கனவுகளின் கோட்டை!

இணையத்தில் என்ன பார்க்கலாம்? 
கனவுகளின் கோட்டை!
Published on

கேள்வி: உங்களுடைய தினசரி நடவடிக்கைகளை வரிசைப்படுத்த முடியுமா?  சூரஜ்: படிப்பு, சாப்பிடுவது, படிப்பு பிறகு தூக்கம். கேள்வி: உங்களுடைய பொழுதுபோக்கு என்ன? சூரஜ்: அப்படி எதுவும் இல்லை. (இடையில் ஆசிரியர் குறுக்கிட்டு கேள்வி கேட்கிறார்). கடைசியாக எந்த வகுப்பு படிக்கும்போது தொலைக்காட்சி பார்த்தீர்கள்? சூரஜ்: நான்காம் வகுப்பு படிக்கும்போது...

( மாணவர்களின் கை தட்டல் ஒலியில் ஆசிரியர் சூரஜை பெருமையாகப் பார்க்கிறார்.)

ஐஐடி தேர்வில் நாட்டில் ஐந்தாவது ரேங்க் வாங்கிய மாணவரான சூரஜ், தான் படித்த கோச்சிங் இன்ஸ்டிடியூட் மாணவர்களுடன் நிகழ்த்திய கலந்துரையாடலின் ஒரு பகுதி.

கல்லூரிப் பருவத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் பிள்ளைகளைப் பெற்ற அனைத்து இந்தியருக்கும் தெரிந்த பெயர் கோட்டா. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா என்ற இந்த ஊருக்கு ஒவ்வொரு வருடமும் ஒன்றரை இலட்சத்திலிருந்து இரண்டு இலட்சம் மாணவர்கள் வரை ஐஐடி, நீட், ஜேஈஈ போன்ற போட்டித் தேர்வுகளுக்காக பயிற்சி பெற வருகிறார்கள்.

 நம்முடைய ராசிபுரம், நாமக்கல் பகுதியைப் போல இந்தியாவின் கோச்சிங் தலை நகரம் கோட்டா.

இங்கு படிக்க வருபவர்கள், அவர்களின் தங்குமிடம், மன அழுத்தம் ஆகிய பிரச்னைகளை பிரச்சாரமாக இல்லாமல் அவர்களுடனே தங்கி ‘அண் இன்ஜினியர்டு டிரீம் (An engineered dream)' என்ற ஆவணப் படத்தை உருவாக்கியிருக்கிறார் ஹேமந்த் காபா. சென்ற வருட சென்னை திரைப்பட விழாவில் சிறந்த ஆவணப்படமாக தெரிவு செய்யப்பட்ட இந்தப்படம் ‘விமியோ' ஓடிடி தளத்தில் இலவசமாகவே கிடைக்கிறது.

ஆவணப்படத்தின் முதல் காட்சியில் கோட்டா நகர அரசு விழாவில் மா நில முதல்வருடன் இலட்சக் கணக்கான மாணவர்கள் முன்னிலையில் ‘வாழும் கலை' ஸ்ரீரவிசங்கர் பேசுகிறார். மாணவர்கள் தனிமையைப் பற்றியும், பால் ஈர்ப்பையும் பற்றி கேள்வி கேட்க, படிப்பில் கவனம் செலுத்துங்கள் என்று கோச்சிங் சென்டர் ஆசிரியர் போல சொல்கிறார்.

 அடுத்து, கோச்சிங் சென்டரில், ‘இது உங்களுடைய மறு பிறவி. உங்கள் பெற்றோர் புகைப்படத்தை பர்சில் வைத்துக் கொள்ளுங்கள். பெற்று வளர்த்தவர்களுக்கு நீங்கள் செய்யும் கைமாறு நன்றாக படிப்பதுதான்' என்கிறார் ஓர் ஆசிரியர்.

இப்படி கோட்டாவில் நுழைந்ததிலிருந்தே அவர்கள் ‘தயார்' செய்யப்படுகிறார்கள்.

நான்கு வெவ்வேறு பின்புலம் கொண்ட மாணவர்களின் அனுபவத்தை இந்த ஆவணப்படம் முதன்மையாக பதிவு செய்திருக்கிறது. அதில் டெல்லியைச் சேர்ந்த சூரஜ் தான் நாம் முதலில் குறிப்பிட்ட ஐந்தாவது ரேங்க்காரர். அப்பாவின் கனவுக்காக படிப்பவர். நன்றாக படிப்பவர். எதைப் படித்தாலும் வெற்றி கிடைக்க வாய்ப்புண்டு. ஆனால் ஐ ஐ டி ஏன் என்ற கேள்விக்கு சூரஜின் அப்பா சொல்லும் பதில் தான் அபாரம். ‘மருத்துவம் படித்தால் செட்டில் ஆக 35 வயதுக்கு மேல் ஆகும். ஐ ஐ டியில் படித்து பெரிய கம்பெனியில் 24 வயதிலிருந்தே சம்பாதிக்க தொடங்கலாம்' என்கிறார். இவரின் அக்காவோ கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு அடுத்து சூரஜ் தான் என்று கனவு காண்கிறார். ஆனால், சூரஜ் எந்த கனவையும் துரத்துபவராக தெரியவில்லை. பெரும்பாலான ஆவணப்பட  கேள்விக்கு அப்பாவின் முகத்தைப் பார்கிறார். பதில் கூட பாதி நேரம் அப்பாதான் சொல்கிறார்.

இதற்கு நேரெதிராக சஸ்வத் சிங் இருக்கிறார். இரண்டாவது முறையாக முயற்சி செய்யும் இவர் தேர்வுக்கு முன்னதாக எப்படியாவது மூன்றாம் உலகப் போரை தொடங்குமாறு டொனால்ட் ட்ரம்புக்கு கோரிக்கை வைக்கிறார். ‘பக்கத்து செல்போன் டவரிலிருந்து தான் நிறைய மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள், நானும் யோசிக்கிறேன்'   என்று அவர் விளையாட்டாக சொன்னாலும் நமக்கு பகீரென்கிறது.

புறாக் கூண்டு போன்ற அறையில் புத்தகங்களோடு வருடக் கணக்கில் அடைந்து கிடைக்கும் இவர்கள் எவ்வளவு மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்பதை அவர்களின் அறைக்கதவுகளில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்களே தெரிவிக்கின்றன.

பெரும்பாலானவர்கள் அப்பா, அம்மா கனவையோ அல்லது சமூக அங்கீகாரம், திருமணம் என்று பல காரணிகளால் இந்த போட்டித் தேர்விற்குள் நுழைகின்றனர். மாணவர்களின் மன நிலை, அவர்களுக்கு எதில் விருப்பம் உள்ளது போன்றவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் போருக்குத் தயாராவது போல போட்டித்தேர்வுகளுக்கு தயார் படுத்துகிறார்கள். இதில் 0.7 சதவீதம் பேர் மட்டுமே வெற்றிபெறுகிறார்கள். அவர்கள் புகழ் வெளிச்சத்தில் கொண்டாடப்படுகிறார்கள். மற்ற 99.3 சதவீதத்தின் கதி?

கோச்சிங் சென்டர்களையோ ஆசிரியர்களையோ, பெற்றோர்களையோ குறை எதுவும் சொல்லாமல் இது இப்படித்தான் இருக்கிறது என்று உண்மையான நிலையை நமக்கு காட்டியிருக்கிறார் ஹேமந்த் காபா.

இந்நகருக்குப் படிக்க வரும் மாணவர்களில் ஒவ்வொரு வருடமும் இருபது,முப்பது பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதை தடுக்க அல்லது மாணவர்களின் மன நல ஆலோசனை வழங்க எந்த ஒரு முயற்சியும் இது வரை நடந்த மாதிரி தெரியவில்லை.

கோவிட் பிரச்னையின்போது ஆன்லைனில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. இதே சமயத்தில் நிறைய புதிய ஆன்லைன் வகுப்புகளுக்கான கம்பெனிகள் தொடங்கப்பட்டிருக்கிறது. அதனால் நல்ல ஆசிரியர்களுக்கு கடுமையான போட்டி. பிரபலமான இயற்பியல் ஆசிரியர் ஒருவரை வருடத்திற்கு இருபது கோடி கொடுத்து புதிய கோச்சிங் குரூப் தூக்கியிருக்கிறது.

இரண்டாண்டுகளுக்கு பிறகு இப்போது நேரடி வகுப்புகள் தொடங்கியிருப்பதால் வழக்கத்தை விட கூடுதலாக மாணவர்கள் கோட்டாவிற்கு படை எடுத்துள்ளார்கள். தோராயமாக மூன்று இலட்சம் பேர்!

கோட்டா பயிற்சி வகுப்புகளில் வருடத்திற்கு முந்நூறு கோடிக்கு மேல் பணம் புரள்வதாக  சொல்கிறார்கள்.

இக்கட்டுரைக்கு பெற்றோர்களின் பேராசையில் பலியாகும் வருங்கால சமூகம்  என்று தலைப்பு வைக்கலாம் எனத் தோன்றுகிறது. வைக்கலாமா?

செப்டம்பர், 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com