கழகத்தின் கதை

கழகத்தின் கதை
Published on

கொங்கு மண்டலத்தில் திமுகழகத்தின் தளகர்த்தர்களாக விளங்கியவர்கள், பெத்தாம்பாளையம் பழனிச்சாமி,  கே.ஏ.மதியழகன்,  ஈவெகி சம்பத்,  பல்லடம் பொன்னுசாமி,  கோபி ஜி.என்.ராஜூ,  பழைய கோட்டை அர்ஜுனன், எஸ்.ஏ.ராசமாணிக்கம், உடுமலை ப.நாராயணன், பி.ஏ.சாமிநாதன், கோவை மு.இராமநாதன்,  சாதிக்பாட்சா, விடுதலை விரும்பி,  கோவை செழியன். இவர்கள் வரிசையில் இடம் பெற்றவர், கோவை மு.கண்ணப்பன்.

இவரது 'வாழ்வும் பணியும் ' என்னும் நூல் வழக்கறிஞர் தடா ஓ.சுந்தரம் அவர்களால் எழுதப்பட்டு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

 1956 இல் திருச்சியில்  திமுக இரண்டாம்  மாநில மாநாடு. அதில் திமுக தேர்தலில் போட்டியிடலாமா வேண்டாமா என  வாக்கெடுப்பு நடக்கிறது. அதில் கண்ணப்பனும் வாக்களித்தார். என்னவென்று? 'தேர்தலில் போட்டியிடக் கூடாது' என்று. இப்படி வாக்களித்தவர்கள் நாலாயிரம் பேர்!

தந்தையிடம் சொல்லாமல் 1962ஆம் ஆண்டு  விலைவாசி போராட்டத்தில் பங்கேற்று நான்கு மாத சிறை தண்டனை பெற்றார். மகனின் பிரிவால் தந்தை உடல்நலம் பெரிதும் பாதிக்கப்பட்டு,  பரோலில் வெளியே வந்த மகனைக் கண்டதும் அவர் தந்தை புத்துயிர் பெற்றார். எனினும் இரண்டு நாளில் அவர் உயிர் நீத்த கொடுமை நிகழ்ந்தது. 

திமுக பொருளாளர் எம்ஜிஆர்,  பொள்ளாச்சி இடைத்தேர்தலின்போது பிரசாரம் செய்ய வந்தபோது தன் நண்பர் வீட்டில்  விருந்து சாப்பிட நினைத்தார். அந்த நண்பர் கழகத் தோழர் ஒருவரை கடுமையாக தாக்கியவர் என்பதால்  அங்கு செல்லக்கூடாது எனத் தடுத்தார். மீறினால் தானே கறுப்புக் கொடி காட்ட வேண்டியிருக்கும் என்று கண்டிப்பு காட்டினார்.

 1971 - இல் அமைந்த அமைச்சரவையில் அறநிலையத்துறை அமைச்சரானார். கோவில்களில் தமிழில் வழிபாடு செய்ய உத்தரவிட்டார். அதையும் முதல்வராக இருந்த கலைஞரின் ஆலோசனை இன்றியே அறிவித்துவிட்டவர். பலர் திடுக்கிட்டனர். அதன் பின்னர் கலைஞரும் அதை ஏற்றுக்கொண்டார். திருவண்ணாமலை கோவிலில் இவர் சென்றபோது அர்ச்சகர் வடமொழியில் வழிபாடு செய்தார். 'நிறுத்தைய்யா' என்னும் இவரது குரலால் மிரண்டு போன அர்ச்சகர் தமிழ் வழிபாடு செய்ய முடியாமல் திணறினார்.  அப்போது மாவட்ட ஆட்சியரே
 சட்டையைக் கழற்றிவிட்டு தமிழில் வழிபாடு செய்தார். இதுபோன்ற பல நிகழ்வுகளுடன் திமுகவின் வளர்ச்சி வரலாற்றையும் இந்நூல்
சொல்கிறது.

கோவை மு.கண்ணப்பன் வாழ்வும் பணியும்,

ஓ.சுந்தரம், வெளியீடு: சிவகாமி பதிப்பகம்,

27,28 இந்திரா நகர்,

மகாலிங்கபுரம், பொள்ளாச்சி - 642202 விலை ரூ 200

-பொள்ளாச்சி மா.உமாபதி

கணினி இசை

விக்ரம் படத்தில் கணினிமட்டுமல்ல கணினி இசையும் முதல்முதலாக அறிமுகமானது. இசையமைப்பாளர் தாஜ்நூர் இந்த கணினி இசை என்கிற  மாயவித்தையை எல்லோரும் புரிந்துகொள்கிறவிதத்தில் நூலாக்கம் செய்து அளித்திருக்கிறார். ஒரு தவிலின் ஓசையை எப்படிப் பதிவு செய்துகொண்டு பயன்படுத்தலாம் என்கிற உதாரணத்தைக் கொண்டு இதை விளக்குவதாகட்டும், பழங்குடி மக்கள் கதையைச் சொல்லும் நெடும்பா என்ற படத்தில் கணினி இசையைப் பயன்படுத்தாமல் அம்மக்களின் இசைக் கருவிகளையே பயன்படுத்தியதாகட்டும் தாஜ்நூர் தெளிவாக தன் இசையறிவை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார். அனலாக்குக்கும் டிஜிட்டலுக்கும் என்ன வித்தியாசம்? டிஜிட்டலில் எப்படி ரகுமான் பதிவு செய்கிறார்? ஏன் மீண்டும் அனலாக் டிஜிட்டலுக்குள் பொதிந்து வரத்தொடங்கியிருக்கிறது? என பல தொழில்நுட்ப விஷயங்களை எளிமையாகச் சொல்கிறார். அத்துடன் இடையிடையே சொல்லப்படும் அவரது அனுபவம் சார்ந்த விஷயங்கள் நூலின் சுவாரசியத்தைக் கூட்டுகின்றன. இசைப்பிரியர்களுக்கு உபயோகமான நூல்.

தரணி ஆளும் கணினி இசை: இசையமைப்பாளர் தாஜ் நூர்,

வெளியீடு: பாரதி புத்தகாலயம்,

7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை,

சென்னை -18 பேச:044&24332424 விலை ரூ:180

தையலை உயர்வு செய்

மைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்ஸும் அவரது மனைவி  மெலிண்டாவும் உலகளாவிய அளவில் குறிப்பாக ஆப்பிரிக்க, தெற்காசிய சமூக வளர்ச்சிக் காக அறக்கட்டளை அமைத்து பணிகளை மேற்கொள்கிறார்கள். இதில் பாலின சமத்துவம் பற்றி தனக்குக் கிடைத்த அனுபவங்களைத் தொகுத்து மெலிண்டா கேட்ஸ்  நூல் எழுதியிருக்கிறார். ஆரம்பத்தில் வறுமை ஒழிப்பு, எயிட்ஸ் ஒழிப்பு என்ற நிலையில் தொடங்கிய இவர்கள் ஒரு கட்டத்தில் எல்லாவற்றின் அணுகுமுறையிலும் பாலின சமத்துவம் இருந்தாகவேண்டும் என்ற முடிவுக்கு வந்து செயல்படுகிறார்கள். உதாரணத்துக்கு விவசாயப் பணிகளை எடுத்துக்கொள்ளலாம். பெரும்பாலான கிராமப்புறங்களில் பெண்கள்தான் விவசாயப் பணிகளில் ஈடுபடுகிறார்கள்.  ஒரு புதிய பயிர்வகையை அறிமுகப்படுத்த ஒரு நிறுவனம் விரும்புகிறது என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் கிராமப்புறங்களுக்குச் சென்று எம்மாதிரி பயிர் ரகம் தேவை என்று விசாரிக்க விரும்பினால் அவர்களிடம் பதில் அளிப்பவர்கள் ஆண்களே. பெண்களுக்கு பல சமூகங்களில் ஆண்களிடம் பேச அனுமதி இல்லை. அதில் சங்கடங்கள்,  தடைகள் உண்டு. ஆண்களின் பேச்சைக் கேட்டு குட்டையான ஓர் ரகத்தை அறிமுகப்படுத்திவிட்டால் அவற்றை குனிந்து அறுவடை செய்கிற பெண்கள், 'இடுப்பு ஒடிகிறதே' என்று தங்கள் கணவரிடம் புகார் செய்தால் மறுஆண்டிலிருந்து அந்த ரகத்தை யாரும் சாகுபடி செய்ய மாட்டார்கள். இந்த உதாரணத்தைச் சொல்லும் மெலிண்டா எல்லாவற்றிலும் பெண்களின் குரலையும் கேட்டாகவேண்டும். இல்லையென்றால் எந்த திட்டங்களும் பயன் தராமல் போய்விடும் என்கிறார்.

தற்கால அமெரிக்காவின் பாலினச் சமத்துவமின்மையைப் பற்றியொரு நிகழ்வும் இந்த நூலில் உள்ளது. சூசன் என்ற பெண் அமெரிக்காவில் ஊபர் நிறுவனத்தில் எதிர்கொண்ட  பாலினப் பாகுபாட்டுப் பிரச்னை. அது புகழ்பெற்ற மீடூ போராட்டத்துக்கு வித்திட்டது. ரஷ்யாவில் பெண்களால் செய்யமுடியாத வேலைகள் என்று 456 வேலைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. பெண்கள் குறிப்பிட்ட வேலைகளைச் செய்யக்கூடாது என்று 104 நாடுகளில் சட்டங்கள் உள்ளன. 133 நாடுகளில் ஆண்களும் பெண்களும் ஒரே வேலையைச் செய்யும்போது அவர்களுக்குச் சமமான சம்பளத்தைத் தரவேண்டும் என்ற சட்டம் கிடையாது.

உலகின் பல்வேறு பகுதிகளில் தனக்குக்
கிடைத்த அனுபவங்களைத் தொகுத்து மெலிண்டா எழுதிய நூலின் பெயர் The moment of Lift. இது தமிழில் பெண்களை உயர்த்துவோம்! சமுதாயத்தை உயர்த்துவோம் என்ற தலைப்பில் நாகலட்சுமி சண்முகம் மொழிபெயர்ப்பில் வெளிவந்து உள்ளது.

வெளியீடு:மஞ்சுள் பதிப்பகம்,

மாள்வியா நகர், போபால்.

விலை: ரூ 399

அக்கரைச் சீமை அழகினிலே...

சிங்கப்பூரிடமிருந்து ஒரு நாடாக நாம் கற்கவேண்டியது என்ன என்று மாலன் எழுதி இருக்கும் நூல். சமூக பொருளாதார கலாசார காரணிகள் என்கிற கண்ணாடி வழியாக இந்தியாவையும் சிங்கப்பூரையும் பார்த்து, உணர்ந்து எழுதி இருக்கிறார். சிங்கப்பூரின் தந்தை எனப்படுகிற லீ குவன் யூ போன்ற கருணையுள்ள
சர்வாதிகாரி நம் நாட்டுக்குக் கிடைக்காமல் போய்விட்டது இதற்குக் காரணமா என்று ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ளவரான மாலன் கேட்டுக்கொள்கிறார். முப்பத்தியோரு ஆண்டுகள் தொடர்ச்சியாக பிரதமராக பதவி வகித்த லீ, தன் 67 ஆம் வயதிலேயே பதவி விலகிக்கொள்கிறார். அவருக்கோ  அவரது சகாக்களுக்கோ சிங்கப்பூரில் எங்கும் தெருக்களின் பெயர்களோ சிலைகளோ இல்லை. தான் வாழ்ந்த வீட்டையும் தன் மரணத்துக்குப் பின் இடித்துத் தரைமட்டமாக்கிவிட வேண்டும் என்று கூறிவிட்டார் லீ. நம் அரசியல்வாதிகளில் ஒருவர் அங்கே இருந்தாலும் சிங்கப்பூர் முழுக்க சிலைகளாகி விடாதா என்ன? தொழிலாளர் அமைப்புகளின் போராட்டம், வீட்டுவசதிக் கட்டுமானங்கள், கல்வி, மக்கள்தொகை, மேற்கு நாடுகளுடன் இருக்கும் கால வித்தியாசத்தை தன் வளர்ச்சிக்கு சிங்கப்பூர் பயன்படுத்திக்கொண்டது போன்ற பல அம்சங்களை விரிவாகவும் ஆழமாகவும் எழுதி உள்ளார். சிங்கப்பூரைப் புரிந்துகொள்ள உதவும் நூல்.

வீழ்வேன் என்று நினைத்தாயோ? 

மாலன், கவிதா பதிப்பகம்,

8, மாசிலாமணி தெரு, பாண்டி பஜார், தியாகராய நகர்,

சென்னை – 17

பேச: 044&24364243

விலை: ரூ 100.

அக்டோபர், 2019.

logo
Andhimazhai
www.andhimazhai.com