நடிகர் சிவகுமார்
நடிகர் சிவகுமார்

ஐந்து பேரிடம் பேண்ட், பெல்ட் ஓசி வாங்கி எடுத்த முதல் புகைப்படம்!

Published on

நடிகர் சிவகுமாருக்கு 50ஆவது மணநாள் கடந்த 1-7-2024 வந்து போனது. அதாவது திருமணமாகி பொன்விழா ஆண்டு. அதை முன்னிட்டு காலை முதல் நாள் முழுக்க நேரிலும் அலைபேசியிலும் பல்வேறு ஊடகங்கள் மூலமும் வாழ்த்துகளை ஏற்ற வண்ணம் இருந்தார். இருந்தாலும் அந்த ஐம்பதாவது ஆண்டு திருமண நாள் என்பதை நினைவில் நிற்கும்படியான நாளாக மாற்றிடும் வகையில், தனது பால்ய கால பழைய நண்பர்களை வீட்டுக்கு வரவழைத்து, அவர்களுடன் உரையாடி, விருந்தளித்து ஒரு இனிய சந்திப்பை அவரே உருவாக்கிக் கொண்டார். அது பற்றி அவர் கூறும் போது,

தனது மகன் கார்த்தி மற்றும் நண்பர்களுடன் சிவகுமார்
தனது மகன் கார்த்தி மற்றும் நண்பர்களுடன் சிவகுமார்

'நான் ஓவியக் கல்லூரியில் 1959-லிருந்து 1965 வரை

படித்த போது சந்திரசேகர், சேனாதிபதி, மேனுவல், சைமன் ஆகியோர் என்னுடன் படித்த நண்பர்கள் .

கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நண்பர்களைச் சந்திக்க வேண்டும் என்று எனக்குள் ஆவல் எழுந்தது.அவர்களை வீட்டிற்கு வரவழைத்து சந்தித்து உரையாடினேன். பலவற்றையும் பேசிக் கொண்டிருந்தேன்.

அவர்களுடன் உணவு உண்டு எனது பெயிண்டிங் புத்தகத்தைப் பரிசாக அளித்தேன். நான் பேசிய உரைகளையெல்லாம் திரையில் போட்டுக் காட்டினேன்.அவர்களுடன் பேசிய அந்த அனுபவம் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. அறுபது எழுபது வயதுக்கு மேல் இதை விட வேறு என்ன பெரிய சந்தோஷம் இருக்கிறது ? பழைய நண்பர்களைச் சந்திப்பது தான் பெரிய சந்தோஷம்.

சிவகுமார்
சிவகுமார்

அப்படிச் சந்திக்கும்போதும் பேசும்போதும் பழைய காலத்திற்கே நாம் செல்வது போல் உணர முடியும். நான் மீண்டும் பல ஆண்டுகளுக்கு பின்னால் போய் நிற்பது போல் இருந்தது. என் வயதெல்லாம் குறைந்தது போல் தோன்றியது.

அந்தக் காலத்தில் ஒரு போட்டோ எடுப்பதற்கு என்னுடையது என்று இருந்தது தொப்பியும் பனியனும்தான்.

ஒரு நண்பனிடம் பேண்ட் வாங்கி, இன்னொரு நண்பனிடம் ஓவர் கோட் வாங்கி, வேறொரு நண்பனிடம் பெல்ட் வாங்கி இன்னொருவனிடம் ஷூ வாங்கி இப்படி ஐந்து பேரிடம் ஓசியில் வாங்கிப் போட்டுக் கொண்டு போட்டோ எடுத்து தான் ஒரு சாதாரண ஆள் சிவகுமார் என்கிற நடிகராக வந்து பெரிய அளவில் பெயர் பெயர் வாங்கினார் என்பதை நினைத்து அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

நினைக்கும் போது எனக்கே ஆச்சரியமாக இருந்தது.

அந்தப் புகைப்படத்தை எடுத்தவர் வில்லியம்ஸ். பின்னாளில் மலையாளப் படவுலகில் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்.

இப்படி ஆளாளுக்கு ஒவ்வொன்றுவாங்கி புகைப்படம் எடுத்துத்தான் சிவகுமார் சினிமாவுக்குள் போனான் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?

மூன்றாவதாக இருப்பது நடிகர் சிவகுமார்
மூன்றாவதாக இருப்பது நடிகர் சிவகுமார்

இவற்றையெல்லாம் நினைக்கும் போது எனக்கே ஆச்சரியமாக இருந்தது.

சுமார் 190 படங்களில் நடித்து கோடிக்கணக்கான பிரேம்களில் எனது முகம் இடம்பெற்று இருந்தாலும் அன்று அந்த முதல் போட்டோ எடுத்த அனுபவம் மறக்க முடியாததாகத்தான் இருக்கிறது.

அதெல்லாம் இவர்களைப் பார்க்கும்போது ஞாபகத்தில் வந்தது.

ஓர் ஓவியனாக அவர்களது முகங்களைப் பார்க்கும் போது, காலம் ஒவ்வொருவர் முகத்திலும் கோடுகளை வரைந்து வேறு விதமான ஓவியமாகக் காட்டியிருந்தது.

அவரவர் வாழ்க்கை அவரவர் அனுபவம் தனித்தனி. நினைவுகள் எங்கெங்கோ சென்றன.

மீண்டும் சொல்வேன் பழைய நண்பர்களை நீண்ட காலத்திற்குப் பிறகு சந்திப்பது போல் மகிழ்ச்சி உலகத்தில் வேறு எதுவும் கிடையாது.இதை அனுபவித்தால் மட்டுமே உணர முடியும்.

அந்த நாள் ஒரு குறிப்பிடத்தக்க நாளாக மாறியது" என்கிறார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com