என் சமையலறையில் : ஸ்ரீதேவி

என் சமையலறையில் : ஸ்ரீதேவி
Published on

ஸ்ரீதேவிக்கு நாடகம் என்றால் உயிர். நடிப்பும் அப்படித்தான். இவர் ஷங்கரின் நண்பன் படத்திலும், மணிரத்னத்தின் கடல் படத்திலும்  நடித்திருக்கிறார். தற்போது ஆனந்தக்கூத்துப் பட்டறை என்ற பெயரில் நடிப்புப் பயிற்சி கொடுத்துவரும் ஸ்ரீதேவியை அவரது சமையலறையில் சந்தித்தோம்.

‘நான் நாடகம் மேல ஆர்வமாகி சென்னைக்கு வந்து பதினைஞ்சு வருஷமாச்சு. சின்ன வயசுலயே நான் எதுவுமே சமைக்கக் கத்துக்கலை. சென்னைக்கு வந்து வீடு எடுத்து தங்கவேண்டிய சூழல் வந்தப்பதான் சமைக்கவே ஆரம்பிச்சேன். முதல்ல சாதம், சாம்பார்னு சமைச்சேன். அப்பப்ப சிக்கன் குழம்பு வைப்பேன். அது கொஞ்சம் பரவா இல்லாம இருக்கும். ஆனா இப்ப ரொம்ப நல்லா சிக்கன் குழம்பு வைப்பேன்.

சமைக்கும்போது எதாவது சந்தேகம் வந்தா வீட்டுக்குப் போன் பண்ணி அம்மாகிட்ட கேட்பேன். என்னுடைய தோழி ரஞ்சனிகிட்டயும் சமையல் சந்தேகங்களைக் கேட்டுக்குவேன். ரஞ்சனி ரொம்ப அருமையா சமைப்பாங்க. நான் எப்ப அவங்க வீட்டுக்குப் போனாலும் அசைவம்தான் சமைக்கணும்னு சொல்லிடுவேன். சில நேரங்கள்ல அவங்க வீட்டுல சாப்பிடுறதுக்காகவே கிளம்பிப் போவேன்.

எங்க அம்மா ஆந்திரா ஸ்டைல்ல பருப்புக் கடைவாங்க. பருப்பு, காய்ஞ்ச மிளகாய், தக்காளி, புளி எல்லாம் போட்டு கடைவாங்க. இத அடிக்கடி வீட்டுல செய்வாங்க. ஏன்னா எங்க வயல்ல பருப்பு போட்டிருக்கோம். கடைல வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. அதனால  எப்பவும் பருப்புக்கடையல், பயறுகுழம்புதான்.

அப்புறம் பச்சைமொச்சையை கறிக்குழம்பு மாதிரி வைப்பாங்க. அது ரொம்ப நல்லாருக்கும். நிலத்துல இருந்து பறிச்சிட்டு வந்து தோலுரிச்சு இரவெல்லாம் ஊறவைச்சு செய்வாங்க.

எங்க அம்மாவோட இன்னொரு ரெசிபி பாசிப்பருப்பு கடிகாரம். ஒரு ஜாங்கிரி மாதிரி வடிவத்துல ஆனா தோசை மாதிரி அகலத்துல எண்ணெயில பிழிஞ்சு எடுப்பாங்க. அதை இனிப்போட இல்ல காரத்தோட சேர்த்து சாப்பிட்டா அவ்வளவு சுவையா இருக்கும். நாக்குல அந்த சுவை ரொம்ப நேரத்துக்கு இருந்துகிட்டே இருக்கும். தொட்டுக்கொள்ள இல்லாமகூட சுடச்சுட சாப்பிடலாம். எனக்கு பிடிச்ச உணவுகள்ல இதுவும் ஒண்ணு.

நான் மட்டன், சிக்கன், நண்டு, இறால், மீன் இதெல்லாம் அடிக்கடி செய்வேன்.  வெளியில சாப்பிடுறதுனா ப்ளெயின் பிரியாணியோட தவா ஃபிஷ், பெப்பர் சிக்கன் தான் ஆர்டர் பண்ணி சாப்பிடுவேன். தவா ஃபிஷ் எனக்கு ரொம்ப பிடிக்கும் ’ என்கிறார் ஸ்ரீதேவி.

பாசிப்பருப்பு கடிகாரம்

தேவையான பொருட்கள்:

அரிசி - 200 கிராம், பாசிப்பருப்பு - 200 கிராம்

செய்முறை:

அரிசியையும், பாசிப் பருப்பையும் நான்கு மணி நேரம் ஊறவைத்து அதை இட்லி மாவு பதத்திற்கு மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும். உப்பு போட்டுக் கரைத்துக் கொள்ளவும். கண்ணுள்ள கொட்டாங்குச்சியை எடுத்துக் கொள்ளவும். அதில் ஒரு துளையிட்டு மாவை அதில் ஊற்றி எண்ணெயில் பிழிந்து முறுக்குபோல் வேகவிட்டு எடுக்கவும். இருப்புச் சட்டி முழுக்க ஒரே முறுக்குபோல் பெரிதாக சுட்டு எடுக்கவும். இதனுடன் தொட்டுக் கொள்ள பாயாசம் அல்லது சிக்கன் கிரேவி அருமையாக இருக்கும். மாவைப் புளிக்க வைக்கத் தேவையில்லை. மாவாட்டியதும் சுடலாம்.

சீய உருண்டை

தேவையான பொருட்கள்:

அரிசிமாவு தேவையான அளவு, பச்சைப் பயறு - 100 கிராம், வெல்லம் 50 கிராம், ஏலக்காய்த்தூள் சிறிதளவு

செய்முறை:

பாசிப்பயறை நன்றாக வேகவைத்து அதனுடன் நன்கு பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள் இவற்றைச் சேர்த்து உருண்டை பிடித்துக் கொள்ளவும். பின்னர் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்த அரிசிமாவில் அந்த உருண்டையை தோய்த்து உருட்டி எண்ணையில் பொரித்து எடுத்துவிட வேண்டும்.

நண்டு கிரேவி

தேவையான பொருட்கள்:

நண்டு கால்கிலோ, இஞ்சி சிறிதளவு, பூண்டு- சிறிதளவு, மிளகு- சிறிதளவு, சீரகம் சிறிதளவு, மிளகாய்ப்பொடி தேவையான அளவு, கருவேப்பிலை சிறிதளவு,

மஞ்சள் பொடி- சிறிதளவு, வெங்காயம் சிறிதளவு, சோம்பு சிறிதளவு

செய்முறை: நண்டை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு, கருவேப்பிலை இவற்றை நன்கு அரைத்துக் கொள்ளவும். பின்னர் எண்ணெய் காய்ந்ததும் சோம்பு, வெங்காயம் தாளித்து அரைத்து வைத்த விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பின் சுத்தம் செய்த நண்டைச் சேர்த்து தண்ணீர் மற்றும் சிறிது மிளகாய்ப்பொடி, மஞ்சள் பொடி சேர்க்கவும். வெந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும். இதே முறையில் இறாலையும் சமைக்கலாம்.

நவம்பர், 2016.

logo
Andhimazhai
www.andhimazhai.com