கதைகளைப் பேச ஆசை கொள்கிறேன்!

அந்திமழை வாசிப்புத்திருவிழா!
அந்திமழை
அந்திமழை
Published on

சிறுகதை போட்டி ஒன்று வைத்து அதற்கு தகுந்த பரிசினை வழங்க வேண்டும் என்று எண்ணி அதை செயல்முறை படுத்திய அந்திமழை இதழுக்கு ஒரு பெரிய நன்றி. ஏனெனில் எழுதும் பழக்கம் குறைந்து வரும் காலக்கட்டத்தில் எழுத ஊக்கம் தருவதோடு அதற்கு தகுந்த பரிசும் தருவது ஒரு சிறப்பான செயல். அதுமட்டுமின்றி தேர்ந்து சிறந்த எழுத்தாளர்களை மட்டும் படிப்பதை தவிர்த்து பல கோணங்களில் பல மனிதர்களின் பல வித கதைகளை நம் கைக்கு கொண்டு வந்து தந்து மாற்றத்தை தேடுவதும் ஒரு சிறந்த சமூக பணி என்று நம்புகிறேன். அதற்காகவே மீண்டும் பெரிய நன்றியையும் மனமாற வாழ்த்துக்கள் உரித்தாக்கிக்கொள்கிறேன்.

கதைகளின் உயிர்க்கு உருவம் கொடுத்த ஓவியர்கள் டிராட்ஸ்கி மருது, ரவி பேலட், பி. ஆர். ராஜன், ஜீவா, மனோகர், ரஞ்சித் பரஞ்ஜோதி, வேலு, ஷ்யாம், தமிழ், வேலு ஆகிய அனைவருக்கும் என் வாழ்த்துக்களை பதிவு செய்கிறேன். 

கதைகளை பற்றி மட்டும் பேச ஆசைக்கொள்கிறேன். கதைகளில் இதற்கு ஏன் அந்த பரிசு இதற்கு இதை கொடுத்து இருக்கலாம் என்று பேசுவது பேதமை மட்டுமே வெளிக்காட்டும். ஏனெனில் 450 கதைகளில் 15 ஐ சுருங்குவதே பெரும்பாடு! கதைக்களம், உரைநடை, இயல்புநிலை இத்தியாதி இத்தியாதி என்று நீளும் தேர்வு முறைகளில் யாரையும் ஏதும் சொல்லமுடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வாசிப்பு அனுபவம் இருக்கும் அதின் ஊடே கண்ட விடயங்கள் இருக்கும். என்ன தான் இவைகளை எல்லாம் காரணம் காட்டினாலும் பரிசு வழங்குவது அந்திமழை! நமக்கு கதை தான் பரிசு என்று எண்ணுவது முதன்மை.

பதின் பருவம் என்றாலே மிக முக்கியமானது இயக்குநீர்களின் (hormones) சுரப்பும் அதன் மூலம் வெளிக்கொணரப்படும் மாற்றங்களும் அதனால் அவர்கள் தேர்ந்தெடுக்கும் பாதைகளும் தான் மிக முக்கியமானது. பதின் பருவத்தில் ஏற்படும் நிகழ்வுகள் நிரந்தரமாக மனதிற்குள் புதைந்து விடுகிறது என்பது நிதர்சனம். இதில் பதின் பருவத்தினர் மட்டும் சார்ந்து இல்லாமல் அவர்களை சூழ்ந்த சமூகத்தின் (அப்பா அம்மா உட்பட) பார்வையையும் இருதர புரிதல்களையும் முன்னிறுத்துவது இன்றைய நிலைக்கு தேவையானதாக இருக்கிறது. பதின் பருவத்தில் ஏற்படும் மாற்றங்களை‌ அங்கீகரிப்பதும் அதற்கான உரிய பாதைகள் உருவாக்குவதும் சமூகத்தின் மிக முக்கிய கடமை.

சாதி ரீதியாக வன்கொடுமைகள், படிப்பில் பாதிப்படைதல் பற்றி பேசும்‌போது ஆண் பிள்ளைகளையும், உணர்வுகளின் தாக்கங்கள் பற்றி பேசும்‌ போது பெண் பிள்ளைகளை பற்றியும் பேசுவதாக சில கதைகள் எனக்கு தோன்றுகிறது! இது முறையா என்று சற்று யோசிக்க வேண்டியதாக இருக்கிறது.

ஜெயகாந்தன் அவர்களின் இரு கதைகள் என் நினைவுக்கு வருகிறது ஒன்று 'அக்கினிபிரவேசம்' இன்னொன்று 'அந்தரங்கம் புனிதமானது'. இவ்விரு கதைகளும் உற்று கவனிக்க கூடியது ஒரு நிகழ்வை முறைப்படுத்தியது அல்ல! மாறாக ஒரு நிகழ்வை எப்படி கையாளுவது என்று பெற்றோருக்கும் அதன் மூலம் தம் குழந்தைகளுக்கு உணர்த்துவதாகவும் இருப்பது தான். அக்கினிப்பிரேவசத்தை சுருங்கியதில் விட்டுப்போனது...

'அதோ அவள் கல்லூரிக்குப் போய்க் கொண்டிருக்கிறாள். அவள் செல்லுகின்ற பாதையில் நூற்றுக்கணக்கான டாம்பீகமான கார்கள் குறுக்கிடத்தான் செய்கின்றன. ஒன்றையாவது அவள் ஏறிட்டுப் பார்க்க வேண்டுமே! சில சமயங்களில் பார்க்கிறாள். அந்தப் பார்வையில் - தன் வழியில் அந்தக் காரோ அந்தக் காரின் வழியில் தானோ குறுக்கிட்டு மோதிக் கொள்ளக் கூடாதே என்ற ஜாக்கிரதை உணர்ச்சி மட்டுமே இருக்கிறது'. ஒரு நிகழ்வினை மட்டும் கூறி முடிக்காமல் அதனால் பெற்றோரின் செயல் மற்றும் உண்மையான கடமையை கூறி அதன்‌ மூலம் அடைந்த  மாற்றத்தையும் குறிப்பிடுவது தேவையாகிறது. அதே போல் அந்தரங்கம் புனிதமானது கதையில் தந்தையின்‌ செயல் தவறானது என்று சொல்ல முயற்சி செய்து தந்தை தாய் இருவரிடமும் அவன் எதிர்பாராத பதில்களை பெற அதற்கு அவர்கள் கொடுக்கும் விளக்கங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் பழைவாதியாக எஞ்சி நிற்பதும் பெற்றோர் மகனின் வழக்கமான உரையாடல் முறையை உடைத்து காட்டுகிறது. இக்கதையின் தாய் காதபாத்திரத்தின் சாயலாக  'துராசாரம்' சிற்றன்னை எனக்கு தெரிகிறார். கதையின் பின் நிகழும் உரையாடல் 'செக்ஸை நியாயப்படுத்தி பேசும் உன்னுடன்‌ ஒரே வீட்டில் இருக்க முடியாது' என்று சொல்லுவதற்கு முன்னே நிகழ்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்ற வருத்தம். அவன் குழந்தை அதை புரியவைக்க வார்த்தைகளை கொட்டினாலும் குழந்தைகளிடம் பயன்படுத்துவதற்கு முன் சரியாக யோசித்து பேச வேண்டும்.

அதேபோல் இக்கதையின் நீண்ட நடையாக 'அன்பு பேசி'யை எடுத்துக்கொள்கிறேன். திறன்பேசி தான் இன்றைய இளையவர்களின் மிகப்பெரிய தவறு என்பது போல் சித்தரிப்பது! தவறாக கூட இருக்கலாம், எதுதான் தவறில்லை? அடுத்த பாலினத்துடன் பேசுவதை குற்றம்சாட்டி குறை கூறுவதோடு நின்று விடலாம் அவர்களை மனதளவில் துன்புறுத்தலுக்கு ஆளாக்குவது களையப்பட வேண்டியது. இரண்டு நாட்களுக்கு முன் ஒரு செய்தி 14 வயது சிறுமியை இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்ந்து பேசி, அந்த குழந்தைக்கு தேவையான பொருட்களை வாங்கி தருவது வேண்டியதை செய்வது போன்றவற்றின் மூலம் அக்குழந்தைக்கு நெருக்கமாகி காணொளி அழைப்பில் அந்தரங்கமான விடயங்களை எடுத்து வைத்து அதை கொண்டு மிரட்டி பணம் பறித்து அதை அக்குழைந்தையின் அப்பாவிற்கு தெரியவர அவர் கூலிப்படை மூலம் அந்த நபரை கொன்றார் என்று பார்க்க நேர்ந்தது. இங்கு தவறு குழந்தைகள் அல்ல அப்படியே ஒரு அந்தரங்கமான விடயம் மற்றவர் கையில் இருந்தாலும் அக்குழந்தைக்கு போதிய மன தைரியத்தை உருவாக்கும் சூழலைத்தான் நாம் வழங்க வேண்டுமே ஒழிய கற்பு என்பது பெண்ணுக்கு மட்டும் தான் என்பது போலவும் தவறு செய்தது பெண் மட்டும் தான் என்பது போலவும் சொல்லி ஆண் பிள்ளைகளுக்கான ஒழுக்கங்கள் மீதான கட்டுபாடு ஒருபோதும் கற்பிக்க படுவதில்லை. உடல் அனைவருக்கும் ஒன்றே என்று உறுதியான சூழலை உருவாக்க வேண்டும்.

இக்கதைகளின் தொடர்சியாக 'இது வேறு உலகம்' பெற்றோர்கள் சொல்வதை கேட்டு அல்ல செய்வதை பார்த்து தான் குழந்தைகள் கற்றுக்கொள்ளும் என்பதை சொல்லிருப்பது நன்று.

பாலின சமத்துவம் (Gender equality) என்பது ஆண் பெண்ணுக்கு மட்டுமல்ல மூன்றாம் பாலித்தவருக்கும் உரிய உரிமை என்பதை சரியாக எடுத்துரைத்த 'வெயில் தணியும்' கதைக்கு எனது பாராட்டுக்கள். இயக்குநீர்களில் ஏற்படும் மாற்றம் காரணமாக பதின் பருவத்தில் தான் மாற்று பாலினத்தவர் உருவாதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். அந்த நிலையை தான் எடுத்துக் கொள்வதை விட சமூகம் எப்படி நம்மை நடத்துகிறது என்று பார்க்க வேண்டிய ஒன்றென்பதால் அதே கோணத்தில் பேசியிருப்பது நன்றாக இருந்தது. மாற்றுப்பாலினத்தவரை மதிப்பது என்பது வேறு LGBQT+ பற்றி பேசுவது வேறு இரண்டிற்கும் சம்பந்தமே இல்லை.

'மாலை நேரத்து நடனம்' மற்றும் 'பயணம்' வெளிநாட்டு வரவு என்பது சிறப்பு. இருந்தாலும் அந்தளவுக்கு இங்கிருக்கும் பதின் பருவத்தினர் பக்குவடைவதற்கான சூழ்நிலையோ கல்வி நிலையோ இல்லை என்று நான் எண்ணுகிறேன். ஆனால் இரண்டிலுமே தங்களுக்கான பிரச்சினைகளை எதிர்கொள்ளவும் அதற்கான தீர்வுகளை வழிவகுத்து கொள்ளவும் முடியும் என்பதையும் தீர்க்கமாக சொல்லியிருக்கிறது.

'சவகிடங்கு' சற்று‌ உறைவைக்கும் கதை தான், post traumatic stress disorder பற்றி கையாண்ட முறையும் அதிலிருந்து வெளிப்பட்ட வேதனைகளை தவிர்க்க எடுத்த முயற்சிகளையும் பேசி இருந்தால் கூட ஒரு நல்ல கதையாக இருந்திருக்கும். ஆனால் அப்பா எனும் கொடூர மிருகத்தை சவகிடங்கில் கண்டும் இது அப்பா இல்லை என்று சொல்லி தவிர்க்கும் ஒரு வரியே அத்தனையும் கடத்தி தான் விடுகிறது.

'நிலைமம்' மற்றும் 'கரங்கள் தேடல்' பெற்றோரின் செயல்களால் ஏற்படும் பாதிப்புகளை வெவ்வேறு கோணங்களில் விளக்கியிருப்பதுடன் அதன் மூலம் அவர்கள் அடையும் வேதனைகளையும், மனக்குழப்பங்களையும், கோபத்தையும் திரையிட்டுருப்பது இயல்பாக இருக்கிறது.

'தொக்கம்' மற்றும் 'புளியாமரம்' இரண்டும் பதின் பருத்தினருக்கே முழைக்கும் பழக்கங்கள் பற்றி விரவரித்துள்ளது. இன்னா கூறல் கடும் சொற்கள் பயன்படுத்தல் தீயொழுக்கங்களுக்கு அடிபடிதல் போன்றவை தான் தம்மை தங்களின் குழுவில் பெரிய மனிதனாய் கட்டும் மதிப்பும் கூடும் என்று தவறாக எண்ணி அதற்குள் அகப்பட்டு இன்னல்களை அடைவது பற்றி பேசியிருக்கிறது. என்ன தான் இவை நண்பர் வட்டாரத்தில் நமக்கு மதிப்பை கூட்டும் என்றாலும் அவை தான் நம்மை சிதைக்கும் குடும்பத்திலிருந்து விலக்கும் அதனால் ஒரு பயணும் இல்லை என்பதையும் சொல்லிருக்கிறது.

'நாற்றாங்கால்', 'மொசக்கறி' மற்றும் 'ஆடு மேய்க்க ஆள் வேணும்' மூன்றும் சாதிய அடிப்படையில் பதின் பருவத்தில் ஏற்படும் தாக்கங்களை வெவ்வேறு முறையில் பேசியிருக்கிறது. பதின் பருவத்தினர் அடையும் சினம், குடும்ப உறுப்பினர் எதிர்கொள்ளும் இன்னல்கள் என்று கதை பொருளாக்கி இருப்பது இன்றளவும் தேவையாக தான் இருக்கிறது.

'இலக்கணப்பிழைகள்' சற்று வித்தியாசமான உரையாடல்களை நிகழ்த்தி இரு வேறு உயிரியல் மாற்றங்களை பிழைகள் என்று ஒதுக்கும் சமூக பார்வையை காட்டி இருக்கிறது.

எனக்கு வரிசையிட எல்லாம் தெரியாது ஒவ்வொரு கதையும் அதன் களத்திற்கு தகுந்து பேசியுள்ளது. அத்தனையும் சிறப்பான கதைகள் தான் அதை நாம் அனுகுவதை பொறுத்து அதன் தரமும் மாறிக்கொண்டு இருக்கும்...

logo
Andhimazhai
www.andhimazhai.com