வாய்ப்பு தந்த 'வைரல்’ குறும் படங்கள்!

நேர்காணல் : ப்ரதீப் ரங்கநாதன்
கோமாளி
கோமாளி
Published on

வரிசையாகக் குறும்படங்கள் எடுத்து, அதில் அசத்தி, நேரடியாக சினிமா எடுக்க நுழைந்தவர்களின் பட்டியலில் புதிதாக நுழைந்திருக்கிறார் ப்ரதீப் ரங்கநாதன். கோமாளி படம் இயக்குநர்.

''எங்க குடும்பத்தில் யாருக்கும்
சினிமா தொடர்பே இல்லை. அப்பா ஒரு பல்கலைக் கழகத்தில் நிர்வாக அதிகாரி.  நான் நல்ல மதிப்பெண் எடுத்து, எஸ்.எஸ்.என் கல்லூரியில் பொறியியல் சேர்ந்தேன்.
எதையும் க்ரியேட்டிவாவ பண்ண எப்பவுமே பிடிக்கும். கல்லூரி இரண்டாமாண்டுக்கு பிறகு இந்த ஆர்வம் குறும்படங்களில் போய் நின்னுடுச்சு. நான் எடுத்த 'வாட்ஸப் காதல்' என்றொரு குறும்படம்,  'கொலைவெறி' பாடலெல்லாம் வந்த அப்போதைய காலகட்டத்திலேயே யூட்யூப்ல பத்து லட்சம் பார்வைகளை எட்டியது. அப்பதான் நான் சினிமா பண்ணலாமேன்னு நினைச்சேன்.

கல்லூரி முடித்த பிறகு நல்ல வேலை  கிடைத்து, ஓர் ஆண்டு தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றினேன். அப்போதும் குறும்படங்கள், விளம்பர படங்கள் உருவாக்குவதை நான் நிறுத்தவில்லை. இதற்கு பிறகுதான் 'மூவி பஃப்'&ன் குறும்பட போட்டி ஒன்றில் எனது 'ஆப் லாக்' என்ற ஒரு படம் இடம்பெற்றது. அது சமூக வலைதளங்களில் பயங்கர வைரல் ஆனது. அந்த படம் மூலமாக எனக்கு பல வாய்ப்புகள் வந்தன.  அதில் ஒரு வாய்பாக வேல்ஸ் ஃபிலிம் இண்டெர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தில் இந்த 'கோமாளி' கதையை சொன்னேன். அவர்களுக்கு கதை பிடித்துப்போனதால் ஜெயம் ரவியை அறிமுகப்படுத்தினார்கள். இவ்வாறு உருவாகிய திரைப்படம் தான் கோமாளி!'' சுருக்கமாக அதேசமயம் தெளிவாக தன் முன் கதைச் சுருக்கம்
சொல்கிறார் ப்ரதீப்.

''எனக்கு இது முதல் படம் என்றாலும் நல்ல சுதந்தரம் இருந்தது. குறும்படத்திற்கும், முழுநீளத் திரைப்படத்திற்கும் பெரிய வேறுபாடு தெரியவில்லை. குறும்படங்களுக்கு ஒருநாளில் செய்த வேலையை திரைப்படத்தில் 50 நாட்களுக்கும் செய்தேன்.
 சவாலானது என்றால் அது பாடல்களைக் காட்சிப்படுத்தியது மட்டும்தான். அது எனக்கு மிகவும் புதிய அனுபவம். இறுதியில் வரும் வெள்ளக் காட்சியைப் படமாக்க மிகவும் மெனக்கெட்டோம். வெள்ளக் காட்சிகளை படமாக்க எங்களுக்கு ஸ்டுடியோவே கிடைக்கவில்லை. பின்னர் ரெட் ஹில்ஸ் கடந்து இருக்கக்கூடிய ஏ.ஆர். ரஹ்மான் ஸ்டுடியோவில் படமாக்கினோம். பல்வேறு சவால்களுக்கிடையே உருவாக்கப்பட்ட காட்சி அது.

கோமாளி படத்தில் பேசப்பட்ட மனித உணர்வுகள் முக்கியமானவை. அதைப் பற்றிதான் எல்லாரும் பேசுகிறார்கள். என்னைப் பொருத்தவரை கைபேசி, இணையதளம் போன்ற தொழிற்நுட்ப வசதிகளற்ற 90&களின் இறுதி, தற்போதைய நவீன தொழிற்நுட்ப காலகட்டம் என இரண்டையும் பார்த்து அனுபவித்திருக்கிறேன். இவை இரண்டுக்குமான மனிதர்களின் இடைவெளி என்னை மிகவும் பாதித்தது. மனிதர்களது வாழ்வில் தொழில்நுட்பம் வந்தபின் முன்பிருந்த நெருக்கம், அன்பு எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்திருப்பதாக உணர்கிறேன். ஆனால், இவை அனைத்தும் நீங்கி மனிதம் செழிக்கும்படியான ஒரு நிலையை சென்னை பெருவெள்ளம் ஏற்படுத்தியது. நவீன காலகட்டத்திலும் மனிதர்களிடம் மாறாமல் இருந்த இயல்பு என்றால் இரக்கம், மனிதம் போன்ற உணர்வுகள்தான் என தெரிந்தது. அதனை மையமாக வைத்தே கோமாளியை முழுமைப்படுத்தினேன். படம் வெளியானதும் திரையரங்கில் இருந்தேன். அப்போது படம் பார்த்த ஒரு அம்மா, என்னைக் கட்டியணைத்து முத்தமிட்டு நல்ல படத்தை கொடுத்திருப்பதாக வாழ்த்தினார். நெகிழ்வாக இருந்தது!'' என்கிறார் பிரதீப்.

செப்டெம்பர், 2019.

logo
Andhimazhai
www.andhimazhai.com