வேட்டையன்: திரைவிமர்சனம்

Vettaiyan Rajinikanth
Published on

‘வேட்டையன்’ படத்தின் டீசர் வெளியானதும் ’ஜெய்பீம்’ இயக்குநர் ஞானவேல் என்கவுண்டரை ஆதரிக்கிறாரா? என பலரும் கேள்வி எழுப்பினர். இந்த கேள்விகளுக்கு படம் பதிலளிக்கிறதா?இல்லையா? என்பதைக் கடைசியில் பார்க்கலாம்.

‘அநீதி நடக்கும்போது அதிகாரத்தை கையில் எடுக்கலாம்’ என்ற கொள்கையுடையவர் பிரபல என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் எஸ்.பி. அதியன் (ரஜினிகாந்த்). இன்னொரு பக்கம், ‘அநீதியை நீதியால்தான் வெல்ல முடியும்’ என்ற கருத்துடையவர் ஓய்வுபெற்ற நீதிபதி சத்யதேவ் (அமிதாப் பச்சன்). எதிரும் புதிருமான கருத்துடைய இவர்கள் இருவரும் இளம்பெண் ஒருவரின் பாலியல் பலாத்கார வழக்கில் களம் இறங்குகிறார்கள். இறுதியில் யாருடைய கருத்தியல் நீதியை பெற்றுத்தந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

‘நோ பாலிடிக்ஸ்’ என ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பிலும் முகத்தை திருப்பும் ரஜினிகாந்தை வைத்து, என்கவுண்டருக்கு எதிரான அரசியலையும் கல்வி வியாபாரமாவதையும் பேசியிருக்கிறார் இயக்குநர் ஞானவேல். மாஸுக்கு மாஸ்... கிளாஸுக்கு கிளாஸ்!

படம் ரஜினியின் அசத்தல் அறிமுகம் போன்ற கமர்சியல் அம்சங்களுடன் தொடங்கினாலும், அடுத்த அரை மணிநேரத்தில் கதைக்குள் பயணிக்கத்தொடங்கிவிடுகிறது. துஷாராவின் அறிமுகம், அவரின் பின்னணி, தொடர்ந்து அவரது மரணம், அதன் மீதான விசாரணை என படத்தின் முதல்பாதி நகர்கிறது.

முதல் பாதியில் ரஜினிக்கும் – அமிதாப் பச்சனுக்கும் இடையே நடக்கும் என்கவுண்டர் தொடர்பான விவாதத்தை இயக்குநர் மிகவும் நுட்பமாக உருவாக்கியுள்ளார். பொழுதுபோக்கும் சமூக அக்கறையும் கொண்ட திரைப்படமாக வேட்டையனை உருவாக்கியுள்ளது என்று இதைவைத்தே சொல்லலாம்.

ரஜினிக்கு ஜெயிலரில் பார்த்த அதே தோற்றம்தான் இதிலும். அவரது அலட்டல் இல்லாத சண்டை, உடம்பு நோகாத டான்ஸ் ஈர்க்கவே செய்கிறது. படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்கள் கன்னியாகுமரி வட்டார வழக்கில் பேச, ரஜினி மட்டும் சாதாரணமாக பேசுகிறார். அவருக்கு மட்டும் விதிவிலக்கு ஏனோ? அவர் பேசியிருந்தால் எப்படி இருந்திருக்கும்? அவரவர் கற்பனைக்கு என விட்டுவிட்டார் போல.

‘குறி வச்சா இரை விழணும்’ என மூச்சுக்கு முன்னூறு தடவை ஒரே வசனத்தைப் பேசும் ரஜினிகாந்த், பத்தடி தூரத்தில் உள்ள ரவுடிகளை சுட்டபிறகே இதை ஸ்டைலாக பேசுகிறார். சீரியசான இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லராக வந்திருக்க வேண்டிய படம் ரஜினிக்காகவே வைக்கப்பட்ட சில மசாலா காட்சிகளால் தடுமாடுகிறது.

ஸ்டைலாக நடந்து வருவது, ஸ்லோ மோஷனில் சண்டைக்காட்சிகளைக் காட்டுவது, கண்ணாடியை தூக்கிப் போட்டு மாட்டுவது போன்ற சலிப்பூட்டும் காட்சிகளை தவிர்த்திருக்கலாம். ஆனால் இப்படி எழுதினால் ரஜினி ரசிகர்கள் கோபித்துக் கொள்வார்களோ?

மாமன்னனில் அரசியல்வாதியாக கலக்கி கவனம் பெற்ற பகத் பாசில், இதில் ரஜினிக்கு உதவி செய்யும் பேட்டரி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் முழுக்க அவர் அடிக்கும் கவுன்டர்கள் சிரிக்க வைக்கின்றன. ஒரு துணை கதாப்பாத்திரம்தான். ஆனால் அவரது ஆதிக்கம் அசத்தல்.

ஓய்வு பெற்ற நீதிபாதியாக அமிதாப் பச்சன். வயதுக்கும் தோற்றத்துக்கும் ஏற்ற கதாபாத்திரம். கச்சிதமான நடிப்பால் கவர்கிறார். பொறுப்பான பள்ளி டீச்சராக வரும் துஷாரா விஜயன் கதாபாத்திரம் மனதில் பதிந்துவிடுகிறது. போலீஸ் அதிகாரியாக வரும் ரித்திகா சிங் ஓடுகிறார், அப்படியே ஓடிப்போயும் விடுகிறார். கதாபாத்திரமாக மனதில் நிற்கவில்லை. மஞ்சு வாரியருக்கு ‘மனசிலாயோ’ பாடலோடு சரி. ராணா டகுபதி, அபிராமி ஷோகேஸ் பொம்மைகள் மாதிரி வந்து போகிறார்கள். காவல் துறை அதிகாரியாக வரும் எழுத்தாளர் ஷாஜி இறுக்கமான முகபாவனையால் மிரட்டியிருக்கிறார்.

அனிருத்தின் பின்னணி இசை படத்தை பல இடங்களில் காப்பாற்றி இருக்கிறது. மனசிலாயோ பாடலை தவிர மற்ற பாடல்கள் கதைக்கு ஏற்ற வகையில் அமையவில்லை.

அடுத்த என்ன? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தாத திரைக்கதை, நெஞ்சைத் தொடாத செண்டிமெண்ட், வலுவற்ற எதிரி, இரண்டாம் பாதியின் நீளம் ஆகியவை படத்தின் பலவீனங்கள்.

படத்தில் என்கவுண்டரை நியாயப்படுத்துவது போன்ற வசனங்கள் வருவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், ’போலீஸ் வேட்டைக்காரர்கள் இல்லை; பாதுகாவலர்கள்’ என தெளிவான பதிலை கொடுத்ததுள்ளார் இயக்குநர். அதற்காகவே வேட்டையனை வரவேற்கலாம்! இன்றைய தமிழ்நாடு போலீஸ் கவனத்துக்கு.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com