காத்திரமான அரசியல் விமர்சனக் கட்டுரைகளுக்குப் பெயர்போன பாமரன், குழந்தைகளுக்காக எழுதி இருக்கும் புத்தகம் குறும்புக்காரன் குவேரா. கியூப புரட்சியாளர் சேகுவேராவைப் பற்றி எளிய மொழியில் குழந்தைகளுக்குப் புரியுமாறு எழுதப்பட்ட புத்தகம். வெளியான சூட்டில் பல்லாயிரம் பிரதிகள் விற்றுத் தீர்ந்த இந்த நூல் இன்னும் எராளமான குழந்தைகளுக்குப் போய்ச் சேர வேண்டி இருக்கிறது.
39 வயதில் பொலிவியக் காடுகளில் கொல்லப்பட்ட இந்த இளைஞன் அர்ஜெண்டினாவில் பிறந்து, கியூப விடுதலைக்குப் போராடி, பொலிவியா நாட்டில் உதிர்கிற வரலாற்றைப் பெரிய எழுத்துகளில் பள்ளிக்குழந்தைக்கும் புரியும் விதத்தில் அழகிய படங்களுடன் வெளியிட்டுள்ளனர். சேகுவேராவை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்நூல் அமெரிக்க மார்வெல் காமிக்ஸுக்கு ஒரு மாற்று முயற்சியாக தன்னை முன் வைக்கிறது. இதன் புவி அரசியலை இந்த சிறுவர்கள் என்றாவது புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கையில்.
குறும்புக்காரன் குவேரா, பாமரன், நாடற்றோர் பதிப்பகம், 16, வேங்கடசாமி சாலை கிழக்கு, இரத்தின சபாபதி புரம், கோவை- 641002, பேச: 9443536779 விலை:ரூ.70
நாட்டுப்புறக் கதைகள்
அமெரிக்காவின் பூர்வ குடிகளான செவ்விந்தியர்கள் இந்த உலகின் மூத்த குடிகளில் ஒரு குழுவினராவர். அவர்கள் தங்கள் நிலங்களை ஆக்கிரமித்த வெள்ளையர்களுடன் போராடித் தோற்றுப்போயினர். அந்த பூர்விக இனத்தவர்களின் நாட்டுப்புறக் கதைகளில் அவர்கள் தங்களைச் சூழ்ந்திருந்த உலகை எப்படிப் பார்த்தனர், விலங்குகளை, வானத்தை, நதியை எப்படி உணர்ந்திருந்தனர் என்கிற தகவல்கள் கிடைக்கின்றன. கட்டற்ற பாலியல் குறிப்புகள் இருப்பதால் இந்த நூல் வயதுவந்தவர்களுக்கு மட்டும் என்று குறித்துள்ளனர்.
இந்நூலிலுள்ள ஒரு கதை ஊர்த்தலைவன் ஒருவரின் மகளை இரவில் ரகசியமாக உறவு கொண்ட நாய் ஒன்றைப் பற்றியது. அந்த பெண்ணுக்கு ஏழு நாய்க்குட்டிகள் பிறக்கின்றன. அவை கார்த்திகை விண்மீன் ஆகிவிடுகின்றன எனப் போகிறது. வானவில்லின் மீது ஏறி விண்ணுக்குச் சென்றுவிடும் ஆமைகள், மான்கள் என இந்த பழங்குடியினரின் விசித்திரமான பல கதைகளின் தொகுப்பு இது.
செவ்விந்தியர்களின் தொன்மக் கதைகள், டிர்ஸ்ட்ரம் பி.காஃபின், தமிழில்:வானதி, சுவாசம் பதிப்பகம், 52/2, பி எஸ் மகால் அருகில், பொன்மார், சென்னை-127 பேச:8148066645 விலை:ரூ.300
விசுவாசமிக்க செயல்வீரர்கள்!
என்விநடராசனில் தொடங்கி இளம்பரிதியில் முடியும் புத்தகம் இது. தி.மு.கவில் முக்கிய தூண்களாக நின்று செயல்பட்டவர்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டி எழுதப்பட்ட கட்டுரைகள், அந்தக் கட்சியின் இளைஞர்களைக் குறிவைத்து எழுதப்பட்டுள்ளன. இருந்தாலும் பொதுவாக இருப்பவர்களுக்கு ஒரு கட்சி தமிழகம் முழுவது எத்தனை விசுவாசமிக்க செயல்வீரர்களைக் கொண்டிருந்தது என்பதையும் அதன் வெற்றிக்கு இத்தனை பேர் காரணமாக இருந்திருக்கிறார்கள் என்பதையும் உணரும் விதத்திலான தொகுப்பு இது. ஆசைத்தம்பி, கோவிந்தசாமி, சாதிக் பாட்சா, மன்னை நாராயணசாமி, சிவிஎம் அண்ணாமலை, கேவிகே சாமி, அன்பிலார், டிகே சீனிவாசன், காஞ்சி மணிமொழியார், கோசி மணி, இளம்வழுதி, சிட்டிபாபு, மு.ராமநாதன், எஸ்.எஸ்.தென்னரசு, பிடிஆர் பழனிவேல்ராஜன் என நீண்டு செல்லும் 25 பேர் பற்றிய செறிவான கட்டுரைகள் இதில் உள்ளன. உழைத்தவர்களை நினைவுகூரும் இளைய தலைமுறையின் முயற்சி இது.
உடன் பிறப்பே, நீரை மகேந்திரன், ந.வினோத்குமார், விஷ்ணுராஜ், கௌதம், வெளியீடு: முத்தமிழறிஞர் பதிப்பகம், அன்பகம், 614, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18 விலை:ரூ.200