எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, அதிர்ஷ்டத் திலும் நம்பிக்கையில்லை. கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு செல்லும் வாய்ப்பு ஆகஸ்டு மாதம் 2012-ல் எனக்குக் கிடைத்தது.
இமயமலைத் தொடரில் அமைந்துள்ள கைலாச (கைலாஷ்) மலை, கடல் மட்டத்திலிருந்து 6638 மீ உயரத்தில் உள்ளது. கைலாச மலைக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள மானசரோவர் ஏரி 4590 மீ உயரத்தில் அமைந்துள்ளது. இந்துமதம், புத்தமதம், சமண மதம் ஆகிய மூன்று மதத்தைச் சார்ந்தவர்களாலும் இந்த இரண்டு இடங்களும் புனிதமாகக் கருதப்படுகின்றன. கைலாச மலைக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்துக்கள் புனித யாத்திரை சென்று வருகின்றனர். சீனாவின் திபெத்தில் உள்ள கைலாச மலை மற்றும் மானசரோவர் ஏரியை இந்தியாவிலிருந்து தரை வழியாகவே சென்று பார்ப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அது மிகக் கடினமான பயணம் என்பது மட்டுமல்ல, அதற்கு சீன-இந்திய அரசுகளின் அனுமதியும் தேவை. கைலாஷ்-மானசரோவர் யாத்திரை செல்ல இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று நேபாளத் தலைநகர் காட்மாண்டு வரை விமானத்தில் சென்று விட்டு அங்கிருந்து தரைமார்க்கமாக சீன எல்லையைக் கடந்து கைலாய மலையை அடைவது. இது சற்று எளிதானப் பயணம். மற்றொரு வழி, டெல்லியில் இருந்து சாலை வசதி உள்ள வரைக்கும் வாகனத்தில் போய், பிறகு காட்டிலும் மலையிலும் நடந்து திபெத் பகுதியை அடைந்து பிறகு மீண்டும் வாகனத்தில் சென்று பின்னர் மீண்டும் நடந்து கைலாச மலையை வலம்வருவது.
டெல்லியில் இருந்து பஸ்ஸில் தொடங்கியது எங்கள் பயணம். நைனிடால், அல்மோரா ஆகிய இடங்களைக் கடந்து இந்திய ரெயில்வேயின் கடைசி ரயில் நிலையமான காத்கோடா வரை பஸ்ஸில் செல்ல வேண்டும். இதன் பின்னர், மலைச் சாலைகள் குறுகிக்கொண்டே போவதால், கொஞ்சம் மினி பஸ், அதுவும் போகாத இடங்களில் ஜீப் என்று பயணிக்க வேண்டும்.இதற்கே இரண்டு மூன்று நாட்கள் ஆகிவிடும். அந்தச் சாலையும் முடிவுக்கு வந்தபிறகு, நடந்து மட்டுமே செல்லக்கூடிய மலைப்பாதை தான். நடந்தோ, வாடகைக்கு எடுத்துக்கொண்ட குட்டிக்குதிரைகளில் பயணித்தோ ஏழு நாட்கள் செல்லவேண்டும். ஒரு நாளைக்கு 18 முதல் 20 கிலோமீட்டர் நடக்க வேண்டியிருக்கும். இந்த நடைபயணத்தின் முடிவில் 5400 மீ உயரத்தில் லிப்புலேக் கணவாய் வரும். அதைக் கடந்தால் திபெத் பகுதி வரும். அங்கிருந்து பஸ்ஸில் தக்லக் காட் என்ற ஊருக்கு சென்று, அங்கிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்ல வேண்டும். பின்னர் அங்கிருந்து கைலாச மலையைச் சுற்றிவர மூன்று நாள்கள் ஆகும். கைலாச மலையைச் சுற்றும் பயணத்தில் மூன்று நாள் தங்க வேண்டும். மூன்றாவது நாள் தொடங்கிய இடத்துக்கு வந்துவிடுவோம். அடுத்து மானசரோவர் ஏரிக்கு பக்கத் தில் மூன்று நாட்கள் இருப்போம். மீண்டும் பஸ்ஸில் கிளம்பி தக்லக் காட் வந்து, வந்த வழியேதிரும்ப வேண்டும். லிப்புலேக் கணவாய் கடந்து, மீண்டும் ஏழு நாட்கள் நடை பயணம் செய்தால், ஜீப் காத்திருக்கும். பிறகு மினி பஸ்; கடைசியில் பஸ் பிடித்து டில்லிக்கு வந்தால் தெரு விளக்கில் கண் கூசும். இதுதான் பயணத்திட்டம். சுமை தூக்குவதற்கு கூலி வைத்துக்கொள்ளலாம். நடப்பது சிரமம் என்பதால் குதிரைகளையும் வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். நான் முடிந்தவரையில் நடந்தே சென்றேன். மேடும் பள்ளமும் நிறைந்த பாதைகள், பனி உறைந்த மலைகள், பாறைகள் மட்டுமே நிறைந்த பாதைகள் என கடினமானது இந்தப் பயணம். 29 நாள்களில் 14 நாள்கள் நடக்கவேண்டும். இத்தகையச் சவால்களை ஏற்றுக்கொண்டு போகையில், பயணம் தொடங்கும் போது இருக்கும் மனிதர்கள் பயணம் முடியும்போது முற்றிலும் வேறு மனிதர்களாக மாறிவிடுவார்கள். இந்தப் பயணத்தில் மூன்று விஷயங்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்: பயணிகள், பாதை மற்றும், எனக்குள் நான் செய்த பயணம்.
என் குழுவிலிருந்த நாற்பது யாத்திரிகளில் 29 வயது முதல் 65 வயது கொண்டவர்கள் வரை பல்வேறு வயதினர் இருந்தனர். பல்வேறு பின்னணி கொண்டவர்கள். கல்கத்தாவில் இருந்து வந்திருந்த ஒரு வயதான பெண்மணிக்கு காலில் இருந்த பிரச்சனையால் சாதாரணமாக நடப்பதே சிரமமாக இருந்தது. ஆனாலும், அவர் தொடந்து மன உறுதியுடன் பயணித்தார். 2007-இல் விழியிழந்த ஒரு யாத்திரி கலந்து கொண்டாராம். துணைக்கு ஒருவரை அழைத்துக் கொண்டு அவர் கையைப் பிடித்துக்கொண்டே இந்த யாத்திரையை முடித்துவிட்டார். நம்பிக்கை தரும் பலம் இது. எங்கள் குழுவிலிருந்த நான்கு இளைஞர்கள் ஆரம்பம் முதல் முடிவு வரை மிகவும் உற்சாகமாக புத்துணர்வுடன் இருந்தனர். சுமைகளைத் தாங்களே முதுகில் சுமந்தனர். 29 நாள்கள் பஸ், ரயில், நடை எனத் தொடர்ந்த பயணத்தில் எங்குமே அவர்கள் கூலி வைத்துக் கொள்ளவில்லை. அதனால் அவர்களை பேட்மேன், சூப்பர்மேன் என்று பட்டப்பெயர் வைத்துத் தான் கூப்பிடுவோம். பயணத்தின் போது உயரம் செல்லச் செல்ல ஆக்ஸிஜன் அளவு குறையத் தொடங்கியது. மூன்று படி ஏறுவதற்கே மூச்சு வாங்கியது. நின்று நின்றுதான் சென்றோம். அப்போது அந்த நான்கு இளைஞர்களில் ஒருவருக்கு உடல்நிலை மோசமாகிவிட்டது. அப்போது அவருக்கு துணையாக, தனது பயணத்தை பாதியில் நிறுத்திவிட்டு பாதிக்கப்பட்ட இளைஞரைக் கூட்டிக்கொண்டு திரும்பிச்செல்வதாக கூறினார் ஆந்திராவைச் சேர்ந்த மதுசூதனன். 1 லட்ச ரூபாய் செலவு செய்து, முன்கூட்டியே திட்டமிட்ட இந்த 29 நாள்கள் பயணத்தை, கைலாச மலையைப் பார்க்க வேண்டும் என்ற பேராவலை முன்பின் அறிமுகமில்லாத ஒரு சக யாத்திரிக்காக உதறித் தள்ளத் துணிந்த அந்த சூப்பர்மேன் மதுசூதனன் எங்கள் அனைவரையும் நெகிழவைத்தார். ஒருவழியாக உடல்நலம் தேற்றி பத்திரமாக அனைவரையும் எங்களுடன் அழைத்துச்சென்றோம். எங்கள் குழுவில் வந்த நாற்பது பேருமே கைலாச வலம், மானசரோவர் ஏரி வலம் இரண்டையும் முழுமையாக முடித்தார்கள்.
என்னைப் பொறுத்தவரையில் பயண இலக்கைப் போல பயணத்தின் அழகும் முக்கியம். நிறைய பயணங்களை நான் மேற்கொண்டிருக்கிறேன். ஆனால், என் வாழ்க்கையில் இப்படி ஒரு அழகான பயணத்தை நான் கண்டதில்லை. பசுமையும், கடுமையும் ஒன்று கலந்த பயணம். ஒரு இடத்தில், 4440 படிகள் ஏறி இறங்க வேண்டும். இங்கு குதிரை மீதும் போக முடியாது. பல இடங்களில் கால் தடுக்கினாலும் பக்கத்தில் சீறிச் செல்லும் காளி நதியில் ஜல சமாதி நிச்சயம். (எல்லோரும் கிளம்பும் முன்பே, இறந்தால் என்னை அங்கேயே புதைத்துவிடச் சம்மதிக்கிறேன் என்று எழுதிக் கொடுக்கவேண்டும்). சில நாட்களில் எங்கள் நடைபயணம் காலை 3.00 மணிக்கு தொடங்கியது. மிக உயரமான இடங்களில் நேரம் செல்லச் செல்ல களைப்பு அதிகமாகியது. குதிரையைப் பயன்படுத்தாமல் நடந்து சென்றவர்கள் ஒரு கட்டத்தில் 10 வினாடிக்கு ஒருமுறை பெருமூச்சு சிறுமூச்சு வாங்கி நின்று செல்ல வேண்டியிருந்தது. கைலாச மலையை நெருங்க நெருங்க பக்தர்களின் பரவசம் அதிகரித்துக்கொண்டே இருந்தது.
இந்தப் பயணத்தில் பல விஷயங்களை கிட்டேயிருந்து பார்க்க முடிந்தது. குழுவில் இருந்த 40 பேரில் 38 பேர் பக்தி பழங்கள்தான். காலையும் மாலையும் பூஜை செய்துகொண்டே இருப்பார்கள். மக்களின் நம்பிக்கை எப்படி தொடங்குகிறது, அதை அவர்கள் எப்படி வளர்த்துக்கொள்கிறார்கள் என்பதையெல்லாம் கூர்ந்து கவனித்தேன். பக்தர்களிடையே அவர்களுடைய பக்தியின் அளவில் பல படிநிலைகள் இருந்தது. மிதமான பக்தி, அதிக பக்தி, மிகத் தீவிரமான பக்தி என அவர்கள் வேறுபட்டிருந்தனர். இரவில் ஏரிக்கு அந்தப் பக்கத்தில் யாரோ புஸ்வாணம் கொளுத்தினார்கள். (யாத்திரிகர்கள் வந்து தங்கும்போது மட்டும் இது நிகழ்வதாகச் சொல்லக் கேள்வி). ஆனால், அதைக்கண்ட சிலர், வானத்திலிருந்து நட்சத்திரங்கள் பெண்களாகி மானசரோவர் ஏரியில் வந்து நமக்காக ஆடிவிட்டுப் போகின்றனர் என்றார்கள். இந்த நிகழ்வை கண்ட மிதமான அளவு பக்தி கொண்ட ஒருவர் மிகவும் தீவிரமான பக்தராகிவிட்டார், ஆனால், தீவிரமாக இருந்த ஒருவர், ‘பட்டாசு மாதிரி தானே இருந்தது?’ என்று மிதமாகிவிட்டார். கண்ணில் தென்பட்ட மேகம், கூழாங்கற்கள் ஆகியவற்றைக்கூட அவர்கள் விடவில்லை. அவற்றின் வடிவம் சிவன், விநாயகன், இன்னபிற கடவுளர்கள் போல இருப்பதாகக் கூறி கன்னத்தில் போட்டுக்கொண்டனர்.
ஒரு நாள் காலையில் குதிரை மீது பயணித்த ஒரு பெண் யாத்திரி குதிரையிலிருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். நான் ஓடிச்சென்று அவர் எழுந்திருக்க உதவி செய்ததுடன் அவரை ஆசுவாசப்படுத்தினேன். அப்போது அந்தப் பெண் என்னைப் பார்த்து, சிவ பெருமான் தான் எனக்கு உதவ உங்களை அனுப்பினார் என்று கூறினார். நான் அமைதி காத்தேன். ஓரிடத்தில் ஓய்வெடுக்க நின்றோம். அப்போது நான் குதிரைக்காரர் ஒருவருடன் சீன மொழியில்பேச்சுக் கொடுத்துக்கொண்டிருந்தேன். அப்போது என்னை நெருங்கிய பரவச நிலையில் இருந்த ஒரு பக்தர், ‘எப்படி இருக்கிறது இந்த அனுபவம்?’ என்றார். “ஒரு மலை மீது நின்று ஒரு குதிரைக்காரருடன் பேசுவது போன்று உணர்கிறேன் நான்.” என்றேன். அவருக்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை.
(எம்.ஸ்ரீதரன், இந்திய வெளியுறவு அதிகாரியாகப் பணியாற்றுகிறார். ‘சிவனைத் தவிர’ என்னும் தலைப்பில் தன் பயண அனுபவத்தை நூலாக எழுதிக்கொண்டிருக்கிறார். இக்கட்டுரையில் பதிவாகியிருப்பன அனைத்தும் அவரது சொந்தக் கருத்துக் களே. அவர் சார்ந்த அமைப்புகளின் கருத்துக்கள் அல்ல.)
ஏப்ரல், 2013.