காக்கா முட்டை பொரிக்கவில்லை!

காக்கா முட்டை பொரிக்கவில்லை!
Published on

என்னய்யா படமெடுத்திருக்கானுக” அலுத்துக்கொண்டார் பிரபல

சினிமா விமர்சகர் கோகோ.

“என்ன படம்?” என்றான் செந்தில் ஆர்வமாய்.

“காக்கா முட்ட. ஒரு பாட்டு இல்ல. டான்ஸு இல்ல. வளவளன்னு ஜவ்வா இளுக்கிறானுவ. கேட்டா அவார்டு படம்கிறானுங்க. அதையும் இவனுக போயி வாயப்பொளந்து பாக்கிறானுக.. லூசுப்பயலுவோ”

“விகடன்ல கூட அறுவது மார்க் கொடுத்ததா ஊர்பூரா பேசிக்கிறானுவோ. இந்தப்படம் நல்லா இல்லையா?”

“ஆமா.. கேட்டுக்கோ. அருமையான படமா வந்திருக்க வேண்டிய ஒரு படத்த சொதப்பித் தள்ளிருக்கானுவோ. ஐஸ்வர்யா ராஜேசுன்னு ஒரு அருமையான நடிகை. அவுங்க புருசன் ஜெயில்ல இருக்கான். ரெண்டுபேருக்கும் பழய நெனப்பு வர்றமாதிரி ஒரு கனவு டூயட் வெச்சிருக்கலாம். செய்யல. மானாட மயிலாடவுலயே பாத்திருக்கேன். அந்த புள்ள செம்ம ஆட்டம் போடும்.  அந்த குப்பம் பகுதில ஒரு எம்.எல்.ஏ. இருக்காரு. அவர் கிட்ட அந்த ஏரியால பீசா கடை வெக்க ஒருத்தர் உதவி கேக்காரு.. இதெல்லாம் ஒரு நைட் கிளப்புல வெச்சு, தொடைக்கு மேல டவுசர் போட்டுட்டு பொண்ணுங்க கெட்ட ஆட்டம் போடவெச்சு கேக்க வேண்டிய சீனு.. இதுல புஸ்ஸூன்னு ஒரு  காரை மட்டும் வெச்சு எடுத்திருக்கானுக..”

”ஓ”

‘’ஏன்ப்பா நா தெரியாமதான் கேக்குறன். குப்பத்துல வாழுற நம்ம தமிழ்நாட்டு மக்களெல்லாம் திருட்டுப்பயலுகளா? காக்காய்க்குத் தெரியாம மரத்தில் ஏறி அதோட மூணு முட்டையில ரெண்டை திருடிடுவானுகளாம் பயலுக. ஒண்ணை மட்டும் காக்காய்க்குனு வெச்சிட்டு வருவானுகளாம். எப்படிப் பண்ணாலும் திருட்டு திருட்டுதானே.. ரயில்ல போறவன் கிட்ட செல்போனை சின்னப் பையன் ஒருத்தன் திருடுறான். இதெல்லாம் காண்பிச்சு என்ன சொல்ல வர்றானுக... குப்பத்துல எல்லாம் திருடன்னா? இதை ஏன் எந்த சமூக ஆர்வலரும் கண்டிக்கல..”

“அண்ணே. நீங்க ரொம்ப சிந்திக்கிறீங்க. பேஸ்புக்ல போட்டீங்கன்னா லைக் அள்ளும்”

“ அதென்னமோ தெர்லப்பா.. அஞ்சான் மாதிரி நல்ல படம்லாம் வந்தப்ப அதை கழுவி ஊத்துன நம்ம இணையப் போராளிங்க, இந்த காக்கா முட்டய தாங்கு தாங்குன்னு  தாங்குறாய்ங்க. பாராட்டுவிழா நடத்துனா போய் மொய்க்கிறாய்ங்க... ஒருத்தர் இது உலகப் படம்னா இன்னொருத்தரு.. இது ஒலக மகா படம்கிறாரு.. அவ்ளோ பேருக்கும் காசு கொடுத்திருக்காய்ங்களா என்னன்னு புரியல”

“நீங்க பாத்த தியேட்டர்ல கூட்டம் எப்டி?”

“என்ன பண்றது..கொஞ்சம் தூங்கிட்டு வரலாம்னுதே இந்த படத்துக்குப் போனேன். சரியான கூட்டம். கிறுக்கனுவோ வாயப்பொளந்துகிட்டு படத்தைப் பாக்கிறானுவோ... எனக்குத்தான் சரியா தூக்கம் வர்ல”

“காமடியெல்லாம் இருக்கா?”

‘’ஏம்பா... அந்த வவுத்தெரிச்சலக் கேக்கற.. நம்ம பன்னிமூஞ்சி வாயன், சூதுகவ்வும்ல வர்ற பையன்லாம் இருக்காப்ல.. ஆனாலும் காமடி சீனே வெக்கலப்பா.. இயக்குநர் யாரோ மணிகண்டனாம். புதுப்பையன். அனுபவம் பத்தலப்பா.. அவரே தான் காமிராவாம். டாப் ஆங்கிள்லேயே எல்லாத்தையும் காட்டுறாரு... இந்த பயலுவ பேசுற டயலாக்கெல்லாம் தூரத்தில கேட்கிது. காது கிழியற மாதிரி மியூசிக் போட்டு, பஞ்ச் டயலாக்கா பேசச் சொல்லிக் கொடுத்தாதானேப்பா நல்லா இருக்கும். இவங்களுக்கெல்லாம் காஞ்சனா -2 வை பத்து தடவைப் போட்டுக்காட்டுனாதான் திருந்துவானுக..”

“என்ன கதண்ணே?”

‘’ஏம்பா தமிழ் சினிமால கதை எதுக்கு? காட்சிகள்தாம் முக்கியம். குப்பத்துல கோழிமுட்டை வாங்கிச் சாப்பிட முடியாம காக்கா முட்ட தின்ற பையங்க, பீசா வாங்கித்துன்ன ஆசைப்படுறானுக. இதுதான் கத. என்ன பெரிய விசயம்? சிட்டி ஆப் காட் பாத்திருக்கியா? அதுல வர்றமாதிரி ரெண்டுபேரும் கன்ன எடுத்துட்டு நேரா உள்ளபோய் டுப் டுப்னு சுட்டுட்டு ரெண்டு பீசாவை தின்னுட்டு, அவனுங்க ஆயாவுக்கும் கொடுக்கிற மாதிரி படம் எடுத்திருந்தா சூப்பரா இருந்திருக்கும். இது ஒரு புரட்சிகர சினிமான்னு சொல்லிக்கலாம். அத வுட்டுட்டு என்னமோ கரி பொறுக்கி விக்கிறானுகளாம். காசு சேக்கறானுகளாம். என்னமோ போ செந்தில்.. இந்த படத்துக்கு விருது கொடுத்தப்பவே நினச்சேன் தேறாதுன்னு. அப்டியே ஆயிடுச்சு.”

“சிம்புல்லாம் நடிச்சிருக்காரமே... பைட்லாம் இல்லையா?”.

 “நானும் அதைத் தாண்டா நெனைச்சேன். சிம்பு வந்து பீசா கடய தொறக்கறாரு. அப்புறம் பசங்கள அடிச்சிட்டாங்கன்னு தெரிஞ்சவுடனே ஹீரோ என்ன பண்ணனும். சர்ருன்னு போய் பீசா கட ரௌடிகளோட சண்ட போடற மாரி வச்சிருக்க வேணாமா? அதக்கூட வைக்கலடா..

“அப்பறம் ஏன் இந்த படத்தை இப்படிப்பாக்கறானுக.. நல்லா ஓடுதாமே?”

‘’அதான் சொல்றனே.. நம்ம ஆளுகளுக்கு என்னதான் ஆச்சு தெர்ல. வெற்றிமாறனும் தனுஷும் படத்தை தயாரிச்சாங்களாம். படம் ஓடணும்னு நெனச்சா தனுச வெச்சி வெற்றிமாறன் படம் எடுத்திருக்கணும். ஏதோ கணக்கு காமிக்க படம் எடுத்துட்டாங்கனு நினைக்கிறேன். இல்ல பீசா கடக்காரங்களோட  ஏதோ டீல் போட்டுட்டாங்களோ. புரில. படம் பாக்கிற எல்லாரும் நேரா பீசா கடைக்குத்தான் போறானுக. ஆக மொத்தம் என்னுடய ஒரு வரி விமர்சனம் இதுதான்: காக்கா முட்டை - பொரிக்கவில்லை”

செந்தில்,‘சூப்பர்னா’ என்றவாறு சிரித்தான்.

ஜூலை, 2015.

logo
Andhimazhai
www.andhimazhai.com