மலையாளக் கரையோரம்!

மலையாளக் கரையோரம்!
Published on

காலமாற்றத்தை உடனடியாக உள்வாங்கிக் கொண்டு சினிமாவில் அதைப்
பரீட்சித்து பார்க்கும் முயற்சிக்கு மலையாள
சினிமா எப்போதுமே முன்னோடிதான். சமீபத்தில் வெளியான சில மலையாள சினிமாக்களைப் பற்றி இங்கே...

'கும்பலாங்கி நைட்ஸ்'.(Kumblangi Nights) நான்கு சகோதரர்கள் மட்டும் வாழும் பழைய விடு. கும்பலாங்கி எனும் கொச்சிக்கு அருகிலுள்ள சிறிய தீவு தான் கதைக்களம். தந்தை மறைவுக்குப் பின் தாயார் சர்ச்சில் அடைக்கலமாகிவிட அவர்களைப் பொருத்தவரை அந்த கிராமத்திலேயே சீரழிந்த வீடு சொர்க்கமாக மாறுவது கவிதையாக வடிக்கப்பட்டிருக்கிறது. வாழ்க்கை பற்றி எந்த முன் திட்டமும் இல்லாமல் வாழும் அந்த சகோதரர்களின் வாழ்வில் காலடி எடுத்து வைக்கும் பெண்கள் அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்று இயல்பாக பரபரப்பின்றி ஆனால் தொய்வில்லாமல் சொல்லப்பட்டிருக்கும் கதை. மூத்த சகோதரரான ஷௌபின்( பிரேமம் பட பிஈடி மாஸ்டர் நினைவிருக்கிறதா?) எந்த வேலையும் செய்யாமல் நண்பனை ஒட்டி வாழ்பவரின் வாழ்க்கை அவன் மறைவிற்குப் பிறகு திசைமாறிவிடுகிறது. பக்கத்து வீட்டிலிருக்கும் பேபி மோளை காதலிக்கும் பாபி. அந்தக் காதலுக்கு தடையாக இருப்பவர் பேபியின் அக்கா கணவராக பகத் பாசில். அவருடைய சிரிப்பிற்குப் பின்னாலுள்ள மர்மம் என்று சில திகில் நிமிடங்களையும் கொண்டிருக்கிறது கும்பலாங்கி நைட்ஸ். கேரளத்தின் அழகையும்
சாதாரண மனிதர்களின் அழகான வாழ்க்கையையும் முதல் படத்தில் அழகாக பதிவு செய்திருக்கிறார் மது நாராயணன். வழக்கமான சினிமாத்தனம் எதுவுமில்லாமல் எடுக்கப்பட்ட இந்தப் படம் வசூல் ரீதியாக மிகப் பெரிய வெற்றியையும் பெற்றிருக்கிறது.

ஆஷிக் அபுவின் 'வைரஸ்' முக்கியமான முயற்சி. 2018 ல் கோழிக்கோட்டில்  நிபா வைரஸ் தாக்கி பலர் இறந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட படம். இதை சினிமாவாக்க முடியும் என்று நம்பிய ஆஷிக்கை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும். முழுக்க முழுக்க அறிவியல் மற்றும் மருத்துவம் குறித்த தகவல்களை பின்னணியாக வைத்து
சஸ்பென்ஸ் திரில்லரைப் போன்ற ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார். கேரள சினிமாவில் மட்டுமே சாத்தியமான விஷயம் இது. நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு ஒருவர் மரணமடைய, அவரிலிருந்து எப்படித் தொற்று ஒவ்வொருவராக பரவியது என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறது வைரஸ். தொற்று பரவிய விதத்தை அரசாங்கத்திற்கு  நிரூபிக்க வேண்டிய அவசியம் மத்திய நிபுணர் குழுவினால் வருகிறது. அவர்கள், நிபா வைரஸ் தாக்குதல் ஏன் அந்நிய நாட்டு சதியாக  இருக்கக் கூடாது என்ற கோணத்தில் கேள்வி கேட்பதால், அதை இல்லை என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு. டாக்டரான பார்வதி துப்பறிந்து நிபா பரவலை ஒருவர் விடாமல் காரண காரியத்தோடு கண்டுபிடிக்கிறார்.

தேர்தல் பணிக்காக சட்டிஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் பிரச்னையுள்ள பகுதிக்கு
செல்லும் காவலர்களை பற்றி சொல்லும் படம் உண்டா(Unda - துப்பாக்கி குண்டு). மம்மூட்டி நடித்திருக்கும் இந்த படத்தை இயக்கியிருப்பவர் காலித் ரகுமான். 2014 ல் வந்த தினசரி செய்தியைச் சுற்றி கதை பின்னியிருக்கிறார். நியூட்டன் என்ற இந்திப் படத்தில் காட்டப்பட்ட இடத்தைப் போன்றே இதிலும் சட்டிஸ்கர் கிராமம் வருகிறது. நியூட்டன் மாவோயிஸ்ட் பகுதியில் தேர்தல் நடத்தச் செல்லும் நேர்மையான தேர்தல் அதிகாரியைப் பற்றிய கதை. உண்டாவில் பாதுகாப்பிற்குச் செல்லும் காவலர்களின் கதை. அதிகம் பிரச்னைகளை சந்தித்திராத தென்னிந்தியாவிலிருந்து சட்டிஸ்கர் செல்லும் போது தேவையான அளவிற்கு துப்பாக்கி குண்டுகளை எடுத்துச் செல்வதில்லை அவர்கள். சட்டிஸ்கரில் உங்களுக்கு தேவையான துப்பாக்கி குண்டுகளை உங்கள் அரசிடம் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள், நாங்கள் தரமுடியாது என்கிறார்கள். கேரளாவிலிருந்து குண்டுகளை ரயிலில் கொண்டு செல்கிறார்கள் இரண்டு காவலர்கள். தேர்தல் அன்று அவர்கள் சந்திக்கும்
சவால்கள், குழுவிற்கு அதிகாரியான மம்மூட்டி அவர்களுக்குள் ஏற்படும் பிரச்னைகளை சமாளிப்பது என்று அத்தனையும் இயல்பான சம்பவங்கள்.
சினிமாத்தனமோ, கதாநாயக பிம்பத்தை வலுப்படுத்தும் விஷயமோ ஏதுமில்லை.
சொல்லப்போனால் படம் முழுக்க பரிதாபமான அதிகாரியாக வருகிறார் மம்மூட்டி. இறுதியில் அரசியல்வாதிகள் மாவோயிஸ்ட் பெயரைச் சொல்லி நடத்தும் அத்துமீறல்களை தோலுரிக்கிறது படம்.

இஸ்க் - நாட் எலவ் ஸ்டோரி(Ishq Not a love story) தலைப்பே கதையைச் சொல்லும் படம். இளம் காதலர்கள் ஒரு நாள் நள்ளிரவில் காரில் நீண்ட பயணம் செல்கிறார்கள். அந்த இரவில் அவர்களுக்கு ஏற்படும் அனுபவம் அவர்களில் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப்போட்டு விடுகிறது. திருமணமாகாத ஜோடிகளுக்கு ஏற்படும் அவலமும், அதன் நீட்சியாக நாயகன் எடுக்கும் முடிவுகளுமே படத்தை நகர்த்துகிறது. எந்த இடத்திலும் நாம் ஒரு திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே வராமல் நம்முடைய கண் முன்னால் நடக்கும் சம்பவங்களாக அனைத்தும் விரிகின்றன. அதேபோல் நடக்கும் நிகழ்சிகளுக்கு எதிர்வினைகளும் கதைப் போக்கிலேயே நடக்கிறது, எதுவும் வலிந்து திணிக்கப்படவில்லை. படத்தின் மொத்த விஷயத்தையும் கடைசி இரண்டு நிமிடத்தில் கதாநாயகி கேள்விக்குறியாக்கி விடுகிறார். கருத்தாக சொல்லாமல் காட்சிகளில் சொல்லப்படும் நெத்தியடி அது.

சக்காரியா இயக்கத்தில் ஷௌபின் நடித்த 'சூடானி பிரம் நைஜீரியா' (Sudani from Nigeria) மற்றுமொரு முக்கியமான படம். வட கேரளத்தில் கால்பந்து அணியை நிர்வகிக்கும் ஷௌபின், அவருடைய அணியில் சூடானைச் சேர்ந்த சாமுவேல் முக்கியமான வீரர். அவருக்கு காலில் அடிபட வீட்டில் வைத்து வைத்தியம் பார்க்கிறார் ஷௌபின். இரண்டு கலாசாரங்களும் கலக்கும் சந்தர்ப்பங்கள் அழகாகப் படமாக்கப்பட்டுள்ளன. ஒரு சமயத்தில் குழாயில் தண்ணீரை வீணாக்கும் ஷௌபினின் நண்பரை கடுமையாகக் கடிந்து கொள்வார் சாமுவேல். நண்பருக்கு ஒன்றும் புரியாது. பிறகு, சூடானில் குடி தண்ணீருக்காக அவர்கள் படும் பாட்டை சாமுவேல் சொல்வார். சென்னைவாசிகளுக்கு எளிமையாக புரிந்துவிடும். சாமுவேல்
சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் அவருடைய பாஸ்போர்ட் காணாமல் போகிறது. கள்ள பாஸ்போர்ட் என்பதால் புதிதாக வாங்கவும் முடியாது. திண்டாடிப் போவார்கள். மொழி புரியாமல் ஷௌபினின் அம்மா சாமுவேலிடம் உரையாட முற்படும் காட்சிகளும், சாமுவேல் ஊருக்குச் சென்ற பிறகு தன்னுடைய அம்மா மறுமணம் செய்தவரை ஷௌபின் புரிந்து கொள்ளும் காட்சிகளும் அத்தனை நேர்த்தியானவை.

தமிழிலும் அவ்வப்போது புதிய முயற்சிகள், வித்தியாசமான கதைக் களன்களைக் கொண்ட
சினிமாக்கள் வந்து கொண்டுதானிருக்கின்றன. ஆனால் மலையாள சினிமாக்களில் மம்மூட்டி, பகத் பாசில் போன்ற முன்னணி கதாநாயகர்கள் இவ்வகை முயற்சிகளில் பங்கேற்கிறார்கள். அந்தப் படங்கள் பெரும்பாலும் வசூல் ரீதியான வெற்றியையும் பெறுகிறது. அதே போல் ஷௌபின் போன்ற திறமையான நடிகர்களை மையப்பாத்திரங்களாக கொண்ட படங்கள் தமிழில் அரிதாகவே வருகின்றன. நம்முடைய வாழ்க்கையிலிருந்து, செய்யப்படும்
சினிமாக்களை மலையாளம் அளவிற்கு தமிழில் செய்வதில்லை. இப்படி ஏதேனும் ஒன்றிரண்டு வரும்போது அவற்றை வெற்றிபெற வைக்காமல் தமிழில் இப்படியான படங்களை எதிர்பார்ப்பதும் யாருடைய தவறு?

அக்டோபர், 2019.

logo
Andhimazhai
www.andhimazhai.com