வாழ்க்கையில் பல தடைகளைக் கடப்பதற்கு ஆன்மிகம் தேவைப்படுவதாக நடிகை சமந்தா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
நடிகை சமந்தா, நாக சைதன்யாவை காதலித்துக் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி நான்கு ஆண்டுகள் கழித்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 2021ஆம் அண்டு பிரிந்து விட்டனர்.
இதனைத் தொடர்ந்து, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா பல்வேறு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது குணமாகி மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
இந்நிலையில், நாக சைதன்யாவுடனான விவாகரத்து குறித்தும், மயோசிடிஸ் நோய்க்கு பிறகான வாழ்க்கை குறித்தும் சமந்தா பேசியுள்ளார்.
‘எல்லே இந்தியா’ –வுக்கு அவர் அளித்த பேட்டியில்,
'நாம் அனைவரும் நம் வாழ்க்கையில் சில விஷயங்களை மாற்ற விரும்புகிறோம். என்னிடம் இருந்த விஷயங்களை நான் கடந்து வந்திருப்பதை சில நேரங்களில் நினைத்துப் பார்ப்பேன். ஆனால், வேறு வழியில்லை. கடந்த 3 வருடங்களில் சில விஷயங்கள் நடந்திருக்கக் கூடாது என்று நினைத்தேன். இதை பற்றி என் நண்பரிடம் பேசியிருக்கிறேன்.
வாழ்க்கை நமக்கு அனைத்தையும் சமாளிக்கக் கற்றுத்தருகிறது. இப்போது நான் வலுவாக இருக்கிறேன். அதற்கு ஆன்மிக ஈடுபாடுதான் காரணம். இன்றைய உலகில், முன்பைவிட ஆன்மிகம் அதிகம் தேவைப்படுகிறது. ஏனென்றால் தற்போது நோயும், வலியும் அதிகமாக உள்ளது.' என்று சமந்தா கூறியுள்ளார்.
கடந்த சில நாள்களுக்கு முன்னர், ஹைட்ரஜன் பெராக்சைடு தொடர்பாக சமந்தா கூறியிருந்த கருத்து சர்ச்சையை ஏற்பத்திய நிலையில், தற்போது ஆன்மிகம் குறித்து பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.