தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டவர் நடிகை விஜயசாந்தி. கதாநாயகர்களுக்கு இணையாக 80, 90களில் ஆக்ஷன் கதாநாயகியாக ஜொலித்தவர். அவர் நடித்து 1990இல் வெளிவந்த 'வைஜெயந்தி ஐபிஎஸ்' படம் பற்றி இப்போதும் ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். விஜயசாந்திக்குப் பிறகு கடந்த 30 வருடங்களில் வேறு எந்த ஒரு நடிகையும் ஆக்ஷன் ஹீரோயினாக வெற்றி பெற்றதில்லை.
சினிமாவை விட்டு விலகி தீவிர அரசியலில் குதித்த விஜயசாந்தி நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2020இல் மகேஷ்பாபு நடித்து வெளிவந்த 'சரிலேரு நீக்கெவ்வரு’ படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார்.
இந்நிலையில், பிரதீப் சிலுகுரி இயக்கத்தில் கல்யாண் ராம் கதாநாயகனாக நடித்து வரும் அவரது 21ஆவது படத்தில் வைஜெயந்தி ஐபிஎஸ் ஆக நடிக்கிறார் விஜயசாந்தி. கடந்த ஜூன் 24 ஆம் தேதி அவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது அறிமுக வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். 30 வருடங்களுக்கு முன்பு எப்படி அந்தக் கதாபாத்திரத்தில் இருந்தாரோ அதே வேகத்தில் இப்போதும் நடித்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனக்கு பிடித்த போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து நாளிதழ் ஒன்றுக்கு விஜயசாந்தி அளித்த பேட்டியில், “போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்லிம்மாகவும் ஃபிட்டாகவும் இருக்க வேண்டும். தினந்தோறும் இரண்டு மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறேன். கார்போ ஹைட்ரேட் மற்றும் சர்க்கரையை தவிர்த்து வருகிறேன்.
'சரிலேரு நீக்கெவ்வரு’ படத்திற்குப் பிறகு நிறைய கதைகள் வந்தாலும் நல்ல கதைகளையே தேர்வு செய்து நடிக்க விரும்புகிறேன். மீண்டும் போலீஸ் கேரக்டரில் நடிக்கிறேன். மக்கள் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன். 45 வருடங்களில் ஏறக்குறைய 200 படங்களில் நடித்துள்ளேன். கடின உழைப்பால் அரசியலிலும் சினிமாவிலும் வெற்றி பெற்றிருக்கிறேன்.” என கூறி உள்ளார்.