இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடனான உரையாடலில் உடல் எடை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த நடிகை சமந்தா, 'உடலை வைத்து மதிப்பிடும் கண்ணோட்டத்தை நிறுத்துங்கள். 2024க்கு வந்துவிட்டோம் நாம். இன்னும் இதுபோல செய்வது சரியல்ல' என அவர் கூறியுள்ளார்.
திரைத்துறையில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்துகொண்டிருப்பவர் சமந்தா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட அவர், வெளிநாடுகளில் சிகிச்சை எடுத்த பிறகு அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் பாலிவுட்டில் ‘சிட்டாடல் ஹனி பன்னி’என்ற வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். இதற்கான புரமோஷன்கள் வேலைகளில் படக்குழுவினர் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், அதன் ஒருபகுதியாக நேற்று இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து நேரலையில் உரையாடினார். அதில், ரசிகர் ஒருவர் சமந்தாவை 'கொஞ்சம் உடல் எடையை அதிகரிக்குமாறு' கமெண்ட் செய்திருந்தார்.
அதற்குப் பதிலளித்த நடிகை சமந்தா, "நான் எனது எடையை குறித்த பல்வேறு கமெண்ட்களை சமீபத்தில் பார்த்து வருகிறேன்.உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். நான் ஒரு கடுமையான 'strict anti-inflammatory diet'-ஐ பின்பற்றி வருகிறேன். இது எனது உடலுக்குத் தேவை. இதுதான் எனது உடலை அதிக எடையிலிருந்து தடுத்து, எனது உடல் நலனுக்கு ஏற்றவாறு சரியான அளவில் என்னை வைத்திருக்க உதவுகிறது. தயவுசெய்து மனிதர்களை உடலை வைத்து மதிப்பிடும் கண்ணோட்டத்தை நிறுத்துங்கள். 2024க்கு வந்துவிட்டோம் நாம். இன்னும் இதுபோல செய்வது சரியல்ல. வாழு, வாழ விடு.. என்பதைப்போல வாழுவோம்." என்று கூறியிருக்கிறார். இது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.