புதுமைப்பித்தனுக்கும் தொ.ப-வுக்கும் சிலை! - வழிகாட்டும் நெல்லை மாநகராட்சி

புதுமைப்பித்தன் - தொ.பரசிவன்
புதுமைப்பித்தன் - தொ.பரசிவன்
Published on

ஒரு மொழியின் ஆன்மாவாகவும், பண்பாட்டின் அடையாளமாகவும் இருப்பவர்கள் எழுத்தாளர்கள். அவர்களை இந்த சமூகம் கொண்டாடுகிறதா என்றால் இல்லை. இந்நிலையில் தான் கடந்த வாரம் நடைபெற்ற திருநெல்வேலி மாநகராட்சி கூட்டத்தில், நெல்லை கோட்டை பூங்காவில் எழுத்தாளர் புதுமைப்பித்தனுக்கும், பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரசிவனுக்கு மார்பளவு உருவச்சிலை அமைப்பது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது தொடர்பான தகவலை, தொ.பவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து சொல்லியிருக்கிறார் நெல்லை மேயர் சரவணன். மாநகராட்சி இப்படியொரு தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் முக்கியமான காரணம் காரணம் என்கின்றனர் நெல்லை மாவட்டத்துக்காரர்கள்.

ஒரே பூங்காவில் நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடியாக கருதப்படும் புதுமைப்பித்தனுக்கும், தமிழ்ப்பண்பாட்டின் ஆய்வாளராக கருதப்படும் தொ.பரமசிவனுக்கும் சிலை அமைக்க நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து கவிஞர் சாம்ராஜிடம் பேசினோம், “நம்முடைய மரபு என்பது தலைவர்களுக்கு சிலை வைப்பதாகத்தான் உள்ளது. கவிதைக்காக ஒளவையார், பாரதி போன்றவர்களுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. 1981ஆம் ஆண்டு மதுரையில் நடந்த ஐந்தாவது உலக தமிழ் மாநாட்டையொட்டி, உ.வே.சாமிநாதையர், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை போன்றவர்களுக்கு சிலை வைத்தார்கள்.

நவீன இலக்கியத்தின் பிதாமகனாக கருதப்படும் புதுமைப்பித்தனுக்கும், தமிழ் ஆய்வுப்புலத்தில் அல்லது நாட்டார் வழக்காற்றியலில் திடமான பங்களிப்பு செய்திருக்கும் தொ.பரமசிவனுக்கும் சிலை வைப்பது ஆரோக்கியமான விஷயம். கர்நாடகாவின் பெங்களூரில் ஒவ்வொரு பகுதியின் முகப்பு பகுதியிலும் ‘ப’-வை தலைகீழாக வைத்திருப்பது போன்ற வடிவத்தில் அம்மாநிலத்தின் முக்கிய தலைவர்கள் மற்றும் எழுத்தாளர்களின் படங்கள் இடம்பெற்றிருக்கும். இதை ஒரு எழுத்தாளருக்கு செய்யப்படும் கெளரவமாகவும், அன்றாடத்தில் நினைவுகூரப்படும் ஒன்றாகவும் பார்க்கிறேன்.

அதேபோல், கேரளாவின் கோழிகோடுவில் எஸ்.கே.பொற்றேகாடு (S K Pottekkatt) எஸ்.எஸ். என்ற தெருவில் நின்று தினந்தோறும் நண்பர்களுடன் பேசுவார். அவர் மறைந்த பிறகு, அதே தெருவில் சிலை வைத்தார்கள்.

ஒரு எழுத்தாளருக்கு சிலை வைப்பதன் வழியாக, அவர் யார் என்ற கேள்வி எழும். இதன் வழியாக யாரோ சிலர் அவரைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். அவரைப் படிக்கலாம். எழுத்தாளர் தான் ஒரு சமூகத்தின் சிந்தனையை மாற்றக் கூடியவராக இருக்கிறார்.

உதாரணத்திற்கு இப்படி கற்பனையாக கூட சொல்லலாம்! அடையாளம் சொல்வதற்காக, ‘புதுமைப்பித்தன் சிலை கிட்ட வந்துவிட்டேன்’ என்று சொல்லலாம். இப்படி சொல்வதன் வழியாக புதுமைப்பித்தன் தொடர்ந்து நம்முடைய உரையாடலில் வந்துக் கொண்டேயிருப்பார்.

மதுரையில், பெரியார் பேருந்து நிலையம் இருக்கிறது. அனைவரும் பெரியாரை ஏற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ. அந்த பேருந்து நிலையம் வந்தால், பெரியார் என்ற பெயரை சொல்லித்தானே ஆகவேண்டும்! இப்படி ஒரு எழுத்தாளரையோ, சிந்தனையாளரையோ நம் உரையாடலுக்குள் வருவது நல்ல விஷயம்.

புதுமைப்பித்தனுக்கும், தொ.ப-விற்கும் சிலை வைப்பதன் மூலம், அவர்கள் பற்றிய தேடல் இனி ஏற்படலாம்! அவர்களின் எழுத்துகளை சமூகம் வாசிக்கலாம்! சமூகத்தின் நாவில், இது போன்றவர்கள் புழங்குவது என்பது நல்ல விஷயம். ஒரு எழுத்தாளராகவும், கவிஞராகவும் எனக்கு இது சந்தோஷம் தரக் கூடிய செய்தி.” என்றார்.

இப்படி தமிழ்நாடு முழுவதும் அந்தத்தந்த மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர்களுக்கு சிலை நிறுவப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற வேண்டும்.

logo
Andhimazhai
www.andhimazhai.com