மலையாள சினிமாவை ஆட்டம் காண வைத்திருக்கிறது ஹேமா கமிட்டியின் அறிக்கை. இதன் வீச்சு மற்ற மொழி திரையுலகை பதம் பார்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இது தொடர்பான ஊடக விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி பல விஷயங்களை ஆதங்கத்துடன் பகிர்ந்து கொண்டார்.
பாலியல் அத்துமீறல், சுரண்டல் என்பது மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல், மற்ற மொழி சினிமாவிலும் இருப்பதாக கூறியவர், 30 ஆண்டுகளுக்கு முன்னர் தனக்கு நடந்த ஒரு சம்பவத்தையும் சொன்னார்.
“1990 களில் என்னுடன் பல நடிகைகள் நட்பாக இருந்தனர். அவர்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறலை என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, நடிகை ஒருவர் அவருடைய டைரியை என்னிடம் கொடுத்திருக்கிறார். அது இன்னும் என்னிடம் பத்திரமாக உள்ளது.
அவர் எந்தெந்த நாளில் என்னென்ன நடந்தது என்பதை எழுதி வைத்திருக்கிறார். அவரின் பெயரை மறைத்துவிட்டு, நடிகையின் டைரியை தொடராக எழுதி ’செல்லுலாய்டு தேவதைகள்’ என்ற புத்தகமாக வெளியிட்டிருக்கிறேன்.
அந்த நடிகையின் டைரியை படிக்கும் முன்னர் பல நடிகர்களுடன் நட்பாக இருந்தேன். பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மீது மரியாதை இருந்தது. ஆனால், டைரியை படித்த பின்னர் அவர்கள் மீதான மரியாதையே போய்விட்டது.” என்று கூறினார் பிஸ்மி.