சமூக வலைதளங்களில் எப்படி எல்லாம் ஏமாற்ற முடியும் என்பதற்கு உதாரணமாக வந்திருக்கும் மற்றுமொரு ‘சதுரங்க வேட்டை' கதைதான் தி டிண்டர் ஸ்வின்ட்லர் (The tinde Swindler) நெட்ப்ளிக்ஸ் ஆவணப்படம்.
டிண்டர் என்பது ஒரு டேட்டிங் ஆப். நார்வே நாட்டின் ஓஸ்லோவை சேர்ந்த சிசிலியா தொழில் சார்ந்து லண்டனில் வசித்து வருகிறார். டிண்டர் ஆப்பில் சைமன் லெவிவ் என்கிற ஆளைப் பார்த்த உடன் பிடித்துப் போகிறது. உலகம் முழுக்க பறந்து கொண்டே இருக்கும் பெரிய பணக்காரன். வைர உலகின் ராஜாவான லெவிவ் குடும்பத்தின் ஒரே வாரிசு. தனி விமானம், ஐந்து நட்சத்திர ஹோட்டல் பார்ட்டிகள் என சிசிலியா கற்பனை செய்ய முடியாத உலகம். சிண்ட்ரெல்லாவை தேடி வரும் ராஜகுமாரனாக சைமனை பார்க்கிறார்.
சிசிலியா டிண்டர் ஆப்பில் தன் விருப்பத்தை தெரிவித்ததும் சைமன் உடனடியாக ‘ஒரு காபி சாப்பிடலாம் வாங்க' என்று தான் தங்கியிருக்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு வரச் சொல்கிறார். வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்க காதலனை சந்திக்கிறார் சிசிலியா. தனி விமானத்தில் வியாபார விஷயமாக பல்கேரியா செல்வதாகவும், விரும்பினால் உடன் வரலாம் என்று சைமன் சொல்ல உடனடியாக சம்மதிக்கிறார். சிசிலி தன்னுடைய அறைக்கு
சென்று பாஸ்போர்ட் மற்றும் உடைகளை எடுத்து வர ரோல்ஸ் ராய்ஸ் கார் வருகிறது. சைமனின் பாதுகாவலர் பீட்டர், கைக்குழந்தையுடன் முன்னாள் மனைவி என்று சிலருடன் முதன் முறையாக தனி விமானத்தில் பயணிக்கிறார் சிசிலியா.
பல்கேரியா பயணம் முடிந்து திரும்பி வந்ததும் இருவரும் தொடர்ச்சியாக காதல் வார்த்தைகளை பரிமாறிக் கொள்கிறார்கள். சைமனிடம் முழு மனதையும் பறி கொடுக்கிறார் சிசிலியா.
வைர வியாபாரத்தில் தனக்கு நிறைய எதிரிகள் இருப்பதாகவும், உயிருக்கு ஆபத்தும் வரலாம் என்கிறார் சைமன். ஒரு நள்ளிரவில் சிசிலியா போனுக்கு சைமன் அழைக்கிறார். பீட்டர் ரத்த காயங்களுடன் இருக்கும் புகைப்படமும் வருகிறது. பதறும் சிசிலியாவிடம், நல்வாய்ப்பாக பீட்டரால் உயிர் பிழைத்திருக்கிறேன் என்கிறார். அடுத்த நாள் பாதுகாப்பு பிரச்னைகளால் தன்னுடைய கிரெடிட் கார்ட்டை பயன்படுத்த முடியாததால் சிசிலியின் கிரெடிட் கார்ட்டை உபயோகித்துக் கொள்ள கேட்கிறார். வாழ்க்கைத் துணைவன் என்று ஆன பிறகு, கிரடிட் கார்ட் தானே என்று சிசிலியாவும் கொடுக்கிறார். மிக வேகமாக கிரடிட் கார்ட் அதனுடைய அதிக பட்ச அளவை எட்டிவிடுகிறது. அடுத்து, பணமாக ஏறக்குறைய இருபது லட்ச ரூபாயை எடுத்துக் கொண்டு ஆம்ஸ்டர்டாம் வரச் சொல்கிறார்.
உடனடியாக வங்கிகளில் கடன் வாங்கி பணத்தை எடுத்துக் கொண்டு நெதர்லாந்து செல்கிறார் சிசிலி. இதன் பிறகு தொடர்ச்சியாக பணம் கேட்டு சிசிலியாவை தொடர்பு கொள்கிறார் சைமன். சில நாட்களில் சைமன் பணத்தை திருப்பித் தருவதாக சொன்ன வாக்கை நம்பி ஏறக்குறைய இரண்டு கோடி ரூபாய் அளவிற்கு பணம் கொடுத்து விடுகிறார்.
அடுத்ததாக ஆவணப்படத்தில் வருகிறவர் ஸ்வீடனை சேர்ந்த பெரினிலா. இவரும் சிசிலியாவைப் போன்றே சைமனின் வலையில் விழுகிறார். இவரையும் ஒரு நாள் சந்திப்பதற்காக நாடு விட்டு நாடு வருகிறார். ஊர்கள் மட்டும் தான் வேறு வேறு, ஆனால் நிகழ்வுகள் வரிசையாக அதே போல நடக்கின்றன.
இதற்கிடையில் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து கொண்ட சிசிலியா, சைமனிடன் இனியும் எந்த பெண்ணும் ஏமாறக் கூடாது என்று நார்வேயின் முக்கியமான பத்திரிகைக்கு செய்தியை அளிக்கிறார். சைமனுடனான புகைப்படங்கள், வாட்ஸ் அப் குறுந்தகவல்கள், வீடியோ என்று அனைத்து ஆதாரங்களையும் தருகிறார். சிமோன் ஹையத் என்பவர் தான் சைமன் லெவிவ் என்று பெயரை மாற்றி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என்று கண்டுபிடித்து இஸ்ரேலில் உள்ள மற்றொரு பத்திரிகையாளர் மூலம் அவரின் வீட்டை கண்டுபிடிக்கிறார்கள். அவரின் அம்மா உங்களைப்போல நானும் அவனை தேடிக் கொண்டிருக்கிறேன் என்கிறார். சிமோன் ஹையத் பின்லாந்தில் தண்டிக்கப்பட்ட குற்றவாளி என்கிறது இஸ்ரேல் போலீஸ்.
சிசிலியாவின் வங்கிக் கணக்குகளை ஆராயும் பத்திரிகையாளர்கள் அதில் விமான பயணத்திற்கான குறிப்புகளில் பெரினிலா பெயரைக் கண்டறிந்து அவரை தொடர்பு கொள்கிறார்கள். முதலில் நம்ப மறுத்து அந்த செய்தியை சைமனுக்கு அனுப்புகிறார் பெரினிலா. பிறகு உண்மையை புரிந்து கொள்ளும்போது கணிசமான பணத்தை இழந்து விடுகிறார்.
இதில் முக்கியமான விஷயம் பெரினிலாவுடன் செலவு செய்த பணம் அத்தனையும் சிசிலியாவுடையது. அடுத்து பெரினிலாவின் பணத்தில் வேறொரு பெண்ணுடன் உல்லாசமாக சுற்றுப்பயணம். இதில் சைமனின் பெயர் எங்குமே வராது. இதனை பான்ஸி ஸ்கேம் என்கிறார்கள். இந்த மாதிரி ஏமாற்று வேலையில் உண்மையை நிரூபிப்பது அத்தனை எளிதல்ல.
ஜெர்மனியின் மியூனிக் நகரத்தில் உள்ள சைமனை சந்திக்க அடுத்த நாள் செல்லவிருக்கிறார் பெரினிலா. சுறுசுறுப்படையும் பத்திரிகையாளர்கள் சைமனை கையும் களவுமாக பிடிக்க பெரினிலாவுடன் சேர்ந்து திட்டமிடுகிறார்கள். ஆனால் கடைசி நேரத்தில் புகைப்படக்காரரை மாடியில் பார்த்துவிடும் சைமன் சுதாரித்து பறந்து விடுகிறார்.
நார்வேயின் மிகப் பெரிய பத்திரிகையில் சிசிலியா,பெரினிலா பற்றிய தகவல்களுடன் சைமனின் பெரிய புகைப்படத்துடன் தி டிண்டர் ஸ்விண்ட்லர் கட்டுரை வெளியாகிறது. கட்டுரைக்கு எதிர்வினைகள் ‘இப்படி பணக்காரனைத் தேடிப்போனால் இது தான் நடக்கும்' என்பதுபோல எதிர்மறையாகவே வருகிறது. ஆனால் கட்டுரை உலகெங்கும் தீயாக பரவுகிறது. சைமனிடம் ஏமாந்தவர்கள் வரிசையாக பத்திரிகைக்கு செய்தியை அளிக்கிறார்கள்.
அதே சமயத்தில் பராகுவேவில் தன்னுடைய காதலன் சைமனை சந்திக்க விமானத்தில் அமர்ந்திருக்கும் அய்லின் இன்ஸ்டாகிராமில் அந்த கட்டுரையை பார்க்கிறார். அவரும் ஒன்றேகால் கோடி ரூபாய்க்கு மேல் சைமனுக்கு செலவிட்டிருக்கிறார். விமானப் பயணம் முடிவதற்கும் முழு கட்டுரையும் படித்து தான் ஏமாற்றப்பட்டதை உணரும் அய்லின் சைமனை பழி வாங்க முடிவெடுக்கிறார்.
சைமனின் ஒவ்வொரு பொருளாக நைசாக வாங்கி, அதை விற்று பணம் சேர்த்து, பல முறை சைமன் கேட்டும் இதோ, அதோ என்று சைமன் பாணியிலேயே பதிலளிக்கிறார் அய்லின். பிறகு ஒரு கட்டத்தில் சைமனை மாட்டிவிடவும் செய்கிறார்.
போலி பாஸ்போர்ட்டில் பயணித்ததற்காக இண்டர்போல் சைமனை கைது செய்கிறது. ஆனால், ஏறக்குறைய எண்பது கோடி பண மோசடி, ஏழு நாடுகளில் தேடப்படும் குற்றவாளி சைமன், சில மாதங்களில் வெளிவந்து இப்போது இஸ்ரேல் மாடல் அழகியுடன் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார். சைமனை
மோசடிக் குற்றத்திற்காக கைது செய்ய முடியவில்லை. சைமனிடம் பணத்தை இழந்த பலர் இன்றும் கடன் பணத்திற்கு வட்டி கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இணையவெளி உடனடியான பண பரிவர்த்தனைகளுக்கும், முகம் தெரியா நட்புகளுக்கும் வழி வகுத்திருக்கிறது. ஆனால் எச்சரிக்கையாக இல்லாவிடில் என்ன நடக்கும் என்பதை இந்த ஆவணப்படம் காட்டுகிறது.
ஆகஸ்ட், 2022