தி கோட் திரைப்படத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் விஜயகாந்த் தோன்ற அனுமதி அளித்ததற்காக, விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவை நேரில் சந்தித்து நடிகர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. வரும் செப்டம்பர் 5ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது. இந்தப் படத்தில் மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த்தை ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தியுள்ளதாக தகவல் வெளியானது. மேலும், இதனை அண்மையில் நடந்த டிரெய்லர் வெளியீட்டு விழாவில் வெங்கட் பிரபு உறுதி செய்திருந்தார்.
இந்நிலையில், நடிகர் விஜய் சென்னை விருகம்பாகத்தில் விஜயகாந்த் இல்லத்துக்கு நேற்று இரவு சென்றார். அங்கு பிரேமலதா வியகாந்தை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தி கோட் படத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் விஜயகாந்த் தோன்ற அனுமதி அளித்ததற்கு பிரேமலதாவுக்கு அவர் நன்றி தெரிவித்தார். பின்னர் விஜயகாந்தின் உருவப்படத்துக்கு நடிகர் விஜய் மரியாதை செலுத்தியுள்ளார். சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள வெங்கட் பிரபு, “விஜயகாந்த் ஆசியுடன் ‘தி கோட்” என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, ‘விஜகாந்தை ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வருகிறது. எந்தவிதமாகப் பயன்படுத்துவதாக இருந்தாலும் எங்களிடம் முன் அனுமதி பெற்ற பின்பே அறிவிப்பை வெளியிட வேண்டும். இதுவரை அதுபோன்று யாரும் எங்களிடம் அனுமதி பெறவில்லை.” என்று பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது ’தி கோட்’ திரைப்பட குழு பிரேமலதா நேரில் சந்தித்து நன்றி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.