சுட்ட பழம்

சுட்ட பழம்
Published on

ஏதோ  ஒன்று, ஏதோ இன்னொன்றை, ஞாபகப்படுத்து வதாக அமைவது ஒன்றும் புதிதில்லை.

கோடம்பாக்க கலைஞர்கள் இதை  ‘இன்ஸ்பிரேஷன்‘ என்கிறார்-கள். அதையே, உலகம் கை பேசியில் சுருங்கி விட்ட இந்த உலக மயமான சூழலில், அவர்களை வாழ வைக்கும் ரசிகப் பெருமக்கள் ‘பச்ச காப்பி’ என்கிறார்கள்.இது பெயர் தாண்டி உலகளாவிய விசயமும் கூட  என்பதில் கோடம்பாக்க கலைஞர்கள் கொஞ்சம் நிம்மதி அடை-கிறார்கள், அடைவார்கள், அடைய முயல்கிறார்கள்.

சுட்ட பழம் விசயத்தில் தமிழ் சினிமா கை காண்பிக்கும் மிகப் பெரிய ஆளுமை கமல் ஹாசன். அவர் பங்கு பெற்ற அத்தனை படைப்புகளும் இந்த குற்றச் சாட்டுக்கு உள்ளாகி இருக்கின்றன. அந்த குற்றச் சாட்டுக்கு அவர் மானசீகமாக விளக்கம் கொடுக்க இதுவரை நினைத்திருக்கிறாரோ இல்லையோ, அவர் மானசீகமாக ‘சுடுறது ஒரு மேட்டர் இல்ல’ என்று நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கும் ஒரு தருணம் சமீபத்தில் வாய்த்தது.

அது உலகின் ஒவ்வொரு மூலையிலும்‘தான் அவராக மாட்டோமா’ என்று எந்த திரைக் கலை ஆர்வனனும் கனவு கண்டு கொண்டிருக்கிற குவின்டின் தரண்டினோ வாய் திறந்து வாய்த்த வைபவம். இரண்டு விஷயம் சொல்லி இருக்கிறார் அவர். அதில் ஒன்று பொது.அது ‘சுடுவதை இன்னுமொரு கலை ஆகவே நான் நினைக்கிறேன், அதை எனக்கு அறிமுகமான, என்னைக் கவர்ந்த, நான் பயன்படுத்த நினைக்கும் எல்லாரிடமும் கட்டாயப் படுத்தியாவது பெற்றுக் கொண்டிருக்கிறேன்,

சிறந்தவற்றை உட்புகுத்துவதில் அவமானம் ஏதும் இல்லை என்பதால்’ என்பது. இன்னொன்று மிக நேரடியாக நம் ரசிகர்கள் கை சுட்டுகிற நம் உலக சுடும் நாயகனுடன் தொடர்புடையது. ‘கில் பில்’ படத்தின் அதீத வன்முறைக் காட்சிகளை கார்ட்டூன் மூலம் திரையில் காண்பிப்பது என்கிற முடிவை ஆளவந்தான் படம் பார்த்தே முடிவு செய்தேன்’ என்று அதே குவின்டின் தரண்டினோ சொல்லி இருப்பது.

ஆக, சுட்ட படம் யதார்த்தம். சுடாத படம்?

உண்மை சொல்ல வேண்டுமெனில் அது ஒரு மாயை மட்டுமே. இந்த யதார்த்தத்திற்கும், மாயைக்கும் இடையே தான் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது உலக சினிமா. குறைந்த பட்சம் இந்திய சினிமா. தமிழ், தென்னிந்திய சினிமா.

கேள்வி, அல்லது மானச் சிக்கல் எங்கு ஆரம்பிக்கிறது என்றால் குவின்டின் தரண்டினோ விடமிருந்து.

ஒன்று அவர் அதை இயல்பு என்கிறார். பல்ப் பிக்சன் என்கிற அவருடைய முக்கியமான படம் 70 களின் ஹாலிவுட் சினிமா கலாசாரத்தை கன்னா பின்னா என்று கிண்டல் பண்ணும் படம். ஸ்டைல், இசை, கதா பாத்திரங்கள் என்று எல்லாவற்றிலும் அது கிட்டத் தட்ட ஒரு ஸ்பூப்.ஆனால். அது, இன்றும் நினைவு கூறப் படுவது குவின்டின் தரண்டினோவுக்காக மட்டுமே.

இன்னொன்று, அவர்  அதை சொல்லவும் செய்கிறார்,நாமே அதை உணராத போது,அதைக் கேள்வி கேட்காதபோது.கில் பில் கமலின் ஐடியா ஒன்றைக் கொண்டு அமைந்தது என்பதை கில்பில் பார்க்க நேர்ந்த நம்மில் யாரும்

யோசித்திருக்க மாட்டோம்.

குவின்டின் தரண்டினோ வுக்கு இருக்கும் அந்த தில்லில் சுட்ட படம் சுடாத படம் என்கிற பிரச்னையின் முதல் தீர்வு ஆரம்பிக்கக் கூடும்.

ஏனெனில், இந்தப் பிரச்னையில் கதறிக் கொண்டிருப்பது தற்கால தமிழ் சினிமாவும், தெலுங்கில் ராஜ் மவுலியும் தான்.

ஈ என்பது உண்மையில் கரப்பான் பூச்சி என்பதில் இந்த கட்டுரை உண்மையாக ஆரம்பிக்கிறது.

இங்கே, ஈ என்பது ஜெயித்த விஷயம் எல்லா  மொழிகளிலும், கடைசியாக கண்டோர் பயந்திடும் பாலிவுட்டிலும்.ஆனாலும்,  ராஜ் மௌலி  ‘ட்வீட்டிக்’ கொண்டே இருக்கிறார் ‘ ஈ  கரப்பான் பூச்சி இல்லை’ என்பதை. அவரைப் பொறுத்தவரை இது அவர் குழந்தையாய் இருக்கும்போது அவரின் அப்பா சொன்ன கதை. இங்கே அவர் காப்பாற்ற முயற்சித்துக் கொண்டிருப்பது ஈ என்னும் அவரின் படைப்பை இல்லை. அது ஏற்கெனவே ஜெயித்து பேயாட்டம் ஆடிக் கொண்டிருக்கிறது. ஆனாலும், அவரின் ‘ஒரு சிறந்த கலைஞன்’ என்கிற இமேஜ் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. தகேஷி கிட்டானோவின் படைப்பை அப்படியே சுட்டு டைட்டிலில் அதைப் போட வேண்டும் என்கிற ஞானம் கூட இல்லாத, நந்தலாலா என்கிற தமிழின் மிகச் சிறந்த ஒரு படைப்பை உருவாக்கிய மிஷ்கினின் இமேஜ் உடைந்து போனதும் அந்த வெளிப்படையான குவின்டின் குவாலிட்டி இல்லாமல் போனதன் காரணமாகவே.

இதை இன்னும் மிக நேரடியாக ஒரு முட்டை உடைப்பதைப் போல சொல்ல முடியும் தனிப் பட்ட முறையில். யதார்த்தமும், மாயையும் கலந்த சினிமாவின் யதார்த்த முனையான அதன் வியாபார நெளிவு சுளிவுகளில் என் ஒவ்வொரு நொடியும் கரைவதால்.

எனினும், யாரும் அறியாத செய்திகள் அல்ல அவை.கீழ்க் கண்டவாறு அவை செய்தியாக நம் அனைவராலும் அறியப் பட்டவையே.

1.    மாற்றான் இயக்குனர் கே.வி.ஆனந்த்,சன்ஸ் பிக்சர்ஸ் ஹன்ஸ் ராஜ் சக்சேனாவை சந்தித்தார்.

2.    தாண்டவம் என்னுடைய கதை - இணை இயக்குனர் குற்றச்சாட்டு

3.    தாண்டவம் படம் இந்த பார்வையற்ற மனிதனின் இன்ஸ்பிரேஷன்- தாண்டவம் டீம் பிரஸ் மீட்.

4.    தாண்டவம் பற்றி இணையத்தில் அவதூறான செய்திகளே அதன் தோல்விக்கு காரணம்.-யுடிவி-தனஞ்செயன்.

5.    மாற்றான் இடைவேளைக்குப் பிறகு தோற்றான் - விமர்சனங்கள்.

6.    மாற்றான் ஓபனிங் 19 கோடி.

7.    துப்பாக்கி படம் டைட்டில் பிரச்னை தீர்ந்தது. கள்ளத் துப்பாக்கி டீம் கேஸை வாபஸ் வாங்கியது.

8.    துப்பாக்கி பட போஸ்டர் ‘ஜென்டில் மேன்-88’ ஆங்கிலப் படத்தின் காபி.

9.    வாகை சூடவா  இந்திய சர்வ தேச திரைப் படவிழாவுக்கு தேர்வான ஒரே தமிழ் படம்.

அலோன் என்கிற தாய்லாந்து சினிமா அங்கே சக்கை போடு போட்ட படம். உலக அளவில் விமர்சகர்களால் பாராட்டப் பட்ட த்ரில்லர். ஏனெனில் இரட்டையர் சினிமா-வின் உச்ச பட்ச முயற்சியான ஒட்டிப் பிறந்த இரட்டையரின் கதையை சொன்ன படம் அது. அதை நியாயமாக ரைட்ஸ் வாங்கி டைட்டிலில் போட்டு உருவான படம் ‘ சாருலதா’. கே.வி ஆனந்தின் ‘மாற்றான்’ சிக்கியது அந்த நியாயத்தில் மட்டுமே. ஆனாலும்

சாருலதா, தன் படத்துக்கு முன்பே ரிலீஸ் ஆகி, மாற்றானின் சுவாரஸ்யத்தை வெட்ட வெளியில் செல்லாக் காசாக்கும் என்பது கே.வி.ஆனந்தும் எதிர்பார்க்காதது.எனினும், நிஜத்தில், மாற்றான், ‘சாருலதாவின்’டம்மி தான்.அந்தப் படம் பாதியிலேயே அதன் எல்லா பிரச்னைகளையும் சந்திக்க ஆரம்பித்தது. ரைட்ஸ் வாங்கி ஒரு படம் உருவாகிக் கொண்டிருக்கும் போது, அதையே திருட்டுத் தனமாக செய்து கொண்டிருக்கும் ஒரு யூனிட் என்ன செய்ய இயலும்? தன் கதையை மாற்ற ஆரம்பித்து, தன் காட்சிகளை மாற்ற ஆரம்பித்து, ஒரு படத்திற்கு இரண்டு பட புட்டேஜ்களை எடுத்து வைத்து,  அதன் எடிட்டர் ஆன்டனி  அலறி, இரண்டு படத்துக்கான சம்பளம் கேட்பதில் முடியாமல்,  இன்னும் கே.வி. ஆனந்த் எல்லா இடங்களிலும் போய் விளக்கிக் கொண்டிருப்பதில் தொடர்கிறது மாற்ற முடியாத மாற்றான்  சோகம்.

இதே தான் தாண்டவம். எனினும்,ஒரு வித்யாசம்.அதே இயக்குனர் இதற்கு முன் எடுத்த ‘தெய்வ திருமகன்/ள்’ ஐ ஆம் சாம்’ படத்தின் காப்பி என்று ஊரே கூடி  தமுக்கடித்த போதும் அதை நம் தமிழ் கூர் நல்லுலகு வெற்றி பெறச் செய்தது.

ஆக,இங்கே உலகநாயகனும், குவின்டின் தரண்டினோ வும் மறுபடியும் கட்டுரைக்குள் வருகிறார்கள்.

அது இப்படி ஆரம்பிக்கிறது.

சுடாத படம் என்று ஒன்று சினிமா கண்டுபிடிக்கப் பட்ட காலத்தில் இருந்து இல்லை.

எனினும், சுடாத படம் என்பதை ‘சுட்டதை மறுக்காத, சுட்டதை சொல்லி அமைகிற, சுட்டதை சொல்லியும்

சொல்லாமலும் அதை விட சிறந்த படம் ஒன்றை அமைக்கிற’ ஒன்று என்று கொள்ளலாம்.

இதில்,மிக நேர்மையானது சுட்டதை சுட்டது என்று

சொல்லி, அதை விட அருமையான சுவையுடன் அதை நமக்கு படைப்பது தான்.

அதில் யாருக்கும் முன்னோடியாய் இப்போது திகழ்வது எண்டே கேரளா.

22 ஊஞுட்ச்டூஞு ஓணிttச்தூச்ட்.  இருபத்-திரண்டு, பீமேல், கோட்டயம்.

ஆஷிக் அபு  என்கிற முப்பத்து நான்கு வயது இளைஞன், சுட்ட படத்தை சுட்ட படம் என்றே சொல்லி, அந்த சுட்ட படத்தை விட சிறந்த படைப்பை கண் முன் நிறுத்தி அதை என்றென்றும் சுடாத படமாக நம் மனதில் தங்க வைத்துக் கொண்டிருப்பதை ஆக யதார்த்த-மாக டைட்டில் கார்டில் சொல்லியே நிகழ்த்திக் கொண்டிருக்கும் தற்கால இயக்குனர்.

அவருடைய எல்லா படங்களும் சுட்டவையே. அவருடைய எல்லா படங்களும் ஹிட்டானவையே. அவருடைய எல்லா படங்களும் சுடாத படம் அளவுக்கு இன்றும் கௌரவப் படுத்தப் படுபவையே. எனினும், டைட்டில் கார்டில் தன் நேர்மையை ஆரம்பிக்கும் இயக்குனர் அவர்.

ஏனெனில், சாருலதா தோற்று இருக்கலாம்,இன்றும் ‘அலோன்’ உலக சினிமாவில் அடைய முடியாத இடத்-தி-லேயே இருக்கிறது ஒட்டிப் பிறந்த இரட்டையர் கதையில்.

ஏனெனில், 22 பீமேல், கோட்டயம் அது எதிலிருந்து சுட்டது என்பதைப் பற்றி எல்லாம் கவலைப் படாமல் இன்னமும் ‘சுடாத படமாகவே’ நீடிக்கிறது, அதன் நேர்த்தி-யான உருவாக்கத்தின் காரணமாகவும், அது எதிலிருந்து இன்ஸ்பைர் என்பதை நேரடியாக சொன்னதன் காரணமாகவும்.

ஏனெனில் நாம் அருந்தும் ஒரு கோப்பை தேநீரில் புளியன்-கொட்டையும் கலந்திருக்கிறது என்பதை அறிந்தே அருந்தும் விசால மனதுடையவர்கள் தமிழர்கள். எளிதில் மறக்கவும்  மன்னிக்கவும்  கூடியவர்கள். காவிரியும்,பெரியார் அணையும், நாம் காலம் காலமாக அருந்தும் சேட்டன் களின் புளியங் கொட்டை தேநீரும், நாம் எதையும் தாங்கும் இதயம் படைத்தவர்கள் என்பதை காலம் காலமாக சொல்லி வருகின்றன.

சினிமாவுக்கு மட்டும் இந்த புளியங்கொட்டை விசயத்தில் நாம் அவநம்பிக்கை அநீதி இழைத்து விடப் போகிறோமா என்ன?

சுட்ட படம் என்பது யதார்த்தம். சுடாத படம் என்பது ஏமாற்று.

சுட்ட படத்தை சுட்ட படம் என்று சொல்லி காண்பிப்பது என்பது கலை நேர்மை.

ஜெயிப்பது என்பது மாயை இன்னமும்.

மாயையே சினிமா என்றும், யாருக்கும்.

ஆனானப்பட்ட குன்று தோறும் இருக்கும் குமரப் பெருமானே, ‘சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா’ என்று ஊதி ஊதித் தின்றுகொண்டிருந்த

உலக நாயகி அறிவுப் பழம் அவ்வைக் கிழவியை இடை மறித்துக் கேள்வி கேட்டு, ‘சுட்ட பழம்’ போதும் என்று அவளை ஒப்புக் கொள்ள வைத்த பின், சாமான்ய ரசிகர்கள் ஆன நாம் ‘சுடாத படம்’  கேட்போமா என்ன?

அவ்வளவுதான்.

அக்டோபர், 2012.

logo
Andhimazhai
www.andhimazhai.com