எலான் மஸ்க் - முதலமைச்சர் ஸ்டாலின் இருவரும் சந்தித்துக் கொண்டது போன்ற ஏஐ புகைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு பகிர்ந்துள்ளார். இந்த படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த வாரம் சான்பிரான்சிஸ்கோ நகருக்குச் சென்றார். இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் நேற்று காலை சிகாகோ நகருக்கு சென்றடைந்தார்.
முதலமைச்சருடன் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் அரசு அதிகாரிகள் சென்றுள்ளனர்.
இதனிடையே, இயக்குநர் வெங்கட் பிரபு கஸ்டடி திரைப்படத்துக்குப் பிறகு விஜய்யின் 68-ஆவது படமான ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. - Greatest Of All Times) படத்தை இயக்கியுள்ளார். தற்போது, கோட் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். படம் நாளை வெளியாக உள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் உடன் இருக்கும் ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக வெங்கட் பிரபு தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட இந்த புகைப்படம் உண்மையாக வேண்டும் என்று விரும்புகிறேன். டெஸ்லா நிறுவனம் தமிழகத்திற்கு வந்தால், அது நமது முதல்வரின் கோட் சாதனை.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர் வெங்கட் பிரபு பகிர்ந்துள்ள இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளதோடு, கோட் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்பதற்காகவே அவர் இந்த படத்தை பகிர்ந்திருப்பதாக விமர்சித்து வருகின்றனர்.