என் சமையலறையில் : சபீனா

ஒருமுறை செய்த தவறை திரும்பவும் செய்யக் கூடாது!
என் சமையலறையில் : சபீனா
Published on

திருச்சியைச் சேர்ந்த ஃபேஷன் டிசைனர் சபீனா இந்த மாத என் சமையலறை பகுதிக்காக நம்முடன் பேசுகிறார்...

“முதன் முதல்ல நான் வைச்ச  சாம்பார் சாப்பிட்டுப் பார்த்தா இனிச்சது.  சின்ன வெங்காயமும், உருளைக்கிழங்கும் சேர்க்கும்போது கொஞ்சம் காரம் அதிகமா போடணும்னு அப்புறமா தெரிஞ்சுக்கிட்டேன். இன்னொரு தடவை வெண்டைக் காய் சாம்பார் வைக்கிறேன்னு வெண்டைக்காயை வதக்காம அப்படியே போட்டுட்டேன். கொழம்பு கொழகொழன்னு ஆகிடுச்சு. அப்பதான் பக்கத்து வீட்டுல இருந்தவங்க ‘நீ கூட பரவாயில்லைமா.. நான் ஒரு காரியம் பண்ணேன் பாரு’னு சிரிச்சுக் கிட்டே ஒண்ணு சொன்னாங்க.

அவங்களுக்கு கல்யாணமான புதுசுல சமைக்க ஆரம்பிச்சப்போ பீட்ரூட் கூட்டு வைக்கிறேன்னு பீட்ரூட்டை நறுக்கி தண்ணீல போட்டு அலசிருக்காங்க. தண்ணீ சிகப்பு கலரா மாறிடுச்சு. மறுபடி மறுபடி அலசி பாத்துட்டு அப்டியே சமைச்சிருக்காங்க. அப்புறம்தான் பீட்ரூட்டைக் கழுவிட்டு தோலை சீவி நறுக்கணும்னே அவங்க கத்துக்கிட்டாங்களாம். இதைக் கேட்டு நானும் விழுந்து விழுந்து சிரிச்சாலும் ஒண்ணை மட்டும் மனசுல வைச்சுக்கிட்டேன். ஒருமுறை சமையல்ல ஒரு தப்பு பண்ணா திரும்ப அதை பண்ணவே கூடாதுங்றதுதான் அது. இன்னைக்கு நான் செய்ற பிரியாணிக்கு மொத்த குடும்பமும் ஆஜராகிடும். நானும் கல்லூரி முடிக்கும் வரை சமையல் கட்டுப் பக்கம் போகாமல் படிப்பே கதியென்று இருந்து விட்டுத் திருமணத்திற்கு பிறகு சமையல் கற்று அதில் கைதேர்ந்தவள் ஆனவள்தான்.

எனக்கு ரெண்டு நாத்தனார் இருக்காங்க. அவங்க எங்க வீட்டுக்கு வர்றாங்கனா முதல் மெனு பிரியாணிதான். முதல்ல நான் அசைவம் சமைக்கும்போது அப்பப்போ அம்மாகிட்ட சந்தேகம் கேட்டுக்குவேன். திருமணத்திற்கு பிறகு கொஞ்ச நாள் கேரளா போயிருந்தோம். அங்கேதான் மீன் நானே நறுக்கி சுத்தம் செய்யக் கத்துக்கிட்டேன். கேரளாவுல அடிக்கடி மீன் தான் வாங்கி செய்வேன். வாரத்துல மூணு நாள் மீன் சமையல்தான். நண்டு, இறால் கூட வாரம் ஒரு தடவை சமைச்சுடுவேன்.

நாங்க வாரத்துக்கு ஒரு தடவை வெளில போய் சாப்பிடுவோம். அப்போ வீட்டுல செய்யாத உணவுகளா ஆர்டர் பண்ணுவோம். எங்க வீட்டுல நெய் அதிகம் சேர்த்துக்குவோம். எனக்கு ஒரே பையன். அவனுக்கு அடிக்கடி சூப் செஞ்சுக் கொடுப்பேன். புரதச் சத்து அதிகம் தேவைங்றதால எங்க வீட்டுல வாரத்துக்கு ரெண்டு தடவை உளுந்தம் பாயாசம் செஞ்சுக் கொடுப்பேன். அதுமட்டுமில்ல தினமும் ஒரு முட்டை எடுத்துக் கணும். ஒரு பழமாவது சாப்பிடணும்னு உணவு விஷயங்கள்ல கொஞ்சம் கவனமா இருப்பேன்.

பெரும்பாலும் குழந்தை பிறந்த பிறகு நிறைய பெண்களுக்கு தொப்பை விழ ஆரம்பிச்சுரும். எனக்குக் குழந்தை பிறந்த அஞ்சாவது நாளே நான் சமைக்க ஆரம்பிச்சுட்டேன். வீட்டு வேலையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா பாக்க ஆரம்பிச்சுட்டேன். பத்து நாள்ல எல்லா வேலையும் பார்த்தேன். ரொம்ப நடப்பேன்.  நான் ஆடை வடிவமைப்புத் துறையில் இருப்பதால் எனக்கு டெய்லரிங் வொர்க் நிறைய இருக்கும். அதனால் நடைப்பயிற்சி இருக்காது. எனவே நடைப்பயிற்சியில் கவனம் செலுத்தினேன். அதெல்லாம் கூட ஆரோக்கியமா இருக்கிறதுக்கு முக்கியமான காரணம்னு நினைக்கிறேன்.

எனக்கு சிறுதானிய சமையலும் கூட கொஞ்சம் கொஞ்சம் தெரியும். அப்பப்போ தினைப் பாயாசம், சாமை பொங்கல்னு செய்வேன். எனக்கு எது சமைக்கணும்னாலும் ஒரு மணி நேரம்போதும். பத்து பேரு திடீர்னு வந்தா கூட சமாளிச்சுடுவேன்’ என்று சிரித்துக் கொண்டே கூறுகிறார் சபீனா.

உளுந்து பாயசம் :

தேவையான பொருட்கள்:

உளுந்து - 100கிராம், வெல்லம் - 100 கிராம், பால் - ஒரு டம்ளர், ஏலக்காய் - 4, சுக்கு - சிறு துண்டு, தேங்காய் துருவல் - ஒரு கைப்பிடி

செய்முறை:

உளுந்தை ஊற வைத்து நன்கு களைந்து மிக்ஸியிலோ, கிரைண்டரிலோ அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து அடுப்பில் வைத்து கிளறவும். கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். இல்லை-யென்றால் அடி  பிடித்துவிடும். நன்கு வெந்ததும் பால் மற்றும் வெல்லம் சேர்த்துக் கிளறவும். அடுப்பில் இருந்து இறக்கும் முன் ஏலக்காய், சுக்கு தட்டி வெறும் தூளை மட்டும் சேர்த்து இறக்கவும். இறக்கி வைத்துக் கொண்டு தேங்காய் துருவலை சேர்த்து கரண்டியால் நன்கு கிளறவும். சுவையான உளுந்து பாயாசம் ரெடி.

இறால் தொக்கு :

தேவையான பொருட்கள்:

இறால் அரைகிலோ, நல்லெண்ணெய் - இரண்டு டீஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது&2 டீஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய்,- தலா 3 (தாளிக்க), சின்ன வெங்காயம் - 50 கிராம், தக்காளி இரண்டு, மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் அரை ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை சிறிதளவு.

செய்முறை:

எண்ணெயை ஊற்றி சூடாகியதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், கருவேப்பிலை சேர்த்து ஒன்றன்பின் ஒன்றாய் தாளிக்கவும். நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கி, அதனுடன் நன்கு சுத்தம் செய்து கழுவிய இறாலுடன் உப்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். தண்ணீர் வற்றி நன்கு வெந்ததும் இறக்கவும்.

ஆகஸ்ட், 2017.

logo
Andhimazhai
www.andhimazhai.com