தென்னாப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த ஜாக்கி ஆக்மார்ட் என்பவர், உலகமறிந்த சமூக செயற்பாட்டாளர். 1997 இல் அவர் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டார். அப்போது அமெரிக்காவின் பிரபல நிறுவனத்தின் ஏஆர்வி எனப்படும் எய்ட்ஸிற்கான கூட்டு வைரஸ் மருந்தின் விலை, ஆண்டுக்குப் பத்து இலட்சத் திற்கு மேல். அதே சமயத்தில் தாய்லாந்தில் ஜெனரிக் எனப்படும் காப்புரிமை இல்லாத அதே மருந்து, அரசாங்கத்தால் உற்பத்தி செய்யப்பட்டு பயன்பாட்டில் இருந்தது. அந்த மருந்தின் விலை ஆண்டுக்கு இருபத்தைந்தாயிரம் மட்டுமே. ஆனால் ஆப்பிரிக்க நாடுகளில் பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் காப்புரிமைச் சட்டப்படி தாய்லாந்து ஜெனரிக் மருந்துகளை இறக்குமதி செய்யமுடியாது. உயிர்காக்கும் மருந்துகளைக் கையில் வைத்துக் கொண்டு, காப்புரிமை என்ற பெயரில் வளரும் நாட்டிலுள்ள மக்களைக் கொல்லாதீர்கள் என்று போராட்டத்தை ஆரம்பித்தார், ஜாக்கி.
‘நம்முடைய மக்கள் எய்ட்ஸினால் இறப்பதற்கு ஒரே காரணம், நாம் ஏழைகள் என்பதால்தான். மக்கள் கொத்துக் கொத்தாக மடியும்போது காப்புரிமையை பற்றி எதற்குப் பேசுகிறீர்கள். காப்புரிமையைத் தூக்கி எறியுங்கள்' என்று பன்னாட்டு மருந்து நிறுவனங்களுக்கு எதிராக, போர்க்கொடியை உயர்த்தினார். இவரிடம் எய்ட்ஸ் மருந்துகளை வாங்கக்கூடிய பொருளாதார சக்தியிருந்தது. தென்னாப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலாகூட ஜாக்கியை சந்தித்து மருந்துகளை எடுத்துக் கொள்ள வற்புறுத்தினார். ஆனாலும் அவர் மறுத்துவிட்டார்.
“நமது அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருந்துகளை ஏற்பாடு செய்யட்டும், நானும் எடுத்துக் கொள்கிறேன். என்னுடைய மக்கள் சாகும்போது நான் மட்டும் உயிர் பிழைப்பது அறமல்ல,' என்றார். இந்த அறப்போராட்டம் பெருங் கவனம் பெற்றது.
இந்நிலையில், இங்கே ஏறக்குறைய ஒரு கோடி மக்களுக்கும் மேலாக உயிர் காக்கும் மருந்தை வாங்க வசதியில்லாமல் எய்ட்ஸ் நோயினால் மடிந்த துயர சம்பவத்தைப் பதிவு செய்திருக்கிறது, டைலான் மோகன் கிரே இயக்கிய ஃபையர் இன் தி பிளட் (Fire in the blood,-2013) என்ற நெட் பிளிக்ஸ் ஆவணப்படம்.
ஒருவர் இறந்துவிட்டால், அது துக்கமான செய்தி. இலட்சக் கணக்கில் மக்கள் இறந்தால், அது புள்ளிவிவரச் செய்தி என்று நடிகர் வில்லியம் ஹர்டின் குரலுடன் தொடங்கும் இந்த ஆவணப்படம், இன்றைய பெருந்தொற்று காலத்திற்கும் பொருந்திப் போகிறது.
இந்தப் போராட்டம் நடந்த சமயத்தில் அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் எய்ட்ஸ் தொடர்பான பல சமூக விழிப்புணர்வு இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அதை முன்னெடுத்தவர்களுள் ஒருவரான ஜேம்ஸ் லவ் என்பவர், ஆப்பிரிக்க நாட்டு மக்களுக்கு உடனடியாக விலை குறைந்த எய்ட்ஸ் மருந்துகள் தேவை என்ற கோரிக்கையை முன்வைத்த போது, மற்ற மேற்குலக இயக்கத்தவர்கள் அதைப் பொருட்படுத்தாதது மட்டுமல்ல, எதிர்க்கவும் செய்திருக்கிறார்கள். அதற்கு அவர்கள் சொன்ன காரணம், ‘‘ஆப்பிரிக்க மக்கள் பெரும்பாலும் படிப்பறிவில்லாதவர்கள். அவர்களுக்கு இந்த மருந்தை சரியாகப் பயன்படுத்தத் தெரியாது. அதனால் மருந்து சில காலங்களில் செயல்படாமல் போவதற்கும், வைரஸ் உரு மாற்றம் அடைவதற்கும் வாய்ப்பிருக்கிறது” என்பதுதான்.
இதில் முக்கியமாகப் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் சொல்வது, மருந்து ஆராய்ச்சிக்காகப் பெருமளவில் பணம் செலவிடுகிறோம். அதனால் காப்புரிமை இருந்தால்தான் அதை ஈடுகட்ட முடியும் என்பது. இந்த ஆவணப்படத்தில் இக்கருத்தை உடைத்தெறிந்திருக்கிறார்கள். உலக அளவில் மருந்துக் கண்டுபிடிப்புக்கான ஆராய்ச்சியில் 86% அரசாங்கப் பணம் செலவிடப்படுகிறது. 12% மட்டுமே மருந்து நிறுவனங்கள் செலவிடுகின்றன. மக்களின் பணத்தில் கண்டுபிடிக்கப்படும் உயிர் காக்கும் மருந்துகளுக்கான பயன், மக்களுக்குத்தானே செல்லவேண்டும்? ஆனால், உண்மையில் அப்படி நடப்பதில்லை.
2000 இல் உலக எய்ட்ஸ் நோயாளிகளில் எழுபது சதவீதம் பேர் ஆப்பிரிக்க நாடுகளில் மட்டும் இருந்தனர். ஆப்பிரிக்க நாடுகளில் பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் மேலான வெறுப்பு அதிகரித்தது. மக்கள் வீதிகளில் வந்து போராடினார்கள்.
இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்திக் கொண்டிருந்த ஜாக்கி ஆக்மார்ட், உகாண்டாவைச் சேர்ந்த மருத்துவர் பீட்டர் முகேயினி போன்றோர் சட்ட விதிகளை மீறி தாய்லாந்திலிருந்தும் இந்தியாவிலிருந்தும் குறைந்த விலையில் எய்ட்ஸ் மருந்தை இறக்குமதி செய்து அதற்காக அரசாங்கத்தின் தண்டனையையும் எதிர்கொள்கிறார்கள். இந்தப் பிரச்னையைப் பற்றி பத்திரிகைகள் எழுத, உலக அளவில் ஆதரவு பெருகுகிறது.
குறைவான விலையில் எய்ட்ஸ் வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை ஆப்பிரிக்கக் கண்டத்தில் தவிக்கும் மூன்று கோடி மக்களுக்கு எப்படியாவது பெற்றுத்தரப் போராடும் செயற்பாட்டாளர்களுக்கு இந்தியாவில் உள்ள சிப்லா நிறுவனம் கைகொடுத்தது.
சிப்லாவின் நிறுவனர் அப்துல் அமீத், காந்தியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர். காந்தியின் அறிவுறுத்தலால் பெர்லினில் படித்து முடித்து 1935 இல் மும்பையில் சிப்லா நிறுவனத்தை தொடங்கியவர். இவரின் மகன் யூசுப் ஹமீத் தற்போது சிப்லாவை நிர்வகித்து வருகிறார். 1970 களில் பிரதமர் இந்திரா காந்தி உயிர் காக்கும் மருந்துகளுக்கான காப்புரிமைச் சட்டத்தை இந்தியாவில் மறுவரையரை செய்ததில் இவருக்கு முக்கிய பங்குண்டு.
புரூசெல்ஸ் நகரில் 2000- வது ஆண்டில் நடந்த உலகின் முக்கிய மருந்து நிறுவனங்களுக்கான சந்திப்பில் முதன் முதலாகக் கலந்து கொள்ளும் சிப்லாவின் அமீத், மூன்றாம் உலக நாடுகளின் பிரதிநிதியாக தாம் வந்திருப்பதாக அறிவிக்கிறார். எய்ட்ஸ் மருந்தினை ஆண்டுக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாய் செலவில் தரமுடியும் என்று அவர் சொன்னதை மற்ற நிறுவனங்கள் நம்பவில்லை.
சிப்லா நிறுவனத்தின் மருந்துகள், காப்புரிமைச் சட்டத்தை மீறி மிகச் சிரமப்பட்டு ஆப்பிரிக்கக் கண்டத்தை அடைகின்றன.
2002 இல் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், ஆப்பிரிக்க மக்களுக்கு எய்ட்ஸ் மருந்திற்கான நிதி உதவியை அறிவிக்கிறார். ஆனால் அவர் அறிவித்தபடி அந்தப் பணம் ஜெனரிக் மருந்துகளை வாங்குவதற்காகச் செலவிடப்படாமல், விலை அதிகமான அமெரிக்க மருந்துகளை வாங்குவதற்கே செலவிடப்படுகிறது. பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் அரசியல் ஆதிக்கம் அவ்வளவு வலிமையானது!
இதன் மூலமாக மற்ற மருந்துகளின் காப்புரிமைக்கு பங்கம் வந்துவிடும் என்று எண்ணிய பன்னாட்டு நிறுவனங்கள், இப்போது உலக வர்த்தக அமைப்பு வழியாக டிரிப்ஸ்(TRIPS) என்ற சட்டத்தின் மூலம் காப்புரிமைச் சட்டங்களை மறைமுகமாக மற்ற நாடுகளின் மேல் திணித்துக் கொண்டிருக்கிறது.
இன்றைய கொரோனா நிலையும் அன்றைய எய்ட்ஸ் நிலையும் ஏறக்குறைய ஒன்றுதான். வளரும் நாடுகள் விழித்துக் கொள்ளாவிட்டால், மருந்துகள் என்பது பணக்காரர்களுக்கு மட்டுமே என்ற நிலை ஏற்படும் என்று எச்சரிக்கிறது, இந்த ஆவணப்படம்.
ஜூன், 2021