என் சமையலறையில் : ஊர்வசி

என் சமையலறையில்  : ஊர்வசி
Published on

ஊர்வசியின் வீடு எம்.ஜி.ஆர் நகரில் இருக்கிறது. எப்போதும் சிரித்த முகம். அதனாலேயே நண்பர்கள் அதிகம். அத்துடன் சமையல் செய்வதிலும் அதீத ஆர்வம். அவரின் சந்திப்பிலிருந்து...

‘ நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சைதாப்பேட்டை தான். எனக்கு கல்யாணம் ஆன புதுசுல சமைக்கத் தெரியாது. எங்க வீட்ல நான்  சமைச்சது இல்லை. கல்யாணத்துக்கு அப்புறம் எங்க அத்தை சமைக்கிறத பார்த்து பார்த்து தான் நானே கத்துக்கிட்டேன்.  

பொங்கல் தீபாவளி தவிர வேற எந்த விசேஷங்களுக்கும் நாங்க அசைவம் செய்ய மாட்டோம். எங்க குலசாமி கோட்டை முனீஸ்வரர். அந்த சாமிக்கு படையல் போடும்போது அன்னைக்கு முழுக்க அசைவம் மட்டும் தான் செய்வோம். மீன் குழம்பு, மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு, சிக்கன் வறுவல், முட்டை அப்படின்னு அசைவமா தான் செய்வோம்.

எங்க மாமியார் சமையல்ல எனக்கு மட்டன் குழம்பு ரொம்ப பிடிக்கும். அவங்க எல்லா குழம்பும் நல்லா செய்வாங்க. நான் மீன் குழம்பு ரொம்ப நல்லா செய்வேன். அவங்களுக்கு நான் வைக்கிற மீன் குழம்பு ரொம்ப பிடிக்கும்.

என்னோட சமையல்ல வதக்கும்போது வெங்காயம் போட்டதும் உப்பும் மஞ்சள் தூளும் போட்டுருவேன். அப்பதான் சீக்கிரம் வதங்கும். கேஸ் மிச்சமாகும். தக்காளி, வெங்காயம் பாதி வதக்கும்போது கொஞ்சம் எடுத்து அதை நன்றாக ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து குழம்பில் சேர்த்து கொள்வேன். அப்பதான் குழம்பு ரொம்ப கெட்டியா இருக்கும்.

கருவேப்பிலை, கொத்தமல்லி, தக்காளி, வெங்காயம் இதெல்லாம் சாப்பிடும்போது தூக்கிப்போட்டுடுவாங்க. அப்படி தூக்கி போட கூடாதுங்கறதுக்காக அரைச்சு சேத்துடுவேன்.  ஆனால் குழம்ப கடைசியில் இறக்கும் போது கொஞ்சம் கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி விட்ருவேன்.

அதே மாதிரி புளிக்குழம்பு செய்யும் போது புளியை முதல்லயே சேர்க்காம கொஞ்சம் வதக்கி விட்டு தண்ணீர் சேர்த்து கொதிக்க வச்சு முக்கால்வாசி வெந்ததும் அதுக்கப்புறம் தான் புளி ஊத்துவேன். நிறைய வீடுகளில் முதலிலேயே புளியை ஊத்தி அப்புறமாதான் காயெல்லாம் போடுவாங்க. அப்படி செய்யும்போது வேகுறதுக்கு நேரம் ஆகும்.  எனக்கு கல்யாணத்துக்கு முன்னால மீன் குழம்பும் கருவாட்டு குழம்பு தான் வைக்கத் தெரியும். எங்க வீட்டுல AiUPi செய்வோம். அதனால நான் அதை செய்ய கத்துக்கிட்டு கடைசியாக கைப்பக்குவம் ஒன்னு அமைஞ்சிடுச்சு. எல்லா காயும் போட்டு இந்த கூழுக்கு தொட்டுக்கறது மாதிரி செய்வோம். அது எங்க வீட்ல எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். என் குழந்தைகளும் நான் வைக்கிற மீன் குழம்பை ரொம்ப ஆசையா சாப்பிடுவாங்க.

அதேபோல நான் இனிப்பு பலகாரங்கள், பொங்கல் ஏதாவது செய்யும் போது ஏலக்காய் பொடி தான் போடுவேன். ஏலக்காயை கொஞ்சம் சர்க்கரையோடு சேர்த்து அரைச்சு வைச்சுக்கிட்டா ரொம்ப நைஸாக ஆகிடும். இனிப்பு பலகாரங்கள் ரொம்பசுவையாகவும் இருக்கும்.

என் கணவரும் நேரம் கிடைக்கும்போதெல்லாம்     சமையல் செய்வார். புதுசு புதுசா கத்துக்கிட்டு செய்து தருவார். பெரும்பாலும் எல்லாமே டேஸ்ட்டா இருக்கும். அவர் யூட்யூப் பார்த்துதான் செய்வார். ஒரு ரெசிபி செய்றார்னா நாலைஞ்சு சேனல் பார்த்து அதுல எது பெஸ்ட்டோ அதை செய்வார்

பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லும்போது தினமும் ஸ்நாக்ஸ் கொடுத்து விடும் போது முளைக்கட்டிய தானியங்கள் கொடுத்துவிடுவேன்.

எங்க வீட்டுல நாட்டுச்சக்கரை, மரச்செக்கில் ஆட்டிய எண்ணெய், இந்துப்பு இதுதான் பயன்படுத்துறோம். வீட்டிலேயே தக்காளி தொக்கு, ஊறுகாய் எல்லாமே பண்ணி வச்சுடுவேன். விலை குறைவா கிடைக்கும்போது  தக்காளி, நெல்லிக்காய் வாங்கி வந்து செஞ்சு வெச்சுடுவேன். பதினைந்து நாளைக்கு வெச்சு  சாப்பிடலாம். ரொம்ப டேஸ்டா இருக்கும்.

பந்திக்கு முந்து படைக்கு பிந்து என்று சொல்லுவாங்க.  சாப்பிடும் போது கையை முன்னாள் கொண்டு போறோம் இல்லையா அதுனால கை சாப்பாட்டுக்கு முன்பு இருக்கும். அதே மாதிரி அந்தக் காலத்தில்  வில் வச்சுதானே சண்டை போடுவாங்க. கைய  பின்னால வைக்கணும். அப்படிங்கறதுதான்  பந்திக்கு முந்து படைக்கு பிந்து என்று சொன்னாங்க''

என்று சுவாரசியமாக பேசும் ஊர்வசி பெண்களுக்கான ஓர் அமைப்பில் செயல்படுகிறார். அந்த அமைப்பின் மூலமாக பெண்களுக்கான நிறைய பிரச்சினைகள் பற்றியான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகக் கூறுகிறார். அவர் அந்திமழை வாசகர்களுக்காக அளிக்கும்  இரு சமையல் குறிப்புகள் இங்கே இடம்பெறுகின்றன.

கல்யாண கேசரி

தேவையானப் பொருட்கள்

ரவை - 2 கப்,

சர்க்கரை - 3 கப்,

தண்ணீர் - 4 கப்,

முத்திரி - 10, அன்னாசி துண்டுகள்,

மாதுளை,

கொட்டை இல்லாத பச்சை திராட்சை அனைத்தும் சேர்த்து ஒரு கப்,

நெய் - 50 கிராம், குங்குமப்பூ - 10 இதழ்

செய்முறை

பாத்திரத்தில் நெய்விட்டு முந்திரியை பொன்னிறமாக பொறிக்கவும். பின்னர் ரவையை இட்டு பொன்னிறமாக வறுக்கவும். மற்றொரு அடுப்பில் தண்ணீரை கொதிக்கவைத்து ஒரு தேக்கரண்டி வெந்நீரில் குங்குமப்பூவை இட்டு ஊறவைக்கவும். ஊறவைத்த குங்குமப்பூ நீர் மற்றும் வெந்நீர் இரண்டையும் கலந்து அடுப்பில் தயாராகிக்கொண்டு இருக்கும் ரவையில் ஊற்றி வேகமாக கிளறவும். ரவை கட்டியாகாத அளவிற்கு கிளறவேண்டும். பின்னர் சர்க்கரையை கொட்டி கிளறவும், இளகிய பதத்துக்கு வந்ததும் மீதமுள்ள நெய்யை ஊற்றி 2  நிமிடம் கிளறிவிட்டு பின்னர் பழங்களை இட்டு ஒரு நிமிடம் கிளறி இறக்கி பறிமாறலாம். சூடான, சுவையான கல்யாண கேசரி விருந்துக்கு ஏற்ற மெனு.

தக்காளி ஊறுகாய்

தேவையானப் பொருட்கள்

நாட்டுத் தக்காளி - 1 கிலோ,

 செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் - 100 கிராம்,

 பெருங்காயம் - அரை தேக்கரண்டி,

வறுத்து பொடித்த கடுகு,

வெந்தயப் பொடி - 2 தேக்கரண்டி,

தாளிக்க கடுகு - சிறிதளவு,

பூண்டு - 20 பல்,

மிளகாய் பொடி - 3 தேக்கரண்டி

செய்முறை:

தக்காளியை விழுதாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பூண்டு, -வெந்தயப் பொடி தூவி வதக்கவும். மிளகாய்ப் பொடி தூவி மீண்டும் வதக்கி தக்காளிவிழுதைக் கொட்டி நன்கு வதக்கவும். எண்ணெய் மிதக்கும் வரையில் நன்கு கொதிவந்தபிறகு இறக்கி ஆறவைத்து பாட்டிலில் அடைத்துவைத்துக் கொள்ளலாம். 15 நாள் பிரிட்ஜில் வைத்து பாதுகாக்கலாம். இட்லி, தோசை, சப்பாத்தி உள்ளிட்ட அனைத்து டிபன் வெரைட்டிக்கும் ஏற்ற சைட்டிஷ் தக்காளி ஊறுகாய்.

அக்டோபர், 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com