ஊரும் உறவும்

ஊரும் உறவும்
Published on

அருண்மொழி நங்கை இந்த நூலை தன் பாட்டி ராஜம்மாளுக்கு சமர்ப்பணம் செய்துள்ளார். கதை சொல்லும் பாட்டிகள் வாய்த்த குழந்தைகள் எவ்வளவு பாக்கியவான்கள் என்பதை மீண்டும் ஒருமுறை இந்நூல் நிரூபிக்கிறது. பட்டுக்கோட்டை பக்கத்தில் ஆலத்தூரில் பெற்றோருடன் வசித்த நூலாசிரியையின் பால்யகால நினைவுகள் இந்நூலில் பரவிக்கிடக்கின்றன.

சிறுவயதில் கண்டவற்றை எல்லாம் அவற்றின் வண்ணங்களுடன் விவரிக்கிறார். தான் இரண்டாம் வகுப்புப் படிக்கையில் தன் அத்தையைப் பெண் பார்க்க வந்ததை எழுதுகையில் அத்தை கட்டி இருந்த சேலையின் நிறம் பாசிப்பச்சை. புது ஜிமிக்கியும் கம்மலும் அணிந்திருந்ததாக எழுதுகிறார்

(பெண்குழந்தைதான் எல்லாவற்றையும் நினைவில் வைத்திருக்குமோ?). இந்த பகுதி மட்டுமல்ல, நூலில் பல பகுதிகளும் அழகியதொரு சிறுகதைக்கான அம்சங்களைக் கொண்டுள்ளன. அதுமட்டுமா? மாவுமில்லின் கிரீச் சப்தம், அரிசியை சலிக்கும் சல்லடை, சைக்கிளில் கட்டிக்கொண்டுபோக டியூப், மாவுமில்லில் வேலை பார்க்கும் பட்டாணி என்று செல்கிற அருண்மொழியின் பள்ளிப்பருவத்தில் நெல்லுக்குப் பதிலாக அரிசியாகவே வாங்கலாமே எனச் சொல்லப்போக அவர் அப்பா ஆற்றிய ஒன்பது பக்க உரை! அந்த பட்டாணி பாத்திரத்தின் கண்ணில்லாத மனைவியை ஊருக்கே அரசி என்று சொல்கிறபோது மனசைப் பிசைகிறது. கீழத்தஞ்சையின் ஓர் அழகான பால்யகால வாழ்வைத் திரும்பிப் பார்க்கவேண்டுமானால் இந்நூலை கட்டாயம் படித்தாகவேண்டும். பெண்ணின் பார்வையில் அமைந்திருப்பதால் இதன் சிறப்பு பன்மடங்கு அதிகரிக்கிறது.

பனி உருகுவதில்லை, அருண்மொழிநங்கை, வெளியீடு: எழுத்து பிரசுரம், எண் 55(7), ஆர் பிளாக், 6-வது  அவென்யூ, அண்ணா நகர், செனை-600040. தொலைபேசி: 8925061999 விலை; ரூ 380

குறள் மகுடம்

கம்பனையும் மகாபாரதத்தையும் கரைத்துக்குடித்த திரைக்கலைஞர் சிவகுமார் இப்போது குறளில் குடிகொண்டிருக்கிறார். திருக்குறள் 50 என்கிற அவரது புதிய நூல், ஐம்பது திருக்குறள்களையும் அவற்றின் படி வாழ்ந்த நிஜமனிதர்களின் கதைகளையும் சொல்கிறது. நான் எழுதியுள்ள இந்த கதைகளுக்கு 5-6 திருக்குறள்கள் பொருந்தலாம். எனக்குப் பிடித்த குறளை மட்டுமே நான் பொருத்தியுள்ளேன். உங்களுக்குப் பிடித்த குறளை நீங்களே பொருத்திப்பாருங்களேன் என திறந்த முடிவுக்கும் வாசகர்களை விட்டுள்ளார். காந்தி, ஓமந்தூரார், காமராஜர், அப்துல்கலாம், ஜீவானந்தம், அறிஞர் அண்ணா, மொரார்ஜி தேசாய், கார்ல் மார்க்ஸ், அன்னை தெரசா, நெல்சன் மண்டேலா போன்ற பெரிய, புகழ்பெற்ற மனிதர்களைப் பற்றி நெகிழ்ச்சியூட்டும் விதமாக நுண்ணிய செய்திகளுடன் எழுதி இருக்கிறார் சிவகுமார். ஆனால் அதே சமயம் ஊருக்கே குடிதண்ணீர் இலவசமாகக் கொடுத்த பேச்சியம்மாள் போன்ற தன் தனிப்பட்ட வாழ்க்கையில் கண்ட மனிதர்களைப் பற்றியும் எழுதி இருப்பதுதான்

சிறப்பு. விருந்தினர்களை உபசரிப்பதில் தன் தாயார் காட்டிய அக்கறையை நடிகர் சத்யராஜின் சொற்களைக் கொண்டு விவரித்திருப்பது நெகிழச் செய்கிறது. திருவண்ணாமலையில் நண்பர் கருணாவின் சகோதரி குழந்தை கோவிலில் காணாமல் போகிறது. தேடினால் ஒரு கழைக்கூத்தாடி  பத்திரமாக அமரவைத்திருக்கிறார்.  அவருக்கு நன்றி சொல்லி காசு தரப்போகிறார்கள். ‘துட்டா? உன் குயந்த வேற என் குயந்த வேறயா? போய்யா' என்கிறார் கூத்தாடி. ஒரே நொடியில் கோபுரமாக உயர்ந்துவிட்டான் என இதை விவரிக்கும் சிவகுமார்,  இந்த இடத்தில் கைம்மாறு வேண்டா  கடப்பாடு மாரிமாட்டு/ என் ஆற்றும் கொல்லோ உலகு என்ற குறளைப் போட்டு மெய்சிலிர்க்க வைக்கிறார். இயக்குநர் ஸ்ரீதருக்கு  பழைய நினைவுகள் திரும்பச் செய்வதற்காக அவர் எழுதிய காட்சிகளைச் சொல்லி சுயநினைவு திரும்ப வைத்திருக்கும் சம்பவம் போல்  ஏராளமாக இந்நூலில் கிடைக்கின்றன. அச்சம்பவங்கள் எழுப்பும் உணர்வலையில் மணிமகுடமாக குறள் ஒளிர்கிறது.

திருக்குறள் 50: வள்ளுவர் வழியில் வாழ்ந்தவர்கள் வரலாற்றுடன் குறள், சிவகுமார், அல்லயன்ஸ், ப.எண் 244, ராமகிருஷ்ண மடம் சாலை, த.பெ.எண் 617, மயிலாப்பூர் சென்னை -4 தொலைபேசி:  044&-24641314, விலை:ரூ400

நெடுஞ்சாலையில் ஒரு பயணி

மதுரைக்குப் பக்கத்தில் ஓர் ஊரில் பிறந்து தமிழில் முதுகலை படித்து, அந்த தமிழைக்கொண்டே இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்து அகிலத்தையே சுற்றி வந்த கதைதான் இந்த தமிழ் நெடுஞ்சாலை. இந்த நெடுஞ்சாலைப் பயணத்தில் தான் எத்தனை சிலிர்ப்பூட்டும் நிகழ்வுகள்.. எத்தனை சாதனை மைல்கற்கள்! ஒடிஸாவில் இ.ஆ.ப அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வுபெறுகையில் சிந்துவெளி ஆய்வாளராக தன்னை உருமாற்றிக்கொண்டிருக்கும் ஆர்.பாலகிருஷ்ணன் விகடன் இதழில் எழுதிய தொடரை நூல் வடிவில் படிக்கையில் உருக்கமாக இருக்கிறது.

சின்னஞ்சிறுவயது. காங்கிரஸ் மேடைகளில் தேர்தல் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கும் பையனை காமராசர் தன்னோடு காரில் அழைத்துச் சென்று, பத்தாம் வகுப்பு படிக்கிற  பயலுக்கு  எதுக்கு அரசியல் என்று அறிவுரை கூறும் நிகழ்வை அவர் எழுதி இருக்கிற விதம் கண்ணீர் துளிர்க்க வைக்கிறது. காமராசர் தான் சொல்லுகிறார், ‘நல்லா படிச்சு ஐ.ஏ.எஸ் எழுது. கலெக்டராகி நல்லது செய்யலாம்.‘ அது தேவதைகள் ஆசீர்வதித்த தருணம் போலிருக்கிறது.

ஒரிசாவில் கோராபுட் மாவட்டம். அரசு வேலைக்கு ஆட்கள் எடுக்கிறார்கள். உடல்வலு தேவைப்படும் உதவியாளர் பணிதான். சுமார் 100 பேரை பணிக்கு எடுக்கவேண்டும். ஐயாயிரம் விண்ணப்பங்கள் வருகின்றன.  பாலகிருஷ்ணன், ஓட்டப்பந்தயம் வைத்து முந்துகிறவர்களுக்குப் பணி தருகிறார். எந்த அரசியல்வாதியின் சிபாரிசையும் ஏற்றுக்கொள்ளாமல். அதில் தேர்வான பழங்குடி ஒருவர் பின்னாளில் தலைமைச் செயலகத்தில் மூத்த அதிகாரியான பாலகிருஷ்ணனை ஓடி வந்து சந்திப்பதில் தொடங்கி இந்த அத்தியாயம் எழுதப்பட்ட விதம் படு நேர்த்தி.

ஆங்காங்கே சங்க இலக்கிய வரிகளை சமகால நிகழ்வுகளுடன் இணைத்து எழுதிச் சென்றிருக்கிறார். ‘எத்திசை செலினும் அத்திசைச் சோறே' என்ற அவ்வையாரின் முழக்கத்தை இலங்கையிலிருந்து கிளம்பிச் சென்று வடதுருவத்தில் குழந்தை குட்டிகளுடன் கிளைபரப்பி இருக்கும் தமிழர்களுடன் ஒப்பிட்டுச் சொல்வது எத்துணை பொருத்தமாக இருக்கிறது!

ஒடிசாவின் முதல்வராக இருந்த பிஜுபட்நாயக் பற்றி ஒரு அத்தியாயம் வருகிறது. தன்னை நல்லபதவிகளில் நியமித்து சிறப்பாக செயல்பட விட்டமாமனிதர் பற்றி நன்றியுடன் எழுதுகிறார். ஒடிசா மாநில நிதி நிறுவனத்தின் மேலாண்மை  இயக்குநராக இளம் வயதிலேயே உயர்த்தப்பட்டதும் அதைப் பற்றி முதல்வருடன் விவாதித்ததும் ஆட்சியியல் பாடங்கள்.

கால்முளைத்த ஊர்கள் என்றொரு பகுதி நூலாசிரியரின் இடப்பெயர் ஆய்வை விளக்குகிறது. அதில் வரும்  ‘கள்ளூர் நடைபாதை‘ என்ற சொற்றொடர் இவர் கண்டறிந்து சொல்லிக்கொண்டிருக்கும் நம் தமிழர்களின் ஆதியை தெள்ளத்தெளிவாக விளக்கிச் செல்கிறது.  நூலில் எல்லா பகுதிகளையும் தன் ஓவியங்களால் இன்னும் ஆழமான இடங்களுக்கு எடுத்துச் செல்லுகிறார் ஓவியர் டிராட்ஸ்கிமருது

தமிழ் நெடுஞ்சாலை, ஆர்.பாலகிருஷ்ணன், ஓவியங்கள் டிராட்ஸ்கி மருது, விகடன் பிரசுரம், 767, அண்ணாசாலை, சென்னை 600002. தொலைபேசி: 044&-42634283 விலை ரூ. 330

அம்பேத்கர் வரலாறு - மூன்றாம் பதிப்பு

ஆடுகளைத்தான் பலியிடுகிறார்கள்; சிங்கங்களை அல்ல என முழங்கியவர் அண்ணல் அம்பேத்கர். இவரது வாழ்க்கை வரலாறை எழுதியவர் தனஞ்சய்கீர். அம்பேத்கர் வாழும் காலத்திலேயே எழுதப்பட்டு அவரிடமே காட்டி, சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக்கொண்டு 1954-இல் வெளியான நூல் இது. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூலை 1992-இல் தமிழாக்கம் செய்து மார்க்சியப் பெரியாரிய அறிஞரான க. முகிலன் அளித்தார். மார்க்சியப் பெரியாரியப் பொதுவுமைக்கட்சியால் அது வெளியிடப்பெற்றது. முப்பது ஆண்டுகள் கழிந்த நிலையில் இந்நூலின் மூன்றாம் பதிப்பு வெளியாகி இருக்கிறது. வரலாறுகள் திரிக்கப்பபடும் இன்றைய நிலையில் ஆதாரபூர்வமான வரலாறுகளைச்

சொல்லும் நூல்கள் அவசியமாகின்றன.இந்நூல், அம்பேத்கரை அறிந்துகொள்ள விரும்புகிறவர்கள் அனைவர் கையிலிலும் இருக்கவேண்டிய நூலாகும்.

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு ஆங்கில மூலம்: தனஞ்சய்கீர் தமிழாக்கம்: க.முகிலன்,  வெளியீடு: மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி,  2/12, சி.என்.கே.சந்து, சேப்பாக்கம், சென்னை-600005. தொலைபேசி: 8668109047 விலை ரூ: 950

ஆகஸ்ட், 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com