பசித்தால் மட்டுமே சாப்பிடுங்கள்

பசித்தால் மட்டுமே சாப்பிடுங்கள்
Published on

உணவே மருந்து மருந்தே உணவு என்ற நாமத்தை கடைப்பிடித்து தான் நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்தார்கள். நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த உணவுகளையும் அவர்கள் சாப்பிட்டது கிடையாது. இதனால் தான் அவர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள் என்று சொல்லலாம். ஆனால் இப்போது பன்னாட்டு மற்றும் துரித உணவுகள் மக்களை அதன் சுவை என்னும் மோகத்தில் மூழ்க செய்துள்ளது. அவை நம் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியவை என்கிறார் சித்த மருத்துவர் டாக்டர் கு.சிவராமன். இவர் கடந்த 21 வருடமாக சித்த மருத்துவம் மற்றும் ஆரோக்கிய உணவு குறித்து ஆலோசனை அளித்து வருகிறார். மேலும் பாரம்பரிய உணவு அதன் நன்மைகள் குறித்து வார இதழ்களில் தொடர் கட்டுரைகள் எழுதி வருகிறார்.

“சித்த மருத்துவம் பயின்று இருந்தாலும், சில வருடம் நான் பன்னாட்டு அரிசி நிறுவனம் ஒன்றில் முக்கிய பொறுப்பில் வேலை பார்த்து வந்தேன். அங்கு எனக்கு அரிசி பற்றி முழுமையாக தெரிந்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. நாம் சாப்பிடும் வெள்ளை அரிசி பற்றி மட்டும் இல்லாமல் மற்ற வகை அரிசிகள் மற்றும் சிறு தானியங்கள் அதன் நன்மைகள் பற்றி தெரிந்துக் கொண்டேன்.  சிறு தானியங்களில் இருக்கும் ஊட்டச் சத்துக்கள் பற்றி கேள்விப்பட்ட போது, நம்மூரில் கிடைக்கும் ஆரோக்கியமான உணவுகளை விட்டு விட்டு நாம் இந்த பன்னாட்டு உணவுகள் பின் அலைந்துக் கொண்டு இருக்கிறோம் என்பதை உணர்ந்தேன்” என்று சொன்னவர் உணவின் முக்கியத்துவம் பற்றி விவரித்தார்.

“சித்த மருத்துவத்தில் மருந்து, உணவு மற்றும் வாழ்வியல் முறை என மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த நோய்க்கு மருந்து என்பதை தாண்டி எப்படிப்பட்ட நோயாளிக்கு என்ன மருந்து என்று கணிக்கப்படும்” என்றவர் பசி, ருசியை தாண்டி நாம் சாப்பிடும் உணவுகள் நமக்கு மருந்தாகவும் பயன்பட வேண்டும் என்றார்.

“பசி மற்றும் ருசிக்காக சாப்பிடும் உணவுகள் நம் உடல் ஆரோக்கியத்தை பாதிக்க கூடாது. ஆனால் இப்போது மார்க்கெட்டில் உள்ள நவீன உணவுகள் ருசிக்காக மட்டுமே விற்கப்படுகின்றன. அதன் மூலம் எப்படி மக்களை அடிமையாக்கலாம் என்று தான் பார்க்கிறார்களே தவிர அது நம் உடலுக்கு ஆரோக்கியமானதா என்று பார்ப்பதில்லை. ஆனால் நம் பாரம்பரிய உணவுகள் நம் உடலுக்கு மட்டும் இல்லை நம் மண்ணுக்கும் தீங்கு செய்யாது. இதை விளைவிக்க அதிக தண்ணீர் அவசியம் இல்லை. அரிசி விளைவிக்க நாம் பயன்படுத்தும் தண்ணீரின் அளவை விட 1000 மடங்கு குறைவாக தான் செலவாகும். பூச்சி கொல்லி மருந்துகளும் தேவையில்லை. மேலும் இதனை சமைக்கும் முறை நம் வழிவழியாக வந்தது என்பதால், வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு இதனை சமைக்கலாம். எல்லாவற்றையும் விட இப்போது 90% மக்கள் நீரழிவு மற்றம் ரத்த கொதிப்பு நோயால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதற்கு சிறுதானிய உணவுகள் மிகவும் சிறந்தவை. அரிசி நாம் சாப்பிட்ட இருபது நிமிடத்தில் குளுகோசின் அளவை அப்படியே ரத்தத்தில் சேர்க்கிறது. இதனால் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். ஆனால் சிறுதானியங்கள் சாப்பிடும் போது அவை ஜீரணமாக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.  அதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் குறைவாக சேரும். மேலும் இதில் உள்ள ஃபைடோமாலிக்யூல்ஸ் உடலுக்கு மிகவும் நல்லது. அதிக இரும்பு மற்றும் கால்சிய சக்தி இருப்பதால் பெண்களுக்கு நல்லது. மாதவிடாய், பிரசவம் மற்றும் மெனோபாஸ் காலத்தில் உடம்பில் ரத்த சோகை ஏற்படாமலும், எலும்பை வலுவாகவும் பாதுகாக்கும்” என்று சொன்னவர் வண்ண மிகு பழங்களைச் சாப்படுவதால் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளைப்  பெறமுடியும் என்றார்.

“நம் நாட்டில் விளையும் பழங்களை சாப்பிட்டாலே நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். நாவல் பழம், இலந்த பழம், நெல்லிக்காய், பப்பாளி, கொய்யா, மாதுளை, ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி, வாழை அனைத்தும் ஊட்டச்சத்துள்ள பழங்கள். ஆனால் நாம் இதை விட்டு விட்டு வெளிநாட்டுப் பழங்களை அதிக விலை கொடுத்து வாங்கி சாப்பிடுகிறோம். தினமும் நாம் சாப்பிடும் உணவுடன் ஒரு கப் ஏதாவது ஒரு பழம் சாப்பிட்டாலே போதம். குறிப்பாக வளரும் குழந்தைகள் தினமும் ஒரு வாழைப்பழம்

சாப்பிட வேண்டும். நம் உணவில் நன்கு வேகவைத்த உணவுகள், வேகைவைக்காத உணவுகள் மற்றம் அரைவேக்காடு உணவுகள் என மூன்றும் கலந்து இருக்க வேண்டும். அது ஆரோக்கியமாக வாழ வழிகாட்டும். பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். பசிக்காத போது தேவையில்லாமல் சாப்பிட வேண்டாம்.  வயிறு முட்டவும் சாப்பிடக்கூடாது. அதே சமயம் பசிக்கும் போது சாப்பிடாமல் இருக்கவும் கூடாது. இது வாயு, அல்சர் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். வெள்ளை நிறத்தில் இருக்கும் உணவுகளான அரிசி, சர்க்கரை, மைதா, போன்றவறை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. அரிசியில் தோல் நீக்கப்படாத கைகுத்தல் மற்றும் சிகப்பரிசியை பயன்படுத்தலாம். இதில் அதிக நார்ச்சத்து உள்ளது. வரகு அரிசியில் பொங்கல், சாமை அரிசியில் பிரியாணி, குதிரைவாலியில் தயிர்சாதம் என பல வகை தானியங்களில் சமைத்து சாப்பிடுவதை பழகிக் கொள்ள வேண்டும்”என்று சொன்னவர் இவை மிகவும் குறைந்த அளவில் விளைவிப்பதால், விலை அதிகம் என்றார்.

“தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் அதிகமாக விளைவிக்கப்பட்டு இருந்த இந்த சிறுதானியங்கள் தற்போது மிகவும் குறைந்த அளவே பயிர் செய்யப்படுகின்றன. அதனால் இதை ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் வரும் காலங்களில் நம் ஊரிலேயே அதன் விளைச்சல் அதிகமாகும், விலையும் குறையும்” என்கிறார்.

*           சோளத்திற்கு பதில் கம்பு, கேழ்வரகு, போன்ற-வற்றிலும் இது போல் தோசை செய்து சாப்பிடலாம்.

*           சிகப்பு அவலை ஊறவைத்து, வடிக்கட்டி, அதில் வெங்காயம், பருப்பு தாளித்து உப்புமா போல் கிளறி சாப்பிடலாம்.

*           எல்லா தானியங்களையும் தனித்தனியாக வறுத்து மாவாக அரைத்து வைத்துக் கொள்ளலாம். தேவைப்-படும் போது அதை தண்ணீரில் கரைத்து தோசை-யாகவோ, கஞ்சியாகவோ அல்லது சூப்பாகவோ செய்து சாப்பிடலாம்.

*           இந்த மாவில் சிறிது நெய் மற்றும் வெதுப்பான தண்ணீர் சேர்ந்து கொழுக்கட்டை போல் பிடித்து ஆவியில் வேக வைத்து சாப்பிடலாம், இதில் வெல்லம் சேர்த்தால் இனிப்பு கொழுக்கட்டையாகும். அதையே நெய் சேர்ந்து பிடித்தால் நவதானிய லட்டு,

 *          அரசும் அரசியை இலவசமாக கொடுப்பதற்கு பதில் இது போன்ற சிறுதானியங்களை குறைந்த விலையில் சந்தையில் அறிமுகப்படுத்தலாம்

---

சோள தோசை:

தேவையானவை

சோளம் - 3 கப், உளுந்து - 1 கப்

செய்முறை

இரண்டையும் தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு இரண்டையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொண்டு தோசைக்கல்லில் ஊற்றினால் மணமணக்கும் சோள தோசை தயார். இந்த மாவிலேயே சிறிது வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கி, பனியாரக் சட்டியில் ஊற்றினால் அது சோள பணியாரம். இந்த தோசையை அதிக எண்ணை இல்லாமலே மொறு மொறு வென்று சுடலாம். மேலும் இதனை சூடாக சாப்பிட வேண்டும். இதற்கு வேர்க்-கடலை சட்னி நல்ல காம்பினேஷன். வேர்க்கடலையில் உள்ள கொழுப்புச்சத்து, வளரும் குழந்கைளுக்கு மிகவும் நல்லது. அது அவர்களை போஷாக்காக வளர உதவும். உளுந்து மற்றும்  சோளத்தில் உள்ள புரதம், அவர்களின் வளர்ச்சிக்கு உகந்தது.

குறிப்பு : இந்த மாவு சீக்கிரம் புளித்து விடும் என்பதால், ஒரு நாளைக்கு தேவைப்படும் அளவு மட்டுமே அரைத்து கொள்ளலாம்.

நவம்பர், 2013 

logo
Andhimazhai
www.andhimazhai.com