இந்திய தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த ரகுராம் ராஜன், ரோகித் லாம்பாவுடன் இணைந்து இந்தியாவின் பொருளாதார எதிர்காலம் பற்றி எழுதி இருக்கும் நூல் இது. சீனாவைப் பார்த்து அதேபோன்ற பொருளாதார வழியை இந்தியாவும் பின்பற்றுகிறது; ஆனால் அது சரியல்ல என்னும் இப்புத்தகம் நம் நாட்டின் பொருளாதாரம் குறித்த புதிய உண்மைகளை முன்வைத்து, தீர்வுகளையும் சொல்லிச் செல்கிறது. நம் நாட்டுத் தலைவர்கள் வேலைவாய்ப்பு வளர்ச்சி மந்தமாக இருப்பதை மக்களிடம் இருந்து மறைக்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார் ரகுராம் ராஜன். சீனத்தின் ஒரு போலிப்பிரதியாக நாம் உருவாவதை விரும்பவில்லை என்கிறார்். 1960 இல் இந்தியாவின் தனிநபர் ஜிடிபி 86 டாலர்களாகவும் கொரியாவின் ஜிடிபி 94 டாலர்களாகவும் சீனாவின் ஜிடிபி 76 டாலர்களாகவும் இருந்திருக்கிறது. இன்று இந்தியாவின் தனிநபர் ஜிடிபி 2300 டாலர். கொரியா- 35000 டாலர்கள். சீனா 12,500 டாலர்கள். கொரியாவும் சீனாவும் எங்கோ போய்விட்டன. (தனிநபர் ஜிடிபி என்பது நாட்டின் ஜிடிபியை அதன் மக்கள் தொகையால் வகுத்தால் வருவது). ஆனால் இந்தியாவின் நிலையும் மோசமானது அல்ல. ஜனநாயகம் நிலவும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் பரவாயில்லை. நாம் இன்னும் சிறப்பாக செயல்பட்டாக வேண்டும். நாம் எதிலெல்லாம் கவனம் செலுத்தவேண்டும் என்பதைப் பற்றி இப்புத்தகம அழகாக விவரிக்கிறது. தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் பிஎஸ்வி குமாரசாமி. பெயர் சொன்னால் தரம் எளிதில் விளங்கும்! ஆகவே இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய நிலை, எதிர்காலம் ஆகியன பற்றி தமிழில் வாசிக்க விரும்புகிறவர்கள் இந்நூலைப் படிக்கலாம். நூலின் கடைசியில் வாசகருடன் நூலாசிரியர் உரையாடுவதுபோல் எழுதப்பட்டிருக்கும் கேள்வி பதில் பகுதி பொருளாதாரம் தாண்டி பல தற்கால அரசியல் கேள்விகளுக்கும் விடையளிக்கிறது.
பழைய வார்ப்புகளை உடைத்தெறிவோம்! இந்தியாவின் பொருளாதார எதிர்காலம் குறித்த ஒரு புதிய பார்வை, ரகுராம் ஜி.ராஜன், ரோகித் லாம்பா, தமிழில் பி எஸ் வி குமாரசாமி, வெளியீடு: மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், போபால் 462003, விலை: ரூ. 599
எட்டு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. முதல் சிறுகதையான நீலத்தாவணி, ஏற்கெனவே தனித்த பெண்மொழிக்காக பலரின் கவனத்தை ஈர்த்திருந்த கதை. ஜெயமோகன் தன் தளத்தில் வெளியிட்டு கவனம் பெறச் செய்திருந்தார். தூசி, வஞ்சி, ட்ராமாகுயின் ஆகிய மூன்று கதைகளும் நாடகக் குழுக்களை பின்னணியாகக் கொண்டவை. சரிந்துகொண்டிருக்கும் கலையின் நடுவே உன்னதத்தைத் தேடுபவை. வஞ்சியின் பின்னணி நாடகமாக இருந்தாலும் அது நாடகம் பற்றியது அல்ல. சரிவிலிருந்து மீளும் பெண்ணின் நிமிர்வைக் குறிக்கிறது. ட்ராமாகுயின், புகழ்பெற்ற நாடகநடிகை பாலாமணியைப் பற்றியது. மெக்தலீன், அழைப்பு ஆகிய கதைகள் கிறிஸ்துவப் பின்னணி கொண்டவை. ராஜமுனியும் கர்ப்பகிரகமும் மண்ணில் விளைந்த நம்பிக்கைகள் மீது எழுதப்பட்டவை. வெவ்வேறு பின்னணிகளில் எழுதப்பட்ட தலைசிறந்த கதைகளுடன் வரக்கூடிய சிறுகதைத் தொகுப்புகள் அபூர்வமாகவே அமையக்கூடியவை. ரம்யாவின் சிறுகதைகளில் இருக்கும் நுண்ணிய அவதானிப்புகளும் தரவுகளும் பிரமிப்பூட்டுகின்றன. கலையாக மிளிரும் படைப்புகளைத் தரும் எழுத்தாளராக அவரை இந்த தொகுப்பு நிறுவுகிறது.
நீலத்தாவணி, ரம்யா, யாவரும் பப்ளிஷர்ஸ்,24, பி எஸ் ஜி பி நாயுடு காம்ப்ளக்ஸ், தண்டீஸ்வரம் பேருந்து நிறுத்தம், பாரதியார் பூங்கா எதிரே, வேளச்சேரி பிரதான சாலை, வேளச்சேரி, சென்னை -42 பேச:9042461472
விலை: ரூ. 160
தவளைகள் எங்கே போகின்றன?
நான் என்னுடைய டிபன் டப்பியில்லை என் நண்பரே!, என் ஆண்கள் எல்லோரும் கருப்பு, சேப்டி பின்களின் ராணி, எல்லா தவளைகளும் எங்கே போகின்றன? இவையெல்லாம் தன்னளவில் கவிதையாக நிற்கக்கூடிய வரிகள். இவை எல்லாம் நானொரு முஸ்லின் பெண், விற்பனைப் பொருளல்ல என்கிறு சின்னஞ்சிறு கவிதை நூலில் இடம்பெற்றிருக்கும் கவிதைகளின் தலைப்புகள். இது மௌமிதா ஆலம் என்கிற வங்கமொழிக் கவிஞரின் கவிதைகளின் தொகுப்பு. தமிழில் மொழி பெயர்த்திருப்பவர் ஶ்ரீ.என்.ஶ்ரீவத்ஸா. இஸ்லாமியப் பெண்களை ஏலம் விடுவதற்காக செயலி ஒன்று உருவாக்கப்பட்ட சம்பவத்தின்போது எழுதிய கவிதையே இந்நூலின் தலைப்பாகவும் அமைந்துவிட்டிருக்கிறது. தன்னைச் சுற்றி நடக்கும் எல்லாவற்றையும் கவிதைகளாக ஆக்குகிறார் மௌமிதா. கொரானா பாதிப்பின் போது சாலைகளை நடந்தே கடந்த தொழிலாளர்களாகட்டும், மரங்கள் அழிப்பாகட்டும், புலம்பெயர் தொழிலாளிகளின் துயராகட்டும், விவாகரத்து, காதல், குடும்பம், ஆணாதிக்கம் எதுவாகட்டும் எல்லாவற்றையும் சுதந்தர உணர்வுடன் கவிதை ஆக்கி இருக்கிறார். அழகான மொழிபெயர்ப்பு. அருகிலேயே ஆங்கில வடிவில் அக்கவிதை என முழுமையாக அனுபவம் தருகிறது இத்தொகுப்பு.
நானொரு முஸ்லின் பெண், விற்பனைப் பொருளல்ல, மௌமிதா ஆலம், மொழிபெயர்ப்பு: ஶ்ரீ.என். ஶ்ரீவத்ஸா, ஹெர் ஸ்டோரீஸ், 81, நான்காவது நிழற்சாலை, அசோக் நகர், சென்னை 60063. பேச: 7550098666 விலை: ரூ. 250
மரபணுக்கள் சொல்லும் வரலாறு
நம் காலத்தில் வாழ்கின்ற மிகமுக்கியமான அறிவியல் விஞ்ஞானிகளில் ஒருவர் எனக்கூறத் தகுந்தவர் பேராசிரியர் பிச்சப்பன். அவரது அறிவியல் பங்களிப்புகள் பல இருந்தாலும் மனிதன் ஆப்பிரிக்காவில் இருந்து தோன்றி உலகெங்கும் பரவினான் என நிரூபித்த ஜீனோகிராபிக் மரபணு ஆராய்ச்சியில் இந்தியா சார்பாக பங்களித்தவர். அச்சமயம் எந்த விண்ணப்பமும் செய்யாமலே அவரை ஒரு பல்கலைக்கழகத்துக்குத் துணைவேந்தர் பதவிக்குத் தகுதியான மூவரில் ஒருவராக தேர்வு செய்து ஆளுநரிடம் பட்டியல் போகிறது. அவரோ இதை விட முக்கியம் ஜீனோகிராபிக் ஆய்வு என அமைதியாக இருந்து, அந்த து.வே. பதவியில் இருந்து தப்பித்துக்கொள்கிறார். அவர் தான் சார்ந்த நகரத்தார் சமூகத்தின் மரபணுவை ஆய்வு செய்து, அந்தக் குறிப்பிட்ட சாதியினர் எப்படி உருவாயினர் எனக் கண்டுபிடித்து, சமீபத்தில் வெளியிட்டு இருக்கும் புத்தகம்தான் இந்த திராவிடப் புதிர். நாட்டுக்கோட்டை நகரத்தாரின் பல்வேறு கிளைகளை ஆராயும் இந்த ஆராய்ச்சியில் 60,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த மனித கிளைகளில் இருந்து 2000 ஆண்டுகளுக்கு முன்புவரை உருவாகி இருந்த பல மனிதக் கிளைகள் கலந்து இருப்பது தெரியவருகிறது. இம்மரபணுக்கிளைகள் இந்தியாவின் பல்வேறு பகுதியில் வாழும் மக்களிடையேயும் காணப்படுவது, இவர்கள் அப்பகுதியில் இருந்து புலம் பெயர்ந்து வந்து இருக்கலாம் என்பதையும் நிறுவுகிறது. இந்நூல் நகரத்தார் பற்றி மட்டும் ஆராய்ச்சிக் கருத்துகளை முன் வைக்காமல் திராவிடர்கள் பற்றிய பல மரபணுக் கோட்பாடுகளையும் முன்வைக்கிறது. இந்த ஆய்வுகள் விளக்கமாகப் பேசப்பட்டால் தற்போதைய அரசியல் கோட்பாடுகள் பல உடைக்கப்படும்.
ஒரு திராவிடப் புதிர், இராம பிச்சப்பன், நாட்டுக்கோட்டை நகரத்தார் மரபணு வரலாறு, வெளியீடு: பிச்சு அறக்கட்டளை, மதுரை 625007, விலை: ரூ. 600