிழக்கு தெரு, திருவான்மியூர், சென்னை 600041.விலை ரூ.150
கலையும் ஒப்பனைகள்
எங்கள் வீட்டு பொமெரேனியன்களுக்கு அவ்வப்போது சினைக்கலைப்பு செய்யப்படுகிறது ஒழுக்கமானவை என்றாலும் சமயங்களில் வேலிகளால் கைவிடப்பட்டுவிடுகின்றன/ என்று தொடங்கும் கவிதையாகட்டும்; தற்கால எழுத்தாளர்கள் எல்லோரையும் இழுத்துப்போட்டு ஒரு கை பார்க்கும் இன்னொரு கவிதை யாகட்டும் இந்த தொகுப்பு வாசகர்கள் முன்னால் வழக்கத்துக்கு முற்றிலும் மாறான ஒரு கவி உலகை அறிமுகம் செய்யும். நவீன வாழ்வின் அபத்தங்களைச் சுமந்து வாழ்கையில் அதை தனக்குத்தானே கிண்டலாகப் பார்த்துச் செல்லும் வலி நிறைந்த கண்களின் ஒளியை நிரப்பி இந்த தொகுப்பை கொணர்ந்திருக்கிறார் கவிஞர்.
நாங்கள் கூடி நிற்கும் ஸ்விக்கி பாய்ஸ் உங்களுக்கான உணவை உங்களிடம் சேர்த்துவிட்டு முப்பது வயதில் எங்கள் பேட்டரியைக் கழற்றிவிடுவோம்
சென்னையில் உணவு விடுதிகள் எதிரே கூடி நிற்கும் ஸ்விக்கி உணவு டெலிவரி இளைஞர்களை நாமெல்லாம் கடந்துசெல்ல, இந்த கவிதை தனக்குள் கூட்டித் திரிகிறது. இதுபோன்ற நிறைய தற்காலத்தின் கூறுகள், வசைச்சொற்களை அடுக்கி வாழ்வின் அவலத்தை முழங்கிச் செல்லும் தொகுப்பு.
மார் வளையங்கள், ரபேல் கிறிஸ்டி செல்வராஜ், வெளியீடு: மணல் வீடு, ஏர்வாடி குட்டப்பட்டி அஞ்சல், மேட்டூர், சேலம்& 636453. பேச: 98946 05371, விலை ரூ. 80
நட்பும் பகையும்
தஞ்சை அருகே உள்ள வடுவூரைச் சேர்ந்த இளைஞர் வேல்முருகனின் இரண்டாவது நாவல் மன்னார் பொழுதுகள். ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை விறுவிறுப்பாகச் செல்கிறது. தூத்துக்குடி கடற்கரையில் முத்துக்குளிக்கும் பரதவர்களின் கதையை ஆரம்பித்து பல்வேறு காட்சிகளாக விரிந்து சமகாலம் வரைக்கும் வரக்கூடிய கதை. கடல் என்றால் ஈழத்தமிழர்களும் இல்லாமல் சொல்ல முடியாது என்பதால் அவர்களுடன் தொடர்புடைய சமகால தமிழ் ஆளுமைகளை நினைவூட்டும் பாத்திரப்படைப்புகளை மிக சிறப்பாக படைத்துள்ளார். அஞ்சி நடுங்கும் பாத்திரங்கள் அசகாய சூரன்களாக மாறுவதும் எதற்கும் தோள்கொடுக்கும் நட்புகள் உருவாவதுமான தருணங்கள், குடும்பப் பகைகள் என்று நல்ல கேங்க்ஸ்டர் படத்துக்கான வளமான கதையமைப்புடன் உருவாகி இருக்கும் நாவல். அடுத்தாரைக் காத்தான் என்றொரு குணாம்சத்தை உருவாக்கி நாவல் முழுக்க ஊருருவிச் செல்லவிட்டுள்ளார் வேல்முருகன். கடலுக்கும் நிலத்துக்குமாக தாவித்தாவிச் செல்லும் கதைப்பரப்பில் வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட மனிதர்களைப் பரப்பி, சதுரங்க காய்களைப் போல் அவர்களை காலப்பரப்பில் முன்னும் பின்னுமாக நடத்தி தேர்ந்த ஆட்டகாரனாக மின்னுகிறார் நாவலாசிரியர்.
மன்னார் பொழுதுகள், வேல்முருகன் இளங்கோ, வெளியீடு: ஜீவா படைப்பகம், 351- எம் ஐ ஜி, என்.எச்-1 நக்கீரர் தெரு. மறைமலை நகர், காஞ்சிபுரம்& 603209 தொடர்புக்கு: 9841300250 விலை ரூ 300
வானமும் பூமியும்
‘மனதில் ஓர் ஆசை உண்டு, அடுத்த பிறவியில் சலவைத் தொழிலாளியாகவோ, சமையல் கலைஞராகவோ பிறந்து பெண் குலத்துக்கு வாழ்நாள் சேவை சேய்யவேண்டும்' என்று
சொல்கிறார் என் வானம் என்பூமி என்ற இந்த நூலில் சுப. சோமசுந்தரம். அந்த அளவுக்கு பாட்டி முதல் மகள் வரை பெண்கள் இவரை நன்றாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்று நெகிழ்ச்சியுடன் தொடங்கும் இக்கட்டுரை நூலில் தற்கால இலக்கியச் சிந்தனைகள் முதல் மரபு இலக்கியங்கள் வரை அழகாக தீண்டித் தீண்டிச் சென்றுள்ளார். அதிலும் திருக்குறளின் சொற்றொடர்களை பேச்சில் பல இடங்களில் பயன்படுத்தியது குறித்து எழுதி இருக்கும் பகுதி மிகச் சிறப்பு. அதிகாலையில் கோவிலில் ஒலிக்கும் மன்மத லீலையை வென்றார் உண்டோ பாட்டுக் கேட்டு அலறி, இந்த பாட்டுக்குப் பதில் வேறு பாட்டு போடலாமே என்று சொல்லப்போக, செந்தமிழ்த் தேன் மொழியாள் பாட்டை ஒலிக்க விடுவதைக் கண்டு மிரண்டுபோவது உள்ளிட்ட சில சுவாரசியமான சம்பவங்களையும் எழுதி இருக்கிறார் இந்த ஓய்வுபெற்ற கணிதப்பேராசிரியர்.
என் வானம் என் பூமி, சுப.சோமசுந்தரம்,
வெளியீடு: காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, ட்ரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை- 24
பேச: 044-23726882, விலை ரூ 110
குறுங்கவிதைகள்
குறுங்கவிதைகளுக்கு தமிழில் ஒரு வளமான மரபுண்டு. தேர்ந்த சொற்கள் மூலம் அபாரமான உணர்வுகளைக் கடத்துவதில் சிறந்த கவிகளுள் ஒருவரான கோ.வசந்தகுமாரனின் கவிதை நூல் இது.
என்னை வழியில் கண்டால்
நான் தேடுவதாக சொல்லுங்கள்
----------------------------------
மூடிய கையைத் திறந்தேன்
அங்கே
ஒன்றுமில்லை
இருந்தது
--------------------------------
குளத்துநிலா
நீந்திக்கிழிக்கிறது
மீன்
- இவ்வாறு தத்துவம், இயற்கை, காதல் என பல பாடுபொருள்களை எளிமையான வரிகளில் தந்து செல்லும் வரிகள் நிரம்பியது இந்நூல். பாலைச் சுண்டக் காய்ச்சுவதுபோன்ற பதமான மொழி குறுங்கவிதைகள் எழுதத் தேவை என்று பின்னட்டையில் இந்திரன் சொல்லுகிற விஷயம் கவிஞருக்குக் கைவந்துள்ளது. சுண்டக் காய்ச்சிய மொழி கவர்கிறது.
முறிந்த வானவில், கோ.வசந்தகுமாரன்,
வெளியீடு: தமிழ் அலை, 80/24பி, பார்த்தசாரதி தெரு, தேனாம்பேட்டை, சென்னை - 86 பேச: 24340200
விலை ரூ 100
ஏப்ரல், 2021