தண்டட்டி: திரைவிமர்சனம்

தண்டட்டி: திரைவிமர்சனம்
Published on

காதில் அணியும் ‘தண்டட்டி’-க்கும் சாதியால் பிரிந்த காதலுக்கும் உள்ள தொடர்பைப் பேசுகிறது பசுபதி, ரோகிணி நடிப்பில் வெளிவந்துள்ள தண்டட்டி திரைப்படம்.

தென் தமிழகத்தில் உள்ள கிடாரிப்பட்டி கிராமம் கொஞ்சம் 'வெவகாரம்' பிடித்த ஊர். இன்னும் சில நாட்களில் ஓய்வு பெற இருக்கும் காவலர் பசுபதி (சுப்ரமணி), அந்த ஊருக்குக் காணாமல் போன மூதாட்டி ரோகிணியை (தங்கப்பொண்ணு) கண்டுபிடிக்கப் போகிறார். விசாரணையில், அந்த மூதாட்டி கண்டுபிடிக்கப்பட, அவர் எதிர்பாராதவிதமாக இறந்து விடுகிறார். மூதாட்டியின் பேரன் கோரிக்கையை ஏற்று, சடலத்தோடு ஊருக்கு வருகிறார் பசுபதி. இந்த நிலையில், பிணமாக இருக்கும் மூதாட்டியின் காதில் இருக்கும் ‘தண்டட்டி’ காணாமல் போகிறது. இதை போலீசான பசுபதி கண்டுபிடித்துக் கொடுத்தாரா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதி கதை.

இயக்குநர் ராம் சங்கையா, தண்டட்டி என்ற பொருளை வைத்து காதல், சாதி, சுரண்டல், முதுமை, மரணம் ஆகியவற்றை கொஞ்சம் மிகை உணர்ச்சியுடன் சொல்லியிருக்கிறார். இடைவேளைக்குப் பின்னர், படம் தொய்வாகச் சென்றாலும், கடைசி முக்கால் மணி நேர திரைப்படம் மனதை கட்டிப்போடுகிறது.

கோபக்கார காவலராக இருக்கும் பசுபதி, கிடாரிப்பட்டியில் மட்டும் ஏன் அடக்கி வாசிக்கிறார் என்பதற்கான காரணம் தெரிய வரும் போது, ஆச்சரியப்பட வைக்கிறது. திடமான மனம் கொண்ட கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் பசுபதி, ஒவ்வொரு காட்சியிலும் பார்வையாளர்களை கலங்கடிக்கிறார். ரோகிணி – பசுபதி சந்திக்கும் காட்சிகள் கண்களைக் குளமாக்குகிறது. மூதாட்டி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரோகிணிக்குத் தளர்ந்த உடல்மொழி வரவில்லை என்றாலும், அவர் முகத்தில் உள்ள மென்சோகம் கதாபாத்திரத்திற்கு உயிர் ஊட்டுகிறது. இந்த இருவரை தவிர்த்து, அம்மு அபிராமி, தீபா சங்கர், செம்மலர் அன்னம், விவேக் பிரசன்னா ஆகியோர் வளவளவென வசனம் பேசிக் கொண்டும், ராவடித்தனம் செய்து கொண்டும் கச்சிதமாக கதாபாத்திரத்திற்குப் பொருந்தி உள்ளனர்.

மகேஷ் முத்து சாமியின் காமிரா பயணித்துக் கொண்டே இருக்கிறது. பெண்கள் போடும் குடுமி சண்டையை யதார்த்தமாக பதிவு செய்துள்ளார். சுந்தர மூர்த்தி பின்னணி இசை, பாடல் ஓரளவு நியாயம் சேர்கிறது. படத்தில் நீளமான காட்சிகளை படத்தொகுப்பாளர் நந்தீஸ்வரன் வெட்டி வீசியிருக்கலாம்.

‘தண்டட்டியை காதல மாட்டாம, தொப்புளுக்கு கீழவா தொங்கவிட முடியும்’, ’உசுரு காத்துல பறந்து, உடம்பு அம்மணமா சேத்துல புதைஞ்சிடும் பாத்துக்கோ’ என கதைக்கு ஏற்ற வசனங்களை எழுதியுள்ளார் இயக்குநர்.

தண்டட்டி – துயரம் நிறைந்த தங்கக் காதல்!

logo
Andhimazhai
www.andhimazhai.com