இ.எம்.எஸ் கஞ்சியும் எழுத்தறிவு தோசையும்

என் சமயலறையில் : ச. தமிழ்ச்செல்வன்
இ.எம்.எஸ் கஞ்சியும் எழுத்தறிவு தோசையும்
Published on

சமையல் செய்வது பெண்களின் வேலை எனச்சொல்லும் மேதைகள், தலைவர்கள் மீது எனக்கு மதிப்பு கிடையாது’ எனத் தடாலடியாகச் சொல்பவர் ச. தமிழ்ச்செல்வன். நாடறிந்த எழுத்தாளர். தற்போது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் (த.மு.எ.க.ச) மாநிலத் தலைவர்.

ஒருநாள் பகல் 11 மணியளவில் சிவகாசி புறநகர் பகுதியிலுள்ள அவரது வீட்டிற்குச் சென்றோம். நம்மை வரவேற்றவர் அவரது மனைவி வெள்ளத்தாய். ஓய்வு பெற்ற ஆசிரியை. ‘தோழர் இருக்கிறாரா?’ கேட்டோம். சமையலறையை நோக்கி விரல் நீட்டினார். கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு மும்முரமாக சமையலில் ஈடுபட்டிருந்தார் தமிழ்ச்செல்வன். ‘இன்றைக்கு சிம்பிளாக ரசமும் அதலைக்காய் பொரியலும்‘ என்றார். வாய் பேசினாலும் கை அதலைக்காயின் காம்புகளை அகற்றுவதிலும் சின்னவெங்காயத்தை (உள்ளி) நறுக்குவதிலுமே இருந்தது. பின்னர் நறுக்கிய காய்களை பாத்திரத்தில் இட்டு தண்ணீர் ஊற்றி கேஸ் ஸ்டவ்வில் வைத்து அடுப்பை பற்றவைத்துவிட்டு நம்மிடம் பேச உட்கார்ந்தார். பேச்சுத் தொடர்ந்ததும் அந்த விசாலமான சமையலறையில்தான். சமையலில் ஏற்பட்ட ஆர்வம் குறித்துப் பேசத் துவங்கினார். அதேநேரத்தில் ரசம் வைப்பதற்கான புளியை தண்ணீரில் போட்டு கை கரைத்துக் கொண்டிருந்தது.

“நான் சிறுவனாக இருந்தபோதே, வீட்டு அடுப்பினுள் விறகைத் தள்ளும் போது ஏற்படும் தீயின் சத்தத்தையும் தீயின் நிறத்தையும் ரசிப்பேன். அடுத்து சமைக்கும்போது ஏற்படும் சத்தங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. தாளிக்கும்போது ‘சடசடவென’ ஒரு சத்தம். அப்பளம் பொரியும்போதும், பூரி விரியும்போது தோசை ஊற்றும் போதும் வருகிற மென்மையான ‘ஸொய்ங்..’ என்ற சத்தம், குழம்பு கொதிக்கிறபோது கேட்கிற ‘களபுளா’, சாதம் கொதிக்கிற ‘ததாபுதா’ எத்தனை அழகு இதில் கொட்டிக்கிடக்கிறது.

சமையல் ஒரு கலை. அது எனக்குப் பிடித்துப்போக சமைக்க ஆரம்பிச்சேன். நான் அஞ்சல்துறையில் வேலை பார்த்துவந்தேன். மனைவி வெள்ளத்தாய் பள்ளிக்கூட ஆசிரியை. திருமணமான புதிதில் சமைக்கணுமே என்பதற்காக  பதறிப் போய் காலையிலேயே எழுந்திருப்பார் அவர். அதைப் பார்த்து, அவருக்கு உதவி செய்ய சமையலறைக்குள் போக ஆரம்பிச்சேன்.

சமையல் செய்வது ஆண்கள் வேலை என்ற உணர்வுடன் தினமும் சமையல் செய்கிறேன். அதை வெளியேயும் சொல்கிறேன். ஆண்களும் சமையல் செய்யவேண்டும் என நான் பேசுவதும் எழுதுவதும் இலக்கியவாதிகள் பலருக்குப் பிடிக்கவில்லை. ஆண்களின் இந்த மனத்தடையை உடைத்தெறியவேண்டும். ஆண்கள் சமைப்பது என்பது பெண் விடுதலைக்கான ஒரு பகுதி.

இன்னும் சொல்லப்போனால் கல்யாண வீடுகளில், ஓட்டல்களில்,  டீக்கடைகளில் என எங்கும் ஆண்கள் தான் சமையலில் முன் நிற்கிறார்கள். வீட்டில் மட்டும் ஆண் சமைத்தால் வேகாதா? ஆதியில் பெண்கள் தான் சமைத்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.

சேர்ந்து வேட்டையாடி சேர்ந்து தீ மூட்டி சமைத்துச் சாப்பிட்டார்கள். வரலாற்றில் ஒருகட்டத்தில் மேய்சல் காலத்தில் தனிச் சொத்து என்பது உருவாகி ஆணானவன் பெண் மீது ஆதிக்கம் செலுத்தத் துவங்கியபிறகு தான் சமைப்பது பெண்ணின் வேலை என்றானது. 

அதுமட்டுமில்லாமல் பண்டைகாலத்தில் ஆண்கள் வேட்டைக்குப் போய் அரும்பாடுபட்டு உணவைக் கொண்டு வர, பெண்கள் சௌகரியமாக குகையில் இருந்து பிரசவம் மற்றும் குழந்தைப் பராமரிப்பில் ஈடுபட்டபடி சமைத்துக் கொண்டிருந்தார்கள் என்பது போன்ற தோற்றம் நம் மனதில் பதியவைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மை அதுவல்ல.

மாதத்தில் ஒரு வாரத்துக்கு மேல் ஆண்கள் வேட்டைக்குப் போனதேயில்லை. பெண்தான் தனக்கும் தன் குழந்தைகளுக்கும் வெட்டி ஆபீசராக இருக்கும் ஆண்களுக்கும் சேர்த்து பலநேரங்களில் உணவு சேகரித்து வந்திருக்கிறாள். ஜோல்னாப்பை போல ஒன்றை தன் தோள்களில் அல்லது முதுகில் போட்டுக் கொண்டு கைக்குழுந்தையையும் சுமந்தபடி அவள் உணவுச் சேகரிப்பில் மாலை வரை ஈடுபட்டிருக்க வேண்டும். இன்னும் சொல்வதென்றால் முப்பது நாளும் இரை தேடிப் போனவள் பெண்தான். தாய் வழிச் சமூகமாக இருந்த அந்நாட்களில் பெண்தான் குடும்பத் தலைவி. ஆண்களை அனுமதிப்பதும், வெளியேற்றுவதும் அன்று அவள் கையில்தான் இருந்தது.

உலகிலேயே சமைப்பதுதான் அதிமுக்கியமான வேலை. பெரும்சுமையான இந்த வேலையை ஆயிரம் ஆண்டுகாலமாக பெண்கள் தலையிலேயே சுமக்க வைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் மேற்கத்திய சமூகத்தில் சமையல் செய்வதில் ஆண் பெண் பேதமில்லை. இருவரும் சமைக்கிறார்கள்.

இன்று நம்நாட்டிலும் கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போகிற குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இரண்டு பேரும் சேர்ந்து அடுப்படியில் நின்றால்தான் நேரத்துக்கு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு இருவரும் அவரவர் வேலைத் தளங்களுக்கு செல்லமுடியும். இப்படி கட்டாயத்தின் பேரிலோ, மனம் ஒப்பியோ ஒப்பாமலோ இன்றைக்கு பல ஆண்கள் கரண்டிபிடிக்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டில் நடந்துள்ள மிக முக்கியமான வரவேற்கத்தக்க மாற்றம் இது.

சின்ன வயசுலேருந்தே ஆண் குழந்தைகளுக்கு சமையல் கற்றுக் கொடுக்கவேண்டும். இதனைக் குழந்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் அந்த வீட்டிலுள்ள ஆணும் சமைக்கவேண்டும். அதை குழந்தை பார்க்கவேண்டும்.

நம்மால் விதவிதமாக, ருசியாக சமைக்கமுடியாது என்றெல்லாம் ஆண்கள் கருதவேண்டியதில்லை.

சமையல் செய்தலும் நம்முடைய வேலை என நினைத்து ஆண்கள் கரண்டி பிடிக்கவேண்டும். மனித உரிமைகள் பற்றிய எந்த அறிவும் இல்லாத ஒரு காலத்தில் பெண்கள் தலையில்கட்டப்பட்ட இந்த சுமை இந்த நூற்றாண்டிலாவது இறக்கி வைக்க வேண்டாமா?

இதை ஒரு இயல்பான வேலையாக நினைத்துச் செய்ய ஆண்கள் பழகிக்கொள்ள வேண்டும்.

என் மகன் சிறுவனாக இருக்கையில் தோசை மாவை கெட்டியாக வைத்துக் கொண்டு எழுத்துத் தோசை சுட்டுக் கொடுப்பேன்.  கி  தோசை என அவன் ஆர்டர் கொடுப்பான், நான் அந்த வடிவில் ஒரு தோசை சுட்டுத்தருவேன். இப்படி அவன் சொல்லும் எழுத்துக்கெல்லாம் தோசை தயாராகும். இதன் மூலம் குழந்தைகளை அதிகமாக சாப்பிட வைக்கலாம். இதற்கு ‘எழுத்தறிவு தோசை’ எனப் பெயர் வைத்தோம். இன்றைக்கு என் மகனும் சமையலில் நிபுணர்.

கம்யூனிஸ்ட் வட்டாரத்தில் மாபெரும் தலைவர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் பெயரில் கஞ்சி தயாரிப்பு உண்டு. அதாவது அவர் தலைமறைவாக வாழ்ந்த காலத்தில் கிடைக்கிற அரிசி, பருப்பு, காய்கறிகள், வெங்காயம் ஒப்பு என எல்லாவற்றையும் ஒரே சட்டியில் போட்டு தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து ஒரே கஞ்சியாகக் காய்ச்சி விடுவாராம். அதற்கு பிற்காலத்தில் ‘இ.எம்.எஸ். கஞ்சி‘ என்ற பெயர் நிலைத்து விட்டது. அன்பும் காதலும் செழித்து வளரும் இடம் எது தெரியுமா?

சமையலறைத்தான். கணவனும் மனைவியும் காலையில் சற்று சீக்கிரமே எழுந்து சமையலறைக்குள் தம்பதி சகிதம் நுழைந்து விட்டால் பதட்டமில்லாமல் ஆளுக்கு ஒரு வேலையாகப் போட்டி போட்டுக்கொண்டு செய்யும்போது அன்பு பெருகுகிறது. ‘நச்சரிக்கும் வீட்டு வேலைகளிலிருந்து பெண்கள் விடுதலை பெறாமல் மனித குல விடுதலை சாத்தியமில்லை’ என்றார் லெனின். வீட்டு வேலை செய்து பார்த்தால்தான் அவர் சொன்னதன் அர்த்தம் தெரியும்.

 நாம் ஒவ்வொருவரையும் வாசனைகளை வைத்தே கண்டுபிடித்துவிடுவோம். அதில் அம்மாவும் பாட்டியும் மட்டும் அடுப்படி வாசனைக் கலந்தவர்களாக இருப்பார்கள். அழுக்குநீரில் புழங்கியதால் கால்களில் பித்தவெடிப்பு ஏற்பட்டிருக்கும். இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்குத் இது தொடர நாம் அனுமதிக்கப்போகிறோம்?” என்கிறார் தமிழ்ச்செல்வன்.

அதலைக்காய் பொரியல்

தேவையான பொருட்கள்:

அதலைக்காய், உள்ளி (சிறிய வெங்காயம்), பச்சைமிளகாய், தேவையான அளவு உப்பு அதலைக்காயை நன்றாகக் கழுவி காம்புகளை அகற்றிடவேண்டும். உள்ளியை (சிறிய வெங்காயத்தை) தோலுரித்து சிறிதாக நறுக்கி-கொள்ளவேண்டும். பச்சை மிளகாயை நேர்-வாக்கில் கீறி வைத்துக்கொள்ள வேண்டும். இவையனைத்தையும் பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு உப்புகலந்து காய் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றவேண்டும். பின் அதை மூடிவைத்து குறைந்த அளவு நெருப்பில் வேகவைக்கவேண்டும். இவை முக்கால் வேக்காடு வந்தவுடன் அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் (வீட்டில் வழக்கமாக உபயோகிக்கும் எண்ணெய்) ஊற்ற வேண்டும். தண்ணீர் வற்றும் வரை (ஈரப்பதம் நீங்கும் வரை)சுருள சுருள முறுகலாக வதக்கி இறக்கவேண்டும்.

அதலைக்காய் கசப்பு சுவையுடையது. அதனால் அதில் கூடுதல் உள்ளி சேர்த்துக் கொள்வது கசப்பினைக் குறைக்கும். சர்க்கரை இருப்பவர்களுக்கு இது நல்லது. அதலைக்காய் என்பது காட்டுப் பயிர். இதை யாரும் பயிரிடுவதில்லை. கரிசல் காட்டில் இயற்கையாகவே வளரும் காய். சமைப்பதும் எளிது.

பிதுக்குப் பருப்புக் குழம்பு

இது ஒரு கரிசல்காட்டுக் குழம்பு என்று சொல்லலாம். இருநூறு கிராம் வெள்ளை மொச்சைக்-கொட்டையை முதல் நாள் இரவே ஊற வைத்துவிடவேண்டும். காலையில் மொச்சையின் தோலை மட்டும் நீக்கி உள்ளே இருக்கும் வெள்ளை-யான பருப்பை மட்டும் பிதுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.

தேவையான பொருட்கள்:

மிளகாய்வத்தல் : 5, சீரகம் : ஒரு டேபிள் ஸ்பூன், மஞ்சள் பொடி 1 டீ ஸ்பூன், பூண்டு : இரண்டு பெரிய பல், மல்லி :  2 தேக்கரண்டி, உள்ளி (சின்ன வெங்காயம்) : 8

மேற்கண்ட பொருட்களை மிக்சியில் அல்லது அம்மியில் அரைத்து பிதுக்கி வைத்த பருப்புடன் நாலு தக்காளிப்பழம் சேர்த்து குக்கரில் போட்டு உப்பும் அளவாகத் தண்ணீரும் சேர்த்து வேக வைக்கவேண்டும். இரண்டு விசில் வரும் வரை குக்கரை அடுப்பில் வைத்திருக்க வேண்டும்.

அப்புறம் இறக்கி ஒரு சில்லு தேங்காய் அரைத்து ஊற்றிக் கலக்கி மத்து கொண்டு நன்றாகக் கடைய-வேண்டும். மையாக கடையக்கூடாது. பத்தப்-பரக்கக் (அரைகுறையாக) கடைந்து எண்ணெய் விட்டு தாளித்து இறக்கி விடவேண்டும்.

டிசம்பர், 2014.

logo
Andhimazhai
www.andhimazhai.com