ஆயிரம் எபிசோடுகளைக் கடந்து வெற்றிகரமாக முடிவுற்ற நாதஸ்வரம் சீரியலில் திருமுருகனுக்கு தங்கையாக நடித்தவர் ஸ்ருதி. ஐந்தாண்டுகளாக தினம் தோறும் நம் வீடுகளின் வரவேற்பறைக்கு வந்துகொண்டிருந்தவர். கோயமுத்தூரைச் சேர்ந்த இவர் நடிப்புத் துறைக்குள் வந்தது அவரே எதிர்பாராத திருப்பம்.
கோயமுத்தூரில் நாதஸ்வரம் ஆடிஷன் நடந்து கொண்டிருக்கும்போது ஸ்ருதி மேல்நிலைப் பள்ளி மாணவி. அவரது சித்தி ஆடிஷனுக்கு செல்லும்போது துணைக்குச் சென்றவர் தானும் கலந்துகொண்டு தேர்வாகியிருக்கிறார். ஆனாலும் நடிப்பிற்காக படிப்பை விடாமல் தொடர்ந்து பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துவிட்டு தற்போது எம்.சி.ஏ இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறார்.
“நடித்தாலும் படிப்பைக் கண்டிப்பாக தொடர்ந்து கொண்டுதான் இருப்பேன். நமது வாழ்க்கையில் படிப்புதான் கடைசி வரையில் நமக்கு உதவியாக கூடவே வரும் என்பதால் படிப்பை நிறுத்தாமல் தொடர்கிறேன். ஐந்து வருடங்கள் தொடர்ந்த நாதஸ்வரம் முடிந்து விட்டது. எல்லாம் கனவுபோல் முடிந்து மிகுந்த ஆச்சர்யமாக இருக்கிறது. நல்ல வரவேற்பு கிடைத்தது. என்னை பெரிய இடத்தில் அமர்த்திவிட்டது. இன்னும் ஒரு மாதத்தில் மற்றொரு புதிய சீரியலில் நடிக்க இருக்கிறேன். எனக்கு தேர்வு நடந்து கொண்டிருப்பதால் கொஞ்சம் இடைவேளையில் இருக்கிறேன். தேர்வு முடிந்ததும் தொடர்ந்து நடிப்பேன்.
படிப்பும், நடிப்பும் சமமாக செல்வதால் வீட்டில் எனக்கு எந்த ஒரு தடையும் இருந்ததில்லை. வீட்டில் எனக்கு எப்போதும் உற்சாகமே தந்திருக்கிறார்கள். ஒரு வேளை நான் படிப்பை நிறுத்தி இருந்தால் தடை சொல்லியிருக்கலாம்.” என்றவரிடம் சமைக்கத் தெரியுமா? எனக் கேட்டதும் சட்டென பதில் வந்தது.
‘இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா சமைக்கக் கத்துக் கிட்டு இருக்கேன். ஓரளவு நல்லா சமைப்பேன். அம்மா சூப்பரா சமைப்பாங்க.’ என சமையல் குறித்து பேச ஆரம்பித்தார்.
“எப்படி திருநெல்வேலி தமிழ், கோயமுத்தூர் தமிழ்னு இருக்கோ அது மாதிரி சமையல்லயும் எங்க கோயமுத்தூருக்குன்னு தனி சமையல் வகை இருக்கு. நாங்க பிரியாணிக்கு பாஸ்மதி அரிசி உபயோகப்படுத்தமாட்டோம். பிரியாணிக்கு சீரக சம்பா அரிசிதான் பயன்படுத்துவோம். குழம்பு வகைகள்ல புளி போடுறது குறைச்சல்தான். தேங்காய் அரைச்சு ஊத்தி குழம்பு வைப்போம். காரமும் அதிகமா இருக்காது. மீடியமாதான் இருக்கும். எனக்கு சாப்பாட்டுல கோயமுத்தூர் சமையல்தான் பிடிக்கும். ஆனால் இப்ப காரைக்குடி சமையல்தான் பிடிக்கும்.
காரைக்குடில நாதஸ்வரம் ஷீட்டிங் நடக்கும்போது விதவிதமான செட்டிநாட்டு சமையல ருசிக்கக் கத்துக்கிட்டேன். அஞ்சு வருஷம் சூட்டிங்ல முழுக்க முழுக்கக் காரைக்குடி சமையல்தான். இன்னும் அந்த ருசி நாக்குல ஒட்டிட்டிருக்கு. எனக்கு ரொம்ப பிடிச்சதால காரைக்குடி ஸ்பெஷலா மட்டன் உப்புக்கறி செய்யக் கத்துக்கிட்டேன்.
காரைக்குடியில் நான்வெஜ்தான் ரொம்ப ஸ்பெஷல். இறால், நண்டு, காடைனு செமத்தியான சாப்பாடா இருக்கும். எனக்கு இறால் தொக்கு, நண்டு மிளகு வறுவல், காடை வறுவல் எல்லாமே ரொம்ப இஷ்டம். பெரும்பாலும் காரைக்குடி, ராமநாதபுரம் பகுதிகள்லதான் காடை எல்லாம் கிடைக்கும். அப்புறம் நாட்டுக்கோழி வறுவல் மிளகு மட்டும் போட்டு செய்வாங்க. அது எல்லாமே எனக்கு பிடிக்கும். மட்டன் உப்புக்கறி செய்வாங்க. அது கெட்டி பருப்பு சாம்பாரோட சேத்து சாப்பிட ருசியா இருக்கும்.
நாதஸ்வரம் சீரியல்ல (ராகினி கேரக்டர்) கல்யாணமான பொண்ணா நடிக்க வேண்டி இருந்தது. அதனால ஷூட்டிங்காக நான் வெயிட் ஏத்துறதுக்காக மூணு மாசம் நல்லா சாப்பிட்டேன். பால் , சீஸ் உணவுகள் எல்லாம் நிறைய சாப்பிட்டேன். வெளில போனா பானிபூரி, பன்னீர் பட்டர் மசாலா, சாட் உணவுகள் விரும்பி சாப்பிடுவேன். இப்ப வேற ஒரு தொடருக்காக உடல் எடை குறைச்சிட்டுருக்கேன். அதனால வெளில போய் சாப்பிடறத தவிர்க்கிறேன்.
கோயமுத்தூர்ல கடைகளுக்குப் போனா சமையலறைக்குன்னு எதுவும் வாங்க மாட்டேன். வெளியூர்களுக்கு போனா வாங்குவேன். குறிப்பாக காரைக்குடியில் பானை, அந்தக் காலத்து சமையல் பாத்திரங்கள் நிறைய வாங்கியிருக்கேன்.” என்றவரிடம் அவருக்குப் பிடித்த சில சமையல் குறிப்புகளை வாங்கிக்கொண்டு விடைபெற்றோம்.
மட்டன் உப்புக்கறி
தேவையான பொருட்கள்:
மட்டன் - கால்கிலோ, வரமிளகாய் - 10, கடுகு, சிறிது சீரகம், பட்டை, லவங்கம் சிறிது, சின்ன வெங்காயம் 10
செய்முறை:
மட்டன் துண்டுகளை கொழுப்புகள் நீக்கி தனித்தனியாக எடுத்துக்கொள்ளவேண்டும். முதன்மையாக தேவையான பொருள் வர மிளகாய் மட்டும் தான். கால் கிலோ மட்டனுக்கு 10 குண்டு வர மிளகாய் தேவை. முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றவேண்டும். எண்ணெய் சூடானதும், கடுகு, சீரகம், பட்டை, லவங்கம் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். தக்காளி போடக்கூடாது. சின்ன வெங்காயம் 10 எடுத்துக்கொள்ள வேண்டும். சூடாக இருக்கும் எண்ணெயில் வெங்காயத்தை வதக்க வேண்டும். அதனுடன் குண்டு வர மிளகாயை போட்டு வதக்க வேண்டும். சிறிது தண்ணீர் தெளித்து வதக்கிக்கொண்டே இருந்தால் காரம் அனைத்தும் பிரிய ஆரம்பித்துவிடும். பின்பு மிளகாய் இளகி குழம்பாகி வரும் நேரத்தில், பாதி அளவு வெந்த மட்டன் கறியை எடுத்து அந்த குழம்பில் போட்டு சிறிது மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும். பின்பு முன்பு செய்தது போலவே ஒரு கை தண்ணீர் தெளித்து வேக விட வேண்டும். சிறுது நேரத்தில் மிளகாயின் காரம் மட்டனில் பிடிக்க ஆரம்பிக்கும். இறுதியில் சிறிது முந்திரியை எடுத்து மேலே தூவினால் மட்டன் உப்புக்கறி ரெடி. உப்புக்கறி என்றாலே நிறைய உப்பு இருக்கும் என்று நினைத்துக்கொள்வார்கள். ஆனால் உப்பு மிகவும் குறைவாக சேர்க்கவேண்டும். இந்த உப்புக்கறி சாம்பார், தயிர் சாதத்திற்கும் மிகவும் நன்றாக இருக்கும்.
வெங்காய சாம்பார் :
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 1 கப், சாம்பார் வெங்காயம் - 20, தக்காளி 5, பச்சை மிளகாய் - 3, புளி - தேவையானால் சிறு எலுமிச்சம்பழ அளவு (தக்காளி அதிகம் சேர்த்தால் புளி தேவையில்லை), சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்த்தூள் - 1/4 டீஸ்பூன், எண்ணெய், சிறிதளவு, கடுகு - 1/2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் -ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிது, கொத்தமல்லித்தழை சிறிது
செய்முறை:
துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை தோலுரித்து, முழுதாக வைத்துக் கொள்ளவும். தக்காளியை நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில், இரண்டாக நறுக்கி வைக்கவும். புளி சேர்க்க விருப்பப்பட்டால் தனியாகக் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு வெடித்தவுடன், பெருங்காயத்தூள், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் அதில், புளித்தண்ணீர், சாம்பார் பொடி மஞ்சள் தூள் உப்புச் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும். குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும் வெந்த பருப்பை மசித்து சேர்த்து நன்றாகக் கிளறி மீண்டும் கொதிக்கவிடவும். சாம்பார் கொதித்து, சற்று கெட்டியானதும், கீழே இறக்கி, கொத்துமல்லித் தழையைத் தூவி இறக்கவும்.
ஜூலை, 2015.