எழுத்தாளர் எம்.கே. மணிக்கு மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மலையாளத்தை தாய் மொழியாகக் கொண்ட எம்.கே. மணி 1962இல் சென்னையில் பிறந்தார். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் இலக்கியம், சினிமா மீதிருந்த ஆர்வத்தால் அதில் தொடர்ந்து இயங்கினார்.
சினிமா துறையிலும் நீண்ட காலம் திரைக்கதையாளராக பணியாற்றியவர். இவரின் மூன்று சிறுகதைத் தொகுப்பும் வாசகர் மத்தியில் பரவலான கவனம் பெற்றவை. ஐந்து கட்டுரை தொகுப்பு, இரண்டு நாவல் எழுதியுள்ளார். ஒரு திரைக்கதை நூலும் வெளியிட்டுள்ளார்.
சிகை, டெவில் போன்ற திரைப்படங்களிலும் நவரசா ஆந்தலாஜியிலும் பணியாற்றியுள்ளார். மேலும், சில இணையத் தொடர்களின் கதை விவாதங்களிலும் பங்கேற்றிருக்கிறார்.
இந்நிலையில், சிறுநீரக கேளாறுக்காக சிகிச்சை பெற்று வந்த எம்.கே. மணி, மாரடைப்பு காரணமாக நேற்று (ஜூலை 15) சென்னையில் காலமானார். இவர் மறைவிற்கு எழுத்தாளர்கள், திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து பதிவொன்றைப் பகிர்ந்துள்ளார்.
அதில், “திரைப்படக் கட்டுரைகள் வழியாக சினிமாக் கலை மீதான ரசனையை வளர்க்க முயன்றவர், திரைக்கதையாளர், சிறுகதை ஆசிரியர், எழுத்தாளர் மணி எம்.கே. மணி மறைந்த செய்தி கேட்டு துயருற்றேன். அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த ஆறுதல்கள்.’ என கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அந்திமழை இதழிலும் எம்.கே.மணி சிறுகதையும் கட்டுரைகளும் எழுதி இருக்கிறார்.