திரைப்படங்களில் விஜயகாந்தின் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு முறையான அனுமதி பெற வேண்டும் என பிரேமலதா கூறியுள்ளார்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரக்கூடிய 'கோட்' திரைப்படத்தில் மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இதற்கு தே.மு.தி.க. பொதுச்செயலாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதாவிடம் முறையான அனுமதி பெறப்பட்டிருக்கிறது.
ஆனால், இன்னும் ஒரு சில படங்களில் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தில் கொண்டுவருவதாக தாங்கள் கேள்விப்படுவதாகவும் அதற்கான முறையான அனுமதி பெற வேண்டும் எனவும் பிரேமலதா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில், ‘தமிழ் திரை உலகைச் சேர்ந்த அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்! புரட்சிக் கலைஞர் கேப்டனை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வருகிறது. எனவே இதுபோன்ற செய்திகள் ஆடியோ வெளியீட்டு விழாவில் வருகின்றன. இந்த மாதிரியான அறிவிப்புகளைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
எந்தவிதமாகப் பயன்படுத்துவதாக இருந்தாலும் எங்களிடம் முன் அனுமதி பெற்ற பின்பே அறிவிப்பை வெளியிட வேண்டும். இதுவரை அதுபோன்று யாரும் எங்களிடம் அனுமதி பெறவில்லை. அதனால், இதுபோன்ற அறிவிப்புகளைத் தவிர்த்துவிடுங்கள்.” என்று பிரேமலதா கூறியுள்ளார்.