பாதாள குகைகள்

பாதாள குகைகள்
Published on

கடப்பா கல் என்று வழுவழுப்பான கறுநிறக் கற்களை வீடுகளின் சமையலறை மேடைகளில் பலர் பொருத்தியிருக்கிறோம். அந்த கற்கள் வெட்டியெடுக்கப்படும் ஆந்திரப்பகுதிகள் வழியாக (குட்டி குட்டி பாறைக்குன்றுகள் கபளீகரம் செய்யப்படும் காட்சிகளைக் கண்டுகொண்டே) கர்நூல் மாவட்டத்தில் உள்ள கோலிமிகுண்ட்லா என்ற இடத்தைத் தாண்டி 3 கி.மீ போனால் வருகிறது பெலம் குகை.  மலையில் இருக்கும் குகை போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டு போனால், சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் பூமிக்கடியில் கிளை பரப்பிக் கிடக்கிறது இக்குகை. பத்திலிருந்து முப்பது மீட்டர் வரைக்கும் பூமிக்குள் இதன் ஆழம் மாறுபடுகிறது.

பிரம்மாண்டமான ஒரு புத்தர் சிலையைத்  தாண்டிப் போனால் ஆந்திர சுற்றுலா கழகத்தின் டிக்கெட் கவுண்டர் வருகிறது. ஓர் ஆளுக்கு 50 ரூபாய் டிக்கெட். பூமிக்குள் அடியில் செல்லும் இக்குகைகளுக்கு படிக்கட்டுகளை அமைத்து உள்ளே செல்ல வழி செய்துள்ளனர். வேண்டுமானால் இலவசமாக வழிகாட்டிகளை அழைத்துக்கொள்ளலாம். உள்ளே மூச்சுத் திணறும் என்பதற்காக  ஆக்சிஜன் காற்று அனுப்பும் குழாய்கள் உள்ளன.

உள்ளே நுழைந்ததும் அழகான வழுவழுப்பான மென் பாறைகளால் அமைந்த சுவர்கள் ஆச்சரியப் படுத்துகின்றன. சமதளமாக இல்லாமல் இயற்கையின் விருப்பத்துக்கே அமைந்த பரப்புகள்.  சில இடங்களில் குகை அகலமாக உள்ளது. சில இடங்களில் ஓர் ஆள் செல்லும் அளவுக்கு குறுகி விடுகிறது.

ஓரிடத்தில் தண்ணீர் பீய்ச்சி அடிக்க, அதில் கைகளை நனைத்தோம். அங்கிருந்து இஷ்டத்துக்கு குகைப் பாதை பிரிந்து செல்கிறது. மேலேறுகிறது. திடீரென்று பாதாள கங்கை என்று குறுகி படிகளாக கீழே செல்கிறது. எல்லா இடங்களிலும் மேல் விதானம் ஒவ்வொரு அமைப்பைக் கொள்கிறது. பாறைகள் சில இடங்களில் உருகி வழியும் பனிக்கட்டிகள் போல் தோற்றம் கொண்டு கீழ் நோக்கி நீட்டிக் கொண்டிருக்கின்றன. அசுரனின் வாய்போல் தோன்றும் வழிகள். அதில் மிச்சமிருக்கும் இருட்டு. 

சுற்றுலாப் பயணிகளின் மின்னும் காமிராக்கள். தமிழ் சினிமாக்களில் பார்க்கும் கிளைமாக்ஸ் காட்சிப் பாதாள அறை செட்டுகளை பல மடங்கு விஞ்சிவிடுகிற இயற்கை அமைப்பு இது என்பதுதான் உள்ளே நுழைந்த சில நிமிடங்களில் உணரும் உண்மை.

உள்ளே இருக்கும் இருளை முழுமையாகக் கிழிக்கும் பளீர் விளக்குகளைப் பயன்படுத்தாமல் பார்வைக்குப் போதுமான அளவுக்கு வெளிச்சம் செய்யப் பட்டிருக்கிறது. மஞ்சளாக, பழுப்பு நிறத்தில் பல இடங்களில் வெளிச்சம் வழிந்து கிடக்கிறது. அய்யோ இப்போது மின்வெட்டு ஏற்பட்டால் என்ன ஆகுமோ என்று நடுக்குகையில் நினைப்பு வந்தது( அய்யா.. நாங்க தமிழ்நாட்டுக் காரங்கய்யா..). நம் நினைப்பு எப்படி ஆந்திர மணவாடுகளுக்குத் தெரிந்ததோ? மின்சாரம் திடீரெனபோய் குபீரென்று இருட்டு சூழ்ந்துகொண்டது. ஓ..வென ஒரு சுற்றுலாக் கும்பல் தூரத்தில் அலறியது. சில நொடிகளில் மீண்டும் மின்சாரம் வந்துவிட அச்சம்

நீங்கினோம். உள்ளே காற்றோட்டம் இல்லையென்பதால் புழுக்கம் நிலவுகிறது. முழுமையாக சுற்றிவிட்டு திரும்ப நுழைவாயிலுக்கு வர சுமார் ஒருமணி நேரம் பிடித்தது. வாயிலுக்குத் திரும்பி படியேறி மேலே வருவதற்கு முன்னால் மேலிருக்கும் வாயில் வழியாக வானத்தை பார்த்தவண்ணம் அமர இருக்கைகள் உள்ளன. பழுப்பு வண்ண பாறைகளின் பின்னணியில் அழகான படங்கள் எடுக்கும் வாய்ப்பு இது.

பெலம் குகைகள் பல்லாயிரக்கணக்காண ஆண்டுகளுக்கு முன்பாக ஓடிய ஆற்றின் போக்கினால் உருவாகியிருக்கலாம் என்கிறார்கள். சுமார் 3 கி.மீ அளவுக்கு நீளமானதாக இவை இருந்தாலும் ஒன்றரை கி.மீ அளவுக்குத்தான் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி உள்ளது. மூன்று துவார வழிகள் உள்ளன. நடுவில் உள்ள துவாரமே பிராதன வழியாக அனுமதிக்கப்பட்டுள்ளது.  ஒரு காலகட்டத்தில் சமண, பௌத்த முனிகள் இங்கே வசித்திருக்கக் கூடும் என்கிறார்கள். 1884-ல் ராபர்ட் ப்ரூஸ் ப்ரூட் என்கிற ஐரோப்பியர் இக்குகைகளை ஆங்கில உலகுக்கு அறிமுகம் செய்தார். பின்னர் சமீபத்தில் பெலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் துணையுடன் ஜெர்மானிய குழு ஒன்று ஆய்வு செய்தது. இதை அடுத்து ஆந்திர சுற்றுலா

வளர்ச்சிக் கழகம்  இதை 1999-ல் சுற்றுலா மையமாக ஆக்கியுள்ளது. கர்நூலில் இருந்து 106 கிமீ தொலைவில் இது உள்ளது. அருகில் உள்ள நகரம் தாடிபத்ரி (30 கி.மீ). சென்னையில் இருந்து 420 கி.மீ.

மே, 2013.

logo
Andhimazhai
www.andhimazhai.com