விஜய் தடுமாற்றமும் தன்னம்பிக்கையும்

விஜய் தடுமாற்றமும் தன்னம்பிக்கையும்
Published on

தீபாவளிக்கு முதல் நாள் தொலைக்காட்சி விளம்பரம்: நாளை முதல் உலகமெங்கும். அப்போதே லேசாக புரிந்தது, உலகம் நாளை எப்படி இருக்குமென்று. தீபாவளியன்று தொலைக்காட்சி முன் அமர்ந்து, ரிமோட்டை அழுத்தினால், “ஜோஸ் ஆலுக்காஸ் இளைய தளபதியின் துப்பாக்கி, பவர்ட் பை நண்டு பிராண்ட் லுங்கிஸ்” நிகழ்ச்சி. “துப்பாக்கி” நாயகன் விஜய், இயக்குநர் முருகதாஸ், தன்னார்வ உந்துதலுடன் விஜய்யை சிலாகிக்கும் இளம் ரசிகர்கள், ரசிகைகள் நிறைந்த அரங்க உரையாடல். வழக்கம் போல, அவரா இவர் என்று கேட்க வைக்கும், வடிகட்டிய அமைதியின் தோற்றத்துடன் விஜய். “பார்க்கத்தான் இப்படி இருக்கிறார். படப்பிடிப்பில் பின்னி விடுவார்” என்று முருகதாஸ் வியந்தோதுகிறார். “இது வரை பார்த்திராத விஜய்யை இந்தப் படத்தில் பார்ப்பீர்கள்” என்று விஜய்யே “டிக்ளேர்” செய்கிறார். ஏற்கெனவே கூச்ச சுபாவமுள்ள விஜய்யை மேலும் கூச்சப்படுத்தும் வகையில், அவரது அழகு, நடனம், பாட்டுத் திறன் சார்ந்த புகழுரையாடலை- தொ.கா. நிகழ்ச்சியின் நெறியாளர் முன்னெடுத்துச் செல்கிறார், கேள்வி போன்றதொரு வடிவில்.

ரசிக, ரசிகைகள் ஆர்ப்பரித்து ஆமோதிக்கிறார்கள். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் சொந்தக் குரலில் இந்தப் படத்தில் பாடியுள்ளதாக, ஒரு ரசிகை சொல்கிறார். புள்ளிவிவரத்தின் துல்லியம் கண்டு வியக்கிறார், விஜய்!

இதற்குப் பிறகும் துப்பாக்கி பார்க்காமலிருக்கலாமா? பார்த்தாகிவிட்டது.

நாளிதழ்களில் துப்பாக்கி விளம்பரம் வெளிவந்த பொழுதே, “கள்ளத் துப்பாக்கி” என்றொரு படத்தின் விளம்பரம் வெளியானது. அதுமட்டுமின்றி, இன்னபிற பிரச் சினைகளையும் எதிர்கொண்டே விஜய்யின் துப்பாக்கி வெளியாகியிருப்பதாக ஊடகச் செய்திகள் விளம்புகின்றன.

மும்பையில் குடியேறிய ஒரு தமிழ்க் குடும்பத்தின் தலைமகன் விஜய். ராணுவத்தின் புலனாய்வுப் பிரிவில் கைதேர்ந்த வீரர். 40 நாள் விடுமுறைக்காக சக வீரர்களுடன் ரயிலடியில் ஆடிப் பாடியவாறே வீடு திரும்புகிறார். மும்பையில் தீவிரவாதிகளின் சதித் திட்டத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழித்துவிட்டு, உறவுசூழ் உணர்ச்சிப் பிழம்பில் திக்குமுக்காடியவாறே மீண்டும் ரயிலேறுகிறார்.

“ஆக் ஷன் கிங்” அர்ஜூன், “கேப்டன்” விஜயகாந்த், “உலக நாயகன்” கமல்ஹாஸன் உள்ளிட்ட பலரும் கையாண்ட தீவிரவாத ஒழிப்புதான் கதைக் களம். அதையேதான் முருகதாஸும் இப்போது கையிலெடுத்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் லாஜிக் பார்ப்பது அடாத செயல் என்பது போன்ற கருத்து வலுவாக நிறுவப்பட்டிருக்கிறது. ஆனால், துப்பாக்கி புலனாய்வுப் படமாயிற்றே. பார்வையாளனும், தானறிந்த புலனாய்வு நோக்குடனேயே காட்சிகளைக் கடக்கிறான். அப்போது எழும் கேள்விகளுக்கு இயக்குநர்-தானே பொறுப்பு? அப்படிப் பார்த்தால், இயக்குநர் முருகதாஸ் கேள்விகளின் நாயகனாகவே தெரிகிறார்.

மும்பையில் தனது “லொட, லொட” காவல்துறை நண்பர்  சத்யனை லேசாகப் பயன்படுத்திக் கொண்டு, 12 இடங்களில் குண்டுவைத்து நகரத்தை நிலைகுலையச் செய்யும்  சதித்-திட்டத்தை முறியடிப்பதுடன் அக் குழுவின் மையப் புள்ளியையும் காலி செய்கிறார், விஜய் - தன்னந்தனியாக. அவரது பௌதீக ஆயுதமாக இரண்டு துப்பாக்கிகளை மட்டும் காட்டுகிறார் முருகதாஸ். மிச்சமெல்லாம் மூளை. பலே! இவ்வாறான படங்களை, கேள்விகள் இன்றி பார்க்கக்கூடிய மனநிலைக்கு பார்வையாளர்களை, மணிரத்னம் உள்ளிட்ட இயக்குநர்கள் பெரிதும் தங்கள் படங்களின் வாயிலாக ஏற்கெனவே “பக்குவப்படுத்தி” வைத்திருப்பதால், காட்சிகளின் நகர்திறன் சார்ந்து தன்னை நிலைநாட்டிக் கொள்கிறார் முருகதாஸ்.

இன்றைய சூழலில், தீவிரவாதத்தை திரைப்படங்களில் காட்சிப்படுத்துவது மிகப் பெரிய சவால். அதை எதிர்கொள்-வதில், துப்பாக்கி இயக்குநரிடம் வலுவிழந்த எச்சரிக்கையின் காரணமாகவே இஸ்லாமிய சமூகத்தினரிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது. சம்பந்தப்பட்டவர்களை அழைத்துப் பேசி சமாதானப்படுத்தியிருக்கிறார்கள், இயக்குநரும் தயாரிப்பாளரும்.

இன்னொரு பக்கம், தீவிரவாதம் சார்ந்த ஒரு முக்கியமான அம்சத்தை, தமிழ் சினிமா பார்வையாளர்களுக்கு நெருக்கமாகக் கவனப்படுத்தியிருக்கிறார் முருகதாஸ். “ஸ்லீப்பர் செல்ஸ்” என்று சொல்லப்படும்- அப்பாவி மனிதர்-களை இன்றைய தீவிரவாதக் குழுக்கள் எவ்வாறு பகடைக் காய்களாகப் பயன்படுத்துகின்றன; அவற்றின் மையக் கட்டுப்பாடு, நுண்ணறிதிறன், இயங்குமுறை ஆகியவற்றை சாதாரண பார்வையாளர்களுக்கும் புரியும் வகையில் காட்சிப்படுத்திய தமிழ் சினிமாவின் முதல் இயக்குநராக முருகதாஸ் தெரிகிறார்.

“ஏழாம் அறிவு” படத்தில் தன் சக்திக்கு மீறிய பொதி சுமந்து தள்ளாடி நிலைகுலைந்த முருகதாஸ், துப்பாக்கியைக் கைக்கு அடக்கமாக எடுத்துக் கொண்டிருக்கிறார். விஜய்யை “இளைய தளபதி” “மாஸ் ஹீரோ” என்றெல்லாம் பார்த்து, பார்த்து காட்சிகளை வடிவமைக்காமல், கதையின் நாயகனாக மட்டுமே கையாண்டிருக்கிறார்.

சுறா வரையிலான முந்தைய படங்களின் தொடர் தோல்வி, கடைசியில் வெளிவந்த நண்பனும் ஷங்கர் படமாகிப்போக (அதுவும் உண்மையில் ஷங்கர் படமில்லை. ஹிந்தியில் வெளியான “த்ரீ இடியட்ஸின்” தமிழ்ப் பதிப்பு), தொழில் சார் யதார்த்தம் புரிந்து, முருகதாஸின் அணுகுமுறைக்கு ஒத்திசைய, விஜய்க்கு ஒரு வெற்றிப்படம்.

குத்துப் பாட்டு, குத்து வசனம் இல்லாத இப்படம் விஜய் ரசிகர்களுக்கு ஒரு வகையில் ஏமாற்றமாக இருக்கலாம். ஆனால் அவை தவிர்த்து, பொதுப் பார்வையாளர்களுக்கு முடிந்த அளவுக்கு “நியாயம்” செய்ததன் காரணமாகவே “இளைய தளபதிக்கு” நீண்ட வெளிக்குப் பிறகு வெற்றிப் படம் கிடைத்திருக்கிறது என்பதை அவரது ரசிகர்கள் இப்போது உணர்ந்திருப்பார்கள்.

முன்னணி நடிகர்களின் “கால்ஷீட்” கிடைத்து, அவர்களுக்-காக யோசித்து கதை செய்து ஜெயித்துவிட்டால் பெரிய இயக்கு-நராக அடையாளப்படுத்திக் கொள்ள முடியும், கோடிகளை எளிதில் நெருங்கிவிடலாம் என்ற நோக்கில் வளரும் இயக்குநர்கள் போராடுகிறார்கள். வளர்ந்த இயக்கு-நர்கள், பெரிய நடிகர்களை தங்கள் பாணியில் பயன்படுத்தி, தனித்த அடையாளத்துடன் கூடிய பெரும் வெற்றியை அடைய முற்படுகிறார்கள். முருகதாஸ், இரண்டாவது வகை.

நடிகர்களைப் பொருத்தவரையில் தொடக்கத்திலிருந்தே இயக்குநர்களின் நடிகனாக தன்னை நிறுவிக் கொள்ளும் நடிகர்களுக்கு பெரிதாகப் பிரச்சினையில்லை. தனுஷ், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை இளம் வயதிலேயே பெற்றதற்கு அதுவே காரணம். மாப்பிள்ளை- ஓட்டமில்லை. என்றாலும் மயக்கம் என்ன கொடுத்து தனது ஆதார அடையாளத்தை தக்க வைத்துக் கொள்ளலாம்.

பாலாவின் ஆதரவுடன் விக்ரம் ஏற்கெனவே தேசிய விருது பெற்றுவிட்டார். சூர்யா அதற்கான முன்தகுதியுடைவராக தன்னை வெளிப்படுத்தியவர். ஆனால், “மாஸ் ஹீரோ” இமேஜ் அவரை நெருக்கடிக்குத் தள்ளியிருக்கிறது. வருங்காலப் படங்களின் தெரிவைப் பொருத்தே அது கைகூடும்.

பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், ப்ரண்ட்ஸ் போன்று வெகுசில படங்-களில் இயக்குநரின் நாயகனாக இருந்த விஜய், தனது வளர்நிலை காலகட்ட சாதகம் சார்ந்து, வேகமாக “மாஸ் ஹீரோ” புள்ளியைத் தொட்டுவிட்டார். ரஜினிக்கு அடுத்து இவருக்குத்தான் “ஓப்பனிங்” என்பது வரை அதிவேக வளர்ச்சி. பிறகு, அந்த நிலையைத் தக்க வைத்துக்-கொள்-வதற்கு அவருக்கே நெருக்கடி. தொடர் தோல்விகள். காவலனில் விழிப்படைந்து, ஷங்கர் கைபிடித்து எழுந்து, முருகதாஸ் ஆதரவுடன் இப்போது பழைய இடத்தை மீட்டிருக்கிறார்.

கிட்டத்தட்ட விஜய்க்கு துப்பாக்கி ஒரு Career Correction என்றுகூட சொல்லலாம். இதற்கு முன்பே அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால் போக்கிரி, கில்லி போன்ற சூப்பர் ஹிட் படங்களைத் தொடர்ந்து, தொட்டுவிடும் தூரத்தில் ஒரு பெரிய நாற்காலி காத்திருப்பதாக அல்லது கிராஃபிக்ஸ் காட்சியைப் போல அந்த நாற்காலி விஜய் நோக்கி வேகமாக நகர்ந்து வருவதாக... ஒரு தோற்றத்தை அவரது தந்தை எஸ்.ஏ.சி. முன்னின்று உருவாக்கினார். அதற்குப் பிறகு வந்த விஜய் படங்கள், அவரைச் சூழ்ந்தவர்கள் நம்பிய வருங்காலச் சாத்தியத்தை முன்னறிவிப்பு செய்வது போலவே வெளியாயின. தொடர்ந்து 6 படங்கள் தோல்வி. தொடர் தோல்விகளால் 30 கோடி ரூபாய் வரை நட்டம் ஏற்பட்டதாகவும் அதில் மூன்றில் ஒரு பங்கையாவது விஜய் ஈடுசெய்ய வேண்டும் (ரஜினி பாணியில்) என்றும் திரையரங்க அதிபர்கள் பத்திரிகையாளர் சந்திப்பு வைத்து வேண்டுகோள் விடுத்தார்கள். தமிழ் சினிமாவில் இவ்வாறு அவர்கள் செய்தது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இதற்குப் பிறகுதான் விஜய்யும் அவரது வட்டாரமும் சற்றே யதார்த்தம் உணர்ந்தது போல் தெரிகிறது.

இப்போதுதான் ஹீரோவாக  50 படங்களைக் கடந்திருக்கிறார் விஜய். துப்பாக்கி 53-வது படம். வயது, இப்போதே 38. தனக்கான சந்தை நிலவரத்தை இன்னும் ஐந்தாண்டுகள் இதே நிலையில் நிச்சயம் விஜய் தக்க வைத்துக்கொள்வார் என்ற பொதுவான நம்பிக்கையின் அடிப்படையில், ஆண்டுக்கு 4 படங்கள் (அதிகம்தான்) என்று கணக்-கிட்டாலும் இன்னும் 20 படங்கள். அநேகமாக 75 படங்களை ஒட்டி அல்லது அதற்குப் பிறகு விஜய்யின் முன்னிலைச் சுற்று தளரக்கூடும். இது ஒரு பொதுவான அனுமானம்தான். அதற்குள் விஜய், தமிழ் சினிமாவில் தன்னை ஒரு சிறந்த நடிகனாகவும் நிரூபிக்கலாம், அவர் உண்மையிலேயே அவ்வாறு விரும்பினால்.

அண்டைவீட்டு இளைஞன் போன்றதொரு தோற்றம். பெரும்பான்மையான தமிழ் இளைஞர்களைப் பிரதிபலிக்கும் சற்றே முறுகலான நிறம். வேகமான நடன அசைவுகள். அனல் தெறிக்கும் சண்டைக் காட்சி-கள். ரசிக்க வைக்கும் காமெடி.

சற்றே அலுப்பூட்டும் ரொமான்ஸ். விஜய் இப்போதைய இடத்துக்கு வந்ததற்கு இவை-யெல்லாம் போதுமானதாக இருந்-திருக்-கலாம். ஆனால் இங்கிருந்து நகர்-வதற்கு, இவை மட்டும் போதாது என்பதை துப்பாக்கி விஜய்க்கு புரிய வைத்திருக்குமா? லாம்!

“மங்காத்தா”வில் இயக்குநரின் நாயக-னாக (வெங்கட் பிரபு சுட்டபழப் பிரியர் என்றாலும்-கூட) தன்னை ஒப்படைத்த-தால்--தான் “தல” அஜீத்துக்கு இன்னொரு வெற்றிப்படம் சாத்தியமாயிற்று.  “வாகை சூடவா” சற்குணம், “எங்கேயும் எப்போதும்” சரவணன் வரிசையிலான நம்பிக்கைக்-குரிய புதிய இயக்குநர்கள், “ஹீரோ”க்-களை நிறையவே யோசிக்க வைக்கிறார்கள். முற்றிலும் இல்லா-விட்டாலும், நடிகர்கள் - இயக்குநர்கள் சமன்பாடு-கள் மாறி வருகின்றன. பாலா, செல்வராகவன் போன்ற இயக்குநர்கள் ஏற்கெனவே அந்நோக்கில் தீவிரமாக இயங்கியவர்கள். இப்போதும்கூட.

இந்தப் பின்னணியில்தான், இயக்குநர் முருகதாஸ், அவரது அடையாளத்துடன் “துப்பாக்கி”யை வெற்றிப்படமாகத் தந்திருக்-கிறார். இது விஜய்யின் தனித்த வெற்றியாகப் பார்க்கப்படாது. முருகதாஸுடன் இணைந்த வெற்றியாகவே பார்க்கப்படும்.

துப்பாக்கியை குறைந்தபட்சம் ஒவ்வொரு வரும் ஐந்து முறையாவது பார்க்க வேண்டும் (ரிபீட் ஆடியன்ஸ்) என்ற எண்ணத்தை மனத்தில் பதித்தே படத்தை எடுத்ததாக, தீபாவளி தின தொ.கா. நிகழ்ச்சியில் முருக- தாஸ் கூறினார்.

“சூப்பர் ஸ்டார்” ரஜினி இரண்டு முறை படத்தைப் பார்த்துவிட்டுப் பாராட்டியதாக முருகதாஸ் டுவிட்டரில் கூறியிருக்கிறார். ஒரு படத்தை, வெளியான ஒரே வாரத்துக்குள் இரண்டு முறை பார்த்ததாக ரஜினியே சொல்கிறார் என்றால், அது முருகதாஸுக்கு எவ்வாறான செய்தி? விஜய்க்கு எத்தகைய செய்தி? இருவருக்குமே புரியும்.

“விஸ்வரூபம்” படத்துக்கு ஆரம்பத்தில் நாயகி கிடைக்காமல் கமல் நொந்துபோனார். இப்போதும் வெளியிடுவதில் சிலபல சிக்கல்-களை எதிர்நோக்கியிருக்கிறார்.

“கோச்சடையான்” மேற்பார்வை இயக்குநர் பொறுப்பிலிருந்து கே.எஸ். ரவிக்குமார் கழட்டிவிடப்பட்டார். படத்தின் வியாபார வெற்றியை உறுதி செய்வதில் ரஜினிக்கு நிறைய யோசனைகள் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின்றன.

ரஜினியும் கமலுமேகூட தாங்கள் நிறுவிய இடத்தைத் தக்க வைத்துக்கொள்வதில் போராடும் நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறார்கள் என்பதே இன்றைய உண்மை.

அந்த உண்மையை, துப்பாக்கி வழியாக இயக்குநர் முருகதாஸ் மீண்டும் சொல்லியிருக்கிறார். “ஹீரோ”க்களின் ஆதிக்கத்திலிருந்து தமிழ் சினிமாவை மீட்கும் தொடர் முயற்சியில், முருகதாஸ் நோக்கில் இதர மேல்வரிசை இயக்குநர்களும் செயல்பட்டால் ஓரளவுக்கு நல்ல படங்கள் பார்க்கக் கிடைக்கும். வியாபாரமும் நிறைவாக இருக்கும். ஆனாலும் தாஸ், இனியாவது இயக்குநராக உங்கள் பாத்திரம் பெரிய ஓட்டைகள் இல்லாதிருக்கட்டும். “பாப்பா, தள்ளிப் போய் விளையாடு” என்றெல்லாம் டுவிட்டிவிட்டு, நீங்களும் “பாப்பா”வாக இருக்கலாமா?

டிசம்பர், 2012.

logo
Andhimazhai
www.andhimazhai.com