மார்க் ஆண்டனி படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய விஷால், “ரூ.1 கோடியிலிருந்து ரூ.4 கோடி வரை சிறிய பட்ஜெட் படங்களைத் தயாரிக்க விரும்பும் தயாரிப்பாளர்கள் 2 ஆண்டுகளுக்கு சினிமாவிற்குள் வர வேண்டாம்” என்றார். இதற்கு சினிமா வட்டாரத்தில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது.
இந்த நிலையில், வெயில், அங்காடித்தெரு, அநீதி போன்ற படங்களை இயக்கிய வசந்த பாலன் நீண்ட பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.
“சிறிய பட்ஜெட் படங்கள் பற்றி நடிகர் விஷால் கூறிய கருத்துகள் பொதுவெளியில் விவாதங்களை உருவாக்குவதற்கு பதிலாக பலத்த எதிர்ப்புகளை உருவாக்கியுள்ளன என்பது எனக்கு வருத்தம் தருகிறது. கடந்த ஆண்டில் வெளியாகி வெற்றியடைந்த சிறிய பட்ஜெட் படங்கள் லவ் டுடே, டாடா, குட்நைட், போர்த்தொழில் போன்றவை.
இந்த படங்களின் வெற்றியை கணக்கிடும் போது, இந்த திரைப்படங்களை எடுத்த தயாரிப்பு நிறுவனங்கள் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள். குட்நைட் நிறுவனத்தைத் தவிர என்பதையும் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும்.
குட்நைட் திரைப்படமும் கதாநாயகன் மணிகண்டனின் முயற்சியால் பட வெளியீட்டுக்கு முன்பாக அந்த படத்தின் டிஜிட்டல் சேட்டிலைட் உரிமைகளை ஹாட் ஸ்டார் நிறுவனம் வாங்கிவிட்ட காரணத்தினாலே படம் வெளியானது. திரையரங்கிலும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பும் பெற்றது. மற்ற சிறு பட தயாரிப்பாளர்கள் திரைத்துறைக்கு புதியவர்களாக இருக்கக்கூடும். அல்லது பலகாலம் திரைத்துறையில் இருக்கும் சிறு பட தயாரிப்பாளர்கள் செல்வாக்கு இல்லாதவர்களாக, அதிகாரமில்லாதவர்களாக இருக்கக் கூடும். அதனால் அந்த சிறு படங்களின் டிஜிட்டல் சேட்டிலைட் உரிமையை விற்பதில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது. பெரிய நிறுவனங்கள் சிறிய பட்ஜெட் படங்களை தயாரிக்கையில் அவர்கள் தயாரிப்பில் உள்ள பல பெரிய நடிகர்களின் படங்களை கருத்தில் கொண்டு அந்த பெரிய படங்களுடன் சேர்ந்து இந்த சிறிய படங்களின் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமையையும் விற்று விட இயலும்.
தியேட்டர் வெளியீட்டையும் பெரிய விநியோகிக்கும் கம்பெனி வசம் வழங்கி 3 வாரங்கள் அந்த படங்கள் குறுக்கீடு இன்றி தியேட்டர்களில் நீட்டிக்க செய்ய இயலும். இது சிறு தயாரிப்பாளர்களால் அல்லது பிரபலமில்லாத அல்லது அதிகாரமில்லாத தயாரிப்பாளர்களால் செய்ய இயலாது. பொதுவாக சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் என்பது புதுமுகங்கள் அல்லது ஆரம்பக்கட்ட கதாநாயகர்களால் எடுக்கப்படுவது. அவர்களுக்கென தனி பார்வையாளர்கள் கிடையாது.
ஆகவே இசை வெளியீடு தொடங்கி பட வெளியீட்டுக்கு வரை குறைந்தது 1.25 கோடி செலவழித்தால் தான் இப்படி ஒரு படம் வெளியாகி உள்ளது என்பது பார்வையாளருக்கு சென்று சேரும். இந்த படங்கள் பொதுவாக பத்திரிக்கை விமர்சனம், படம் பார்த்து வெளிவந்த பார்வையாளர்கள் படம் நல்லாயிருக்கிறது என்று சொல்கிற கருத்துகளின் வாயிலாக காற்றில் செய்தி பரவி பார்வையாளர்கள் திரையரங்குகளுக்கு வர துவங்கும் போது அந்த திரைப்படங்கள் திரையரங்கிலிருந்து எடுக்கப்பட்டுவிடும்.
தமிழகத்தில் நல்ல படங்கள், தரமான சின்ன படங்கள், வெற்றி படங்கள் என்று நினைக்கிற அனைத்து திரைப்படங்களும் ‘மவுத் டாக்’ மூலமாக பிக்கப் ஆகி பெரும் வெற்றியடைந்த திரைப்படங்களே வெயில், அங்காடித்தெரு, ஆட்டோகிராப்,காதல் கோட்டை, அழகி என இங்கே நீண்ட பட்டியல் இருக்கிறது.
இன்று இது நடக்க வாய்ப்பில்லாத சூழல் உருவாகியுள்ளது. ஆக சிறிய பட்ஜெட் படங்கள் பிக்கப் ஆவதற்குள் திரையரங்கிலிருந்து எடுக்கப்படுகின்றன. அதனால் அந்த திரைப்படங்களின் டிஜிட்டல் சேட்டிலைட் வியாபாரமும் பாதிக்கப்பட்டு அந்த தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்கின்றனர். தியேட்டர் வருமானம் சம்மந்தமாக பொதுவெளியில் இந்த திரைப்படம் 100 கோடி வசூலை எட்டியது என்று வெளியாகிற செய்தி வெறும் விளம்பரத்திற்கு பயன்படும். ஆனால், 100 கோடியில் தயாரிப்பாளருக்கு என்ன பணம் வரும் தெரியுமா?
100 கோடி வசூல் என்றால், 10 கோடி தியேட்டரின் மின்சார கட்டணம், வரி, தியேட்டர் மேற்பார்வையாளரின் சம்பளம் என சென்று விடும். 90 கோடியில் 50 % தியேட்டர் அதிபர்களுக்கு சென்று விடும். 10% தமிழகம் முழுக்க உங்களுக்கு தியேட்டர் எடுத்து கொடுத்த விநியோகஸ்தருக்கு சென்று விடும். கூட்டி கழித்து பாருங்கள், தயாரிப்பாளருக்கு 100 கோடி வசூலில் என்ன பணம் கைக்கு வருமென்று?
ஆக சிறிய படங்களின் விற்பனையில் உள்ள சிக்கல்களை கலைந்து ஒரு ஒழுங்கு முறையை கொண்டு வர திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் விவாதித்து ஏதாவது முடிவுக்கு வந்தால் மட்டுமே சிறிய பட்ஜெட் படங்களை காப்பாற்ற முடியும். இல்லைன்னா கதை தான் king, content தான் முக்கியம் சார், படம் நல்லாயிருந்தா அதுவே ஓடிரும் சார் என்று பொத்தம்பொதுவான தத்துவங்களை பேசி பொழுதைக் கழிக்கலாம்.
சமீபத்தில் வெற்றியடைந்த எந்த பெரிய படத்திலும் கதையேயில்லை என்று ஒரு பெரிய கதாநாயகரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ஆக கதை முக்கியமுன்னு சொல்லி யாரும் விவாதத்தை முடக்க வேண்டாம். உண்மையில் சின்ன பட்ஜெட் எடுக்கும் தயாரிப்பாளர்களை காக்க வேண்டும் என்று விரும்பினால் ஆரோக்கியமான விவாதம் நடக்க வேண்டும். சிக்கலை கலைய வேண்டும். பேப்பர் விளம்பரத்தில் மட்டும் பெரிய பட்ஜெட் படத்திற்கும் சிறிய பட்ஜெட் படத்திற்கும் ஒரு ஒழுங்கு முறையை தயாரிப்பாளர் சங்கம் கொண்டு வர முடியுமெனில், சிறிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு vpf கட்டணத்தில் இருந்து 50 %, 10 % சதவிதத்தில் கூட திரையரங்கு உரிமையாளர்களிடம் அமர்ந்து பேசி மாற்றங்களை கொண்டு வர முடியும்” என்றும் இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.