அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பருந்துப் பார்வை !

Appadurai Muthulingam
அ.முத்துலிங்கம்
Published on



எழுதும்போது சொந்த அனுபவங்களை எழுதுவது, அத்துடன் கற்பனை கலந்து எழுதுவது, கற்பனையாகவே எழுதுவது என்று பல வகை உண்டு.எழுத்தாளர்களுக்குத் தன் அனுபவங்களை மட்டும் வைத்து எழுதும்போது சில போதாமைகள் வருவதுண்டு. ஏனென்றால் எவ்வளவுதான் முயன்று எழுதினாலும் எழுதத்தேவையான அனுபவங்கள் சொற்பமாகவே இருக்கும் .ஆனால் எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தைப் பொறுத்தவரை அவருக்கு இந்த போதாமை வருவதற்கு வாய்ப்பில்லை .அவரது விரிந்த  அனுபவங்களை எழுதுவதற்கு அவருக்கே காலம் போதாது என்கிற வகையில் உலகெங்கிலும் பறந்து ,பரந்துபட்ட அனுபவத்தைப் பெற்றவர்.வட்டாரம், பிரதேச ,மொழி, நாடு எல்லை கடந்த உலக மனிதராக உலக எழுத்தாளராக  தயக்கமின்றி அவரைக் கூறமுடியும்.அவருக்கு  அப்படிப்பட்டதான ஏராள அனுபவங்கள்  வாய்த்திருக்கின்றன.பல எழுத்தாளர்கள்  கற்பனை செய்து மட்டுமே எழுத வேண்டிய காட்சிகளையெல்லாம் கூட, அவர் நேரில் கண்டவர். கற்பனையிலும் காணாத புறவயக்காட்சிகளையும்  கண்டிருப்பவர் ; அகவய உணர்வுகளையும் கொண்டிருப்பவர்.

ஒவ்வொரு  எழுத்தாளருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கும். அ.முத்துலிங்கம் கதைகளைப் படித்துப் பார்க்கும் போது அது ஒரு தனி உலகமாக இருக்கிறது. நம் பெரும்பாலான கதைகள் உள்ளூர் உணர்வுகளையும் உள்ளூர் கலாச்சாரத்தையும் பிரதிபலிப்பவை. ஏனென்றால் அக் கதாசிரியரே அந்தக் கதாபாத்திர அனுபவங்களைப் பெற்றிருப்பார்; அல்லது கேள்விப்பட்டு இருப்பார். ஆனால் அ.முத்துலிங்கத்தை பொறுத்தவரை அவர் உலக அனுபவம் பெற்றவர்.உலக அனுபவம் என்பது நம்மூரில் சொல்லப்படும் தன்னைச் சுற்றியுள்ள ஊர்களின் அனுபவம் போல் அல்ல. இந்த பூமிப்பந்தின் பல்வேறு நாடுகளில் அவர் கண்டு,கேட்டு ,உண்டு, உற்ற நேரடி அனுபவங்கள்..எனவே தான் உண்மையான உலக அனுபவம் கொண்டவர் என்று அவரைக் கூறமுடியும்.
அவரது கதை நிகழும் பின்புலம் பல்வேறு நாடுகளாக பரந்து கொண்டிருக்கிறது .நாடு என்பது நில வரைபடத்தில் இருப்பதல்ல .நாடு என்பது அங்குள்ள மக்கள், கலாச்சாரம், பழக்கவழக்கம், மொழி, உணர்வுகள் ,பண்பாடு என அனைத்தையும் குறிப்பது.


அ.முத்துலிங்கம்  கதைகளில் வரும் பின்புலமும் கதை மாந்தர்களும் அவர்களது  குண இயல்புகளும் பழக்கங்களும் நம்பிக்கைகளும் நமக்கு புதிதாக வேறொரு நிலக்காட்சியில் புதிய தளத்தில் நம்மைக் கொண்டு போய் நிறுத்துகின்றன .அதுஒரு புதிய அனுபவமாக நமக்கு மகிழ்ச்சி தருகின்றன.
வேறு எந்த எழுத்தாளருக்கும் கிடைக்காத வேறுபாடான அனுபவங்கள் கொண்டவர் என்பதால் அவர் கதைகளை படிக்கும் போது கிடைக்கும் வாசிப்பு அனுபவம் அலாதியானது.

பள்ளிப் பருவத்திலேயே கவிதை ,கதை என்று முயன்றவர் என்றாலும்  முதல் சிறுகதைத் தொகுப்பை 1964-ல் வெளியிட்டுவிட்டு சுமார் 25 ஆண்டுகள் எழுதாமல் இருந்திருக்கிறார் என்பது எவ்வளவு பெரிய விரதம் போன்றது;  உபவாசம் போன்றது. ஆனால் அப்போது அவர் என்ன செய்து கொண்டிருந்தார் ?பல்வேறு நாடுகளில் பல்வேறு நிறுவனங்களில் ,அரசு அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளைவகித்து வந்தவர், வேறு வகையான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார். அப்போதெல்லாம் இவரும் வாசகனாக நின்று படிப்பறிவை செழுமைப்படுத்தியிருக்கிறார். தனக்குள் இருந்த எழுத்தாளரை 25 ஆண்டுகாலம் அமிழ்த்தி வைத்திருக்கிறார் .இது எவ்வளவு பெரிய உள் அழுத்தத்தை தந்திருக்கும்.பிறகு எழுத ஆரம்பித்தவர், இன்றும் எழுதிக் கொண்டிருக்கிறார்.

அவரது வாசிப்பின் ஆழம் ஆங்காங்கே வெளிப்பட்டு விடுகிறது .புராண இதிகாசங்களில் அவருக்கு ஆர்வமும் ஈடுபாடும் உண்டு .அது சம்பந்தமான தகவல்கள் அவரிடம் ஏராளம் இருக்கின்றன. எனவே தான் வெளிநாட்டில் ஆப்பிரிக்காவில் வாழும் மாந்தர்கள் பற்றிய கதையில் கூட நம்முடைய புராண இதிகாச மனிதர்களின் குண இயல்புகளை ஒப்பிட்டு அவரால் எழுத முடிகிறது.புராணக் குறிப்புகளை தூவ முடிகிறது.

முத்துலிங்கம் கதைகளில் வரும் பாத்திரங்கள் வேறுவேறான பிரதேசங்களைச் சேர்ந்தவை; வேறுவேறு நிலக்காட்சிகளில் இயங்குபவை ; வேறுவேறான கலாச்சாரப் பின்புலம் கொண்டவை; விதவித மொழி பேசுபவை.அவரது பாத்திரங்கள்  ஆர்வம், ஏக்கம், தாபம், காதல், குதூகலம்,  நிராசை என்று பிரதிபலிப்பவை. கதை மாந்தர்கள் இலட்சியவாதம் பேசாத, புரட்சிக்கனல் கக்காத,சித்தாந்தம் சுமக்காத எளிய மனிதர்கள்.


முத்துலிங்கம் பற்களைக் காட்டிச் சிரித்தமாதிரி கூட படங்களைப் பார்க்க முடிவதில்லை. ஆனால் அவரது நகைச்சுவை உணர்வு யாரும் எதிர்பாராதது. கதையின் எந்த இடத்திலும் காட்சிகளை நகைச்சுவையாகச் சொல்லும் கலை அவருக்கு வசப்பட்டு இருக்கிறது.

முத்துலிங்கம் எழுதும் கதை நடை சரளமான, வாசகனுக்கு எளிதில் செரிமானம் ஆகக்கூடிய  எளிய நடையாக இருக்கிறது. கண் இடுங்கிப் பார்க்கத் தேவை இல்லாத எளிய புறவயச் சித்திரிப்புகள் அவருடையவை  .அவர் இயல்பான கதை சொல்லியாக ஒவ்வொரு கதையின் மூலமும் மிளிர்கிறார். அவரது கூறு மொழியில்  மொழி மயக்கங்களோ மொழி முழக்கங்களோ இருக்காது. திருகல் நடையோ சிக்கல் நடையோ பூடக முடிச்சுகளோ காணமுடியாது. மூளையைப் பிறாண்டும் வாக்கிய அமைப்புகளும்  இராது. அவரிடம் எல்லாவற்றையும் விஞ்சி நிற்பது இயல்பான சரளமான மொழிநடை என்பது பரவலாக ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை . அதே நடையில்தான் ஒவ்வொரு கதையையும் கூறுகிறார். இடையில் சில பரீட்சார்த்த முயற்சிகளையும் அவர் செய்திருக்கிறார். ஆனால் அவை இயல்பான சரளமான நடைக்கு முன் பலவீனப்பட்டு நிற்கின்றன.

ஒரு கதையை எடுத்துக் கொண்ட போது அதன் போக்கை எழுதும் பேனாவே தீர்மானித்துக் கொள்ளட்டும் என்கிற சுதந்திரமான நடையில் அவர் எழுதுகிறார் .ஒரு கதையில் மூன்று கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துகிறார் .எதன் பின்னே பயணம் செய்வது ?என்று ஒரு கேள்வியை வைக்கிறார்.எந்தப் பக்கம் போனாலும் கடலை நோக்கிச் செல்லும் ஒரு முச்சந்தி சாலையில் எதில் ஆரம்பித்தாலும் கடலுக்குப் போய் முடிவது போல் படைப்பாளியாகக் கதை செல்லும் பாதை அவருக்குத் தெரியும்தானே? .எனவே ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தை முன் நகர்த்திச் செல்கிறார்.

பொதுவாகக்  கதைசொல்லி,கூறுமொழி பாத்திரம் பேசுவது போலவோ எழுத்தாளர் பேசுவது போலவோ இருக்கும். ஆனால் இதில் இவர் ஒரு புதிய முயற்சியை முயன்று பார்த்திருக்கிறார் - கதை கூறல் தன்மையில்  அல்லது படர்க்கையில்தான் இருக்கும் .ஆனால் ’ஒருமணிநேரம் முன்பு ’ என்று ‘முன்னிலை’யில் ஒரு கதை எழுதி இருக்கிறார். அது புதிய பாணி என்றாலும் அதில் மனம் ஒன்றச் சற்றுத் தாமதம் ஆகிறது .குறிப்பிட்ட கதாபாத்திரத்தின் மனசாட்சி பேசுவதுபோல் நாம் மனதில் பதித்து அதைப் படிக்க வேண்டி இருக்கிறது.

இவரது எந்தக் கதையை எடுத்தாலும் புறவய சித்தரிப்புகள்  பிரமாதமாக இருக்கின்றன.அதுவே பாதிக் கதையை உணரவைத்து விடுகிறது. தூரதேசமோ தூந்திரப் பிரதேசமோ பாலைவனமோ பச்சைப் புல்வெளியோ  பாஸ்போர்ட் விசா இல்லாமல் அந்தந்த  தேசத்தில் இறக்கிவிடுகிறார். வெளிநாட்டில் இருப்பது போன்ற உணர்வைக் கடத்தி  விடுகிறார்.
ஓர் எழுத்தாளர் கதை கூறும்போது வாசகனுக்கும் அவருக்குமான தொடர்பைப்பற்றிப் பார்க்கும்போது முன்னே சென்று நம்மை பின்தொடர வைப்பது, தோளில் கை போட்டு அழைத்துச் செல்வது, விரல் பிடித்து அழைத்துச் செல்வது ,நம்மை தோளில் தூக்கி வைத்து பயணம் செய்வது, ஓடவிட்டு துரத்த வைப்பது என்று பலவிதங்களுண்டு. இருந்தாலும் இவருடைய தொடர்பு முறை வேறானது.  ஹெலிகாப்டரில் நம்மை ஏற்றிவைத்து பரந்த உலகத்தைக் காண்பிக்கிறார். இவர் காட்டும் நிலக்காட்சிவெளி விசாலமானது .சில நேரம் ராட்சச கழுகு நம்மை கால்களால் தூக்கிக் கொண்டு கண்டம் விட்டு கண்டம் தாவுவதுபோல் அவ்வளவு விரிந்த வியந்த நிலையில் இவரது கதைகளில் காட்சிகள் உண்டு.

ஒரு கதையை சித்திரம் போல் வரைபவர் அதே நேரம் இணையாக வாசகனையும் வரைய வைக்கிறார். இவர் கதை நிகழ்விடம் நிலக்காட்சிகளை முதலில் சொல்லிவிடுவார். அதாவது நாம் வரையப்போகும் சித்திரத்திற்கான கேன்வாஸ் துணியை சரி செய்து வாகாக அமைத்துக்கொள்வது போல நமக்கு ஒரு முன் தயாரிப்பாக நிகழ்விடத்தை முன்பே சொல்லிவிடுவார்.

அதன்படி பனிப்பிரதேசங்களில், வழுவழுப்புப் பாறைகளில், சுட்டெரிக்கும் வெயிலில் பாலைவனங்களில், வழுக்குப் பாறைகளில் ,செங்கடலில், மணல்வெளிகளில், பாழடைந்த இடங்களில், புழுதிப்புயல்களில், சதுப்புநிலங்களில், நரம்பை குளிர்விக்கும் குளிர்பனிகளில், பிரம்மாண்டமான பல்துறை அங்காடிகளில், விமான நிலையங்களில் ,ஏன் இலங்கையில் மணற்பாங்கில், போர் மேகம் சூழ்ந்த பகுதிகளில்,பரபரப்பான ஐரோப்பிய  தெருக்களில், பதற்றம் தொற்றும் தலிபான்களின் வீதிகளில் எல்லாம் நம்மை அழைத்துச் செல்கிறார் ; உலவ விடுகிறார்.படிமங்களை வெளிப்படுத்தி மனப் படத்தை நிலப்படமாக வரைய வைக்கிறார்.

கதை கூறும் போது மிகையுணர்ச்சி கொள்ளாமல் , பச்சாதாபம் காட்டாமல், புரட்சிக் கொடி தூக்காமல் ,சித்தாந்தம் பேசாமல் ,தத்துவம் பேசாமல், கேள்விகள் எழுப்பாமல் சமநிலையுடன் சொல்கிறார்.
மாறுபட்ட பண்பாட்டையும் பழக்க வழக்கங்களையும் பற்றி கூறும்போது அவரிடம் எந்த ஏளனமும் இல்லை . விமர்சனமும் இல்லை. கேள்விகள் இல்லை. அதே சமநிலையுடன்தான் பதிவு செய்கிறார்.மொழி உணர்வு, தேச உணர்வு, இன உணர்வு கடந்து நமக்கு உலக சிந்தனையை உலக ஒருமையை எண்ண வைக்கிறார்.ஒரு படைப்பாளிக்கு தேவையானது இந்த சார்பு வட்டத்துக்குள் தேங்காமலும் , குறுகிய கூடாரத்துக்குள் தங்காமலும் இருப்பதுதானே ?அப்படி ஒரு சுதந்திரப் பறவையாகத்தான் முத்துலிங்கம் இருக்கிறார்.பேசும் மொழி கடந்து எழுத்துமொழி என்ற புள்ளியில் உலக படைப்பாளிகளுடன் அவர் இணைந்திருக்கிறார்.

இவரது பால்யகால நினைவுகளாகவும் இலங்கை மண் சார்ந்த பதிவுகளாகவும் பெரும்பான்மையாக இடம்பெற்ற நூல் 'உண்மை கலந்த நாட்குறிப்புகள்'.சுஜாதாவின் 'ஸ்ரீரங்கத்து தேவதைகள்' போல் இவருக்கு 'உண்மை கலந்த நாட்குறிப்புகள்' எனலாம்.இப்படிக் கூட ஒப்பிடக் கூடாது ஏனென்றால் இவர் முன்பே எழுதி இருப்பார்.
கவிஞர் கண்ணதாசனைப் போல் புராண இதிகாசம் சார்ந்த அபரிமிதமான அறிவைப் பெற்றவர் இவர். கண்ணதாசன் தனது பாடல்களில் ’நீ என்ன கண்ணனா நான் என்ன கம்சனா?’, ‘ ராம நாடகத்தில் மூன்று தம்பிகளின் உள்ளம் கண்டேனே..நல்ல பாரதத்தின் நான்கு தம்பிகளை நானும் கண்டேனே...’, ,கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா ?காளிதாசன் சகுந்தலை உன் சேய் அல்லவா’ என்றெல்லாம் கதைக்குப் பொருத்தமாகவும் சூழலுக்குப் பொருத்தமாகவும் காவியச் சுவைகளை தெளிப்பது போல, இவரும்  புராணக் குறிப்புகளையும் காவியங்கள் பற்றிய செய்திகளையும் ஆங்காங்கே தெளித்து விடுகிறார் பொருத்தமான இடங்களில்.

கவிஞர் வைரமுத்து தன் பாடல்களில்  'இன்னிசை பாடிவரும் காற்றுக்கு உருவமில்லை ; காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை' என்ற வரிகள் மூலம் வெற்றிடத்தில் ஒலி பரவாது ஒலிபரவுதற்கு ஊடகம் தேவை என்ற கருத்தை சொன்னதுபோல்,'தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து 'என்ற வரி மூலம் பாஸ்கல் விதியைச் சொன்னது போல், இவரும் தன்கதைகளில் அறிவியல் கருத்துகளை ஆங்காங்கே உதிர்த்து விடுகிறார்.

 முத்துலிங்கம் மூத்த எழுத்தாளராக இருந்தாலும் பண்டிதர் நடையில் எழுதுபவர் அல்ல. இன்றைய நவீன எழுத்துலகத்துக்குச் சொந்தக்காரர்தான்.இவரது சிறுகதைகள், சிறுகதையின் சூத்திரமாகச் சொல்லப்படும் முதல் வாக்கியம் நல்ல தொடக்கம் ,பரபர தொடர்ச்சி, திடுக் முடிவு என்கிற இலக்கண வகைமைக்குள் அடைபடாதவை. பலவற்றின் முடிவுகளை வாசகர்களே எழுதிக்கொள்ள நேரும்.அந்த அளவுக்கு வாசகனையும் ஒரு இணை படைப்பாளியாக நடத்துபவை.இவர் தீவிரமான வாசிப்பாளராக இருக்கிறார் நவீன படைப்பு உலகத்தில் உலகத்தர எழுத்தாளர்களை வாசித்தவர். நோபல் பரிசு பெற்ற, பிரபல வெளிநாட்டு எழுத்தாளர்கள் பலரையும் நேர்காணல் செய்தவர்.இந்த நவீன யுகத்தில் போக்கை அற்றைப் படுத்திக்கொண்டே அவதானித்து வருபவர்.

நாம் நமது பண்பாடு கலாச்சாரம் என்று நாம் புரிந்து ரசித்துக் கொண்டிருக்கும் போது, இவர் வெவ்வேறு வகையான பண்பாடுகளையும் கலாச்சாரங்களையும் தமிழ் வாசகனுக்கு அறிமுகப்படுத்துகிறார்.ஆப்பிரிக்கர்களை நாம் பண்படாத கலாச்சாரம் கொண்டவர்கள் என்று  நினைக்கும் போது அவர்களின் பண்பட்ட கலாச்சாரங்களை இவர் கண்முன் நிறுத்துகிறார். அவர்கள் விருந்தினரை வரவேற்கும் விதத்தில் உபசரிப்பதில் நம்மைவிட பல மடங்கு உயர்வானவர்கள் என்று தோன்ற வைக்கிறார் .அதேநேரம் இறந்தவர்களை எரிப்பதை அவர்கள் அவ்வளவு பாவமாகக் கருதுகிறார்கள். இந்தியர்கள் எரிக்கப்படும் போது அவர்கள் பீதியுடன் பேசிக் கொள்கிறார்கள் என்பதையும் சொல்கிறார். அவர்கள் சடலத்தையும் உயிருள்ளதாகப் பார்க்கிறார்கள்; மதிக்கிறார்கள் என்பதை அறியமுடிகிறது .இவர் ஒருமுறை காரில் போகும்போது இரண்டு பேர் தாயும் மகளும் வைர படிவுகளை அரித்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப்  புகைப்படம் எடுக்கலாம் என்று கேட்கிறபோது வெட்கப்பட்டு ”இப்படியேவா? ”என்று கூச்சப்பட்டவர்கள், அந்த டீ-சர்ட்டை கழட்டி விட்டு இயற்கையாக போஸ் கொடுத்திருக்கிறார்கள். இந்த பண்பாடு வியப்பூட்டுகிறது.

விருந்துக்கு செல்லும்போதும் வரும்போதும் அங்குள்ள பழக்கவழக்கங்கள் சில புதியவை; சில வியப்பூட்டும்; சிலபுதிராகவும் இருக்கும்.சில அதிர்ச்சியூட்டும்.
உலகம் முழுக்க இருக்கும் பிரச்சினைகளாக  வறுமை, ஆணாதிக்கம் ,பெண்களை அடக்கி வைத்தல், பெண்களை ஒடுக்கி வைத்தல், புலம்பெயர் மக்களின் அலைக்கழிப்புகள்,கலாச்சாரப் புரிதலில் எதிர் கொள்ளும் இடர்கள்,முதலாளி வர்க்கத்தின் சுரண்டல்கள், நிற பேதங்கள்,குடும்ப அழுத்தத்தில் பணத்தை துரத்தி ஓடுதல், திருடுதல் ,உள்நாட்டுப் பிரச்சினையால் தப்பி ஓட எண்ணி வெளிநாட்டில் மாட்டிக் கொள்ளுதல் ,தண்டனை அனுபவித்தல், சித்திரவதையை அனுபவித்தல் என்று  மக்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளையும் மன நெருக்கடிகளையும் தன் கதைகளின் மூலம் நமக்குப் புரியவைக்கிறார்.

Appadurai Muthulingam
அ.முத்துலிங்கம்




கதை கூறுமுறை!

ஜெயமோகன் கதைகளைப் படிக்கும்போது குமரி மொழியும் மலையாளம் கலந்த தமிழும் ஆரம்பத்தில் நம்மை இடைஞ்சல் செய்யும் . கி.ரா.வைப்படிக்கும் போது கரிசல்மொழியை சிறு தடையாகச் சிலர் உணர்வர். அதையும் கடந்து உள்ளே செல்ல வேண்டும். வாசிப்பு அனுபவத்தில் திளைக்க வேண்டும்.அதைப்போல முத்துலிங்கத்தின் இலங்கை பின்புலக் கதைகளில்  அங்குள்ள சில புழங்கு சொற்கள்  எதிர்ப்படும் .சிலர் கூறுவது போல் யாழ்ப்பாண வழக்கு ஒரு தடையாகத் தோன்றாது.அப்படி எனக்குத் தோன்றியதில்லை. அவற்றின் பொருள் புரிந்து கொண்டு மேலே செல்லப் பழகிக் கொள்வோம்.அவர் எழுதி இருக்கும் தும்பு மிட்டாய், இலையான், கோடா. சூப்புத்தடி, கொய்யகம், சொண்டு, அப்பியாசம் , கெதி, றாத்தல், வண்டில் காவி, ஒழுங்கை, குற்றி குசினி , விறாந்தை, கிட்டங்கி, கதிரை, வெளிக்கிடல், வட்டிலப்பம், உலங்குவானூர்தி, சொக்கான், பொக்கற், கொடுப்பு, மணித்தியாலம், விசர்,சுவாத்தியம் போன்ற ஈழத்து மண்ணின்  சொற்களைப் பயன்படுத்தும் இடங்களை வைத்துப் புரிந்துகொள்ள முடிகிறது. அதுமட்டுமல்ல  அவர் வழக்குச் சொற்கள் அல்லாமல் நுண்ணலை அடுப்பு, நிறுத்தி, உலர்த்தி,போன்ற தூய தமிழ் சொற்களையும் பயன்படுத்துகிறார்.


கதை  நிகழ்விடங்கள்!

சில எழுத்தாளர்கள் கதை எங்கே நிகழ்வது என்பதை பளிச் என்று சொல்லிவிட மாட்டார்கள் இழுத்துக் கொண்டு போய் போக்கு கட்டுவார்கள் .ஆனால் இவர்,கதையின் நிகழ்வு இடத்தை முதல் வரிகளை அல்லது முதல் பத்தியிலோ அல்லது ஆரம்ப வரிகளில்  சொல்லிவிடுவார்.

இலங்கை ’மாப்’பினை விரித்து வைத்து அதன் தலையில் யாழ்ப்பாணத்தில் தேடிப்பிடித்து சிகப்பு பென்சிலால் பெரியதொரு புள்ளிப்போட்டு இதுதான் கொக்குவில் என்று பீற்றிக் கொள்ளும் அளவிற்கு பிரபலமானது அல்ல எங்கள் ஊர் என்று தொடங்குகிறது ’கோடைமழை’ கதை.அதேநேரம் அந்த மேப்பை எடுத்துப் பிரிக்காமல் பென்சிலால் கோடு இழுக்காமல் இருக்கும் என்று சொல்லாமல் விடக்கூடிய அளவிற்கு பிரபலம் அற்றது என்றும் கூறிவிட முடியாது என்கிறார் .


பதினைந்து வருடங்களுக்கு பிறகு கொழும்புக்கு வருகிறேன் என்று ’மாற்றமா தடுமாற்றமா?’ கதை ஆரம்பத்திலேயே இடத்தைச்சொல்லிவிடுகிறது.

’பக்குவம்’ கதையோ கந்தர்மடம் செல்லம்மா அஞ்சு,, கொக்குவில் வேலாயுதபிள்ளை 10 என்று தொடங்குகிறது.

இன்னொரு கதை ‘குங்கிலியக்கலய நாயனார்’ என்ற பழமையான பெயர் கொண்டிருந்தாலும்
 நடப்பது ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெராத் நகரம் என்று தொடங்குகிறது.

’பெருச்சாளி’ கதையோ ’அதற்குப் பெயர் கட்டிங் கிராஸ் மேற்கு ஆப்பிரிக்காவில் பெருகிக் கிடக்கும் ஒருவகை பெருச்சாளி இனம் என்று தொடங்குகிறது.


’குதம்பேயின் தந்தம் ’கதை  மேற்கு ஆப்பிரிக்காவின் அடர்ந்த காட்டுக்குள் எங்களுக்காக ஒதுக்கப்பட்ட வீட்டிற்கு சேதமின்றி வந்து சேர்ந்து விட்டோம் என்று இடத்தை சொல்லிவிடுகிறது.

எரிக்ஸனுடன்  ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஆப்ரிக்காவில் தங்கியிருப்பதாக ’திகடச்சக்கரம் ’கதை சில வரிகளுக்கும் பின் தெரியவருகிறது.

பாதையை நிறைத்து பனி மூடியிருந்தது கனடாவின் அன்றைய வெப்ப நிலை மைனஸ் 20 டிகிரி என்று தொடங்குகிறது ’ஒரு சாதம்’.

’கிரகணம்’ கதையோ நான் மணமுடித்து லண்டனுக்கு குடிவந்து ஐந்து வருடங்கள் கடந்து விட்டன என்று ஆரம்பிக்கிறது.

 நான் ஆப்பிரிக்காவில் ஐநாவுக்காக வேலை செய்த போது நடந்த கதை இது என்று ’விழுக்காடு’ கதை தொடங்குகிறது .


யாழ்ப்பாணத்தில் ஒரு கிராமத்தில் மூன்று சினேகிதிகள் இருந்தார்கள் என்று ’தளுக்கு ’ கதை ஆரம்பிக்கும்.அலமேலு என்று யாழ்ப்பாணத்தில்  ஒருவரும் பெயர் வைப்பதில்லை என்று தொடங்குகிறது ’வடக்கு வீதி’ இலங்கைப் பிண்ணனியிலான கதை. அதுமட்டுமல்ல அக்கா, செல்லரம்மான் ,முடிச்சு ,சிலம்பு செல்லப்பா, எலுமிச்சை, வசியம் ,உடும்பு ,மனுதர்மம் ,மகாராஜாவின் ரயில் வண்டி, அம்மாவின் பாவாடை ,ஐந்தாவது கதிரை, தில்லை அம்பலப் பிள்ளையார் கோயில் போன்ற கதைகளின் நிகழ்விடங்களும் இலங்கைதான்.

 
கணேசானந்தனுக்கு தன்னுடைய பெயரைப் பிடித்திருந்தது ஆனால் அது ஆப்பிரிக்காவுக்கு வரும் வரைக்கும் தான் இன்று ’முழு விலக்கு’ கதை ஆரம்பிக்கிறது.


 அமெரிக்காவின் நேஷனல் சயின்ஸ் பவுண்டேஷன் ஆதரவில் நாங்கள் இருவரும் மேற்கு ஆப்பிரிக்கா சியரா லியோன் கொண்டிருந்தோம் என்று தொடங்குகிறது ’ஞானம்’ கதை என்றால்,’வம்சவிருத்தி’ கதையோ பாகிஸ்தானின் வடமலைப் பிராந்தியத்தில் அவர்கள் வெகு நேரமாக பயணம் செய்தார்கள் என்று தொடங்குகிறது.

 சூடானில் நடப்பதாக ’பருத்திப் பூ ’ கதையின் ஆரம்ப வரிகள் சொல்கின்றன.

’பூமாதேவி’ கதை நான் அமெரிக்காவுக்கு வந்து மிக வேகமாக முன்னேறியது இந்த தேநீர் போடும் துறையில்தான் என்கிற ஆரம்பத்திலேயே அமெரிக்கா  தெரிந்துவிடுகிறது.

சோமாலியா பெண்கள் அப்படித்தான் என்று ’ஒட்டகம்’ தொடங்குகிறது.

’விருந்தாளி’ கதையோ ஆப்பிரிக்காவில் இருந்தபோது எனக்கு ஒரு வினோதமான சம்பவம் நேர்ந்தது என்று ஆரம்பிக்கிறது .

ஆப்பிரிக்கா பாதை கண்டுபிடிக்கப்பட்ட சில மாதங்களில் இது நடந்தது என்று ’மாற்று’ கதை தொடங்குகிறது.

’கடன்’ கதையோ அமெரிக்காவிற்கு முதல் முறை வருபவர்கள் பல விதமான பொற்பாதங்களை சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்று சில வரிகளுக்கு பின் இடம் புரிகிறது.

 பிரான்ஸ் தேசத்தில் ஒரு ஒதுக்குப்புறமான கிராமத்தில் இந்த பட்டறையை ஒழுங்கு செய்திருந்தார்கள் என்று ’பூர்வீகம் ’தொடங்குகிறது

போஸ்டன் நகரத்திற்கு செல்லும் திட்டத்தை சொல்கிற  ’கல்லறை’ கதை ,நிகழ்விடம்அமெரிக்கா தான் என்கிறது.

நைரோபியில் ’ராகுகாலம்’ தொடங்குகிறது.

’கொழுத்தாடு பிடிப்பேன் ’கதை டொரண்டோ ஏர்போர்ட்டில் வந்து இறங்கிய சண்முகலிங்கம் ராசரத்தினம் வாக்குமூலத்துடன் தொடங்குகிறது.

’23 சதம் ’கதை கனடிய டொலர் 23 சதம் இதன் மதிப்பு இலங்கை ரூபாயில் 15 இந்திய ரூபாயில் எட்டு இத்தாலியில் 353 என்று ஆரம்பிக்கிறது.

’மொசு மொசுவென்று சடை வைத்த வெள்ளைமுடி ஆடுகள்’ கதை ஆப்கானிஸ்தானில் தொடங்குகிறது.

இப்படி ’அடைப்புகள்’ அமெரிக்காவில்.
 ’ஆப்பிரிக்காவில் அரை நாள்’ கதை எங்கே என்று சொல்ல வேண்டுமா என்ன?

’காபூல் திராட்சை’ கதை காஷ்மீரிலா நடக்கும்? ஆப்கானிஸ்தான்.

’நாற்பது வருட தாபம்’ கதை கனடா வீதிகளில் தொடங்குகிறது.
இப்படிச்சொல்லிக்கொண்டே போகலாம்.

கதைகள் பலரகம்!

'ஊர்வலம் 'கதை மூலம் சாந்தினி தன் மச்சான் மீது உள்ள ரகசிய காதலின் வலியை பெருமூச்சை அழகாக மனதில் ஏற்றி இருப்பார்.அவளது காதல் கைகூடாது, வேறு ஒருவருடன் திருமணம் நடைபெறுகிறது. அவளில் உறுத்தும் உள்ளுணர்வுகள் ஊர்வலமாகத் தொடர்கின்றன.   இப்படி எத்தனையோ பெண்கள் தங்கள் ஆசைகளையும் கனவுகளையும் ஏக்கங்களையும் தன்னுள் புதைத்து நிராசைகளை ஆவியாக்கி புழுங்கிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பது தெரியும்.

பாகிஸ்தானில் நடக்கும் 'கிரகணம்' கதை கொத்தடிமையாக இருந்த பஸ்மினாவின் வறுமை, பசி சூழ்ந்த  அவளது துயரத்தைப் பேசுகிறது.ஒரு அடிமையாக இருந்தவள் எவ்வளவு அறிவாளியாக இருக்கிறாள்?விரைவில் படிப்பதற்கும் சிந்திப்பதற்கும் கற்றுக் கொள்கிறாள். புராணங்கள் குறித்து அவள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் இருக்கிறது. .அவள் கேட்கும் ஒரு கேள்வி பாற்கடலைக் கடைந்தபோது சிந்திய விஷத்தை சிவபெருமான் உண்டதாக கதை சொல்கிறது . அதனால்  நீலகண்டன் என்று பெயர் பெற்றார் சிவபெருமான் .அப்படி உண்ணும் போது ஒரு துளி விஷம் தவறிப் பூமியில் விழுந்தது .அதன்பிறகு பாம்புகளுக்கு விஷம் வந்தது என்றால் பாற்கடலை கடைந்த போது ஆரம்பத்தில் வாசுகி வேதனை தாங்காமல் விஷத்தைக் கக்கியது என்று வருகிறதே அது எப்படி ? என்கிறாள்.
பைபிளில் கடவுள் முதலில் ஒளியைப் படைத்தார் ,நாலாம் நாள்தான் சூரியனையும் சந்திரனையும் படைத்தார் என்று வருகிறது .சூரியன் சந்திரன் இல்லாமல் எப்படி ஒளிவந்திருக்கும்? என்று கேட்கிறாள்.

'அது நான்தான்' கதையில் கனடாவிலுள்ள வசந்தகுமாரன் ஒரு வார விடுப்பில் திருமணமாகி  மனைவியைப் பிரிந்து அங்கு வந்தவன்.பிறகு 13 மாதம் கழித்து அவன் மனைவியைப் பார்க்கும்போது தான் திருமணம் செய்த வினோதினி ரத்தினராசா இவள்தானா என்கிற சந்தேகம் வந்துவிடுகிறது. அவனது உளச் சித்தரிப்புகள் நம்பவும்முடியாமல் நம்பாமலும் இருக்க முடியாமல் வாசகன் எதிர்பாராத கோணமாக உள்ளது.

’விழுக்காடு’ கதையில் ஆப்பிரிக்காவில் அழகாக இருப்பதற்காக அமீனாத்து என்கிற பெண்ணுக்கு வேலை கிடைக்காத பரிதாபத்தை சொல்கிறது.

  ’ஃபீஃனிக்ஸ் பறவை’ கதை குடும்பத்தில் நிலவும் போலிப் பாசத்தைப் பற்றி பேசுகிறது. மருமகள் ஸ்வென்கா தான் அடுத்த குழந்தை பெற்றுக்கொள்வதற்காக தன் மாமியாரை கருணைக்கொலை செய்யத்தூண்டும்  காட்சி வருகிறது.

கனடாவில் நோ பார்க்கிங் பிரச்சினையில்  சிக்கிக்கொள்ளும் பரமேஸ்வரன் ஆபத்துக்கு உதவப் போய் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் கதை 'இங்கே நிறுத்தக்கூடாது'.

ஒரு மொழிபெயர்ப்பாளர் சரியாக இருந்தால் மூல கதையின் இன்பத்தை அனுபவிக்க முடியும் அதே போல நிஜமான வழக்குகளின் தன்மையும் மொழிபெயர்ப்பாளர் மாற்றிவிட முடியும் ; உரிய பயனை அளிக்க முடியும் என்பதைச் சொல்கிறது ’முதல் சம்பளம்’.

பாதிக்கிணறு கதையில் பொதுக்கிணறு பாவிக்கும் குடும்பங்களில் நிகழும் துயரத்தைக் கூறுகிறார்.சொந்தக் கிணறு கௌரவத்தின் அடையாளமாக இருக்கிறது. முழுமையான சொந்தக்கிணறு வைக்கும் கனவில் அம்மா ரகசியமாகச் சேர்த்துவைக்கும் சிறுவாட்டுப் பணத்தைப் பற்றிய நினைவுகள் ,ஏழ்மையும் துயரம் சொல்பவை.

' மனுதர்மம்' ,' குந்தியின் தந்திரம்' இரண்டும் சரித்திரக்கதைகள். முதல் கதை இருபது வருடங்களாக சுண்ணாம்பு பயன்படுத்தாது தாம்பூலம் தரிக்கும் இலங்கை ராணியைப் பற்றிப் பேசுகிறது.

'குந்தியின் தந்திரம் ' மகாபாரதக் காவியக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டு நகர்கிறது.தன் மேலுள்ள அவச் சொல்லை நீக்குவதற்கு குந்தி செய்யும் தந்திரம் என்ன என்பதுதான் கதையின் விரிப்பு.

 ’முழுவிலக்கு ' கதையில் வாழ்க்கையில்  இளமையைத் தொலைத்து விட்டு மாதவிலக்கு நின்ற பிறகு,குழந்தைக்கு ஏங்கும் பெண் சங்கீதாவின் புழுக்கம் சொல்லப்படுகிறது.

இலங்கைப் பின்னணியில் வரும் 'ஜகதலப்பிரதாபன்' திரையரங்கு ஒலிபெருக்கி விளம்பர மாட்டுவண்டி ,விளம்பர நோட்டீஸ்கள்  என்று செல்லும் இந்த கதையின் காலம் தியாகராஜ பாகவதர் காலம். படம் பார்க்க ஆட்டுக்குட்டி எல்லாம்
விற்க வேண்டி வருகிறது. தங்கை பாலின்றி தவிக்கிறாள். காய்ச்சல் ஆகிறது .அம்மா மடிப்பிச்சை எடுக்கிறாள்.

ஐந்து பெண்பிள்ளைகளைப் பெற்றாள் என்று ’வம்சவிருத்தி’ கதையில் அஸ்காரி தன் முதல் மனைவி நூர்ஜகானை வெறுக்கிறார்.ஆண்பிள்ளை வேண்டி இரண்டாவது மனைவியாக மெகருன்நிஷாவை மணக்கிறார்.அவளுக்கு முதலில் பெண் குழந்தை பிறக்கிறது.அடுத்ததாக அலி பிறக்கிறான்.

மனைவி சாகும் தருவாயில் மருத்துவமனைக்குச் செல்லும்போது கூட வாய்ப்பு இருக்கும்போது ஒரு உதவி செய்யும் மனிதரைப் பற்றிய கதை 'வெளிச்சம்'.
மொழி கடந்து நாடு கடந்து மனிதர்களின் உதவும் குணத்தைப் பேசும் கதை.

ஆப்பிரிக்காவில் சிறுத்தை காப்பகம் நடத்தி வரும் அமெரிக்கப் லோர்ரிமார்க்கர் ‘ரயில் வண்டி சிறுவன்’ கதையில் வந்து  வியப்பூட்டுகிறார்.

சோமாலியாவில் ஒரு சிசுவாக கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்படும் குழந்தை எக்கேலு  பெரிய அதிசய சிறுவனாகி அதிமேதாவியாக வளர்கிறான் .மொழிகளைப் புரிந்து கொள்கிறான்.அவன் ’எக்கேலுவின் கதை’யில் வருகிறான்.


கனடாவையும் அமெரிக்காவின் பிரிக்கும் ’49 அகலக்கோடு ’ஓரடி  முன்னே நகர்த்தி வைத்தால் கனடா இந்தப்பக்கம் பின்னே நகர்த்தி வைத்தால் அமெரிக்கா. புதியவர் ஒருவர் அப்படிப்பட்ட எல்லைக்கோட்டில் நின்று தாண்டி  ஒருவர் தாம் இருப்பது அமெரிக்காவா? கனடாவா? எனப் புரியாமல் சட்டதில் சிக்கிக்கொண்டு  புலம்பும் காட்சி விசித்திரம்தான்.


’கனகசுந்தரி ’கதையில் 15 வயது அழகிய சிறுமியை தாழ்வு மனப்பான்மை கொண்ட கறுப்பான ஆசிரியை விமலா வெறுப்பாள்; சிறுமியைஅவமதிப்பது அடிப்பது குட்டுவது வெறுப்புணர்வு காட்டுவது படிப்பவரை ஆத்திரமூட்டும்.


வண்ணத்துப்பூச்சி ஆர்வலர் கோணேஸ்வரன் இயற்கை உபாசகர் .அபூர்வ வண்ணத்துப்பூச்சியினங்களைப் பார்க்க அமெரிக்காவுக்குச் செல்ல விசாவுக்கு முயற்சி செய்கிறார் கடைசியில் அவர் விருப்பப்படியே பார்த்து விடுகிறார் .'விசா'  கதையின் முடிவு என்ன ஆகிறது?  அதிர்ச்சி தருகிறது.

’வசியம்’ கதையில் வரும் வாய்ச்சவடால் சிவசம்பு மந்திரம் தெரியுமென்று ஏமாற்றுகிறார்.

 

’பருத்திப்பூ’ கதையில் வரும் குணசிங்கம் சட்டத்தை சற்று விலகி மக்களுக்காக வாய்க்கால் போட்டுவிடுகிறார்.  சட்டமா தர்மமா என்றால் தர்மம்தான் என்கிறார்.


ஊழல் முறைகேடு என்பது உலகளாவியது. மேற்கு ஆப்பிரிக்காவில் நடக்கும் ஊழல் பற்றி 'பெருச்சாளி' கதை கூறும். பெருச்சாளியை ஒழிக்க முடியாதது போலவே ஊழலையும் ஒழிக்க முடியாது என்று சொல்கிறது கதை..இதை ஒரு குறியீடாகவும் கொள்ளலாம்.

தாய்நாட்டை பிரிந்து சென்று சில ஆண்டுகள் கழித்து மீண்டும் தாயகம் திரும்பும் ஒருவன் இங்கே உள்ள நாட்டின் மாற்றங்களைப் பார்த்து ’மாற்றமா? தடுமாற்றமா?’ என்று அதிரும் கதை மூலம் அறிவியல் முன்னேறினாலும் ஆட்கள் மாறவில்லை என்பதை காப்புரிமைக்காக வங்கியில் அலையவிடும்   சம்பவங்கள் காட்டுகின்றன.
’எதேச்சை’ கதையில் மட்டும் சற்றுத் தூக்கலாக சிருங்கார ரசத்தைக் கூறியிருக்கிறார். ஆப்கானிஸ்தானில் நடக்கும் கதை .

Appadurai Muthulingam
அ.முத்துலிங்கம்


சித்தரிப்புகள்: அகமும் புறமும் !


முத்துலிங்கம் கதைகளில் புறச்சித்தரிப்புகள் அதிகமாக இருக்கின்றன. அந்த அளவுக்கு அகச்சித்தரிப்புகள் இல்லை என்று தோன்றலாம்.கட்டுரைகளிலேயே புனைவுத்தன்மை வெளிப்பட எழுதுவபவர், ’முடிச்சு’ போன்ற மிகச் சில கதைகளில் கட்டுரைத்தன்மை எட்டுவதை உணரவைத்துள்ளார் என்பதையும் குறிக்க வேண்டும்.

அவர் இலங்கை பின்புலத்தில் எழுதியிருக்கும் கதைகளில் எல்லாம் அகச்சித்தரிப்புகள் உணரமுடியும்.அவற்றில் மன ஓட்டங்களை ஆழங்களை துழாவியிருப்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

வாழ்வில் விழிப்புணர்வு  இல்லாமையால் இழப்புகளுடன் தோல்விகள், ஏமாற்றங்கள் என்று வாழும் ஒருவனைப் பற்றிய உளச் சித்தரிப்புகளை ’அழைப்பு ’கதையில் நன்றாகவே செய்துள்ளார்.

’அக்கா’ கதைக்குள் ஒரு சிறுவனின் குழந்தைமையை அழகாகப் பதிவு செய்துள்ளார்.அக்கா கதையில் தன் அக்கா பற்றி கூறும் போது அவளை அம்மாவை விட உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்க்கும் தம்பியையும் பார்க்கிறோம். எத்தனையோ குடும்பங்களில்  அம்மா ஸ்தானத்தை நிரப்பிக்கொள்ளும் எத்தனை  அக்காக்கள் இருக்கிறார்கள்.

‘நிலம் எனும் நல்லாள்’ கதையில் வரும் சைமன் ஒரு போராளி. அவனுடைய பெற்றோர் கனடாவுக்குக் குடிபெயர்ந்தார்கள். அங்கே  அவனுடைய அப்பா தொழில் தொடங்கி வெற்றிபெற்றார். இலங்கைப் போர் முடிவுக்கு வந்தபோது நிறையப் பணம் செலவழித்து மகனை கனடாவுக்கு எடுப்பித்துவிட்டார்.வீடு,வசதி எல்லாம் உள்ள பெற்றோர் அவனது மறுவாழ்வுக்கு கனவு காண்கிறார்கள்.வந்தவன் அலைபாய்கிறான்.ஒருநாள் ஓடி விடுகிறான்.பனியில் சிக்குண்டு இறக்கிறான்.நுட்ப சித்தரிப்புகள் கொண்ட கதை.


ஆப்பிரிக்காவில் வேலைக்கு வந்திருக்கும் ’முழு விலக்கு’ கதை கணேசானந்தன் தாமோதரம்பிள்ளை தன் பெயரை உச்சரிக்கப் படும்பாடு சிரிப்பாக இருக்கும்.அவருக்கும் சங்கீதாவுக்குமான காதல் தனியானது . அவளது விடுகதையை விமானத்தில் பறக்கும் போதெல்லாம் அவிழ்க்கப் பார்க்கிறார் .ஒரு மரம் ஆனால் இரண்டு பூ.  மரம் என்ன ? பூ என்ன?  மரம் தென்னை மரம். பூ தென்னம்பூ தேங்காய்ப் பூ.

'ஒரு சிறுவனின் கதை'யை சின்னஞ் சிறுவர்கள் மனவரைபடத்தை வரைந்துகாட்டியிருப்பார்.அந்தச்  சிறுவனில் முத்துலிங்கம் கூட கரைந்திருக்கலாம்.

’அனுலா’ கதையில் சிங்களப் பெண் அனுலாவின் புரிந்து கொள்ளப்படாத காதலின் வலியை  ஏக்கத்தை பெருமூச்சை நுட்பமாகச்சித்தரித்திருப்பார்.அவளின் துயரத்தை  இழை பிரித்து சோகம் இழைத்திருப்பார்.
ஆனால் கடைசியில் அனுலா பாடும் பாடலில்’ நான் அணியும் நகை எல்லாம் பித்தளை தான் பொன்னல்ல ,நான் உடுத்தும் சேலை எல்லாம் கிழிந்தவைதான் பட்டல்ல,
 என்றாலும் கூட என்னைப் பார்த்து சிரிக்காதே தெருவில் போகிறவனே,நான் ராசா மகள் மகள் நான்...’என்கிற பாடல் நம் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

’சங்கல்ப நிராகரணம்’ கதையில் ஈழத்தில் கலவரம் உருவாகும் விதத்தை விவரித்திருப்பார்.இந்த களேபரத்தில்  நடேசன் -கமலியின் ஒரு காதல் படும் பாட்டையும் கூறியிருப்பார். அரைகுறை தாடி மீசையுடன் அவனும் சிக்குப் பிடித்த தலையோடு  அவளுமாக மறுபடியும் கப்பல் வழியாக யாழ்ப்பாணத்திற்கு புறப்பட்டபோது காதல் செய்ய வேண்டும் போலவாத் தோன்றியது?


’இருப்பிடம்’ கதையில் மஞ்சவனப்பதி  தேர்த்திருவிழாவில் தேர்ச் சக்கரத்தில் பலியாகும் அப்பாவி சிறுவன் மனவளர்ச்சி குன்றிய 'விசர்ப் பொடியன்' குணச்சித்திரத்தைப் படித்த பின்பும்  நமக்குள்ளே உறைந்து கொண்டிருப்பான்.தேர்த்திருவிழா ஆரவாரங்கள் எல்லாம் தாண்டி அவனது பேச்சொலி கேட்டுக் கொண்டே இருக்கும்.

 'பிறன் மனை நோக்கும்' பேராண்மை கொண்ட தணிகாசலம், தன் மனைவியின் மரணத்திற்குப் பிறகு குற்றவுணர்ச்சி சூழும் மனதோடு புழுங்குகிறார் 'கடைசி கைங்கரியம்' கதையில்.

”மூத்தவள் நானிருக்க இ ளையவளுக்கு மணக்கோலமா?இதற்கு யார் காரணம் யார்? நான் எந்தக் காரணமும் இல்லையே?” என  மனதில் வேதனையுடன்ன்று புழுங்குகிற ராசாத்தியின் ஏக்கம் குறித்துச் சொல்லும் கதை 'பக்குவம்'. உடம்பில் இருந்து எழுந்து ஆற்றாமையுடன் பெருமூச்சுவிடுகிறாள்  ராசாத்தி.  பொலிவிழந்துகிடக்கும் தன் அங்கங்களை பார்த்து துயரத்தில் உயரம் குறைந்து உள்ளுக்குள் மேலும் குள்ளமாகிறாள்.


12 வயதில் திருமணமான பார்வதியின் புத்திர சோகம் வெளிப்படுகிறது ’பார்வதி’ கதையில். கடுமையான விரதம் இருந்து நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த பிள்ளை முருகேசன்.நோய்வாய்ப்பட்ட தன் ஒரே பிள்ளைமீண்டுவர   வேண்டி பார்வதி செய்யும் நல்லூர் கந்தன் கோயில் வெளிப்பிரகார அங்கப்பிரதட்சணம்  அவளது தாய்ப்பாசத்தைக் காட்டுகிறது.

 பிராணிகள்!

 முத்துலிங்கம் கதைகளில் வரும் கதை மாந்தர்களோடு ஆங்காங்கே வருகிற பிராணிகளையும் மறக்கமுடியாது. துரியோதனனாக ’துரி’ கதையில் வரும் நாய்,’ஒட்டகம்’ கதையில் வரும் சீர் ஒட்டகங்கள்,'முழு விலக்கு' சங்கீதாவின் கரிக்குருவி,'ஞானம்' கொலபஸ் குரங்குகள் ,உயிர் தப்பிக்கும் ஆந்தை,  ’ரி ’கதையில் வரும் மாடு ,ராமு' எலுமிச்சை:யில் வரும் நாய் வீரன்,'கழுதை வண்டி சிறுவனோ'டு பயணிக்கும் கழுதை ’மஹாராஜாவின் ரயில் வண்டி’யில் வரும் பூனைகள்,’யதேச்சை’யில் வரும் அரிய மலை ஆடு இப்படிப் பலவும் நினைவில் நிற்கின்றன.

படித்ததும் கிளர்ந்தெழும் வேறு கதைகள்!


முத்துலிங்கம் தன் கதையில் கூறும் தொடர் சங்கிலி தியரி போலவே அவரது கதையைப் படிக்கும்போது வேறு சில கதைகளும் நினைவு வருகின்றன. இதை கூறுவதால் அவற்றோடு ஒப்பிடுவது ஆகாது. அப்போது மனதில் கிளர்ந்தெழும் எண்ணங்கள் அவ்வளவுதான்.’துரி’ கதையில் நாய் பற்றிப் படிக்கும் போது ஜெயகாந்தனின் ’நிக்கி’  கதை நினைவிற்கு வருகிறது.

தண்ணீருக்காக ’ஒட்டகம்’ கதையில் நடக்கும் அவலத்தைப் படிக்கும்போது  சென்னையில் தண்ணீருக்கான பாடுகளைச் சித்தரிக்கும் அசோகமித்திரனின் ’விடிவதற்குள்’ கதை நினைவுக்கு வருகிறது. கந்தர்வன்தன்  ’தண்ணீர்’ கதையில் தண்ணீரில்லாக் காட்டில் உள்ள ரயில்வே ஸ்டேஷனில் தண்ணீர் பிடிக்க ஓடிவரும்  கிராம மக்கள் கூட்டம் நினைவிற்கு  வருகிறது. அதுபோலவே.கு. அழகிரிசாமியின் ’குமாரபுரம் ஸ்டேஷன்; கதையில் தண்ணீர் பிடிக்க வரும் மக்கள் கூட்டமும் நினைவிற்கு  வருகிறது.

’கழுதை வண்டி சிறுவன்’ கதை அசோகமித்திரனின் ’கண்கள்’ கதையை நினைவுபடுத்துகிறது.

’பருத்திப் பூ’ கிழவி அழகிய பெரியவனின் ’வனம்மாள்’ கதையின் சாலம்மாள்  கிழவியை நினைவுக்குக் கொண்டு வந்தது.

’ஒரு சாதம்’ கதை அசோகமித்ரனின் ’பழக்கம்’ கதையை நினைவுக்கு கொண்டு வந்தது.

ஒருதலைக் காதலால் உணர்ச்சியோடு காதலி பின்னால் பலநாட்கள் சுற்றித்திரியும் ’மெய்க்காப்பாளன்’  கதையைப் படித்தபோது, ஒரு வாசக சாலையில் ஒருத்தி பின்னால் அலையும்  எம். ஏ. நுஃமானின் ’சதுப்பு நிலம்’ கதையின் நாயகன் நினைவுக்கு வந்தான்.

நேரம் கூடி வந்த போது நெஞ்சம் திறந்து காட்டாத நிறைவேறாத காதல்கள் இதில் நிறைய உண்டு சாந்தினி ஆகட்டும் ராசாத்தி ஆகட்டும் ஒலிக்கத் தயங்கிய ராகமாக ஒடுங்கிப் போனவை.

உணவு,மது,பெண் என ரசனை உணர்ச்சியை விஸ்தாரமாகப் பேசும் ‘வையன்னா கானா’ கதையைப் படித்தபோது ஜெயமோகனின் ’சூழ்திரு’ கதை மட்டுமல்ல 'தேனீ 'கதையும்  நினைவிற்கு வந்தது.அதில் வரும்  காருக்குறிச்சி அருணாசலம் ரசிகரும் நினைவுக்கு வந்தார்.


’யதேச்சை’ யில் தலிபான்கள் தேசத்தில் காசிமுக்கு  மரண தண்டனை நிறைவேற்றும் காட்சியை விவரிக்கும் போது ஜெயமோகனின் ’போழ்வு’ கதையில் மாவிலிங்கம் பிள்ளைக்கு நேர்ந்தது நினைவுக்கு வந்தது.

புராண இதிகாசக் குறிப்புகள்!

’முடிச்சு’ கதையில் பிரச்சினைகள் கழுத்தைப் பிடிக்கும்  சமயம் சுடர்விட்டுப் பிரகாசிக்கின்ற ஒருவனாக இதிகாசத்தில் கர்ணனை குறிப்பிடுகிறார் .வில்வித்தையில் கர்ணன் அர்ஜுனனை விட மேல் என்று சொல்லலாம் ஆனால் உக்கிரமான போர் நடந்து கொண்டிருக்கும் , பாவம் காரணம் செய்வதறியாது தடுமாறி நின்று போய் விடுவான்  என்கிறார்.
அதே கதையில் கிரேக்கப் புராணங்களில் கூறியுள்ள கிளைகள் கொண்ட நூதனமான  கோர்தியன் முடிச்சு பற்றிப் பேசுகிறார்.


ஆப்கானிஸ்தானில் ஹெராத் நகரத்தில் அழகிய மலைகள் சூழ்ந்து மெல்லிய குளிர்காற்று உடம்பை வருடும் சூழலில் கதை நிகழ்ந்தாலும் நம்மூர் ’குங்கிலியக்கலய நாயனார்’ என்று கதைக்கு பெயர் வைத்துள்ளார்.கதை போதைக்கு அடிமையான ஒபுக்கு என்பவனைப் பற்றிப் பேசுகிறது.எந்த போதைக்கும் அடிமையாகி விட்டால் மீள்வது சிரமம் .குங்கிலியக் கலய நாயனாரின் பக்தி போதையைப் போல என்று ஒப்பிடுகிறார்.

’உடும்பு’ கதையில் புறநானூற்றுப் பாடல் 'உடும்பரித்தன்ன வென் பழுமருங்கிற் கடும்பின் கடும்பசி' என்ற  புறநானூற்றி வரிகளை நினைவூட்டுகிறார்.

பூமாதேவி கதை அமெரிக்காவில் நடந்தாலும் , கம்சன் மூடன் என்று கூறி புராணக்கதையை நினைவூட்டுகிறார்.தங்கையின் எட்டாவது குழந்தை தனக்கு எமன் என்று தெரிந்தும் தேவகி, வாசுதேவரை ஒரே சிறையில் வைத்ததைக் குறிப்பிடுகிறார்.  கொடுத்த வாக்கைக்  காப்பாற்றிய திருக்குறிப்பு நாயனார்  பற்றிப் பேசுகிறார்.


சகலகலா வல்லவனாக கதைர நாடகம்ர வீரதீர செயல்கள்ர காதல் என்று இருந்தவன் செல்லத்தம்பி என்று அவனது பல்வேறு லீலைகள் பற்றிப் பேசுகிறது ’செல்லரம்மான்’.  தனது வீரதீர சாகசங்களில் இளநீர் திருடப்போனதும் ஒன்று. சரிந்து போன அவனது காதல் சாம்ராஜ்யம் மட்டுமல்ல அநியாயமாக இறந்து போன அவனது முடிவு எல்லாமே ஒரு முழு நாவலுக்குரிய விரிவைக் கொண்டவை.


ஸ்வீடன் தேசத்துக்காரன் எரிக்சன் உடன் ஆப்பிரிக்காவில் பணியாற்றும் போது கச்சியப்பர் எழுதிய கந்தபுராணத்தில் வரும் திகடச்சக்கரம் எப்படி அவர்கள் பிரச்சனை தீர்க்க உதவியது என்பது சம்பந்தம் இல்லாதது போல் தோன்றும். ஆனால் ‘திகடச்சக்கரம்’ கதையைப் படித்தால் புரியும்.


’துரி’ கதையில் நாயின் துரியோதனன்  என்ற பெயர்க் காரணத்தைக் கூறும்போது மகாபாரதத்தில் சிறப்பாகப் பேசப்படும் நட்பு கிருஷ்ணன் அர்ஜுனன் நட்புதான். இரண்டு பேருமே ராஜவம்சம் நெருங்கிய உறவு இதில் என்ன அதிசயம்? உண்மையில் எங்கள் இதிகாசங்களில் கூறியபடி மிகச்சிறந்த நட்புக்கும் விசுவாசத்துக்கும் அன்புக்கும் இலக்கணம் துரியோதனன் தான் .அர்ஜுனனுடன் துவந்த யுத்தம் தொடங்கும் முன்பு ’உன் குலத்தை வைப்பாயாக’ என்று சபை நடுவே கேட்டதும் தலைகுனிந்த கர்ணைனைக் கட்டித்தழுவி அந்தக்கணமே அவனை அங்க தேசத்துக்கு அரசனாக அபிஷேகம் செய்த துரியோதனனை மறக்க முடியுமா? மறக்க முடியுமா என்கிறார்.


ஒரு சதம் என்கிற தன் வீட்டின் பெயரை ’ ஒரு சாதம்’ என்று புரிந்துகொள்கிற நண்பன் சிவலிங்கத்துடன் கதை சொல்லி பேசுகிற கதை. அதில் தனது அலுவல் சிக்கல் பற்றிப்பேசும் போது சிறுதுளி பெரு விளைவைக்கூறும் போது ஔவையாரின் ’வரப்புயர நீருயரும்; நீருயர நெல்லுயரும் ’பாடலைப் பயன்படுத்தியுள்ளார்.அக்கணக்குச் சிக்கல் பற்றிப்பேசும் போது, அது ’கடலும் கிழவனும் ’கதையில் வரும் கிழவனுக்கும் மீனுக்கும் நடந்த போராட்டம் என்கிறார். பீமனுக்கும் ஜராசந்தனுக்கும்  நடந்த துவந்த யுத்தம் போன்ற முடிவில்லாதது என்கிறார் .அது மட்டுமல்ல. இந்த கணினி மென்பொருள் சிக்கலில் எங்கோ ஒரு மூலையில் தவறு ஒளிந்திருக்கிறது என்பதை கண்டுபிடிக்கும் போது கம்பனின் பாடல்

'கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை
கரதலத்தில் கவர்ந்த காதல்
உள்ளிருக்கும் என நினைத்து உடல் புகுந்து
தடவியதோ ஒருவன் வாளி' என்ற பாடலைக் கூறுகிறார் .ஜானகியை கவர்ந்த காதல் எங்கே ஒளிந்திருக்கிறது என்று இராவணனுடைய உடலை  கூரிய அம்பினால் ஓட்டை போட்டுத் தடவி  தேடியதாம் ராமனுடைய பானம், அதுபோல எங்கேயோ ஒளிந்து இருக்கும் அந்தப் பிழையைத்  தேடிப்பார்க்கிறேன் அது தென்படவே இல்லை என்று கூறவைக்கிறார்.

அதை கதையில் சூரபத்மன்கதையும் வருகிறது.

ஆப்பிரிக்காவில் நிகழும் ’முழு விலக்கு’ கதையில் கூட ராவணனுடைய நிலையை ஒப்பிட்டு ' கரனையும் மறந்தான், தங்கை மூக்கினைக் கடிந்து நின்றான்,
உரனையும்  மறந்தான் ; உற்ற பழியையும் மறந்தான்' என்று கம்பர் பாடலைக் கூறுகிறார்.


’விழுக்காடு ‘ கதையில் கிஷ்கிந்தையிலே சுக்கிரீவன் மாரிகாலம் முடிந்தபின்பும் ராமகாரியத்தை முற்றிலும் மறந்து அந்தப்புர போகத்தில் மூழ்கிக் கிடந்ததுபோல லோடாவும் தன் அலுவலக காரியங்களை அறவே மறந்தார். அவளோ வாலிபத்தின் உச்சியில் இருந்தாள்.


ஆப்பிரிக்காவுக்கு விலங்குகள் பற்றிய ஆராய்ச்சிக்கு செல்லும்போது கூட உள்ளூர் சிந்தனை ஓடுகிறது. "இது என்ன கோணாக் கோணாக்காய்? என்றும் ”இதுதான் கோத்தை வி த்த புளியங்காய்!' என்றும்  பாட்டு பாடுகிறார் ’ஞானம்’ கதையில்.


’சிலம்பு செல்லப்பா’ கதையில் நில மடந்தையின் புலம்பலாக, 'விரிகதிர் பரப்பி உலகம் முழு தாண்ட, ஒருதனித் திகிரி உரவோன் காணோம்' என்றும்
கோவலன் மதுரைக்குப் போய்  கண்ணகி கையால்  உண்ட கடைசி உணவு பற்றி சிலப்பதிகாரம் கூறும் போது அவர் பரிமாறிய சாப்பாடு என்ன சாப்பாடு'?
’கோவில் பாகல் , கொழுங்கனித் திரள்காய் ,
வாள்வரிக் கொடுங்காய், மாதுளம் பசுங்காய்,
 மாவின் கனியொடு வாழைத் தீங்கனி'இவற்றுடன் சோறு பால் நெய் மோருடன் கோவலனுக்கு கடைசியாக பரிமாறினாலும் கண்ணகி என்று வருகிறது.

இதே கதையில் 'நன்னுதற் கினியாய் ஓலம்,
 ஞான நாயகனே ஓலம் ,
பண்ணவர்க்கறையே ஓலம்,
 பரஞ்சுடர் முதலே ஓலம் '
என்கிற கந்தபுராணம் பாடல் வருகிறது.இதுபோன்ற பல குறிப்புகள் வருகின்றன.



கதைகளில் வெளிப்படும் தகவல்கள், உண்மைகள்!

ஸ்வீடனில் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் தானாக முன்வந்து கருணைக்கொலை செய்து கொள்ளலாம் என்று சட்டம் அனுமதிக்கிறது.அப்படியே எழுபது வயது முதிர்ந்தவர்கள் தனது பிறந்தநாளில் அனைவருக்கும் பரிசு கொடுத்து விட்டு மருத்துவமனைக்குச் சென்றுவிடுவது சகஜமாகி வருகிறது என்கிற அதிர்ச்சி உண்மை வலிக்கிறது.அந்த நாட்டின் மக்கள் தொகை 110 லட்சம் அந்த எண்ணிக்கை தாண்டாமல் வெகு கவனமாக பார்த்துக் கொள்கிறார்கள்.புதிதாக யாராவது பிறக்க வேண்டும் என்றால் யாராவது இறக்க வேண்டும் இப்படி கருணைக்கொலையை அரசே அனுமதிக்கிறதாம்.

லெமிங் என்றொரு உயிரினம் உள்ளது ஸ்வீடன், நார்வே போன்ற நாடுகளில் மிகுந்து காணப்படும். ஐந்து அங்குலங்கள்தான் இருக்கும் .கட்டையான உருண்டையான தலை, சாம்பல் நிறம் .இப்படியாக பார்ப்பதற்கு ஐயோ என்று இருக்கும்ழ புல், பூண்டு, தாவரம் எல்லாம் சாப்பிடும் .எவ்வளவு குட்டிகள் போடும் தெரியுமா? ஒரு வருடத்துக்கு 10 குட்டிகள் வரை ஈனும். ஆனால் பாவம் அவைக்கு பெரிய சோதனை ,மூன்று நான்கு வருடங்களில் அவற்றின் பெருக்கம் நாடு தாங்காது .சாப்பாடு போதாமல் போய்விடும். அப்போது அவையெல்லாம் கூட்டம் கூட்டமாக சேர்ந்து அப்படியே கடலில் மூழ்கி செத்துப் போகும். மறுபடி பெருக ஆரம்பிக்கும். நான்கு வருடங்களில் பழையபடி நாடு தாங்காது .மீண்டும் கடலுக்கு செல்லும் .இப்படியே தொடரும்.

ஆசியப் பெண்களுக்கு பொதுவாக நாற்பது நாற்பத்தைந்து வயதிலேயே முழு விலக்கு வந்துவிடுகிறது .அவர்கள் பூப்பெய்திய காலத்தில் இருந்து அனேகமாக 30 வருடங்கள் வரை மட்டுமே கருவளர்ச்சி தொடரும் .அதற்குமேல் படிப்படியாக நின்றுவிடும்.

’முடிச்சு ’கதையில்  பீட்டர் டிரக்கர் மற்றும் கென்னத் கல்பிரெய்த் சொன்ன சித்தாந்தங்களையும்
பிரெடரிக் டைலர் எழுதி வைத்ததை எல்லாம் அசைபோடுகிறார்.சிந்தனை முறை மூன்று வகைப்படும் செக்குமாட்டு சிந்தனை,தொடர் சங்கிலி முறை ,பரவல் சிந்தனை.
 ஆகாய விமானத்தை கண்டுபிடித்த ரைட் சகோதரர்களாகட்டும் பெனிசிலினைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் பிளமிங் மற்றும் பரவல் சிந்தனை மூலம் தான் தங்கள் மகா கண்டுபிடிப்புகளை உலகத்திற்கு அளித்தார்கள். கலீலியோவின் சிந்தனையும் பரவல் சிந்தனை என்கிறார்.

’வடக்கு வீதி’ கதையில் 17 ஆண்டுகள் பதுங்கி வாழ்ந்து மேலே வந்து இனச்சேர்க்கை செய்து விட்டு மீண்டும் உள்ளே செல்லும் சி காடா பூச்சி பற்றி கூறுகிறார்.


கதைகளில் பயன்படுத்தியுள்ள சில பளிச் உதாரணங்கள்!

தண்ணீரில் அடிபட்ட ஒல்லித் தேங்காய்போல வெகுதூரத்துக்கு அப்பால் கரையொதுங்கினோம்.

வாத்தியார் தலையைப் பின்னால் வளைத்து முகட்டைப் பார்ப்பார். மந்திரவாதி வாய்க்குள் வாளை நுழைப்பதற்கு முன் தலையைப் பின்னால் சாய்ப்பதுபோல அது இருக்கும்.

ஓட்டுக்குள் அடங்கிய ஆமைபோல நான் அசையாமல் இருந்தேன்.

இரண்டு கன்னங்களையும் உள்ளிழுத்து கடித்துக் கொண்டிருப்பதுபோல ஒரு தோற்றம்.

 ஆங்கிலம் சரளமாக வந்தது; தமிழ் தத்தியது.

ஒழுக்கம் பற்றி நீண்ட பிரசங்கம் செய்தால் நிறுத்த மாட்டார். வகுப்பு முழுக்க வார்த்தை களால் மூடப்பட்டு ஒரு கூடாரம்போல ஆகிவிடும்.

காருகுறிச்சி வாசிக்கும்போது அவருடைய கழுத்து படம் எடுக்கும் பாம்பினுடையதுபோல உப்பிப் பெருக்கும்.

அந்தப் பெண்ணின் முகம்கூட எனக்கு ஞாபகம் இல்லை. கை ஆடும் ஒருவர் எடுத்த புகைப்படம்போல உருவம் மங்கலாகவே நினைவில் இருந்தது. முகம் நிறைய அடக்கப்பட்ட ஒரு புன்னகையால் நிறைந்திருந்தது.

தூர நாட்டில் இருந்து தகரக் குழாய் வழியாகக் கதைப்பதுபோல அவர் குரல் வளம் இருக்கும். எப்பொழுதும் அவர் அறையில் யாராவது பயிற்சியிலிருப்பவர் மாட்டிக்கொள்வார்.


அந்தக் கோப்புடன் சம்பந்தமுள்ள வேறு சில கோப்புகளில் தகவல்களைத் திரட்டியபோது இருட்டறையில் புகைப்படம் கழுவும்போது மெள்ள மெள்ளப் படம் துலங்குவதுபோல ஒரு காட்சி உண்டானது. அது நல்ல காட்சியில்லை.

காற்று இறுக்கமாக இருந்தது. ஒரு வாளிருந்தால் அதைத் துண்டாக வெட்டியிருக்கலாம்.  


ஓர் ஆதிவாசி, மிருக வேட்டையாட குகையிலிருந்து புறப்படுவதுபோல, மெல்ல அடிவைத்து வீட்டின் வாசல்வழியாக நாங்கள் வெளியேறினோம்.

அந்தச் சிறு செய்கையில் அஹமத்தின் கண்கள் வெயிலைப்போல பிரகாசித்தன.

எரிக்ஸன் தனக்கே உரிய பாணியில் நேரிடையாகப் பதில் சொல்லாமல் சுற்றி வளைத்து ஆரம்பிக்கிறான். சுருள் வாளைப் போல் அவனுடைய வாதங்கள் எல்லாம் திருப்பித் திருப்பி தொடங்கிய இடத்திலேயே வந்து விழுகின்றன

பல்லியின் வயிற்றில் குட்டி தெரிவதுபோல அவள் கைவிரல்களில் ஓடும் ரத்தம் கூட அவருக்கு தெரிந்தது. பந்துபோன்ற அந்த கைவிரல் குவியலை எடுத்து முத்தமிடவேண்டும் போல பட்டது.

இப்பொழுதெல்லாம் அவள் கிட்ட வரும் சமயங்களில் இரண்டு நாள் தண்­ரில் ஊறுவைத்த பயறுபோல ஒரு விதமான பச்சை வாசனை வருகிறது. அவளுடைய குரல் உடைந்து ரஹஸ்யம் பேசுவதுபோல இருக்கிறது.

.உறைந்த மழைபோல கேசங்கள் அவள் கன்னத்தில் வழிந்து கிடந்தன.

அருகில் வந்ததும் அவளுக்கே உரிய பெண் வாசனை சொட்டு நீலம் தண்­ரில் பரவுவதுபோல மெல்ல பரவியது.

அவள் கண்கள் தெரிந்தன. அவை அபூர்வமாக ஓர் இலுப்பக் கொட்டையைப் பிளந்ததுபோல இருபக்கமும் கூராக இருந்தன.


பெரிய பெரிய பொதிகளுடன் தரையில் உட்கார்ந்திருந்தனர். சிலர் குழந்தைகளையும் முதுகில்
கட்டியிருந்தார்கள். முதல் பார்வைக்கு நூற்றுக் கணக்கான கறையான் புற்றுகள் தரையிலே முளைத்துவிட்டது போலவே தோன்றியது.


சிறு குருவி வாய் பிளந்ததுபோல சதை பிரிந்துபோய் காணப்பட்டது.

வயிறு முட்ட பால் குடித்த கண் திறக்காத நாய்க்குட்டி போல பரிபூரண நிம்மதியோடு இவர் அயர்ந்துபோய் கிடந்தார்.

குளிக்கும்போது காதுக்குள் தண்ணீர் போய்விட்டதுபோல தலையை பலமாக ஆட்டினாள்.


என்னோடு வந்த நண்பன் காலில் எறும்பு கடிப்பது போல மாறி, மாறிக் காலை வைத்தபடி நின்றான்.

உள்ளிழுத்த தலையை ஆமை மெள்ள மெள்ள வெளியே விடுவதுபோல் சங்கீதாவும் மெதுவாக வெளியே வரலானாள். பள்ளிக்கு புதுத் தென்புடன் வந்து போனாள்.

உன்னுடைய வில்லங்கங்களை ஒட்டுமொத்தமாக தீர்க்க வேண்டுமானால் பிரச்சனையின் உயிர்நாடியைக் கண்டுபிடிக்க வேணும். அல்லாவிடின் மலேரியாக் காய்ச்சல்காரனுக்கு மாதவிடாய் நிற்க மருந்து கொடுத்தது போல அனர்த்தம்தான் விழையும்.

கழுத்தை முறித்து பின்னுக்கு வளைத்து ஒரு விமானத்தைப் பார்ப்பதுபோல நான் அவரைப் பார்த்தேன்.

முதுகில் யாரோ கத்தியை நீட்டியதுபோல நேராக உட்கார்ந்து டீ குடித்துக்கொண்டிருந்தான்.

தமிழ் சினிமாவில் காலை காட்டி, கையை காட்டி, முதுகை காட்டி இறுதியில் கதாநாயகியைக் காட்டுவதுபோல காருகுறிச்சி மெள்ள மெள்ள ராகத்தை வெளியே விடுவார்.


நத்தை ஊர்ந்த தடம்போல முகத்திலே கண்ணீர் காய்ந்த கோடு.


ஐயாவின் வழுக்கை விழுந்த முன்னந்தலை கரப்பான் பூச்சி முதுகுபோல மினுங்கியது.


மொழிபெயர்ப்பாளராக!

ஆன்டன் செகாவின் வேட்டைக்காரனை முத்துலிங்கம் மொழிபெயர்த்திருக்கிறார். மொழிபெயர்ப்பில் இவர் எப்படி இயங்கி இருக்கிறார் என்பதற்காக அதே கதையை மூன்று மொழிபெயர்ப்புகளை மாற்றி மாற்றி படித்தேன். ஒப்பிட்டுப் பார்த்தேன் பெரும்பாலும் ஒரே விஷயத்தைக் கூறினாலும் சில வரிகளை நடுவில் போட்டு ஜரிகை போல ஜீவனை மினுங்க வைத்துள்ளார்.அது ஜீவன் உள்ள வரிகளாக இருந்ததை உணரமுடிந்தது .அது அவர்களுக்குத் தோன்றவில்லை. இதைப் பார்க்கும் போது மசாஜ் மருத்துவர் மொழிபெயர்ப்பு கதையிலும் அசல் கதையின் ஆன்மா பிசகி இருக்காது என்று நம்பலாம்.

 

logo
Andhimazhai
www.andhimazhai.com