த்ரிஷ்லா ஒரு யோகா பயிற்றுநர். இராஜஸ்தானைப் பூர்விகமாகக் கொண்ட இவர் சென்னையில் வசித்து வருகிறார். ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர் என்பதால் யோகாவிலும், சமையலிலும் பிறருக்கு வழிகாட்டுபவர்.
யோகா கற்றுக்கொள்ளும்போது அதனூடாக உணவுமுறையும் அவசியம் என்பதால் அது குறித்த அதிகம் கற்றுக்கொண்டவர். தேனாம்பேட்டையில் இருக்கும் அவரைச் சந்தித்ததிலிருந்து...
‘எனக்கு விவரம் தெரிஞ்சு அதாவது 12 வயசுல இருந்தே கொஞ்சம் கொஞ்சமா சமைக்கக் கத்துக்கிட்டேன். ஆனா 21 வயசுல திருமணமாகி வந்தபிறகுதான் இங்கே எல்லாருமே மண்சட்டியில சமைக்கிறாங்க அப்டிங்றத பாத்து ஆச்சர்யப்பட்டேன். நானும் மண்சட்டியில சமைக்கக் கத்துக்கிட்டேன். அதுல சமைக்கிறதால கிடைக்கிற நன்மைகளைத் தெரிஞ்சுக்கிட்டப்போ இன்னும் ஆர்வம் அதிகமாச்சு.
காலையில உப்புமாவுல இருந்து இரவு டிபன் வரைக்குமே மண்சட்டியில செய்யப் பழகிட்டேன். இவ்வளவு ஏன் வடை கூட அதுலதான் செய்வேன். மண்சட்டியில சமைக்கும்போது பூமியோட நேரடி தொடர்பில் இருக்கிற உணர்வு கிடைக்கும். பூமியோட சக்தியையும் பயன்படுத்துகிறோம்னு சமைச்சுப்பாத்தாதான் புரிய ஆரம்பிக்கும். அதேபோல மண்சட்டியில எத்தனை சூடாக்கினாலும் சமைக்கிற பொருட்களோட சத்துக்கள் அழியாது. சுவை கூட மாறாது. காலையில் சமைச்சுட்டு சாயங்காலம் மறுபடி சூடு பண்ணி சாப்பிட்டா கூட அப்போதான் புதுசா சமைச்ச மாதிரி இருக்கும்.
எனக்கு வெளில போய் சாப்பிடறது பிடிக்கவே பிடிக்காது. யோகாவுல இருக்கிறதால வெளி சமையல முடிஞ்சவரை தவிர்த்துடுவேன். அப்படியே சாப்பிடுறதா இருந்தாலும் அவிச்ச பொருட்களா வேர்க்கடலை, சுண்டல் மாதிரி சாப்பிடுவோம். உணவுகள்ல வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய் சேர்க்க மாட்டேன். பெருங்காயம் கூட அதிகம் சேர்க்க மாட்டேன். இதெல்லாம் மருந்து பொருட்களா இருந்தாலும் கூட தினமும் சேர்க்கக் கூடாதுனு நினைப்பேன். தினமும் மிளகும், இஞ்சியும் சேர்த்துக்கிறது உண்டு. எங்க வீட்டுல கல்லுப்புதான் பயன்படுத்துறோம். வாங்கிட்டு வந்ததும் மிக்ஸில அரைச்சு வைச்சுக்குவேன். எல்லாமே அளவோட இருந்தா உடம்புக்கு நல்லது.
நம்ம உடம்புக்கு எது ஒத்துக்குதுனு கண்டுபிடிச்சு சேர்த்துக்கணும். ஏதாவது சாப்பிட்டதும் வாந்தியோ, வயிற்றுப்போக்கோ வந்தா அந்த உணவை உடம்பு ஏத்துக்கலைனு புரிஞ்சுக்கணும். அதேபோல சாப்பிட்டு மூணு மணி நேரம் கழிச்சுகூட வயிறு நிறைஞ்ச உணர்வு இருந்தா கூட அந்த உணவை அதிகம் எடுத்துக்கக் கூடாது. எந்த உணவு சாப்பிட்டாலும் மூணு மணி நேரத்துக்குப் பிறகு இலகுவா இருக்கணும். இது ரொம்ப நல்லதுனு ஒரு உணவை எடுத்துக்காம உடம்பு ஏத்துக்கிற உணவை எடுத்துக்குறது அவசியம்.
ஒரு சமையல எப்படி சமைக்கிறாங்க அப்டிங்றதவிட எந்த மாதிரியான உணர்வோட சமைக்கிறாங்கங்றது ரொம்ப முக்கியம். வீட்டுல சமைக்கும்போது, இந்த சாப்பாடு எல்லாருக்கும் பிடிக்கும். இன்னைக்கு சமையல்ல இதெல்லாம் கலந்துருக்கிறதால எல்லாருக்கும் இந்த சத்துக்கள் எல்லாம் கிடைக்கும். அப்டிங்ற மனநிலையில சமைப்போம். அதனால அந்த சமையல சாப்பிடுறவங்களுக்கு அதெல்லாம் இயல்பா கிடைச்சுடும். நம்ம எண்ணங்களும் கூட சத்துக்களா மாறுதுனு முழுசா நம்புறேன். நான் அப்படித்தான் சமைக்கிறேன்.
என்னோட கணவர் கூட எலக்ட்ரானிக் பிசினஸ்தான் பண்றார். ஆனாலும் எலக்ட்ரானிக் பொருட்களை என்கரேஜ் பண்றதில்லை. எனக்கு குக்கர் சமையல் பிடிக்காது. எந்தப் பொருளையும் மிக வேகமா சமைக்கிறது நல்லதில்ல. இப்பலாம் மைக்ரோ ஓவ் அவன் சமையல் ரொம்ப அதிகமா இருக்கு. இதோட கேடு பெரும்பாலும் யாருக்கும் புரியுறதில்ல.
எனக்கு எண்ணெய் இல்லாம சமைக்கிறதும் ரொம்ப பிடிக்கும். நான் சமைச்ச அந்த சமையல்ல எண்ணெய் இல்லைனு நான் சொன்னாதான் உங்களுக்குத் தெரியும். சாம்பார் செஞ்சு பார்த்தேன். அதுவும் மண்சட்டியிலதான். எண்ணெய் இல்லாம சமைக்கிறதுக்கும், எண்ணெயோட சமைக்கிறதுக்குமான வித்தியாசம் தெரியவே இல்லை. சில பேருக்கு எண்ணெய் அதிகம் சேர்க்கக் கூடாதுனு சொல்லியிருப்பாங்க. என்னோட சமையல்ல நெய், எண்ணெய் எல்லாமே கொஞ்சமா சேர்த்துப்பேன்.
குக்கர்ல சமைக்கிறது, அத ஃபிரிட்ஜ்ல வைக்கிறது, மைக்ரோ வேவ் அவன்ல சூடு பண்றதுனு எல்லாமே உடம்புக்கு அத்தனை நல்லதில்ல. மறுபடி சூடு பண்ணனும்னு நினைச்சா ஒரு பாத்திரத்துல தண்ணீர் வைச்சு சமைச்ச பொருளை ஒரு பாத்திரத்தில வைச்சு சூடு படுத்தினா கூட அது கொஞ்சம் பரவாயில்லனு தோணுது. சமைக்கிற முறைகள்ல சின்னச் சின்ன மாற்றங்கள் செஞ்சுக்கிட்டா புற்றுநோய் மாதிரியான நோய்கள் வருவதைக் கூட தடுத்துக்கலாம். பழைய விஷயங்களை எல்லாம் திரும்பக்கொண்டுவருவது மூலமா நல்ல அழகான ஆரோக்கியத்தைப் பெற முடியும்னு நம்புறேன். அதை கடைப்பிடிச்சு நாங்க ஆரோக்கியமாவும் இருக்கிறோம்‘‘ என்கிறார் திரிஷ்லா.
பொரி பாக்கெட் பு, தக்காளி பு, பச்சை மிளகாய் சு, எண்ணெய் சு ஸ்பூன், கடுகு பு டீஸ்பூன், பொட்டுக்கடலை சு டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிது, கொத்தமல்லி சிறிது, எலுமிச்சை அரை மூடி
கேரட் பு, வெள்ளரி பு, இஞ்சி சிறிதளவு
பொரியை சலித்து சிறிது தண்ணீர் தெளித்து ஐந்து நிமிடம் ஊறவைக்கவும். தக்காளி, பச்சை மிளகாய், கொத்த மல்லி தழை, கறிவேப்பிலை இவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்துக் கொள்ளவும். கடுகுடன் பொட்டுக்கடலை சேர்த்து பொன்னிறமாக தாளிக்கவும். பிறகு நறுக்கி வைத்திருப்பவற்றை நன்கு வதக்கவும். தேவைப்பட்டால் இஞ்சி துருவி சேர்த்துக் கொள்ளலாம். தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும். பின்னர் ஊறவைத்த பொரியைச் சேர்த்து சூடானதும் கொத்தமல்லி தூவி இறக்கவும். இதனை காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
புளிப்புச்சுவை தேவையெனில் எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் நறுக்கிய கேரட்டும், வெள்ளரியும் சேர்த்துக் கொண்டால் சுவை கூடும்.
ஜனவரி, 2018.