வீரன்: திரைவிமர்சனம்!

வீரன்: திரைவிமர்சனம்!
Published on

கார்ப்பரேட் சதியிலிருந்து (ஆவுனா கார்ப்பரேட் சதியை தூக்கிக் கொண்டு வருவது) தன்னுடைய கிராமத்தை காக்கும் சூப்பர் ஹீரோவின் கதை தான் வீரன் திரைப்படம்.

வீரனூர் கிராமத்தைச் சேர்ந்த ஆதி (குமரன்) சிறுவயதிலேயே இடி தாக்குதலுக்கு உள்ளாகிறார். இதனால் அவரது உடல் நிலைப் பாதிக்கப்படுகிறது. சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்லும் அவர், பத்துப் பதினைந்து வருடங்கள் கழித்து மீண்டும் ஊருக்கு வருகிறார். அப்போது தனது கிராமம் ஒரு மோசமான திட்டத்தால் பாதிக்கப்படப்போவதை கண்டுபிடிக்கிறார். அதேபோல், அவருக்கு இடி தாக்கியதில் சில சக்திகள் கிடைத்துள்ளது. அதை வைத்து தன்னுடைய கிராமத்தையும் மக்களையும்  ஆதி காப்பாற்றினாரா இல்லையா?. அந்த அதிசய சக்தி என்ன? இதற்கு விடை சொல்வதுதான் படத்தின் மீதி கதை.

கடவுள் நம்பிக்கை, அறிவியல், மக்களின் அறியாமை. இவை மூன்றையும் சேர்த்து ஒரு கமர்ஷியல் திரைக்கதை எழுத முயன்றுள்ளார் இயக்குநர் ஏ.ஆர்.கே சரவணன். சூப்பர் ஹீரோ கதை என்பதால் எப்படி வேண்டுமானாலும் கதைவிடலாம் என நினைத்திருப்பார்கள் போல. காவல் தெய்வமான வீரனுக்கு, ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட வரலாறு இருப்பதாக சொல்லிவிட்டு, கடைசியில் நோட்டில் எழுதியதைக் கொண்டு வந்து காட்டுவது. வில்லனாக வரும் வினய் ராய் அனைத்து விஞ்ஞானத்தையும் கரைத்துக் குடித்தவராக இருப்பது. சூப்பர் ஹீரோவான நாயகன் ஆதி, தூங்கி எழுந்து வந்து வித்தைகள் புரிபவராக காட்டுவதெல்லாம் கதையின் மீதான நம்பகத்தன்மையைக் குறைத்துவிடுகிறது.

தமிழில் ஏற்கெனவே சில சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் வந்திருந்தாலும், அவை எதுவும் சூப்பராக இருந்ததில்லை. வீரனும் அந்த பட்டியலில் சேர்கிறது. கிராமத்து இளைஞராகவோ, சூப்பர் ஹீரோவாக ஆதி நடிப்பில் துள்ளல் இல்லை. சூப்பர் ஹீரோ கெட்டப்பில் ஏன் இப்படி சொங்கியாக உள்ளார்? என கேட்கத் தோன்றுகிறது. நாயகி ஆதிரா கொடுத்த வேலையை செய்திருக்கிறார். ஆதியின் நண்பனாக வரும் சசி கோயம்புத்தூர் இளைஞராகவே வாழ்ந்துள்ளார். முனிஷ்காந்த், காளி வெங்கட் இருவரும் தான் படத்தின் தூண்கள். அவர்கள் செய்யும் நகைச்சுவையே கொஞ்சம் ஆறுதல். இதுதவிர வில்லனாக வரும் வினய் ராய், குறைந்த நேரமே வந்தாலும் மிரட்டி விட்டு செல்கிறார்.

நாயகன் ஆதியே இசையமைத்துள்ளார். பின்னணி இசை ஓரளவு ரசிக்கும்படி இருந்தாலும் பாடல்கள் எடுபடவில்லை. ஒளிப்பதிவு, படத்தொகுப்பு போன்றவை குறிப்பிட்டு எழுதும் அளவுக்கு இல்லை.

சூப்பர் ஹீரோ கதைக்குத் தேவையான அம்சங்களான கடினமான சவால்களோ, தத்ரூப சண்டைக் காட்சிகளோ, சுண்டியிழுக்கும் காதல் காட்சிகளோ இல்லாமல் ‘வீரன்’ மண்டியிடுகிறான்.

logo
Andhimazhai
www.andhimazhai.com